Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | உரைநடை: கொங்குநாட்டு வணிகம்

இயல் 6 | 8 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: கொங்குநாட்டு வணிகம் | 8th Tamil : Chapter 6 : Vaiyam pugal vanigam

   Posted On :  15.07.2023 04:09 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம்

உரைநடை: கொங்குநாட்டு வணிகம்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் : உரைநடை: கொங்குநாட்டு வணிகம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஆறு

உரைநடை உலகம்

கொங்குநாட்டு வணிகம்


நுழையும்முன்

'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்பது பழமொழி. அதற்குப் பழந்தமிழர்களே சான்றுகளாக விளங்கினர். காலத்தால் முற்பட்டவர்களான பழந்தமிழர் சோம்பித் திரிந்தவர் அல்லர். உழைத்து உயர்ந்து வாழ்க்கையில் இன்பங்காணுவதிலேயே கண்ணுங்கருத்துமாய் விளங்கினர் என்பர். அவர்கள் மலைகளுடனும் காடுகளுடனும் கடலுடனும் கலந்து உறவாடினர். பழந்தமிழர்கள் ஆண்ட கொங்கு நாட்டின் அன்றைய வணிகம், இன்றைய வணிகம் குறித்து அறிவோம்.

தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர்களுக்கு உரியதாகக் கூறுகின்றன. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. மூவேந்தர்களின் காலத்தை வரையறுத்துக் கூறமுடியவில்லை. வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. இதனால் இவர்கள் பன்னெடுங் காலத்திற்கு முற்பட்டவர்கள் என்பதை அறியலாம்.


சேரர்

முடியுடைய மூவேந்தர்களில் சேரர்களே பழமையானவர்கள் என்று கூறுபவர் உண்டு. சேர, சோழ, பாண்டியர் என்னும் தொடரையே இதற்குச் சான்றாகக் காட்டுவர். மேலும் தொல்காப்பியமும் போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் எனச் சேரரை முன் வைக்கின்றது.

சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டது. இவர்களின் தலைநகராக வஞ்சி விளங்கியது. இந்நகர் மேற்கு மலைத்தொடரில் தோன்றி அரபிக்கடலில் கலக்கும் பேரியாற்றங்கரையில் இருந்தது. இதனைக் கருவூர் என்றும் அழைப்பர். தொண்டி, முசிறி, காந்தளூர் என்பன சேரநாட்டின் துறைமுகப் பட்டினங்களாக விளங்கின. சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். பனம்பூ இவர்களுக்குரிய பூ ஆகும்.

சேர நாட்டின் எல்லைகள்

பண்டைய சேர நாடு என்பது இன்றைய கேரளப் பகுதிகளும் தமிழ்நாட்டின் சேலம், கோவை மாவட்டங்களின் பகுதிகளும் இணைந்த பகுதியாக விளங்கியது என்பர். சேலம், கோவைப் பகுதிகள் கொங்கு நாடு என்று பெயர்பெற்றன. இப்பகுதிகளைச் சேரர்களின் உறவினர்கள் ஆட்சி செய்து வந்தனர்.

கொங்கு மண்டலம்

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டலச் சதகம் என்னும் நூலில் வடக்கே பெரும்பாலை, தெற்கே பழனிமலை, மேற்கே வெள்ளிமலை, கிழக்கே மதிற்கரை என இந்நான்கு எல்லைகளுக்குட்பட்ட பகுதியாகக் கொங்குமண்டலம் விளங்கியதாகக் கூறப்படுகிறது. இன்றைய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களையும் சேலம், கரூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாகக் கொங்குமண்டலம் விளங்கியது என்பர்.

கொங்குநாட்டுப் பகுதியை காவிரி, பவானி, நொய்யல், ஆன்பொருநை என்று அழைக்கப்படும் அமராவதி ஆகிய ஆறுகள் வளம் செழிக்கச் செய்கின்றன.

பழங்கால வணிகம்


உழவு, கைத்தொழில், வணிகம் என்னும் மூன்றும் ஒரு நாட்டு மக்களின் நாகரிக் நல்வாழ்விற்கு அடிப்படைகளாகும் என்பர். உன்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளனர். கடல் வணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது. அதற்கு அந்நாட்டின் இயற்கை அமைப்பே காரணமாக அமைந்திருந்தது. சேரர்கள் வலிமை மிகுந்த கப்பல் படையை வைத்திருந்தனர். செங்குட்டுவனின் கடற்போர் வெற்றியால் அவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று அழைக்கப்பட்டான். கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களைச் சேரமன்னர்கள் அடக்கினர். முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகங்களுன் ஒன்றாக விளங்கியது. இங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. பொன், மென்மைமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன. இச்செய்தியை,

மீனோடு நெற்குவைஇ

மிசையம்பியின் மனைமறுக்குத்து

..................

கலந்தந்த பொற்பரிசம்

கழித்தோணியால் கரைசேர்க்குந்து புறம் 343:1–8

என்னும் பாடல் விளக்குகிறது.

சேரநாட்டில் உள்நாட்டு வணிகமும் நன்கு வளர்ச்சியுற்றிருந்தது. மக்கள் தத்தம் பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர். நெல்லே விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது என்பர். உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை,

நெல்லும் உப்பும் நேரே ஊரீர்

கொள்ளீ ரோவெனச் சேரிதொறும் நுவலும் - (அக.390)

என்னும் அகப்பாடல் மூலம் அறியலாம்.

 

கொங்கு மண்டலப் பகுதிகளில் இன்றைய வணிகம்

நீலகிரி


கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடமே நீலகிரி ஆகும். இம்மாவட்டம் முழுவதும் மலைப் பகுதியாலானது. காடுகள் நிறைந்த இம்மாவட்டத்தில் தோட்டப்பயிர்களான காப்பி, தேயிலை, உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோசு ஆகியவை பெருமளவில் பயிரிடப்படுகின்றன; தைலமரம் (யூகலிப்டஸ்) வளர்க்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் தேயிலைத் தொழிற்சாலைகள் நிறைந்தது. புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருந்துத் தொழிற்சாலை, தைலமரம் (யூகலிப்டஸ்) எண்ணெய்த் தொழிற்சாலை ஆகியனவும் உள்ளன.

கோயம்புத்தூர்


கோவன்புத்தூர் என்னும் பெயரே கோயம்புத்தூர் என்று மருவி வழங்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் நெல், வாழை, கரும்பு, காய்கறிகள், பூக்கள் போன்றவை பெருமளவில் பயிரிடப்படுகின்றன. பஞ்சாலைகன், நூற்பாலைகள், மின்சாரப் பொருள்கள், எந்திரங்கள், வீட்டுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இம்மாவட்டத்தில் நிறைந்துள்ளன.

திண்டுக்கல்

வரலாற்றுச் சிறப்புமிக்க திண்டுக்கல்லில் நெல், சோளம், தினை வகைகள், வாழைப்பழம், காய்கறிகள் போன்றவை வினைவிக்கப்படுகின்றன. இப்பகுதி மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது. எனவே தமிழ்நாட்டின் ஹாலந்து என்றும் சிறப்பிக்கப்படுகிறது.

அரிசி, தோல், பூட்டுத் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் இது, இங்குள்ள சின்னாளபட்டிச் சுங்குடிச் சேலைகள் புகழ்பெற்றவை.

ஈரோடு


பரப்பளவில் ஈரோடு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது. இம்மாவட்டத்தில் நெல், நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, பருத்தி, எள் போன்றவை பயிரிடப்படுகின்றன. தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை ஈரோட்டில்தான் நடைபெறுகின்றது.

துணி நூற்பாலைகள், எண்ணெய் ஆலைகள், சர்க்கரை ஆலைகள் பெருமளவில் உள்ளன. நூல் நூற்பு, துணிகளுக்குச் சாயம் ஏற்றுதல், அச்சிடுதல், தோல் பதனிடுதல் முதலான தொழில்களும் இம்மாவட்டத்தில் நடைபெறுகின்றன.

திருப்பூர்


இன்று திருப்பூர் மிகச்சிறந்த பின்னலாடை நகரமாக விளங்குகிறது. நெல், கரும்பு, பருத்தி, வாழை போன்றவை இங்கு விளைவிக்கப்படும் முதன்மையான பயிர்களாகும். இம்மாவட்டம் பின்னலாடைகள், ஆயத்த ஆடைகள் மூலம் தமிழ் நாட்டிற்குப் பெரும் வருவாயை ஈட்டித்தருகிறது. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்காவான நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் இம்மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கின்றன.

நாமக்கல்

பச்சைமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலையின் ஒரு பகுதி ஆகியவை இம்மாவட்டத்தில் உள்ளன. நெல், கரும்பு, சோளம், நிலக்கடலை, பருத்தி ஆகியவற்றுடன் மலைப்பகுதிகளில் விளையும் திராட்சை, ஆரஞ்சு, காப்பி, பாக்கு, ஏலம் போன்றவையும் பயிரிடப்படுகின்றன.

முட்டைக்கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே நாமக்கல் முதன்மையான இடம் வகிக்கின்றது. இங்கே சிமெண்ட், காகிதத் தொழிற்சாலைகள் உள்ளன. கைத்தறி நெசவு, வெண்கலப் பொருள்கள் செய்தல் முதலான தொழில்களும் நடைபெறுகின்றன. சிற்றுந்து, சரக்குந்து ஆகியவை அதிக அளவில் இயங்கும் மாவட்டமாக நாமக்கல் விளங்குகிறது.


சேலம்

மாங்கனி நகரம் என்னும் சிறப்புப் பெயர் கொண்டது சேலம். இம்மாவட்டத்தில் நெல், பருப்பு வகைகள், பருத்தி, கரும்பு, மாம்பழம், காப்பி, பாக்கு ஆகியன பயிரிடப்படுகின்றன. இந்தியாவிலேயே இம்மாவட்டத்தில்தான் ஜவ்வரிசி அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகின்றது. தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம் இதுவே. இங்குப் பால் பண்ணைத் தொழிலும் சிறப்பாக நடைபெறுகின்றது. இரசாயனப் பொருள், அலுமினியம், சந்தன எண்ணெய், வளஸ்பதி ஆகியவை தயாரிக்கும் ஆலைகள் நிறைந்த மாவட்டமாகவும் சேலம் விளங்குகிறது. முலாம் பூசும் தொழிலும் பெருமளவில் நடைபெறுகிறது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கரூர்

கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய இப்பகுதிக்கு 'வஞ்சிமாநகரம்’ என்னும் பெயரும் உண்டு. கிரேக்க அறிஞர் தாலமி, கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளார்.

நெல், சோளம், கேழ்வரகு, கம்பு, கரும்பு போன்றவை இங்குப் பயிரிடப்படுகின்றன. கல்குவாரித் தொழிற்சாலைகள் இங்கு உள்ளள, கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர்பெற்ற மாவட்டமாகக் கரூர் விளங்குகிறது.

தெரிந்து தெளிவோம்

ஊர்களும் சிறப்புப் பெயர்களும்

தூத்துக்குடி - முத்து நகரம்

சிவகாசி - குட்டி ஜப்பான்

மதுரை - தூங்கா நகரம்

திருவண்ணாமலை தீப நகரம்

தோல் பதனிடுதல், சாயமேற்றுதல், கற்சிற்ப வேலைகள் போன்ற தொழில்களும் நடைபெறுகின்றன. பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாகக் கரூர் விளங்குகிறது.

Tags : Chapter 6 | 8th Tamil இயல் 6 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 6 : Vaiyam pugal vanigam : Prose: Kongu nattu vanigam Chapter 6 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் : உரைநடை: கொங்குநாட்டு வணிகம் - இயல் 6 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம்