Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | உரைநடை: நமது அடையாளங்களை மீட்டவர்

இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: நமது அடையாளங்களை மீட்டவர் | 12th Tamil : Chapter 8 : Ella uyirum thollum

   Posted On :  03.08.2022 03:56 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும்

உரைநடை: நமது அடையாளங்களை மீட்டவர்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும் : உரைநடை: நமது அடையாளங்களை மீட்டவர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

உரைநடை உலகம்

ஆளுமை – அ

நமது அடையாளங்களை மீட்டவர்நுழையும்முன்

நாட்டின் வரலாறு என்பது அந்நாட்டை ஆண்ட அரசர்களுடைய வரலாறு மட்டுமன்று; அந்நாட்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை வரலாறும் சேர்ந்ததே. ஒவ்வொரு நாட்டுக்கும் அந்தந்த நாட்டின் வரலாறு முதன்மையானதாகும். ஆனால் வரலாற்றை ஆவணப்படுத்தும் வழக்கம் நமது நாட்டில் மிக அரிதாகவே இருந்தது. எனவேதான், நமக்குப் பழைய வரலாறுகள் இன்றும் குறைவாகவே கிடைக்கின்றன. பெரிதும் கவனம் குவிக்கப்படாத இத்தகு துறைகளில் வெளிச்சம் பாய்ச்சிய ஆளுமைகள் போற்றத்தக்கவர்கள். ஆய்வுநோக்கில் வரலாற்றையும் பண்பாட்டையும் செழுமைப்படுத்தும் ஆளுமைகளின் ஆய்வும் போற்றத்தக்கது.


ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும். அத்தகைய இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி. வேங்கடசாமி. இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபடியே எழுதி முடித்த புத்தகங்களே , தமிழர் தம் பழம் பெருமையை உணர உதவும் புதையல்களாக விளங்குகின்றன.

இளமைக்கால வாழ்க்கை:

மயிலை சீனி. வேங்கடசாமி, 16.12.1900ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். தந்தை சீனிவாசன் ஒரு சித்த மருத்துவராகவும் அவருடைய தமையனார் கோவிந்தராசன் தமிழாசிரியராகவும் விளங்கியமையால், இளமையிலேயே தமிழின் மீது தணியாத பற்றும் நுணுகி ஆராயும் திறனும் பெற்றவராகத் திகழ்ந்தார். தந்தையின் சித்த மருத்துவப் பின்புலம், தமையனாரின் தமிழ்ப் பின்புலம் ஆகியவையே தன்னை வரலாற்றாய்வாளராக உருவாக்கியது என்பதை,

"தமிழ்ப்பற்று முன்னோர் வழியாக எனக்குக் கிடைத்த சீதனம். எங்கள் வீட்டில் இராமாயணம், மகாபாரதம் போன்றவையும் ஏட்டுச்சுவடிகளும் நிறைய இருந்தன. ஏட்டுச்சுவடிகளை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன்; எதுவும் புரியாது. பின்னால் இவற்றையெல்லாம் படித்து ஆராய வேண்டும் என்னும் எண்ணம் எழும். பின்னால் நான் செய்யப் புகுந்த இலக்கிய வரலாற்றுக் கல்வெட்டு ஆராய்ச்சிகளுக்கு அன்றே என் மனத்தில் வித்தூன்றிவிட்டேன் என்று கூறுவார்.

ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். பாடம் கற்பிக்கும் நேரத்தைத்தவிர மற்ற நேரங்களில் அவர் வளாகம் சாராத ஆய்வாளராகத் தம்மை உருவாக்கிக் கொண்டார். கட்டுரையோ, நூலோ எழுதும்முன் தரவுகளைச் சேகரித்துத் தமது ஆய்வுக்கு ஏற்றதை ஒப்பிட்டு ஐயமிருப்பின் மற்றவர்களைக் கேட்டுத் தெளிந்த பிறகே வெளியிடுவார். விபுலானந்த அடிகள், கா. சுப்பிரமணியர், திரு.வி.க, தெ.பொ.மீ, ச. த. சற்குணர் ஆகிய அறிஞர் பெருமக்களிடம் கொண்டிருந்த தொடர்பு காரணமாக அவரது ஆய்வுக்கட்டுரைகள் குடியரசு, ஊழியன், செந்தமிழ்ச்செல்வி, ஆரம்பாசிரியன், லஷ்மி முதலான இதழ்களில் வெளியாகின. மயிலை சீனி. ஒரு தமிழ்த் தேனீ. அறிவின் வாயில்களை நோக்கியே அவர் கால்கள் நடந்தன. நூலகங்களே அவரது தாயகங்களாகின. அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கிக் கருத்து முத்துக்களைத் தமிழ்நாட்டிற்கு வழங்கினார். புதிய செய்தி தருதல், புது விளக்கமளித்தல், இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டுதல், தவறுகளை மறுத்து உண்மையை எடுத்துரைத்தல் என்பனவற்றை ஆய்வு அணுகுமுறைகளாகக் கொண்டார்.

தொடக்ககால ஆய்வுகள்:


1934இல் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த. சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார். அவ்வுரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் 'கிறித்துவமும் தமிழும்' என்னும் நூலை மயிலையார் எழுதினார். இதுவே அவருடைய முதல் நூலாகும். தமிழின் தொல் இலக்கியம், தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் கொண்ட ஈடுபாடு காரணமாக, 'பௌத்தமும் தமிழும்', சமணமும் தமிழும் ஆகிய நூல்களை அவர் இயற்றினார். அச்சமயத்தார் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பரியன. அதனை, அவர் காழ்ப்புணர்வின்றி நடுநிலை நின்று இந்நூல்கள் வாயிலாக வெளிப்படுத்தினார்.

சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல் பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழியாய்வு முதலான பல துறைகளிலும் இவர் கவனம் செலுத்தினார். குறிப்பாக, கல்வெட்டு ஆய்வில் இவருக்குப் பயிற்சி அதிகம்; தமிழ் எழுத்தியலின் வளர்ச்சியை நன்குணர்ந்தவர். வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராம்மி ஆகியவற்றில் புலமை பெற்றிருந்த காரணத்தால் சாசனங்களை அவரால் எளிதாக வாசிக்க முடிந்தது. வரலாறு, இலக்கியம், கலையியல், சமயம் எனப் பல துறைகளிலும் நூல்களை எழுதியிருப்பது வேங்கடசாமியின் பன்முக அறிவை விளக்குகிறது.

வரலாற்று ஆய்வுகள்

1950 களில், கி.பி. (பொ .ஆ.) 3 ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.(பொ.ஆ.) 9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சி புரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார். இது, தமிழில் அம்மன்னனைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெற்றது. இவை தவிர, சங்க கால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதினார். மேற்குறித்தவற்றுள் வரலாற்றை மட்டும் எழுதாது அதன் அரசியல், பண்பாடு மற்றும் கலை வரலாறுகளையும் பதிவு செய்தார்.

சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். இக்காலம் தமிழர்களின் வரலாற்றில் இருண்ட காலம் என்று மரபு வழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தனர். இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக மேற்கொண்டு களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் 'களப்பிரர் ஆட்சியில் தமிழகம்' என்னும் நூல் மூலம் வெளிப்படுத்தினார்.

கலையியல் ஆய்வுகள்

கலையியல் சார்ந்து தமிழில் வெளியான பல நூல்களுக்கும் வேங்கடசாமியே வழிகாட்டியாக விளங்கினார். இக்கலை ஆராய்ச்சிக்கு அவருடைய பல்துறை அறிவும் தம் இளமைப்பருவத்தில் அவர் ஓவியக் கல்லூரியில் பயின்றதும் இதற்கு உதவியாக அமைந்தது. கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான இவரது ஆய்வுகள் தமிழ்ச்சமூக வரலாற்றுக்குப் புதிய வரவாக அமைந்தன. தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் 'தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்' என்னும் நூல், கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் ஆகும். தற்காலத்துத் தமிழ்ச்சமூகம் தனது பழைய அழகுக் கலைச்செல்வங்களை மறந்து, தன்பெருமை தான் அறியாச் சமூகமாக இருந்து வருகிறது; 'கலை கலை' என்று இப்போது கூறப்படுகிறதெல்லாம் சினிமாக்கலை, இசைக்கலைகள் பற்றியே; இலக்கியக்கலைகூட அதிகமாகப் பேசப்படுவதில்லை; ஏனைய அழகுக்கலைகளைப் பற்றி அறவே மறந்துவிட்டனர்; எனவே இந்நூல் எழுதப்பட்டது" என்று இந்நூலின் முன்னுரையில் மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிடுகின்றார். இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், நுண்கலைகள் , இசைவாணர் கதைகள் ஆகியவை கலை பற்றிய இவருடைய பிற நூல்கள் ஆகும். தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.

தெரியுமா? 

மயிலை சீனி. வேங்கடசாமி பற்றி நாரண துரைக்கண்ணன் சொன்ன உருவ விவரிப்பு

"ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்; அகன்ற நெற்றி; வட்ட முகம்; எடுப்பான மூக்கு; பேசத் துடிக்கும் மெல்லுதடுகள்; நான்கு முழ வெள்ளை வேட்டி; காலர் இல்லாத முழுக்கைச் சட்டை; சட்டைப் பையில் மூக்குக்கண்ணாடி; பவுண்டன் பேனா; கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல்துண்டு; இடது கரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் புத்தகப்பை. இப்படியான தோற்றத்துடன் கன்னிமாரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே, அவர்தான் மயிலை சீனி. வேங்கடசாமி.

- நாரண. துரைக்கண்ணன்

இலக்கிய ஆய்வுகள்

1962 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒன்றினை வேங்கடசாமி நிகழ்த்தினார். இச்சொற்பொழிவுகள் மூலம் அவரது ஆய்வுப்பயணம் தொல்காப்பியம், சங்க இலக்கியம், கல்வெட்டுகள் ஆகியவற்றை நோக்கி நகர்ந்தது. அதன் விளைவாக, சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர் வணிகம், களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு - சங்ககாலம் (அரசியல்) ஆகிய நூல்களையும் எழுதினார்.

ஆய்வுலகில் மயிலை சீனி. வேங்கடசாமியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கூற வேண்டுமானால் தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்ததைக் குறிப்பிடலாம். 'தமிழ்நாட்டு வரலாறு' என்னும் நூல் இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்றாகும். சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் முதலிய இலக்கியத் தரவுகளைக் கொண்டு இந்த நூலை எழுதியுள்ளார். அத்துடன் துளு மொழியையும் தமிழ்மொழியையும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார். குறைந்த ஆதாரங்களைக்கொண்டு ஒரு பெரிய வரலாற்றையே உருவாக்கிய இவரது நுண்ணிய அறிவிற்குச் சான்றாக இந்நூல் விளங்குகிறது.

தமிழியலுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆய்வு செய்யும் பணியை இவர் மேற்கொண்டார். இப்பணியின் விளைவாக, சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்துபோன தமிழ்நூல்கள் ஆகிய நூல்களை எழுதினார். இவருடைய, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் என்னும் நூல், ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடி நூல் எனலாம். இதேபோல, 'மறைந்துபோன தமிழ்நூல்கள்' என்னும் நூல் வேங்கடசாமி அவர்களின் அரிய ஆவணப்பணிகளில் ஒன்றாகும். இந்நூல் தமிழ் மறுமலர்ச்சிக்குப் பெரும் ஊக்கம் அளிப்பதாக அமைந்தது. இந்நூலில், பரந்த தமிழ் இலக்கிய, இலக்கணப் பரப்பில் உறைந்திருந்த செய்திகளைத் தொகுத்து மறைந்துபோன 333 நூல்கள் தொடர்பான குறிப்புகளை நம் முன் நிறுத்துகிறார்.

பன்மொழிப் புலமை

தமிழ் ஆய்வு மரபில், சொல் ஆய்வுகளை

சிறுபாணன் சென்ற பெருவழி நிலப்படம்

(மயிலை சீனி. வேங்கடசாமி வரைந்தது)


தாங்கெட நேர்ந்த போதும் 

தமிழ்கெட லாற்றா அண்ணல் 

வேங்கட சாமி என்பேன் 

விரிபெரு தமிழர் மேன்மை 

ஓங்கிடச் செய்வ தொன்றே 

உயிர்ப்பணியாகக் கொண்டோன் 

வீங்கிட மாட்டான் கல்வி 

விளம்பரம் விழைதல் இல்லான்

- பாவேந்தர் பாரதிதாசன்

மேற்கொள்ளாத ஆய்வாளர் இல்லை. நீண்ட வரலாறுகொண்ட மொழியின் சொற்களில் இவ்வகையான ஆய்வுக்குரிய ஏதுக்கள் மிகுதியாகும். வேங்கடசாமி தொடர்ச்சியாக இத்தகைய சொல்லாய்வுப் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். 'செந்தமிழ்ச் செல்வி' என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் 'அஞ்சிறைத் தும்பி' என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.

வேங்கடசாமி அவர்கள் மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயிற்சியுடையவர். எனவே, மகேந்திரவர்மன் இயற்றிய 'மத்த விலாசம்' என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.

தமிழ்ப் பண்பாட்டிலும் தமிழர் வரலாற்றிலும் ஆழ்ந்த அக்கறை கொண்ட மயிலை சீனி. அவர்கள் தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவுவதில் உறுதியான பார்வை கொண்டவர். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியவியல் என்ற வட்டத்திற்குள் பேசப்பட்ட தமிழகத்தின் வரலாற்றை, அதிலிருந்து மீட்டுத் திராவிட இயலாக அடையாளப்படுத்தியதில் இவருடைய பங்கு குறிப்பிடத்தக்கது. அதன் பயனாக, இன்று திராவிட இயல் தமிழியலாக வளர்ந்துள்ளது.

"நான் கதைகளையும் நவீனங்களையும் நூலிது என்றோ எழுதுகிறவன் அல்லன். வரலாற்று ஆராய்ச்சி நூல்களையும் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நூல்களையும் எழுதுகிறவன். ஆராய்ச்சி நூல்களைப் பெரும்பான்மையோர் படிப்பதில்லை; இதை மிகச் சிறுபான்மையோரே படிக்கின்றனர் என்பதை நன்றாகத் தெரிந்தே ஆராய்ச்சி நூல்களை எழுதுகிறேன்" என்று வேங்கடசாமி வருந்தி எழுதியுள்ளார். இது, வரலாற்றின் மீதுள்ள அவருடைய ஈடுபாட்டையும் உழைப்பையும் பறைசாற்றுவதோடு தமிழர், தம் வரலாற்றைப் பொருட்படுத்தாத போக்கினையும் அறிவிக்கிறது. எனவேதான் சுவாமி விபுலானந்த அடிகள், மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சித்துறையில் முதியவர்; நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோருடைய கூட்டுறவைப் பொன்னேபோல் போற்றுபவர்' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆராய்ச்சிப் பேரறிஞர்

மயிலை சீனியாரால் பல ஆய்வுகள் தமிழுலகுக்கு முதன்முதலாக வழங்கப்பட்டவை. இவரது ஆய்வுகள் அறிஞருக்கு மட்டுமன்றிப் பொதுமக்களுக்கும் அறிவு விருந்தோம்பியவை. பல ஆய்வுகள் கிளைவிடுவதற்கு அடிமரமாக இருந்தவை இவரது ஆய்வுகள். வேண்டாத நூலில் வேண்டாத பகுதி என்றோ ஒதுக்க முடியாத வகையில் இவரது எழுத்தாளுமை திகழ்ந்தது.

தமிழக வரலாற்றுக் கழகத்திலும் தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பெருந்தொண்டாற்றிய வேங்கடசாமிக்கு 1962இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிக் கேடயம் வழங்கியது. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை அளித்தது. தமது ஓயாத தேடலினாலும் கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வு முடிவுகளைக் கொணர்ந்த இம்மாமனிதருக்கு அறிஞர்கள் கூடிச் சென்னை கோகலே மண்டபத்தில் மணிவிழா எடுத்து 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்ற பட்டத்தை வழங்கினர்.

திருமணமே செய்து கொள்ளாமல் இல்லறத் துறவியாக வாழ்ந்து, தம் வாழ்வை முழுமையாகத் தமிழியல் ஆய்வுக்கு ஒதுக்கியவர் மயிலை சீனி. வேங்கடசாமி. அவர், நாம் தாழாமல் இருக்கத் தம்மைத் தாழ்த்திக் கொண்டவர். நமது பெருமைகளை ஆய்வுநோக்கில் விரித்துரைத்தவர்; நமது சுய அடையாளங்களை மீட்டுத் தந்தவர்.

தெரிந்து தெளிவோம்

புதிய செய்தி காணும் ஆய்வு

சேரன் கொடிக்கு வில், சோழன் கொடிக்கு புலி, பாண்டியன் கொடிக்கு மீன் என்று மரபான சின்னங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மற்ற சின்னங்கள் பற்றிய குறிப்புகள் ஆய்வுலகு அறியாதவை. சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் (162) இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் மயிலை சீனி. வேங்கடசாமி. இப்படி அவர் வெளிப்படுத்திய அரிய செய்திகள் பற்பல.


Tags : Chapter 8 | 12th Tamil இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 8 : Ella uyirum thollum : Prose: Namathu adayalangalai meetavar Chapter 8 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும் : உரைநடை: நமது அடையாளங்களை மீட்டவர் - இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும்