Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: திருக்கேதாரம்

சுந்தரர் | இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: திருக்கேதாரம் | 8th Tamil : Chapter 5 : Kulalenidu yalinidu

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது

கவிதைப்பேழை: திருக்கேதாரம்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது : கவிதைப்பேழை: திருக்கேதாரம் - சுந்தரர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஐந்து

கவிதைப்பேழை

திருக்கேதாரம்


நுழையும்முன்

உயிர்கள் அனைத்தையும் இசைவிப்பது இசை. இது மனிதர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் ஆற்றல் உடையது. இசைக்கருவிகளின் ஓசையாடு பாடல் இணையும்போது அது செவிகளுக்கு மட்டுமன்றிச் சிந்தைக்கும் விருந்தாகிறது. தமிழ் இசை பாடப்படும் இனிய சூழலை விளக்கும் தேவாரப்பாடல் ஒன்றை அறிவோம்.


பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்

கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய

மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக்

கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே.

- சுந்தரர்


சொல்லும் பொருளும்

பண் - இசை

கனகச்சுனை - பொன் வண்ண நீர்நிலை

மதவேழங்கள் - மதயானைகள்

முரலும் - முழங்கும்

பழவெய் - முதிர்ந்த மூங்கில்

பாடலின் பொருள்

பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும். கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ண நீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும். நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளை வாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது எழும் 'கிண்' என்னும் ஒலியானது இசையாக முழங்கும். இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் ஆகும்.

 

நூல் வெளி


சுந்தரர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர். இவர் நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தைப் படைத்தளித்தார்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும். இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார். இந்நூலில் சுந்தரர் பாடியுள்ள கேதாரப்பதிகப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

தே + ஆரம் - இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றும், தே + வாரம் - இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும். பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.

Tags : by Sundarar | Chapter 5 | 8th Tamil சுந்தரர் | இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 5 : Kulalenidu yalinidu : Poem: Thirukadharam by Sundarar | Chapter 5 | 8th Tamil in Tamil : 8th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது : கவிதைப்பேழை: திருக்கேதாரம் - சுந்தரர் | இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது