Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | துணைப்பாடம்: காலம் உடன் வரும்

இயல் 6 | 8 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: காலம் உடன் வரும் | 8th Tamil : Chapter 6 : Vaiyam pugal vanigam

   Posted On :  15.07.2023 05:56 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம்

துணைப்பாடம்: காலம் உடன் வரும்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் : துணைப்பாடம்: காலம் உடன் வரும் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஆறு

விரிவானம்

காலம் உடன் வரும்

 

நுழையும்முன்

உழவும் நெசவும் பழந்தமிழர் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை. உழவு மக்களின் பசியைப் போக்குகிறது. நெசவு மக்களின் மானம் காக்கிறது. நெசவுத் தொழிலாளர்கள் இரவு, பகல் என்ற பேதமின்றி உழைக்கக் கூடியவர்கள். அவ்வாறு அவர்கள் வியர்வைசிந்தி உழைத்தவையே நாம் அணியும் வண்ண உடைகள். நெசவுத் தொழிவானரின் வாழ்வை விளக்கும் கதை ஒன்றை அறிவோம்.


நாளை மறுநாளுக்குள் வாரி பிடித்துச் சரக்கை ஏற்றித் தூத்துக்குடி துறைமுகத்தில் சேர்க்க வேண்டிய நிர்பந்தம். 'அனந்திகா நிறுவனத்து'க்கு இன்னும் மிச்சம்மீதிகளாக வரவேண்டிய துணிகள் தறிகளில் இருந்தன. இவற்றைச் சேகரிக்க பள்ளிப்பாளையம், மொங்கநல்லாம்பாளையம், வெள்ளக்கோயில் இப்படிப் பல இடங்களுக்கு நேரில் ஆட்கள் சென்றனர். ஆட்கள் அவசியமில்லை எனும் இடத்துக்கு, தொலைபேசி அழைப்புகள். வெள்ளக்கோயில் தினேஷ் டெக்ஸில் தொலைபேசி மணி ஒலித்தது. சுப்பிரமணி போனை எடுத்தான்.

"அனந்திகாவுல இருந்து பேசறமுங்க.... நாளைக்குச் சாயங்காலத்துக்குள்ன லாரில ஏத்தணும். சீக்கிரமா முடிங்க. உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை...."

"இங்கே பாவு பிணைக்கக்கூட ஆள் இல்லீங்க...."

"ஏனுங்க. நம்ம சிரமந் தெரியாதவராட்டம் புதுசாப் பேசறீங்க....? எப்படியாச்சும் ஓட்டி வச்சிருங்க. நாளைக்கு ரண்டு மணிக்கு நம்ம டெம்போ உங்க பட்டறைல நிக்கும். ஏத்தி அனுப்ப வேண்டியது உங்க பொறுப்பு...."

தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டது. கூடவே உற்சாக நரம்புகளும் துண்டித்தாற்போலிருந்தது சுப்பிரமணிக்கு. நேரம் இப்போது இரவு பதினொன்று.

பாவு பிணைக்க ரங்கன் இருந்தால் பரவாயில்லை. முந்தாநாள் மனைவியோடு மாமனார் ஊருக்குப் போய்விட்டான். இப்போது என்ன செய்வது...?

உள்ளே நான்கு தறிகள் ஓடிக்கொண்டிருந்தன. மாணிக்கம் ஓட்டுகிற தறியில், சற்று நேரத்தில் 'பாவு' தீர்ந்துவிடும். மிச்சம் கொஞ்சம் நூல் வைத்து அடுத்த பாவைப் பிணைத்து விட்டால் நாளைக்குள் ஓடி அடைந்து விடும். பாவு பிணைக்க ஆள் வேண்டும் இப்போது. நண்பன் ரகுவின் 'குமரன் டெக்ஸில்' யாராவது இருப்பார்கள். இம்மாதிரி அவசர காலத்துக்கு ஆபத்பாந்தவன் ரகுநாதன்.

பாவு பிணைக்க இரண்டு ஆளாகக் கிடைத்தால் வேலை விரைவில் முடியும். அதைவிட ஆள் தேடி அஞ்செட்டுக் கிலோமீட்டர் போகவும் வேண்டி வரலாம். வெளியே குளிர் வேறு தாக்கிக்கொண்டிருக்கிறது. 'கார்' தான் நல்லது. காரில் போகையில் அவனுக்குப் பாட்டு கேட்கக்கூடத் தோணவில்லை. தேவைகளின் அவசரப் பதற்றம் கடல் தாண்டி இங்கு வரை தாக்கிக்கொண்டிருக்கிறது.

தறியின் வாசலிலேயே நின்றுகொண்டிருந்த ரகுவைப் பார்த்துக் காரிலிருந்து இறங்கிக் கொண்டே, 'நீயும் வீட்டுக்குப் போகலியா....? என்றான்.

ரகு விரக்தியை வென்ற புன்னகையோடு, "எங்கே போறது? கடவுள் நம்மளத் தூங்கறதுக்கா படைச்சிருக்கான்? என்ன சோலியா இப்ப வந்தே... நீ ஒண்ணும் சும்மா வரமாட்டியே!"

"பாவு பிணைக்க ஆள் வேணும். உடனடியா யாரையாவது அனுப்பு... இங்க யாரும் இருக்காங்களா...?

"இங்க ஒருத்தரும் இல்லியே..."

சுப்பிரமணியின் முகம் சோர்ந்து விழுவதைப் பார்த்துவிட்டு ரகு, ' உனக்கு மாயழகு தெரியுமா?... இங்கே தறி ஓட்ற ஆள்...?" என்று கேட்டான்.

"ஆமா! தெக்கத்திக்காரன்...."

ம்... அந்த ஆளும் சம்சாரமும் வீட்லதான் இருப்பாங்க. நான் சொன்னேன்னு சொல்லிக் கூட்டிக்கிட்டுப் போ. சம்பளம் சேர்த்துப் போட்டுக் கொடுத்துடு..."

"திடுதிப்புனு இப்ப நடுராத்திரியில போயி..."

பேய்களும்கூடத் தூங்கும் இந்த நடுராத்திரியில் போய், புதிய ஒரு பெண்ணை வேலைக்கெனக் கூப்பிடுவதைக் குறித்துச் சுப்பிரமணி தயங்கினான்.

"உனக்குப் பாவு ஓடணுமா, வேண்டாமா...? அவங்க வந்தாலும் நீ விட மாட்டே போலிருக்கே" - ரகு முறைத்தான்.

"இப்ப இங்க வேலை இல்லீனா, நானே வத்திருவேன். மாயழகுகிட்ட ரகு சொன்னார்னு சொல்லு, அனுப்பி வைப்பாப்டி.

மாயழகுவின் வீட்டைக் கண்டுபிடித்து, சுப்பிரமணி கதவைத் தட்டினான். மாயழகுதான் கதவு திறந்தான். கண்களை இடுக்கிப் பார்த்துவிட்டுப் பின் புன்னகைத்தான்.

"பாவு பிணைக்கணும்ப்பா... ரொம்ப அவசரம்! எங்க பட்டறை ஆளு ஊருக்குப் போயிட்டான். வேற வழியே இல்ல. உங்க ஓனரைப் பார்த்தேன். அவருதான் சொன்னார், உஞ் சம்சாரம் பாவு பிணைக்குமாம்ல..."

"அவ்வளவுதானுங்களா...? இதா எழுப்பறேன்..." என்றவாறு அவளை நோக்கித் திரும்பினான்.

ஒச்சம்மா மூச்சுக்காற்றைத் தவிர உலகின் சகல தொடர்புகளையும் துண்டித்தாற்போலத் தூங்கிக்கொண்டிருந்தாள். அவனது தூக்கத்துக்காக, சரக்குக் கப்பல்கள் காத்து நிற்பதில்லை. மார்போடணைந்து இரண்டரை வயதுக் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது.

"யே...ஒச்சு... எந்திரி புள்ளே..." என அவளை எழுப்பினான். கண்ணைக் கசக்கிக் கொண்ட நான்காம் வினாடியில் "வாங்கண்ணே..." என்றாள், சுப்பிரமணியைப் பார்த்து. அடுத்த இரு வினாடிகளில் மாயழகைப் பார்த்தாள். அவளது கண்கள் 'இவருக்கிட்டே ஏதும் கடன் வாங்கியிருக்கியா...?' என்கின்றன.

"பாவு பிணைக்கக் கூட்டிக்கிட்டுப் போக வந்திருக்காரு...

ஒச்சம்மா கையில் நீர்ச்சொம்புடன் எழுந்து வெளியே சென்றான். முகம் கழுவிக்கொண்டு வரும்போது சற்றே மலர்ச்சியாகத் தெரிந்தாள்.

"கார்ல வந்தீங்களா.?" எனக் கேட்டவாறு குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியில் இறங்கினான்.

சுப்பிரமணி, மாயழகைப் பார்த்து, 'மாயழகு வர்றாப்டியா...?" என்றான்.

"நான் எதுக்குண்ணே...? காவலா?... காலை முத ஷிஃப்ட்டுக்குப் போகணும். நீங்க கொண்டு வந்து விட்டுருங்க, அது போதும்..."

"ம்..." என்றவாறு சுப்பிரமணி வெளியே வந்து காரின் பின் கதவைத் திறந்து ஒச்சம்மாவை உட்கார வைத்துவிட்டுக் காரைக் கிளப்பினான்.

தனது பட்டறைக்குச் சுப்பிரமணி காரைச் செலுத்தினான். தறிப்பட்டறைக்குள் நுழைகிற நேரம், இரண்டாம் நம்பர் தறி ஓடி முடிந்து ஒன்றரை மீட்டர் நூலை மிச்சம் வைத்திருந்தது. இனி, அதே நூலின் பாவைப் பிணைத்து, தொடர்ந்து ஓட்ட வேண்டியதுதான். பாவு பீமிலிருந்து செல்கிற இந்த நாலாயிரம் நூல்கள் பெரிய இசைக்கருவியின் தந்திகள் போல் உள்ளன. இத்தனை தந்திகளிலிருந்தும் 'டக்-டடக்..' என ஒற்றைத் தறிச் சத்தம்தான்.

தறிமுகப்பில் ஊடுபாவாக நூல் கோத்துக்கொண்டு எலி மாதிரி 'தார்க்கதிர்' ஓடினால், நூல்களுக்குத் துணி வடிவம் வந்துவிடும். துணியின் டிஸைனைத் தறிக்கு மேலே வெட்டி வெட்டி நகரும் ஐக் கார்டுகள் தீர்மானிக்கும்.

பழைய வெற்று பீமைக் கழற்றிவிட்டு, புதிய பாவு பீமைத் தறிப் பையன்கள் உதவியோடு சுப்பிரமணி பொருத்தினான். ஒச்சம்மாவுக்கு வேலை துவங்க இருந்தது. குழந்தை தோளில் தூங்கிக் கொண்டிருந்தது.

சுவரோரமாக ஒரு பெட்ஷீட்டைத் தேடி விரித்து, அதில் குழந்தையைப் படுக்க வைத்தாள். தறிச் சத்தத்தில் கூட விழிக்காத குழந்தை தாயின் அருகாமை தவறியதும் சிணுங்கியது. சில கழிநூல்களை எடுத்து அதன் விலாப் பகுதியில் வைத்தாள். அதன் மீது கைபோட்டு குழந்தை அமைதியானது.

தறியின் அருகே வந்து நூல்களை முடிச்சிட்டு இணைக்க ஆரம்பித்தாள் ஒச்சம்மா. அவளுக்குச் சொந்த ஊர் உசிலம்பட்டி பக்கமுள்ள கிருஷ்ணாபுரம். சீமைக்கருவேல முட்கள் அதிகம் உள்ள ஊர். மாயழகு 'கோம்பைத்தொழுவு க்காரன். கோம்பைத் தொழுவென்றால் அது வெள்ளிமலை அடிவாரத்தில் இருக்கிறது. வருசநாட்டு மலைத் தொடர்ச்சி. கண்டமலூர் எல்லை தாண்டிப்போக வேண்டும்.

அங்கிருந்துதான் மூன்று மாவட்டங்களைத் தாண்டி மாயழகு வெள்ளக்கோயிலுக்குத் தறி ஓட்டவருவான். கொஞ்சம் காசு பிடித்ததும் கோம்பைத்தொழுவுக்குப் போய்ச் சுற்றிச் கொண்டிருந்துவிட்டு வருவான். அப்படித் தனது ஊரில் இருந்தபோதுதான் ஒச்சம்மாவுடன் முடிச்சானது.

எதிர்கால நலன்களை எடுத்துப் பேசி வெள்ளக்கோயிலுக்குக் குடும்பத்துடன் வரச் செய்தான். வீடு முதலான ஏற்பாடுகள் முடித்தபின் மாயழகுக்கு 'இது பரவாயில்லையே' என்று தோன்றியது. ஆனால் வெள்ளக்கோயில் வந்த அன்று ஒச்சம்மா அழுத அழுகை இருக்கிறதே! "தினம் ஒரு மரத்தின் கீழ் அடுப்புப் பற்ற வைக்கிற நாடோடிப் பிழைப்புதானா நம்முது" என விம்மிவிட்டாள். ஆயினும், இனியும் இடம் மாறினால், தான் பிழைக்க மாட்டோம் என்பதாக அவளுக்குப் பட்டது. இந்தப் பகுதியின் வேலிகள், விடுகள், நாகரிகம் குறிப்பாக உணவுப்பழக்கம் எல்லாமே வியப்பைத் தந்தன அவளுக்கு. ஒச்சம்மா "வெஞ்சனம் இல்லாமல் சாப்பிட முடியாது" என்றாள். இங்குள்ள பெண்கள், "வெஞ்சனம்.. ஓ பொரியலா? பொரியல் இல்லாமல் சாப்பிட்டுறலாம். தயிரோ மோரோ இல்லாமத்தான் சாப்பிட முடியாது" என்றார்கள். உணவு, காற்று, நீர், ஒப்பனை எல்லாமும் மாற வேண்டியிருந்தது.

தறித்தொழில் இயந்திர நேர்த்தி அதிகம் கொண்டது. நுட்பங்களுக்கு மூளையைச் செலவிடத் தேவையில்லை. ஆனால் பிசகாமல் ஒரே மனசாக நேரம் செலவிட்டாக வேண்டும். பாவு பிணைத்தல், ஓடி எடுத்தல், கோன் போடுதல் எல்லாம் சில மாதங்களில் ஒச்சம்மா கற்றுக் கொண்டாள். தறிதான் ஓட்டத்தெரியாது. தொழிலில் தறி ஓட்டுகிற பெண்களும் இருக்கிறார்கள். விமானமே ஓட்டுகிறவர்கள் தறி ஓட்ட மாட்டார்களா என்ன?

தன் குழந்தையின் கல்வி பற்றி இப்போதே கவலை வந்துவிட்டது. தன் பையன் "தார் போடுகிற பையனாக" மாறுவதை அவளால் சகிக்க முடியாது. தம்மைப் போல வந்தேறிய சக குடும்பங்களைக் கவனித்துத்தான் வருகிறாள். அடிக்கடி ஊர் மாறினால் குழந்தைகள் படிப்பு போச்சு. பக்கத்து வீட்டு ராமாயி அக்கா மகனுக்கு வயசு பதினாலு. அ...ஆ... தெரியாது. பாவு பிணைத்தலினூடே அவன் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறாள். அவளது பூங்கனா படுத்திருக்கிறது. உன்னை நிச்சயம் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைப்பேன்'' என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டாள்.


சட்டென பாவு பிணைப்பதை நிறுத்திவிட்டுக் குழந்தையை நோக்கி நடந்தாள். குழந்தை அழ ஆரம்பித்தது. மழலையின் பசி தாய் அறிவாள். குழந்தையைத் தூக்கிக் கொண்டாள். தறிக்கு வெளியில் வந்து இருள் நிழல் தேடிப் போய் அமர்ந்து பாலூட்டினாள். குழந்தை அப்படியே தூங்கிவிட்டது. அவள் தூங்க முடியாது.

திரும்ப உள்ளே எடுத்துவந்து கிடத்தினாள். குழந்தை ஒருவிதமாகப் பிறை வடிவத்தில் கிடந்தது. ஒச்சம்மா நூல் பிணைவதன் வேகம் மங்குவதைச் சுப்பிரமணி உணர்ந்தான். அவன் எல்லாவற்றையும் பார்த்துத்தான் ஆக வேண்டும். தார் போடுகிற பையனைப் பார்த்து, "டேய் முருகா இங்கே வா" என அழைத்தான். இருபது ரூபாயைக் கொடுத்ததும் எல்லாருக்கும் அவன் தேநீர் வாங்கி வந்தான்.

ஒச்சம்மா தேநீரை வாங்கிப் பருகினாள். பின், பழைய வேகத்தோடு நூல் பிணைக்கத் தொடங்கினாள். வேலையும் முடிந்துவிட்டது. இரவும் விடிந்துவிட்டது. அந்தத் தறிக்கான மாணிக்கத்தைக் கூப்பிட்டு சுப்பிரமணி, "டீ பீடின்னு அடிக்கடிப் போகாம இதச் சீக்கிரமா முடிக்கணும்!" எனக் கட்டளை வடிவத்தில் கேட்டுக் கொண்டான்.

ஒச்சம்மா குழந்தையைத் தூக்கிக் கொண்டு சுப்பிரமணி அருகில் வந்தானள். கப்பிரமணி இரட்டைச் சம்பளத்துக்கான தொகையை அவளிடம் தந்தான். அவளது கண்கள் திளைப்பிலும் திகைப்பிலும் ஒரு கணம் ஒளிர்ந்தன. தனது எதிர்காலமேபோல் அந்த ரூபாய்த் தாள்களை வலது கையில் இறுக்கிக் கொண்டாள்.

சுப்பிரமணி, 'கொண்டுவந்து விட்டுடறேன்...' என்று காருக்கு நடக்க, அவள் பின்னால் நடந்தாள். அவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து, இருபது விநாடிகள் கண்களை முடிக்கொண்டான். இந்த இரவுக்கும் பகலுக்குமான இடைவெளியை இப்போது பிரித்து விடுவது போல இருந்தது இந்தச்செயல். பின் அடக்கமாகச் சோம்பல் முறித்துவிட்டுச் காரைக் கிளப்பினான். ஆங்காங்கே டீக்கடைகள் விழித்து டேப் சத்தம் கேட்கவும் பாட்டுப் போடலாமே எனத் தோன்றி டேப்பைப் போட்டான்.

செம்மாண்டம்பாளையத்தில் அவளது வீடு வந்தாயிற்று. கார்ச்சத்தம் கேட்டு மாயழகு வெளியே வந்தான். ஒச்சம்மானை இறக்கி விட்டுவிட்டு அப்படியே போக எண்ணியிருந்த சுப்பிரமணியை, "டீ சாப்பிட்டுதாண்ணே போகணும்!" என வற்புறுத்தி மாயழகு இறங்க வைத்துவிட்டான். பிறகு தூக்குச் செம்பை எடுத்துக்கொண்டு தேநீர்க் கடைக்கு ஓடினான்.

ஒச்சம்மா எந்தப் புள்ளியில் துவங்கினாள் எனத் தெரியாதபடி வீட்டுக்காரியங்களில் முளைந்துவிட்டாள். குழந்தை இதற்குள் விழித்துவிட்டான். பயல் நேற்றுப்படுத்த கூரையின் கீழ்தான் இன்றைக்கும் விழிக்கிறான். மாயழகு தேநீருடன் வந்து ஒச்சம்மாவுக்கும் சுப்பிரமணிக்கும் அவனே ஊற்றியும் கொடுத்தான்.

ஏதாவது பேசவேண்டும் என்பதற்காகச் சுப்பிரமணி "ரொம்ப கஷ்டந்தான் நம்ம தொழிலு..." என்றான்.

"அப்படித்தாண்ணே இருக்கும் எல்லாமும்... உங்கள நம்பித்தான் ஊருவிட்டு ஊரு வந்திருக்கோம். உங்களுக்கு நாங்க ஒத்தாசை... இப்படி ஏதும் அவசரம்னா சொல்லுங்கண்ணே... எங்களால முடிஞ்சதச் செய்யறம்..."

*சரி, வர்றேன் மாயழகு" என்றவாறு காரில் ஏறினான். ஓச்சம்மா உள்ளிருந்து வந்து, "வாங்கண்ணே..." என்று விடையளித்துத் தலையாட்டினாள், சுப்பிரமணி எதிர்பாராவிதமாக "டாட்டா டாட்டா " என்று குழந்தையின் குரல் கேட்டது. பதிலுக்குத் தலையசைத்துவிட்டுக் காரைக் கிளப்பினான்.

 

நூல் வெளி


கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கன்னிவாடியில் பிறந்தவர். சிறந்த சிறுகதை, புதின எழுத்தாளர். நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை விருது பெற்றவர். கன்னிவாடி, குணச்சித்திரங்கள், உப்புக்கடலைக் குடிக்கும் பூனை முதலிய நூல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய சிறுகதைகளில் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

Tags : Chapter 6 | 8th Tamil இயல் 6 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 6 : Vaiyam pugal vanigam : Supplementary: Kalam udan Varum Chapter 6 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் : துணைப்பாடம்: காலம் உடன் வரும் - இயல் 6 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம்