Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 12th Tamil : Chapter 8 : Ella uyirum thollum

   Posted On :  03.08.2022 06:58 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும்

கேள்விகள் மற்றும் பதில்கள்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும் : கேள்விகள் மற்றும் பதில்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 8

எல்லா உயிரும் தொழும்

மனிதம், ஆளுமை


• உரைநடை - நமது அடையாளங்களை மீட்டவர்

• செய்யுள் - முகம் - சுகந்தி சுப்பிரமணியன்

செய்யுள் - சிறுபாணாற்றுப்படை - இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்

செய்யுள் - இரட்சணிய யாத்திரிகம் - எச்.ஏ. கிருட்டிணனார்

• துணைப்பாடம் - கோடை மழை - சாந்தா தத்

• இலக்கணம் - குறியீடுஇயல் 8

உரைநடை உலகம்

நமது அடையாளங்களை மீட்டவர்

மயிலை சீனி. வேங்கடசாமி


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக. 

அ) தனித்தமிழ்த் தந்தை - 1. மு.வரதராசனார் 

ஆ) ஆராய்ச்சிப் பேரறிஞர் - 2. மயிலை. சீனி. வேங்கடசாமி 

இ) தமிழ் தென்றல் - 3. திரு.வி.க.

 ஈ) மொழி ஞாயிறு - 4. தேவநேயப்பாவாணர்

[விடை: அ) தனித்தமிழ்த் தந்தை - 1. மு.வரதராசனார்] 


2. ச.த. சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப் பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல். 

அ) பௌத்தமும் தமிழும்

ஆ) இசுலாமும் தமிழும் 

இ) சமணமும் தமிழும்

ஈ) கிறுத்தவமும் தமிழும் 

[விடை : ஈ) கிறுத்தவமும் தமிழும்] 


குறுவினா


1. 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக.

• அழகுக் கலைகள் பற்றி தமிழில் வெளிவந்த முழுமையான நூல். 

• தமிழரது கலைத்திறனை எடுத்தோதுவதாக அமையும் நூல்.

• தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்ற நூல்.


2. ‘விரிபெரு தமிழர் மேன்மை 

ஓங்கிடச் செய்வ தொன்றே 

உயிர்ப்பணியாகக் கொண்டேன்' யார், யாரைப் பற்றி எதற்காகக் கூறுகிறார்? 

• பாவேந்தர் பாரதிதாசன் வேங்கடசாமியைப் பற்றிக் கூறுகிறார். 

• தமிழ் கெட நேர்ந்த போது தமிழ்ப்பணியை உயிர்ப் பணியாகக் கொண்டு தமிழரின் மேன்மையை ஓங்கிடச் செய்தல் வேண்டும் என்று கூறுகிறார்.


சிறுவினா 


1. மயிலை சீனி. வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் உருவாக்கித் தருக

• ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்த கால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியவர் மயிலை சீனி. வேங்கடசாமி. 

• இன வரலாற்றை எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர். 

• இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் எழுதிய புத்தகங்கள் தமிழரின்  புதையல்களாக விளங்குகின்றன. 

• சமயம், மானுடவியல், தொல்பொருள் போன்ற துறையில் மொழி ஆய்வு செய்தவர். 

• வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராம்மி போன்றவற்றில் புலமை பெற்றவர். 

• தமிழில் தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்' குறித்து முழுமையான நூல் வெளியிட்டவர்.

 இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற நூல் ஆகும்.


நெடுவினா


1. மயிலையார் ஓர் “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரைக்க.

• மயிலை சீனி. வேங்கடசாமியின் ஆய்வுகள் மொழிக்கு முதன் முதலாக வைக்கப்பட்டுள்ளன. 

• இவரது ஆய்வுகள் அறிஞர்களுக்கு மட்டுமன்றி பொது மக்களுக்கும் அறிவு விருந்தாகிறது. 

• பல ஆய்வுகள் கிளைவிட இவரது ஆய்வுகள் அடி மரமாக அமைந்தது. 

• இவரது ஆய்வுகள் அனைத்தும் வேண்டியது, வேண்டாதது என்றோ, ஒதுக்க முடியாத வகையில் இவரது எழுத்தாளுமை திகழ்கிறது. 

தமிழக வரலாற்றுக் கழகத்திலும், தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து மொழிக்குத் தொண்டாற்றியமைக்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயமும், மதுரைப் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் விருதும் வழங்கியது. 

• ஓயாத தேடலினாலும், கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வுகள் வெளிக்கொணர்ந்த மாமனிதருக்கு சென்னை கோகலே அரங்கில் மணிவிழா எடுத்து ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்ற பட்டமும் வழங்கப்பட்டது. 

• தமிழ்த் தேனீ என்றால் நம் மயிலை சீனியைத்தான் குறிக்கும். 

• எப்போதும் அவரது கால்கள் அறிவை நோக்கியே நகர்ந்தன. 

• இவர் நூலகத்தைத் தன் தாயகமாகக் கொண்டு அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கினார். 

• இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டி தவறுகளை மறுத்து எடுத்துரைக்கும் ஆய்வு அணுகுமுறைக் கொண்டவர்.

• சமயம், கலை, இலக்கியம், கிறுத்துவமும் தமிழும், பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும் போன்ற ஆய்வு நூல்களை எழுதியும், வட்டெழுத்து கோலெழுத்து தமிழ் பிராம்மி போன்றவற்றில் புலமைப் பெற்று பன்முகங்கள் கொண்டு விளங்கினார். 

• இத்தகு காரணங்களைக் கொண்டு நாம் மயிலையாரை ஆய்வு செய்கின்ற போது அவர் ஓர் சிறந்த ஆராய்ச்சிப் பேரறிஞர் என்ற கூற்று சாலப் பொருந்தும்.


கற்பவை கற்றபின்


1. உங்கள் பகுதியைச் சேர்ந்த தமிழறிஞர் ஒருவரின் பணிகள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக. 

குறிப்பு :

தமிழறிஞர் சிலம்பு நா.செல்வராசு அவர்கள் புதுச்சேரி மொழியில் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக இருபத்து ஓர் ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவர் சிறந்த ஆய்வாளர், ‘தமிழறிஞர்', நெறியாளர் என்ற வரிசையில் அடையாளப்படுத்திக் கொள்கிறார். மேலும் இவர் ஆய்வரங்கம், பதிப்புப் பணி போன்ற துறைகளிலும் பணியாற்றி வரும் இவர் கலைமாமணி, தமிழ் செம்மல் விருது தமிழறிஞர் விருதுகள் பல பெற்று ஆய்வு மாணவர்களோடு தாமும் ஆய்வாளராக வாழ்ந்து வருகிறார்.

கலந்துரையாடல் 

சூர்யா : வள்ளி, நேற்று நம் ஆசிரியர் சிலம்பு நா. செல்வராசு அவர்களைப் பற்றி வகுப்பில் பேசினார் அல்லவா! அதில் சிலம்பு என்று ஏன் பெயர் வந்தது. 

வள்ளி : அதுவா! தமிழ்நாட்ல சில பேருக்குதான் பொருந்தும் அவர்களில் ஒருவர் நா. செல்வராசு. 

சூர்யா : எனக்கு கொஞ்சம் விபரமா சொல்லு. 

வள்ளி : நா.செல்வராசு ஐயா சிலப்பதிகாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அது மட்டுமல்லாமல் தம்மை முழுமையாக சிலப்பதிகார ஆராய்ச்சியில் ஈடுபடுத்திக் கொண்டவர். சிலம்பு என்ற பெயரை அவரின் குருநாதர் வைத்த பெயராம். 

சூர்யா : மகிழ்ச்சி! ஐயா, எப்பொழுது இருந்து ஆய்வுப் பணி செய்கிறார். 

வள்ளி : 1984 முதல் இன்று வரை சங்க இலக்கியத்தில் நிறைய ஆய்வு செய்துள்ளார். 

சூர்யா : அவர் செய்த ஆய்வுகள் எனக்குச் சில சொல்ல முடியுமா. 

வள்ளி : ஓ சொல்றேன். பண்டைய தமிழரின் திருமண வாழ்க்கை, கண்ணகி தொன்மம், வள்ளி முருகன் வழிபாடு. 

சூர்யா : தொன்மம் என்றால் என்ன? 

வள்ளி : பழங்காலத்துக் கதை, உண்மைச் சம்பவம் அல்லது வரலாற்று நிகழ்வு. 

சூர்யா : இவரைப் பற்றி ஏதாவது சிறப்பு இருக்கா? 

வள்ளி : நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இவர் பதினெட்டு முனைவர் பட்ட ஆய்வாளர்களையும் முப்பத்தெட்டு ஆய்வியல் நிறைஞர்களையும் உருவாக்கியவர் ஆவார். இவர் முந்நூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். 

அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவராகவும் தம் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.


2. தமிழறிஞர்களின் பணிகள் குறித்து வகுப்பறையில் படத்தொகுப்பு உருவாககு்க.இயல் 8

செய்யுள்

முகம்

- சுகந்தி சுப்பிரமணியன்


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1. நான் வெற்றுவெளியில் அலைந்து கொண்டிருக்கிறேன் எனது முகத்தைத் தேடியபடி என்று சுகந்தி சுப்பிரமணியன் தேடுவதாகக் குறிப்பிடுவது. 

அ) தமது வீட்டு முகவரியை

ஆ) தமது குடும்பத்தை 

இ) தமது அடையாளத்தை

ஈ) தமது படைப்புகை

[விடை: இ) தமது அடையாளத்தை] 


குறுவினா


1. முகம் முகவரியற்றுப் போனதற்கு சுகந்தி சுப்பிரமணியன் கூறும் காரணத்தை எழுதுக. 

என்குள்ளே என்னைத் தொலைத்தக் காரணத்தால் என் முகவரியற்று போனது என்கிறார்.


கற்பவை கற்றபின்


1. உங்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? உங்கள் வலிமையென்று நீங்கள் எவற்றைக் கருதுவீர்கள்?

‘எவ்வளவு பெரிய காரியமாக இருந்தாலும் அதை என்னால் சாதிக்க முடியும்' என்ற மன உறுதியோடு அச்செயலைச் செய்து முடிக்க வேண்டும். முதலில் என்னுடைய வலியை என்னவென்று நான் அறிந்திருக்க வேண்டும். ஒரு செயல்பாடு முழுமை பெற வெற்றியடைய உடல் வலிமை மட்டுமல்ல மனத்தின் வலிமையுந்தான்.

அரிய பெரிய சாதனைகள் மனத்தின் வலிமையினாலேயே சாதிக்கப்படுகின்றன என்ற உண்மையினை மறந்து விடக்கூடாது. மனத்தை பல வழிகளில் செலவழித்து விடாமல் ஒரே நோக்கில் ஒரே குறிக்கோளில் பயன்படுத்தும் போது மனம் பொலிவு பெறும்.

மனத்தின் எண்ணங்கள் ஒருமுகப்படுத்தும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் எந்தச் செயலையும் எளிதாகச் செய்ய முடியும். நல்ல எண்ணங்கள் குவியும் போது உள்ளத்திற்கு அமைதி கிடைக்கும். இதன் மூலம் சிறந்த வலிமைப் பெற்று எதையும் சாதிக்க முடியும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துபர் எண்ணியர் 

திண்ணியர் ஆகப் பெறின் - என்கிறார் வள்ளுவர்.

நம் வலிமையைக் கொஞ்சம் கூட உணராதவர்கள் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் தோற்றுப் போகிறார்கள்.இயல் 8

செய்யுள்

இரட்சணிய யாத்திரிகம்

- எச்.ஏ. கிருட்டிணனார்


பாடநூல் வினாக்கள்


குறுவினா 


1. இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்? 

• இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே! 

• வானம் இடிந்து விழவில்லையே! 

• கடல் நீர் வற்றவிவ்லையே!

• உலகம் அழியவில்லையே எனப் புலம்பினர். 


சிறுவினா 


1. 'ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்' - இடம்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம் :

எச்.ஏ. கிருட்டிணனார் எழுதிய இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலில் குமாரப் பருவத்தில் சரிதப்படலத்தில் இடம் பெற்றுள்ளது. 

பொருள் :

யூதர்களின் கொடுஞ்செயலில் இருந்து விடுபட முடியாமல் ஓர் ஏழைப்போல அமைதியாய் இருந்தார் என்பது பொருள். 

விளக்கம் :

யூதர்கள் இறைமகனை கயிற்றால் கட்டும் போது அவர் உடன்பட்டு இருந்தார். தம் மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்கின்ற போது அவர்கள் வாழுகின்ற காலத்தில் துன்பப்படாமல் வாழ வேண்டும் என்று இரக்கப்பட்டார். அன்பு என்ற கட்டிலிருந்து விடுபடாமல், எந்த உதவியும் இல்லாமல் ஏழையாய் அமைதியாய் நின்றார்.


நெடுவினா  


1. எச்.ஏ. கிருட்டிணனார் ‘கிறித்துவக் கம்பரே' என்பதை நும் பாடப்பகுதி வழி நிறுவுக.

தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய ஐரோப்பியக் கிறுத்துவ தொண்டர்களைப் போல் தமிழ் கிறுத்துவ தொண்டாகளும் தம் படைப்புகளால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் எச்.ஏ.கிருட்டிணனார். இவருடைய பெற்றோரும் ஆழ்ந்த தமிழ்ப்புலமை கொண்டவர். தன் தந்தையின் கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவுகள் தான் கிருட்டிணனாரைக் கம்பராமாயணம் போல் தாமும் காப்பியம் எழுத வேண்டும் என்று தூண்டியது. இக்காப்பியத்தின் இடையே தேவாரம் போன்ற பாடல்கள் இடம் பெற்றுள்ளது. 

• இறைமகனாரை (இயேசுவை) யூதர்கள் கயிற்றால் கட்டப்பட்டுத் துன்புறுத்தினர். அவர்களிடம் இருந்து விடுபட முடியாமலும், எந்த உதவியும் பெற இயலாது ஏழையாய் நின்றார். அவர்கள் தமக்கு இழிவான செயல்கள் செய்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்கள் வாழுகின்ற காலத்தில் துன்பப்படுவார் என்று அவர்களுக்காக இரங்கினார்.

கொடியோர்கள் கூறிய இகழ்ச்சி மொழியானது தீக்கொள்ளியை தம் இதயத்தில் அழுத்தியது போல் இருந்தது. தம்மை துன்புறுத்தியவரை சினந்து கொள்ளாமல் மறுச்சொல்லும் கூறாமல் அமைதி காத்தார். இறைமகனாரைக் கொல்ல வேண்டும் என்று எண்ணம் கொண்ட போந்தியு பிலாத்து முன் நிறுத்தினர். அவருக்குத் தண்டனை பெற்றுத்தரவும் உறுதியாக இருந்தனர். 

• இறைமகனார் அணிந்திருந்த வெள்ளாடையைக் கழற்றினர். முருக்க மலர் போன்று சிவந்த ஓர் அங்கியை அவருக்குப் போர்த்தினர். கூர்மையான முள் செடியினால் பின்னப்பட்ட முடியை அவருடைய தலையில் இரத்தம் பீறிட செய்தனர். கையிலிருந்த கோலினைப் பிடுங்கி தலையில் வன்மையாக அடித்தனர். திருமுகத்தில் எச்சிலை உமிழ்ந்து பழித்தனர். இதைக் கண்ட மக்கள் 

இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே! 

வானம் இடிந்து விழவில்லையே! 

கடல் நீர் வற்றவில்லையே!

இன்னும் உலகம் அழியாமல் காலம் தாழ்த்தியதைக் கண்டு மக்கள் கொதித்தனர். 

• பொல்லாத யூதர்கள் இறைமகனை இகழ்ந்து பேசிய சொல்லத்தகாத பழிமொழிகளைக் கேட்டு பொறுத்திருந்தார். 


கற்பவை கற்றபின்


1. பொறுத்தாரை இவ்வுலகம் பொன்போல் போற்றும் - என்னும் தலைப்பில் கலந்துரையாடுக.

பங்கு பெறுவோர் : ராமு, கோபு மற்றும் தமிழ் ஆசிரியர். 

இருவரும் : ஐயா வணக்கம். 

தமிழ் ஐயா : வணக்கம் வாருங்கள் என்ன வேண்டும்? 

ராமு : ஐயா, பொறுத்தார் என்பவரைப் பற்றிக் கூறுங்கள் 

ஐயா : பிறர் நமக்கும் செய்யும் தவறுகளை, குற்றங்களைப் பொறுத்துக் கொள்பவர் பொறுத்தார் ஏனென்றால் அவர் அறியாமையால் கூட தவறு செய்திருக்கலாம். 

கோபு : பொறுத்தாரைப் பொன் போல் பொதிந்து - இந்தத் தொடருக்கு விளக்கம் வேண்டும் ஐயா! 

சோமு : இதற்குச் சான்றான நடந்த நிகழ்வைக் கூறுங்கள் ஐயா. 

ஐயா : விடுதலைப் போராட்டத்தில் அண்ணல் காந்திக்கு எவ்வளவோ துன்பங்கள் எதிர்கொண்டன. இங்கிலாந்தில் ஒரு முறை சர்ச்சில் அரையாடைப் பண்டிதர் என்ற கேலி செய்தாராம். சபர்மதி ஆசிரமத்தில் ஹரிஜன மக்கள் உறுப்பினராவதை எதிர்த்து உயர்சாதி உறுப்பினர்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேறினர். காந்தி இதனையும் பொறுத்தார். அண்ணல் அம்பேத்காரைச் சட்ட அமைச்சராக்கி, அரசியல் நிருணய சபையின் தலைவராக்கியதால் அதில் இருந்த உறுப்பினர்கள் ஒத்துழைக்கவில்லை. இதை அம்பேத்கர் பொறுத்துக் கொண்டார் போதுமா மாணவர்களே! 

இருவரும் : நன்றி ஐயா! 'பொறுத்தாரைப் பொன் போல் பொதிந்து' என்பதன் விளக்கம். அற்புதமாக இருக்கிறது ஐயா.இயல் 8

செய்யுள்

சிறுபாணாற்றுப்படை

- நத்தத்தனார்பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1. சிறுபாணாற்றுப்படை காட்டும் பாட்டுடைத் தலைவனின் இன்றைய நிலப்பகுதி 

அ) உதகமண்டலம் 

ஆ) விழுப்புரம்

இ) திண்டிவனம் 

ஈ) தருமபுரி 

[விடை : இ) திண்டிவனம்] 


2. கடையெழு வள்ளல்களின் வரிசையைச் சாராத மன்னர்கள் 

அ) ஆய் அண்டிரனும் அதிகனும்

ஆ) நல்லியக் கோடனும் குமணனும் 

இ) நள்ளியும் ஓரியும்

ஈ) பாரியும் காரியும்

[விடை : ஆ) நல்லியக் கோடனும் குமணனும்] 


சிறுவினா 


1. கடையெழு வள்ளல்களையும் அவர்கள் செய்த செயலையும் அட்டவணைப் படுத்துக. 2. கொடை வழங்குதலில் நீங்கள் பின்பற்ற விரும்புவனவற்றை எழுதுக. 

• கொடை என்பது மடைமை குணங்களில் ஒன்றாகும். 

• மடம் என்பது அறியாமை என்ற பொருள். 

• இன்னாருக்கு இன்னது கொடுக்க வேண்டும் என்பதை எண்ணாமல் கிடைத்ததை நினைத்த போது கொடுப்பதுதான் கொடை.

• இது சரியா தவறா என்று ஆலோசிக்க அறிவுக்கு இடம் கொடுக்காமல் உள்ளத்துக்குக் கொடுக்கும்போது தோன்றுவது கொடை மடம். 

இதைத்தான் வள்ளுவர் 

வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் 

குறியெதிர்ப்பை நீர் உடைத்து - என்கிறார். இதன்படியே நாமும் கொடை வழங்குவதைப் பின்பற்றலாம். 


கற்பவை கற்றபின்


1. எதையும் எதிர்பாராமல் நீங்கள் பிறருக்கு உதவி செய்த நிகழ்வை வகுப்பறையில் பகிர்ந்து கொள்க. 

மாணவச் செல்வங்களே!

வணக்கம்.

எதையும் எதிர்பார்க்காமல் செய்த உதவி மண்ணையும் விண்ணையும்விட உயர்வானது. அது பற்றிய ஒரு நிகழ்வைக் கூறுகிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன் நமது பள்ளி வாயிலைக் கடக்கும் போது என்னை சார் என்ற குரல் அழைத்துத் திரும்பினேன். ஒரு ஐம்பது வயதுள்ள ஒரு அம்மாவும், பத்து வயது இருக்கும் ஒரு பையனும் நின்றிருந்தார்கள். என்னம்மா வேண்டும் என்றேன். சார் இவன் என் மகளுடைய பேரன். இவனுடைய அப்பா, அம்மா சுனாமி ஏற்பட்ட போது கடல் அன்னையால் உள்வாங்கப்பட்டார்கள். இவன் தமிழ்வழிப் படித்தவன் உங்கள் பள்ளி ஆங்கில வழியாம் இவனால் படிக்க முடியாதாம். கட்டணமும் அதிகமாம். வேறிடம் போகச் சொல்லி விட்டார்கள் என்றாள் அந்த அம்மா .

உடனே, முதல்வர் அறைக்குச் சென்று என் செல்வாக்கைப் பயன்படுத்தி, நான் இவன் மீது கவனம் செலுத்துகிறேன் என்று உத்தரவாதம் கூறிப் பள்ளியில் சேர்த்தேன். இவ்வசமாக படிக்க பள்ளியில் அனுமதி பெற்றேன். இன்று அவன் காவல்துறை அதிகாரி. சில நாட்களுக்கு முன் அவனுடைய பாட்டி என்னைப் பார்க்க தன் பேரனோடு வந்தார்கள். ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் பாட்டி. அவனும் என்னைப் பார்த்து நன்றி கூறினான். எதிர்பாராமல் செய்த உதவி என்னை மகிழ்ச்சியில் உறைய வைத்தது. ஆமாம், மாணவர்களே எதையும் எதிர்பாராமல் செய்யுங்கள். 


2. தமிழர்கள் கொடைத் தன்மையில் சிறந்து விளங்கினர் என்பதற்குச் சான்றுகள் திரட்டி ஒப்படைவு.

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு போன்று பண்டையத் தமிழரின் வரலாறு, வாழ்வியல், அறம், ஈதல் போன்றவற்றை அறிய புறநானூறு ஒன்றைச் சான்றாகக் காட்டலாம். 

பாடல் உனக்கு பரிசில் எனக்கு :

தன்னை எதிர்த்துப் போரிட்ட பகைவனின் காவல் மிக்க அரண்களை அழித்துப் போர் புரிந்த வீரத்தைப் புகழ்ந்து பாடிய பாடினிக்கு பல கழஞ்சால் செய்யப்பட்ட பொன் அணிகலன்களையும், அவளோடு வந்து இணைந்து பாடிய பாணனுக்கு வெள்ளி நாறால் கோக்கப் பெற்ற தாமரைப் பூ மாலையும் பரிசாக வழங்கினான். 

மறம் பாடிய பாடினியும்மே 

ஏருடைய விழக்கழஞ்சிற் 

சீருடைய விழை பெற்றி சினே 

பொற்றாமரையும் யானையும் வழங்குதல்: 

“பாணாட தாமரை மலையவும் புலவர் 

பூநுதல் யானையொடு புனைதேர்.....

பாணர்களுக்குப் பொற்றாமரை ஈதலும், புலவர்களுக்கு யானையை வழங்குதலும் கொடையாகத் தமிழர்கள் கொண்டு வாழ்ந்தனர்.
இயல் 8

துணைப்பாடம்

கோடை மழை

- சாந்தா தத்


பாடநூல் வினாக்கள்


நெடுவினா


1. கோடை மழை கதை வாயிலாக விளக்கப்படும் மனித நேயப்பண்புகளை விளக்குக. 

கதைமாந்தர்கள் : ஆறுமுகம் (முதியவர்), குழந்தை, பாபு (மருந்தக ஊழியர்), டாக்டர், நர்ஸ்

முன்னுரை :

சாந்தாதத்தின் ‘கோடை மழை' எனும் சிறுகதையில் மனைவி இறந்த துக்கம் தாளாது கணவனும் விஷமருந்தி போனதால் பச்சிளம் குழந்தையை முதியவர் ஆறுமுகம் வளர்க்கிறார். தள்ளாத வயதில் தனக்குப் பின் இக்குழந்தையின் நிலை என்ன ஆகுமோ என்று எண்ணி தத்துக் கொடுக்க முடிவு செய்கிறார். அவ்வாறு தத்துக் கொடுக்கும் போது ஏற்படுகின்ற மனித நேயப்பண்புகளை இக்கட்டுரை வாயிலாக அறியலாம்.

மருத்துவமனையில் குழந்தை அழுதல்:

விழிகளை அகலவிரித்து எந்தவித இலக்கும் இல்லாமல் அப்படியும் இப்படியும் பார்த்து கண்ணைச் சுழற்றி குழந்தை அழ ஆரம்பித்தது. இது போலவே அரை மணி நேரமாக அவஸ்திப்படும் குழந்தைக்குப் பசியா, காய்ச்சலா, அசதியா தெரியவில்லை என்று ஏங்குகிறார் முதியவர் ஆறுமுகம். 

முதியவரின் புலம்பல் :

குழந்தைக்கு ரெண்டு சொட்டு டீத்தண்ணீர் கொடுக்கனும் தானும் குடித்தால் தொண்டைக்கு இதமா இருக்கும். டீ விற்கும் பையனையும் உள்ளே விடமாட்டார்கள் வெளியே போய்விட்டு வந்தால் இடம் போய்விடும் என்ன செய்றது. பரபரத்து ஓடி வந்தும் பலன் இல்லை என்று தமக்குத் தாமே எண்ணிக் குழந்தையைத் தோளில் சரிசெய்து கொண்டு சமாதானம் ஆனார். 

முதியவரின் பொறுமை :

ஆஸ்பிட்டலில் வரிசை ஆமை வேகத்தில் சென்றதால் முதியவருக்கு அலுப்பு கூடியது. வீட்டுக்குப் போலாமா என்ற எரிச்சல் இரண்டு நாளா குழந்தைக்குக் கை வைத்தியம் பார்த்தும் பிடிபடல, தனியார் ஆஸ்பத்திரிக்கு போக வசதியும் இல்ல, மனுச ஆதரவும் இல்ல இன்னும் என்ன நடக்கப் போகுதோ பொறுமையாய் இருப்போம் காசா பணமா. 

முதியவரின் நிலைப்பாடு :

அடப்பாவமே ஆண்டவன் கொடுத்த உசுரு தன்னையும் பார்த்துக் கொள்ள யாரும் இல்ல, தன்னையே தானும் பார்த்துக் கொள்ளவும் முடியல ஆயுசு பூராவும் இந்தக் குழந்தையோடு இந்தக் கிழடு அல்லாட வேண்டியது தான். உனக்கு நான் எனக்கு நீ என்றாகிவிட்ட நாதியற்ற அவஸ்தை, தகப்பனையும் பிள்ளையையும் பாதுகாக்க வேண்டிய வாரிசு நட்டாத்துல விட்டுட்டுப் போய்விட்டான். நாலு நாள் நல்ல காய்ச்சல் கட்டியவள் கண் மூடிய பின் தானும் குழந்தையை அனாதை ஆக்கிவிட்டுச் சென்றுவிட்டான்.

முதியவரின் தனிமை :

அனாதை ஆகிவிட்ட குழந்தையை எண்ணி முதியவரின் ஓயாத புலம்பல். ஆனால் தன் பிள்ளையைப் பிரிந்த துயரம் துளியும் இல்லை. அந்த அளவுக்கு வெறுப்பு. என்னையும் குழந்தையும் தனியாக்கிட்டு போயிட்டானே என்ற கோபம். பாசம் பாசிபோல் மூடிவிட்டது. பிஞ்சுப் பிள்ளைக்கூட நினைக்காமல் பொண்டாட்டி மேல பாசம். எத்தனையோ ஆண்கள் மனைவியை இழந்து வாழல. இவனெல்லாம் ஒரு கோழை. 

மருத்துவரிடம் செல்லுதல் :

மீண்டும் குழந்தை சினுங்க ஆரம்பித்துவிட்டது அப்போது உள்ளேயிருந்து ஒரு தாய் உள்ளேயிருந்து தன் தோளில் கோழிக்குஞ்சு போல் தூக்கிக் கொண்டு வந்தாள். அவளைப் பார்க்கவும் நினைக்கவும் முடியாமல் மூச்சு விடுவதை தவிர ஏதும் தெரியாமல் உள்ளே சென்றார். 

மருத்துவரின் அறிவுரை :

பெரியவரே! நெஞ்சில் சளி கட்டி இருக்கு அதான் காய்ச்சல் பயப்பட வேண்டாம் பக்குவமாய் பார்த்துக் கொண்டால் இரண்டு நாளில் சரியாகிவிடும் என்று கூறிவிட்டு மருந்து சீட்டு எழுதிக் கொடுத்தார். 

நர்ஸ் நலம் விசாரித்தல் :

ஏன் பெரியவரே உங்க கை இப்படி நடுங்குது. வீட்ல வேற யாரும் இல்லையா? என்று கேட்க பதில் கூற முடியாமல் ஊசி போட்ட குழந்தை வலியால் அழுவதை அணைத்துக் கொண்டு சிரிப்பை மட்டும் பதிலாக்கி விட்டு வெளியேறினார். 

மருந்தகம் செல்லுதல் :

வாங்கய்யா உட்காருங்க குழந்தைக்கு உடம்பு சரியில்லையா! ஆமாம் பாபு மூணு நாளா ரொம்ப கஷ்டப்படுது டாக்டர் ஊசி போட்டிருக்கார். மருந்து கொடுத்தா சரியாயிடும்னு சொன்னார். பாபு..... நான் மருந்து மட்டும் வாங்க வரல ரொம்ப நாளா சொல்லணும் நினைச்சேன். இப்பத்தான் நேரம் வந்தது. பாபு நான் ரொம்ப நாள் உசிரோட இருக்கணும்னு தான் ஆசை நெஞ்சில் உரம் இருந்தாலும் உடம்பு கேட்கனுமே? சாவோட மல்லுக்கு நிற்கிற வயசா இது முடியலப்பா. நாளைக்கு நீ அவங்கள கூட்டிட்டு வா. 

தாய் பாசம் :

அம்மா என்கிற பாசம் தெரியாமல் இருக்க இது மட்டும் என்ன பாவம் செய்தது. பெண்ணோட பரிவும் பாசமும் ஒரு குழந்தைக்கு எவ்வளவு முக்கியம்னு இப்பதான் பாபு புரியுது. என் சுயநலத்துக்காக குழந்தையை அனாதையாக விட்டுட்டு போறது பெரிய பாவம். சரி பாபு கொஞ்சம் தாமதித்தாலும் மனசு மாறிடும் மருந்தும் குழந்தையுமாய் விடவிடுவென நடந்தார். 

முதியவரின் குமுறல்கள் :

பாபுவுடன் வந்தவர்களைப் பார்த்த போது பிள்ளை பாக்கியம், ஏக்கம், தவிப்பு, அத்தனையும் உணர்ந்த போது குழந்தையின் பாதுகாப்பு உறுதியானது. நெடுநாள் தயக்கத்துக்குப் பின் தன் முடிவுக்கு இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. நெருடல் எல்லாம் பிள்ளையைப் பிரிந்து இருக்க வேண்டுமே என்பதுதான் பெரியவருக்கு உறுத்தல். 

பாபுவின் மனித நேயம் :

ஐயா! இனிமேல் உங்களுக்குக் கவலை வேண்டாம். உங்களுடைய வேதனை எங்களால் தாங்க முடியல. நீங்க எங்க வாழ்க்கைக்குப் பெரிய நம்பிக்கை கொடுத்து இருக்கிங்க. நன்றி சொல்றதுக்கு பதிலா நான் உங்கிட்ட உதவி கேட்கிறேன் நீங்களும் குழந்தையைப் பிரிந்து இருக்காம எங்களோட வந்திருங்க தயங்காதீங்க.

முதியவரின் தடுமாற்றம் :

இறைஞ்சும் பாபுவைக் கண்டு தடுமாறினார். யாருக்கு யார் உதவி? எவ்வளவு பெரிய விஷயம் பாபு இப்போதைக்கு எனக்கு சாவு வராது பாபு கூறினார். 

முடிவுரை:

இக்காலக்கட்டத்தில் தன்னைப் பெற்ற தாய் தந்தையரை முதியோர் இல்லத்தில் விடும் ஆண்களைப் போல் இல்லாமல் தாய் தந்தையை இழந்த பச்சிளம் குழந்தையையும், முதியவரையும் அரவணைத்துத் தம் இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் பாபுவின் மனிதநேயப் பண்பு, கோடை மழை - கதை வாயிலாக அறிய முடிகிறது. 


கற்பவை கற்றபின்


1. பொது இடங்களில் நீவிர் பார்த்த மனிதநேய நிகழ்வை வகுப்பறைச் சூழலில் பகிர்ந்து கொள்க.

எங்கள் ஊரின் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நாள் நின்று கொண்டிருந்தேன். அவ்விடம் அதிகமாக மக்கள் கூடுவார்கள். பேருந்து நிறுத்தத்தின் அருகில், 50 வயதுள்ள ஒருவர் கரித்துண்டால் கோவில், திருச்சபை பள்ளிவாசல் என வரைந்து கொண்டிருந்தார். ஓவியம் அற்புதம். முழுமையாக அவரைப் பார்த்தேன். கால்கள் இரண்டும் இல்லை. இறைவா இது என்ன சோதனை என்று நினைத்துக் கொண்டேன். அப்போது பத்து வயது சிறுவன் அவருக்குச் சிற்றுண்டி வாங்கி வந்து ஊட்டுவதைப் பார்த்தேன். விசாரித்ததில் அவர் நல்ல ஓவியர். விபத்தில் கால்கள் இழந்ததால் மனைவியும், உறவினரும் இவரைக் கைவிட்டுவிட்டதாகவும் சொன்னார்கள். இந்தப் பையனும் ஒரு அனாதை. ஆனால், இவருக்குக் கிடைக்கும் பணத்தில் அந்தப் பையன் தானும் சாப்பிட்டுக் கொண்டு இவரையும் கவனித்துக் கொள்கிறான் என்றார்கள். இதுதான் மனித நேயம்.

ஒரு வாரம் கழித்து நானும் இவர்களை ஓர் அனாதை ஆசிரமத்தில் சேர்த்தேன். அவர்கள் சென்றுவர அரசிடம் பரிந்துரை செய்து மூன்று சக்கர வாகனம் பெற்றுக் கொடுத்தேன். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரையும் பார்த்தேன். எவ்வளவோ மாற்றம்! நன்றி உணர்ச்சியில் அவர்கள் இருவரின் கண்களில் கண்ணீர்.
இயல் 8

இலக்கணம்

குறியீடு


இலக்கணத் தேர்ச்சி கொள்

1. குறியீடுகளைப் பொருத்துக

அ) பெண் - 1. சமாதானம்

ஆ) புறா - 2. வீரம்

இ) தராசு - 3. விளக்கு

ஈ) சிங்கம் - 4. நீதி

அ) 2, 4, 1, 3

ஆ) 2, 4, 3, 1

இ) 3, 1, 4, 2 

ஈ ) 3, 1, 2, 4

[விடை: இ) 3, 1, 4, 2]


2. கூற்று : 19 ஆம் நூற்றாண்டில் குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது. 

காரணம்: பொதலேர், ரைம்போ. வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் குறியீட்டியத்தை வளர்த்தவர்கள்,

அ) கூற்று சரி, காரணம் தவறு 

ஆ) கூற்று சரி, காரணம் சரி

இ) கூற்று தவறு, காரணம் தவறு

ஈ) கூற்று தவறு, காரணம் சரி 

[விடை: ஆ) கூற்று சரி, காரணம் சரி]


3. சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள். 

அ) உவமை

ஆ) உவமேயம்

இ) உத்தி

ஈ) உள்ளுறை உவமை

[விடை: ஈ) உள்ளுறை உவமை]


4. ‘திட்டம்” என்னும் தலைப்பில் வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக? என்று எழுதப்பட்டுள்ள கவிதையில் 'வரம்' எதற்குக் குறியீடாகிறது? 

அ) அமுதசுரபி 

ஆ) ஆதிரைப் பருக்கை

இ) திட்டம்

ஈ) பயனற்ற விளைவு

[விடை: இ) திட்டம்]


5. மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி எது?

அ) குறியீடு 

ஆ) படிமம் 

இ) அங்கதம்

ஈ) தொன்மம்

[விடை: அ) குறியீடு]


குறுவினா


1. குறியீட்டு உத்தியில் ஒரு புதுக்கவிதை எழுதுக.

எதிரே 

தலைமயிர் தரித்து

கொலு வீற்றிருந்தாள் 

உன் நிழல்

(பிரமிள்)


2. வியர்வை கவிதையில் வெளிப்படும் குறியீடுகளைக் குறிப்பீடுக.

• வியர்வைக்கு - ஆதிரைப் பருக்கை

• செழிப்புக்கு - அமுத சுரபி


3. குறியீட்டு உத்தியின் அடிப்படை இலக்கணங்களை எழுதுக. 

• குறிப்பாக உணர்த்தும் பொருள் அல்லது சொல் குறியீட்டு உத்தி என்பர்.

• சுட்டிய பொருளுக்கும் குறியீட்டுப் பொருளுக்கும் ஏதேனும் ஒரு தொடர்பு இருத்தல் வேண்டும்.

• சுட்டும் பொருள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாக இருத்தல் வேண்டும்.

• இத்தொடர்பின் வாயிலாகக் குறியீட்டுப் பொருள் நுண்ணிய முறையில் வெளிப்படுத்த வேண்டும்.

எ.கா. தராசு - நீதி.


நம்மை அளப்போம்

பலவுள் தெரிக

1. சிறுபாணாற்றுப்படை காட்டும் பாட்டுடைத்தலைவனின் இன்றைய நிலப்பகுதி

அ) உதகமண்ட லம்

ஆ) விழுப்புரம் 

இ) திண்டிவனம்

ஈ) தருமபுரி


2) பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

அ) தனித்தமிழ்த் தந்தை - 1. மு. வரதராசனார்

ஆ) ஆராய்ச்சிப் பேரறிஞர் - 2. மயிலை சீனி. வேங்கடசாமி 

இ) தமிழ்த் தென்றல் - 3. திரு.வி.க. 

ஈ) மொழி ஞாயிறு - 4. தேவநேயப் பாவாணர்


3) ச. த. சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப்பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்

அ) பௌத்தமும் தமிழும் 

ஆ) இசுலாமும் தமிழும் 

இ) சமணமும் தமிழும் 

ஈ) கிறித்தவமும் தமிழும்


4) நான் வெற்றுவெளியில் அலைந்துகொண்டிருக்கிறேன் எனது முகத்தைத் தேடியபடி என்று சுகந்தி சுப்பிரமணியன் தேடுவதாகக் குறிப்பிடுவது

அ) தமது வீட்டு முகவரியை

ஆ) தமது குடும்பத்தை

இ) தமது அடையாளத்தை

ஈ) தமது படைப்புகளை


5) கடையெழு வள்ளல்களின் வரிசையைச் சாராத மன்னர்கள்

அ) ஆய் அண்டிரனும் அதிகனும்

ஆ) நல்லியக்கோடனும் குமணனும் 

இ) நள்ளியும் ஓரியும்

ஈ) பாரியும் காரியும்


குறுவினா


1) 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக.

2) 'விரிபெரு தமிழர் மேன்மை ஓங்கிடச் செய்வ தொன்றே உயிர்ப்பணியாகக் கொண்டோன்' - யார், யாரைப் பற்றி, எதற்காகக் கூறுகிறார்?

3) முகம் முகவரியற்றுப் போனதற்கு சுகந்தி சுப்பிரமணியன் கூறும் காரணத்தை எழுதுக. 4) இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?


சிறுவினா


1) மயிலை சீனி. வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் உருவாக்கித் தருக.

2) கடையெழு வள்ளல்களையும் அவர்கள் செய்த செயலையும் அட்டவணைப் படுத்துக.

3) 'ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்' - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

4) கொடை வழங்குதலில் நீங்கள் பின்பற்ற விரும்புவனவற்றை எழுதுக.


நெடுவினா


1) மயிலையார் ஓர் "ஆராய்ச்சிப் பேரறிஞர்" என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரைக்க.

2) எச். ஏ. கிருட்டிணனார் 'கிறித்தவக் கம்பரே' என்பதை நும் பாடப்பகுதி வழி நிறுவுக.

3) கோடைமழை கதை வாயிலாக விளக்கப்படும் மனித நேயப் பண்புகளை விளக்குக.


மொழியை ஆள்வோம்


சான்றோர் சித்திரம்


பர்மாவில் ரங்கூன் நகரில் உள்ளவொரு கடையில் அடிப்பையனாகப் (உதவியாள்) பணியாற்றினான் ஒரு சிறுவன். அவனிடம், கடை முதலாளி ஒரு பெயரைக் குறிப்பிட்டு, அந்த நபர் வந்து தன்னை எங்கே என்று கேட்டால். 'முதலாளி இல்லை' என்று சொல்லுமாறு வற்புறுத்தினார். அந்தச் சிறுவனோ, “நீங்கள் வெளியிலிருந்தால் அவ்வாறு கூறலாம். இல்லாதபோது எப்படிப் பொய்? சொல்வது? சொல்ல மாட்டேன்” என்று பிடிவாதமாகக் கூறினார். அவர், வ.சு.ப. மாணிக்கம்.

தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் 'தமிழ் இமயம்' என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர் வ.சுப.மாணிக்கம். ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற கொள்கையைப் பறைசாற்றுவதற்காகத் ‘தமிழ்வழிக் கல்வி இயக்கம்' என்ற அமைப்பை நிறுவித் தமிழ்ச்சுற்றுலா மேற்கொண்டவர். அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகச் சிறப்புடன் செயலாற்றிய போது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன் அங்குத் தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தார். திருவந்தபுரத்தின் திராவிடமொழியில் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணிபுரிந்தபோது தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

சங்கப் பாடல்களின் நுட்பங்களைக் கட்டுரைகளாக எழுதுவதில் ஆற்றல் மிக்கவரான இவர் தமிழ்க்காதல், வள்ளுவம், கம்பர், சங்கநெறி உள்ளிட்ட பல நூல்களை இயற்றியவர். தமிழுக்குப் புதிய சொல்லாக்கங்களையும், உவமைகளையும் உருவாக்கித் தருவதில் தனி ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தவர். ஆராய்ச்சி, கட்டுரை, நாடகம், கவிதை, உரை, கடித இலக்கியம், பதிப்பு எனப் பல்துறை ஆளுமையான அவருக்குத் தமிழக அரசு அவருடைய மறைவிற்குப் பிறகு, திருவள்ளுவர் விருது வழங்கியதுடன் 2006 ஆம் ஆண்டு அவருடைய நூல்களை நாட்டுடமையாக்கிச் சிறப்புச் செய்தது. 

அவருடைய தமிழ்த்திறத்துக்கும் ஒரு பதம்.

“ஐந்து கோடித் தமிழர் தொகை இருந்தும், ஆயிரம் படிகள் மாமாங்கம் ஆகின்றது. வாங்காற்றல் மக்களிடம் இல்லை என்று சொல்லுதற்கில்லை. எத்துணையோ புதுக்கோலங்கட்கும் கேளிக்கைகட்கும் தலைகால் தெரியாமல் செலவு செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நூல்கள் வாங்கும் அறிவுப் பழக்கத்தை மக்களிடம் பரப்ப வேண்டும்”. 

வினாக்கள் :

1. தமிழின் இதயம் என அறிஞர்களால் போற்றப்பட்டவர் யார்? 

2. வ.சு.ப. மாணிக்கத்தின் பணிகள் பற்றிக் கூறுக.

3. வ.சு.ப. மாணிக்கத்திற்கு என்ன விருது வழங்கப்பட்டது? 

4. பிரித்து எழுதுக: பேராய்வாளர்

5. புணர்ச்சி விதி தருக: தமிழாய்வு 


விடைகள் :

1. தமிழின் இதயம் - வ.சு.ப. மாணிக்கம். 

2. • அண்ணாமலைப் பல்கலையின் தமிழ்த்துறைத் தலைவர்.

• அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் மற்றும் முதல்வர். 

• மதுரை, காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்.

3. திருவள்ளுவர் விருது 

4. பேராய்வாளர் - பெருமை + ஆய்வாளர் 

5. தமிழாய்வு - தமிழ் + ஆய்வு

உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - தமிழாய்வு. 


தமிழாக்கம் தருக.

I make sure I have the basic good habits which include respecting my elders, greeting people when I meet them, wishing them well when departing etc. Other than this, observing the law, serving the poor and downtrodden, helping the sick and needy, giving shelter to the homeless, assisting someone with a physically challenged etc. are also other good habits of mine. To lead on a peaceful life, I develop other good habits, writing, listening to music, dancing, singing etc. are other such habits which fulfill the needs of my soul.

நான் பெரியவர்களை மதிப்பது, பிறரைச் சந்திக்கும் போது வணக்கம் தெரிவிப்பது, அவர்கள் புறப்படும் சமயத்தில் நன்றி செலுத்துவது போன்ற நல்ல பழக்கங்கள் என்னிடம் இருப்பதை உறுதியாகச் சொல்வேன். இது தவிர, சட்டத்தைக் கவனித்தல், ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்குச் சேவை புரிதல், நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல், வீடற்றவர்களுக்குத் தங்குமிடம் அமைத்துத் தருதல், மாற்றுத்திறனாளிகளுக்கு இயன்ற உதவி செய்தல் போன்ற மற்ற சில நல்ல பழக்கங்களும் என்னிடம் உள்ளது. ஒரு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள நான் மேலும் சில நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறேன், பாடல் கேட்கிறேன், நடனம் ஆடுகிறேன், எழுதுகிறேன், இசையை ரசிக்கிறேன். இதுபோன்ற பழக்கங்களால் என் ஆன்மாவின் தேவைகள் பூர்த்தியாகின்றன. 


கதையைப் படித்துப் பொருளுணர்ந்து நிகழ்வை உரையாடலாக மாற்றுக.

 “எனக்கு சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா! என்று கெட்டிக்காரத்தனமாகக் கேட்டான் ராமசாமி. செல்லையா பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்; தம்பையா ஆகாயத்தைப் பார்த்து யோசனை செய்தான்; மங்கம்மாள் மூக்கின்மேல் ஆள் காட்டி விரலை வைத்துக் கொண்டும் கண்ணை இலேசாக மூடிக் கொண்டும் யோசனை செய்தாள். அந்த மூவரும் ராமசாமியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் மற்ற பிள்ளைகள். அன்று பள்ளிக்கூடத்திலிருக்கும்போது ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது. ராமசாமி தன் 'ஐந்தாம் வகுப்பிற்குரிய இந்தியதேச சரித்திரப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். செல்லையா அந்த வருஷம் இந்திய தேச சரித்திரம் வாங்கவில்லை; அதனால் தன்னிடமுள்ள ஒரு சிவிக்ஸ் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். இருவரும் ‘படப்போட்டி'யை ஆரம்பித்து விட்டார்கள்.

- 'ராஜா வந்திருக்கிறார்', கு. அழகிரிசாமி

உரையாடல் 

ராமசாமி : என்னிடம் சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா?

செல்லையா : .... விழித்தான். 

ராமசாமி : உன்னிடம் இருக்கா? 

தம்பையா : .... ஆகாயத்தைப் பார்த்து யோசனை செய்தான். 

ராமசாமி : உனக்கு இருக்கா? 

மங்கம்மாள் : .... மூக்கின் மேல் விரல் வைத்தாள். கண்ணை லேசாக மூடிக்கொண்டாள். 

ராமசாமி : ஏன் மூன்று பேரும் பதில் சொல்லவில்லை என் கேள்விக்கு? 

மூவரும் : ..... பதில் இல்லை.

(மற்ற பிள்ளைகள் ராமசாமியின் கேள்விக்கு மூவரும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தனர். அன்று பள்ளிக்கூடத்தில் இருக்கும்போதே ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் ஒரு போட்டி வந்தது.) 

ராமசாமி : என்னிடம் இந்திய தேசிய சரித்திரப் புத்தகம் உள்ளது, உன்னிடம் உள்ளதா? 

செல்லையா : என்னிடம் சிவிக்ஸ் புத்தகம் உள்ளது. 

ராமசாமி : சரி பரவாயில்லை, போட்டியை ஆரம்பிக்கலாமா? 

செல்லையா : சரி

(இருவரும் ஒவ்வொரு பக்கமாகப் புரட்டுகிறார்கள். இடையிடையே வரைபடம் உள்ளதா, படம் உள்ளதா என்ற போட்டி விரைவாக நடந்தது. ஆளுக்கு ஒரு பக்கம் பக்கமாகப் புரட்ட போட்டித் தொடர்ந்தது) 

ராமசாமி : கடைசிப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்து உன்னிடம் இன்னும் எத்தனைப் பக்கம் இருக்கிறது என்றான். 

செல்லையா : இன்னும் இரண்டு பக்கங்கள் இருக்கிறது. உன்னிடம் எத்தனைப் பக்கம் உள்ளது? 

ராமசாமி : இதுதான் எனது கடைசிப் பக்கம். 

செல்லையா : ஓ... அப்ப நான்தான் ஜெயிச்சேன்... 


உரை எழுதுவோம்

உங்கள் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் தற்பொழுது மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றுகிறார். நடைபெற இருக்கும் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வர இருக்கும் அவரைப் பள்ளியின் சார்பாக வரவேற்கும் விதமாக ஒரு பக்க அளவில் வரவேற்புரை ஒன்றை எழுதுக.

வரவேற்புரை 

நமது பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வருகை புரிந்திருக்கும் நமது மாவட்ட ஆட்சியர் அவர்களை இருகரம்கூப்பி மனமகிழ்வோடு வரவேற்கிறேன்.

முயற்சி செய்து வெற்றி கிடைத்தால் விடாமுயற்சி என்று பாராட்டுவார்கள். முயற்சி செய்து வெற்றி கிடைக்காவிட்டால் வீண்முயற்சி என்பார்கள். இதுதான் உலகம். ஆனால், நமது அழைப்பிற்கு இசைவு தந்து நம் முன்னே ஒரு வெற்றிக்கு எடுத்துக்காட்டாக அமர்ந்திருக்கும் ஆட்சியாளர் ஒரு அறிவாளர். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத படகில் சவாரி செய்வது போலாகும்.

ஒவ்வொரு மாணவரும் ஏதேனும் ஒன்றைச் சாதித்தே தீரவேண்டும் என்ற குறிக்கோளோடுதான் படிக்க வேண்டும். நமது மாவட்ட ஆட்சியரும் பள்ளியிலே பயிலுகின்றபோது தான் எதிர்காலத்தில் ஆட்சியராக ஆக வேண்டும் என்று உறுதியோடிருந்தவர்.

முயற்சி திருவினையாக்கும்' என்பதற்கிணங்க அவருடைய முயற்சி பலித்துவிட்டது. இன்றைய லட்சியம் நாளைய மாற்றம், இன்றைய அலட்சியம் நாளைய ஏமாற்றும் என்பார்கள். லட்சியத்தை அலட்சியப்படுத்தக்கூடாது. நேற்று செய்தித்தாளிலே நமது மாவட்ட ஆட்சியர் பேட்டிக் கொடுத்திருந்தார். அதிலே தான் படித்த பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழாவிற்குப் போவதாகக் கூறியிருந்தார். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாயென நமது பள்ளியே மகிழந்து போனது.

வெற்றி பெறுவதற்குமுன் உலகை நீ அறிவாய், வெற்றிபெற்றபிறகு உலகம் உன்னை அறியும் என்பது போல, நமது ஆட்சியரும் உலகம் அறிந்த உயர்ந்த மனிதராகக் காணப்படுகிறார். தான் படித்த பள்ளிக்கு வருகை புரிந்தும், பள்ளியால் தனக்குப் பெருமை என்று கூறும் ஆட்சியருடைய பேச்சும் நம்மையெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிடச் செய்கிறது.

ஞாலம் கருதினும் கைகூடும்' என்னும் வள்ளுவனின் வாக்கிற்கு இலக்கணமான நமது மாவட்ட ஆட்சியர் அவர்களை மீண்டும் மீண்டும் வருக வருக என வரவேற்று மகிழ்கிறேன்.


விடைக்கேற்ற வினா அமைத்தல்

விடை : குடும்பம் என்ற சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் இடம் பெற்றுள்ளது. 

வினா : குடும்பம் என்ற சொல் முதன்முதலில் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? 

1. விடை : நடுவண் அரசு 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. 

வினா : நடுவண் அரசு எந்த ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது? 

2. விடை : சாலைகளில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாக பயணிக்கவும் உதவுகின்றன. 

வினா : சாலைகளில் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்க உதவுவது எது? 

3. விடை : 1865ல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது. 

வினா : தென்னிந்தியாவில் முதல் தொடர்வண்டி நிலையம் எங்கு எப்போது அமைக்கப்பட்டது. 

4. விடை : "யதார்த்த நிகழ்வைப் படைப்பாளுமையுட் வெளிப்படுத்துவதே ஆவணப்படம்” என்கிறார் கிரியோர் சன் 

வினா : ஆவணப்படம் என்று எதைச் சிரியோர்சன் குறிப்பிடுகிறார்?


மொழியோடு விளையாடு


எண்ணங்களை எழுத்தாக்குக.


வா வா என் தேவதையே 

பொன் வாய் பேசும் தாரகையே 

பொய் வாழ்வின் பூரணமே 

பெண் பூவே வா...... 

வான் மிதக்கும்....... கண்களுக்கு....... 

மயில் இறகால் மையிடவா 

மார் உதைக்கும்..... கால்களுக்கு....... 

மணி கொலுசு நான் இடவா.......


இலக்கிய நயம் பாராட்டுக

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் 

கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்

கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார். 

தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்

செங்கதிரோன் பரிக்காலுந் தேர்க்காலும் வழுகும். 

கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்

குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே. 

- திரிகூட ராசப்பக் கவிராயர்


திரண்டக் கருத்து : 

ஆண்குரங்குகள் பலவகையான பழங்களைப் பறித்து பெண் குரங்குகளுக்குக் கொடுக்கின்றன. அவற்றுள் சில பழங்களைப் பெண் குரங்குகள் சிதறுகின்றன. அந்தப் பழங்களை தேவர்கள் இரந்து கேட்கின்றனர். வேடர்கள் தேவர்களைக் கண்களால் பார்த்து அழைக்கின்றனர். வானத்தில் சித்தர்கள் மூலிகைகளை வளர்க்கின்றனர். மலையிலுள்ள அருவியின் அலைகள் எழுந்து வானத்தில் வழிந்து ஓடுகின்றன. இதனால் சூரியனின் குதிரையும் தேர்ச்சக்கரமும் வழுக்கி விழுகின்றன. இத்தகைய சிறப்புகள் உடையது என்று குறத்தி தன் மலையை விளக்குகிறாள். 

தொடை நயம் : 

தொடையற்ற பாக்கள் 

நடையற்று போகும்

என்பதற்கு ஏற்ப மோனை, எதுகை, இயைபு போன்ற நயங்கள் அமைந்துள்ளன. 

மோனை நயம் : 

காட்டுக்கு யானை 

பாட்டுக்கு மோனை

முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை. 

சான்று:

கானவர்கள் மனசித்தர் 

கூனலிளம் குற்றாலம் 

எதுகை நயம் : 

மதுரைக்கு வைகை 

செய்யுளுக்கு எதுகை

முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது. 

சான்று:

வாரங்கள் 

காவர்கள் 

தேருவித்

கூலிளம் 

இயைபு :

இறுதி எழுத்தோ ஓசையோ ஒன்றி வருவது இயைபு. 

கொஞ்சும் 

யொழுகும் 

வழுகும் 

அணி நயம் :

அணி என்பதற்கு அழகு என்பது பொருள் செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி என்பர்.

இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி வந்துள்ளது. பாடலின் பொருளை மிகவும் உயர்த்திக் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.

சான்று:

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் 

கற்பனை நயம் :

கற்பனை கவிஞனுக்கு கை வந்த கலை

என்பதற்கு ஏற்ப கவிஞர் தன் கற்பனை ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். 

சான்று:

தேனருவித் திரையெழும்பி வானின் வழியொழுகும். 


குறுக்கெழுத்துப் புதிர்


இடமிருந்து வலம்

1. மயிலையார் கட்டுரை எழுதிய இதழ்களில் ஒன்று (5)

4. தகடூர் மன்னர் பெயர் பின்பகுதி (3)

5. காரியின் நாடு எவ்வாறு மருவி உள்ளது (3) 

8. ஓய்மா நாட்டு மன்னர் பெயரின் முதல் மூன்றெழுத்து (3)

9. பொதினி மலையின் வேறுபெயர் (4) 

16. பொதினி மலை இவ்வாறும் அழைக்கப்படும் (4)

14. சாந்தா தத் கதையின் பின்பாதிப் பெயர் (2)

வலமிருந்து இடம்

2. பறம்பு மலையின் இன்றைய பெயர் (5) 

4. தகடூரை ஆட்சி செய்தவன் (4) 

12. போந்தியு பிலாத்து என்பவரின் பதவி (4) 

21. செய்யுளின் பெயர்களில் ஒன்று (3)

மேலிருந்து கீழ்

3. வல்வில் ஓரி ஆட்சி செய்த பகுதி (5) 

6. முகம் கவிதை ஆசிரியரின் முன்பாதிப் பெயர் (4)

1. தமிழுக்குத் தலை கொடுத்தவன் (4)

10. இரட்சணிய யாத்திரிகத்தின் மூலநூல் ஆசிரியர் பெயர் (6)

15. நீர்நிலையின் பெயர் (3)

17. வண்டின் வேறு பெயர் (4)

18. இயேசு பிரானை இவ்வாறும் அழைப்பர் (5)

கீழிருந்து மேல்

7. நல்லியின் நாட்டுக்கு இன்று வழங்கும் பெயர் (3) 

8. மயிலையார் ஆய்வு செய்த பல்லவ மன்னன் பற்றிய நூல் (7) 

13. முகம் கவிதையின் ஆசிரியர் பிறந்த ஊர் (5) 

11. ஆற்றுப்படை நூல் ஒன்றின் முன்பாதிப் பெயர் (4) 

19. உலகம் என்பதன் வேறு பெயர் (3)

20. நூல்களை வாங்கும் ஆற்றல் ________ இல்லை என்று சொல்வதற்கில்லை (6)


விடை :

இடமிருந்து வலம் 

1. குடியரசு 

4. அஞ்சி 

8. நல்லி 

9. மலை நாடு 

16. வளமலை நாடு

வலமிருந்து இடம் 

2. பிரான் மலை 

4. அதிகமான் 

5. மலாடு 

12. ஆளுநர் 

21. பாடல்

மேலிருந்து கீழ் 

3. கொல்லி மலை 

6. சுகந்தி 

1. குமணன் 

10. ஜான் பனியன்

15. கடல்

17. வாகனம் 

18. இறைமகன்

கீழிருந்து மேல் 

7. ஊட்டி 

8. நந்திவர்மன் 

13. ஆலாந்துறை 

11. சிறுபாணா 

19. ஞாலம் 

20. மனிதர்க்கு


செய்து கற்போம்

தமிழுக்குப் பெருமை சேர்த்த அறிஞர்களின் இலக்கியப் பணிகள் குறித்துப் படத்தொகுப்புடன் ஒப்படைவு தயாரிக்க.


நிற்க அதற்குத் தக


நீவீர் செல்லும் வழியில் விபத்தினைக் காண்கிறீர்கள். விபத்திற்கான காரணங்கள் என்ன? பட்டியலிடுக. பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் எவ்விதம் உதவலாம்?

விபத்திற்கான காரணங்கள்  

அனுமதித்த அளவை விட வேகமாக ஓட்டுதல். 

தொலைபேசியில் பேசிக் கொண்டே ஓட்டுதல்.

இருசக்கர வாகனத்தில் மூவர் செல்லுதல்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்விதம் உதவலாம்? 

முதலுதவி செய்த பின் வேகமாக ஓட்டக் கூடாது என்று அறிவுரை கூறுவேன். 

முதலுதவி செய்தபின் வாகனத்தில் செல்லும் போது, பேசக்கூடாது என்று அறிவுரை கூறுவேன். 

முதலுதவி செய்தபின் இருசக்கர வாகனம் இருவருக்கே என அறிவுறுத்தல்.


படிப்போம் பயன்படுத்துவோம் (அலுவலகப் பொருள்கள்)

Stamp pad - மை பொதி 

Folder - மடிப்புத்தாள் 

Rubber Stamp - இழுவை முத்திரை

Stapler - கம்பி தைப்புக் கருவி 

File - கோப்பு 

Eraser - அழிப்பான்Tags : Chapter 8 | 12th Tamil இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 8 : Ella uyirum thollum : Questions and Answers Chapter 8 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும் : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும்