Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | பாசிசவாதமும் நாசிசவாதமும் தோன்றுதல்

ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - வரலாறு - பாசிசவாதமும் நாசிசவாதமும் தோன்றுதல் | 12th History : Chapter 13 : Imperialism and its Onslaught

   Posted On :  12.07.2022 03:11 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 13 : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

பாசிசவாதமும் நாசிசவாதமும் தோன்றுதல்

முதல் உலகப்போரைத் தொடர்ந்து ஐரோப்பிய கண்டத்தில் இருந்த நாடுகள் எதிர்கொண்ட சிக்கல் என்பது தமது அரசும், பொருளாதார முறையும் நிலமானியப் பின்புலத்தை கொண்ட பிரபுக்கள், தொழிலதிபர்கள், நிதியாளர்கள் போன்றோரால் நிர்வகிக்கப்படுவதா அல்லது இவையாவும் சேர்ந்த கூட்டுக் கலவையாலான ஒன்றாலா என்பதேயாகும்.

பாசிசவாதமும் நாசிசவாதமும் தோன்றுதல்

முதல் உலகப்போரைத் தொடர்ந்து ஐரோப்பிய கண்டத்தில் இருந்த நாடுகள் எதிர்கொண்ட சிக்கல் என்பது தமது அரசும், பொருளாதார முறையும் நிலமானியப் பின்புலத்தை கொண்ட பிரபுக்கள், தொழிலதிபர்கள், நிதியாளர்கள் போன்றோரால் நிர்வகிக்கப்படுவதா அல்லது இவையாவும் சேர்ந்த கூட்டுக் கலவையாலான ஒன்றாலா என்பதேயாகும். இவ்வுயர் வர்க்கங்களை சேர்ந்த எவரும் மக்களின், குறிப்பாக விவசாயக் குடிகள் தொழிலாளர் போன்றோரின், ஆதரவைப் பெற்றிருக்கவில்லை. புதிதாக உதித்த சூழலில் சாமானிய மக்கள் தங்களை ஒடுக்குவோரைத் தூக்கியெறிய வாய்ப்புள்ளமையை உணர்ந்துகொண்டார்கள். ரஷ்யாவில் நடுத்தர வர்க்கம் (Bourgeoisie) 1917ஆம் ஆண்டு அரசை சர்வாதிகார முறைக்கு மாற்றிய சிறிது காலத்தில் அவர்களே போல்ஷ்விக்குகளால் மாற்றப்பட்டார்கள். பிரிட்டனில் எழுந்த சூழலைக் கைக்கொள்ள தொழிலாளர் கட்சி பொதுநல அரசை நிறுவியது. இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகள் எதிர்கால வெற்றியை இலக்காகக் கொண்டு துவக்கத்தில் மக்கள் இயக்கம் போன்று செயலாற்றிப் பின் பாசிசப் பாதைக்கு மாறின.


அ. இத்தாலியின் பாசிசப் போக்கு

மேற்கு ஐரோப்பாவில் பழைய ஆட்சிமுறைக்கு எதிராகத் திரும்பிய முதல் நாடு இத்தாலியே ஆகும். முதல் உலகப்போரின் போது இத்தாலி ஐந்தரை மில்லியன் நபர்களை களத்திலிறக்கியதில் 700,000 நபர்கள் கொல்லப்பட்டார்கள். போரில் பங்கெடுத்தமையால் ஏற்பட்ட செலவினங்களும் மிக அதிகமானதாக இருந்தது. சோஷலிசவாதிகளும், ஆஸ்திரிய கத்தோலிக்க சார்புகொண்டோரும் ஆதரவளிக்காத இப்போரில் நாடு கடும் சேதங்களைச் சந்தித்தது. வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் கீழ் சொற்ப ஆதாயத்தையே இத்தாலி நாடு அடைந்திருந்ததால் தேசியவாதிகளும் அதிருப்தியடைந்திருந்தனர். போர் பணவீக்கத்தையும் அது விளைவித்த விலையேற்றம், ஊகத்தொழில் பாதிப்புகள், லாபமீட்டும் நோக்கத்தின் பெருக்கம் போன்றவற்றையும் ஒருங்கே கொண்டுவந்து சேர்த்தது. கண்டன ஆர்ப்பாட்டங்களும், வேலை நிறுத்தங்களும் அதிகமாயின. வெர்செய்ல்ஸ் அவமானத்திற்கு ஆட்சியாளர்களே காரணமென மக்கள் கருதினார்கள்.

சோஷலிச அமைப்புகளின் எழுச்சி

துயரங்கள் கூடிய போது, அங்கே சோஷலிச் சிந்தனை பரவத் தொடங்கியது. இத்தாலிய சோஷலிஸ்டுகள் 1918இல் சர்வதேச பொதுவுடைமையோடு இணையவாக்களித்தார்கள். தேர்தல்கள் நவம்பர் 1919இல் நடந்தபோது அவர்கள் பிரதிநிதிகள் அவைக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பெற்றிருந்தார்கள். தீவிரவாதப்போக்கு கிராமப்புறங்களிலும் செல்வாக்கு பெற்றது. பெரும் நிலவுடைமைகளை உடைத்தெறியும் நோக்கோடு சிகப்பு சங்கங்கள் பல தோன்றி நிலக்கிழார்களை வாடகையைக் குறைத்துக்கொள்ள நிர்ப்பந்தித்தன. நிலவுடைமையாளர் வர்க்கத்திற்கு தங்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நோக்கு பாசிசவாதிகளுக்கு இல்லாமல் போனதால் அது அவர்களுக்கு குறைந்தபட்ச ஆபத்தை மட்டுமே ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகக் காட்சியளித்தது.

முசோலினி ஏற்றமடைதல்

பெனிட்டோ முசோலினி (1883-1945) ஒரு இரும்புக்கொல்லரின் மகனாகப் பிறந்தார். ஆரம்பக்கல்வி ஆசிரியராகத் தேர்ச்சிபெற்ற அவர் மேற்கொண்டு படிப்பதற்காக சுவிட்சர்லாந்திற்கு சென்று சோஷலிசப் பார்வைக்கொண்ட பத்திரிகையாளரானார். முன்னணி சோஷலிச் தினசரிப் பத்திரிகையான அவந்தியில் (Avanti) ஆசிரியராகப் பணியேற்றார் 1919இல் பாசிசக் கட்சி உருவாக்கப்பட்டவுடன் அதில் உடனடியாக முசோலினி இணைந்தார். பாசிசவாதம் அதிகாரசக்தி, வலிமை, ஒழுக்கம் போன்ற வற்றை முசோலினி தாங்கி நின்றதால் தொழிலதிபர்கள், தேசியவாதிகள், முன்னாள் படைவீரர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அதிருப்தி கொண்ட இளைஞர்கள் போன்றோர் அதற்கு ஆதரவு நல்கினர். பாசிசவாதிகள் தடையின்றி வன்முறையில் ஈடுபட்டு தங்களின் எதிரிகளை கத்தி, பெருந்தடிகள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர்.


போரின் முடிவில் எழுந்த ஒழுங்குமுறைக் குலைவுகளை சரிசெய்ய பாராளுமன்ற முறையிலான அரசு திணறியதால் அதன் வீழ்ச்சியிலிருந்தே பாசிச சர்வாதிகாரம் தோன்றியது. ஜனநாயக கட்சியின் தலைவர்கள் தீர்க்கமான பார்வையோடும், உறுதியோடும் செயலாற்ற தவறியமையே முசோலினியின் வெற்றிக்கு வழிவகுத்தது. பொதுவுடைமைவாதிகளுக்கும், அவர்களின் எதிர்தரப்பினருக்குமிடையே எழுந்த பிணக்குகள் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த நிலையில் கருப்பு சட்டை அணிந்த பாசிசவாதிகள் (கருஞ்சட்டையினர்) ரோமில் நடத்திய பேரணியே (அக்டோபர் 1922) அதைத் தவிர்க்கக் காரணமாக விளைந்தது. அவர்களின் பலத்தால் ஈர்க்கப்பட்ட மன்னர் மூன்றாம் இம்மானுவேல் முசோலினியை ஆட்சியமைக்க அழைத்தார்.

பாசிசவாதம் : பாசிசம் என்ற பதத்தின் மூலச்சொல்லான பாசஸ் என்னும் லத்தீன் சொல் ரோமானிய தேசத்தின் அதிகாரத்தைக் குறிக்கும் தடிகளால் சூழப்பட்ட கோடாரியைச் சுட்டுவதாகும்.

பாசிசம் என்பது ஒருவகையான தீவிர அதிகாரங்கொண்ட உயர் தேசியவாதம் கலந்த சர்வாதிகார சக்தியையும், அதனால் வலுப்பெற்ற எதிரிகளை ஒடுக்கும் தன்மையையும், சமூகத்தையும், பொருளாதாரத்தையும் மையப்படுத்தும் போக்கையும் உள்வாங்கி இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவில் முக்கியத்துவமடைந்த ஒன்றாகும்.

முசோலினியின் கீழ் பாசிசவாதிகள்

வாக்காளர்களை அச்சுறுத்தி 1924ஆம் ஆண்டின் தேர்தல்களில் 65 சதவீத வாக்குகளைப் பெற்று பாசிசவாதிகள் வெற்றி பெற்றிருந்தனர். தேர்தலின் நேர்மை பற்றிக் கேள்வியெழுப்பிய மட்டியோட்டி (Matteotti) என்னும் சோஷலிச் தலைவர் கொலை செய்யப்பட்டார். இதனால் எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தைப் புறக்கணித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தன. முசோலினி எதிர்கட்சிகளுக்கு தடைவிதித்தும், பத்திரிகை சுதந்திரத்திற்கு தடை விதித்தும் நிலைமையைக் கட்டுப்படுத்தினார். எதிர்கட்சித் தலைவர்கள் கொல்லப்படவோ, கைது நடவடிக்கைக்கு உட்படவோ ஆளானார்கள்.

இத்தாலியின் இரண்டாம் தலைவன் (II Duce) என்று தனக்குப் பட்டமளித்துக் கொண்ட முசோலினி 1926இல் சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட சர்வாதிகாரியாக உருவெடுத்திருந்தார். வேலை நிறுத்தங்களுக்கும் தொழிற்சாலையடைப்புக்கும் (lockout) தடைவிதித்து சட்டமியற்றினார். தொழிற்சங்கங்களும், ஊழியர்களும் வாரியங்களுக்குள் (Corporation) எடுத்துச் செல்லப்பட்டு அதனூடாக அவர்களின் ஊதியம், பணிச்சூழல் சார்ந்த பிரச்சினைகள் அணுகப்பட்டன. விடுபட்ட பிற மக்களும் தொழில் அடிப்படையில் வாரியங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டார்கள். இவை தொடர்ந்து கூட்டமைப்பாக்கப்பட்டு வாரியத்துறை அமைச்சரால் கண்காணிக்கப்பட்டன.

பாராளுமன்றம் 1938இல் கலைக்கப்பட்டு அது பாசிச கட்சியையும் வாரியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக மாற்றியமைக்கப்பட்டது. இப்புதிய ஏற்பாடு பொருளாதாரத்தின் மீது முசோலினியின் சர்வாதிகாரப் பிடியை இறுகச் செய்ததோடு நிர்வாகத்தையும் ஆயுதப் படைகளையும் அவரது எதிர்ப்பில்லா தலைமையின் கீழ் கொண்டுபோய்ச் சேர்த்தது. இவ்வாறாக முசோலினி பாராளுமன்ற அரசையும் தொழிற்சங்கங்களையும் பிற ஜனநாயக அமைப்புகளையும் ஒழித்தார்.

முசோலினி போப்பாண்டவரோடு உடன்படிக்கை ஏற்படுத்துதல்

பாசிச கட்சிக்கு மதிப்பை சம்பாதிக்கும் நோக்கோடு முசோலினி வாட்டிகன் நகருக்கு தனிநாடு அங்கீகாரம் வழங்கி ரோமன் கத்தோலிக்க திருச்சபையைத் தன்பக்கம் ஈர்த்தார். இதற்கு கைமாறாக கத்தோலிக்க திருச்சபை இத்தாலியப் பேரரசை அங்கீகரித்தது. இத்தாலியின் தேசிய சமயமாக ரோமன் கத்தோலிக்க மரபு ஏற்றுக்கொள்ளப்பட்டு பள்ளிகளில் சமயக்கல்வி கட்டாயமாக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேற்கூறியவற்றை உள்ளடக்கிய லேட்டரன் உடன்படிக்கை (Lateran Treaty) 1929இல் கையெழுத்திடப்பட்டது.


பொருளாதாரப் பெருமந்தத்தின் காலம்

அமெரிக்க ஐக்கிய நாடு 1929ஆம் ஆண்டு மிகப்பெரும் நிதி மற்றும் வணிக வீழ்ச்சிக்கு உள்ளானது. உலகின் பிற பாகங்களில் இதன் பாதிப்பு மிக மோசமாக வெளிப்பட்டது. ஐரோப்பிய வாணிபமும் நிதிநிலையும் 1931இல் முழுதும் முடங்கிப்போயின. இக்காலகட்டத்தில் பாசிச அரசு தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என பொதுப்பணித்துறையை சுட்டிக்காட்டிப் பெருமை கொண்டாலும் இக்காலத்தில் புதிய பாலங்கள், சாலைகள், கால்வாய்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் போன்றவை எழுப்பப்பட்டாலும் அதனால் வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை . உலக நாடுகள் சங்கத்தின் வீழ்ச்சி 1935ஆம் ஆண்டையொட்டிய காலத்தில் உறுதியானவுடன் முசோலினி இத்தாலிக்கென ஒரு பெரும் பொருளாதாரப் பேரரசை உருவாக்கும் எண்ணங்கொண்டு எத்தியோப்பியா மீது படையெடுத்தார். இது பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப உதவியது. முசோலினியின் வெற்றி ஐரோப்பாவின் பிற பகுதிகளிலிருந்த ஆளும் வர்க்கத்தின் வியப்பை பெற்றது. அவர்களில் மூனிச் பகுதியை மையமாக அமைத்துப் புகழ்பெற்றுக் கொண்டிருந்தவரும், தேசியவாதியும், யூத எதிர்ப்பாளருமானவர் ஒருவர் : அவரே அடால்ஃப் ஹிட்லர்.


ஆ போருக்குப் பிந்தைய ஜெர்மனி

பாசிசவாதம் ஜெர்மனியில் ஏற்றம் பெறப் பலகாரணிகள் உள்ளன. அவற்றுள் முதன்மையானது போரில் தோற்கடிக்கப்பட்டமையால் எழுந்த அவமானமாகும். ஜெர்மனி 1871 முதல் 1914 வரையான காலத்தில் பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாச்சாரத் தளங்களில் பல சாதனைகளை நிகழ்த்தியிருந்தது. ஜெர்மனியின் பல்கலைக்கழகங்கள், அதன் விஞ்ஞானம், தத்துவம், இசை ஆகியவை உலகப்புகழ் பெற்றிருந்தன. பிரிட்டனையும் அமெரிக்க ஐக்கிய நாட்டையும் தொழில் உற்பத்தியின் பல்வேறுப் புலங்களில் ஜெர்மனி விஞ்சி நின்றது. இதனைத் தொடர்ந்தே உலகப்போரின் பெரும் தோல்வி அதனைச் சூழ்ந்தது. ஜெர்மானிய மக்கள் விரக்தியடைந்தார்கள். வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட நஷ்டஈடும், பிற சரத்துக்களும் பெரும் அதிருப்தியையும், சிரமத்தையும் ஏற்படுத்தின. சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ள விழைந்த பிற்போக்கு சக்திகள் அரசில் அங்கம் வகித்த சோஷலிஸ்டுகளும் யூதர்களுமே தேசத்திற்கெதிராகச் செயலாற்றியதாகவும் அவர்களே தோல்வியை விளைவித்தவர்கள் என்றும் பரப்புரையாற்றின.

ஜெர்மனி எப்போதுமே ஒரு இராணுவ தேசமாகவே இருந்துள்ளது. இராணுவம் பாதுகாப்பின் சின்னமாக மட்டுமல்லாமல் தேசப்பெருமையின் அடையாளமாகவும் விளங்கியது. இச்சூழலில் முதல் உலகப்போரின் முடிவில் ஏற்பட்ட ஜெர்மனியின் தோல்வியும், அதைத் தொடர்ந்த அவமானமும் ஜெர்மானியர்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களின் ஏமாற்றத்தைப் பொருளாதாரப் பெருமந்தம் ஆழப்படுத்தியதோடல்லாமல் குடியரசு கட்சி அரசின் மீதும் அதீத வெறுப்புணர்வை வளர்த்தது.

1920களில் ஜெர்மனி

முதல் உலகப் போருக்குப் பின் ஜெர்மனியில் பல கட்சிகளின் கூட்டணியில் மக்களாட்சி அரசுகள் நடைபெற்றது. 1919 முதல் 1925 வரை எபெர்ட் (Ebert) என்னும் சோஷலிசவாதி தலைமையிலும் அதன்பின் 1929 வரை லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் ஸ்ட்ரெஸிமண் (Stresemann) தலைமையிலும் ஜெர்மனி நிர்வகிக்கப்பட்டது. நாஜிக்கள் 1933இல் ஏற்றம் பெறும் வரை சென்ற இக்காலம் வெய்மர் குடியரசு (Weimar Republic) என்றழைக்கப்படுகிறது.


இடைப்பட்ட இக்காலத்தில் சராசரியான ஒரு ஜெர்மன் குடிமகன் போர் இழப்பீடு கொடுத்து கடன் சுமையில் தத்தளித்து வறுமைக்குட்பட்டிருந்த நாட்டில் அன்றாட வாழ்க்கைப்பிரச்சனை பற்றி மட்டுமே சிந்திக்க முடிந்தது. பிரெஞ்சுக்காரர்கள் 1923இல் ரூர் பகுதியில் ஆக்கிரமிப்பு நடத்தியமையால் கொதிப்படைந்த தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது சில திரைமறைவு செயல்பாடுகள் பரவ வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. பெர்லின் நகரில் குடியரசு கட்சியின் அரசுக்கு எதிராக லூடன்டார்ஃப் என்பவர் முன்னாள் படைவீரர்களை மறைமுகச் செயல்பாடுகளுக்காகத் திரட்டியிருந்தார். மற்றொன்று மூனிச் நகரில் முன்னாள் படைத்துறை அலுவலர் (corporal) ஒருவரின் தலைமையில் செயலாற்றி வந்தது. அவர் தேசிய சோஷலிச் ஜெர்மன் தொழிலாளர் கட்சியை (National Socialist German Worker's Party) நிறுவிய அடால்ஃப் ஹிட்லர் ஆவார்.

ஜெர்மானிய பாசிசத்தின் பரிணாம வளர்ச்சி

முதல் உலகப்போரின் போது ஹிட்லர் பவேரிய இராணுவத்தில் பணியாற்றினார். யூதர்கள் மீதும், மார்க்சியவாதிகள் மீதும் அவர் உள்ளார்ந்த வெறுப்பைக் கொண்டிருந்தார். தேர்ந்த பேச்சாளரான அவர், தனது உரையை கேட்போரின் உணர்வுகளைத் தொடும் திறன் கொண்டிருந்தார். ஹிட்லர் 1923இல் பல ஆபத்துக்களுக்கிடையே பவேரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்தார், சரியாகத் திட்டமிடப்படாமல் மூனிச்சின் புறநகர் பகுதிகளில் அவர் நடத்த முயன்ற தேசிய புரட்சி அவரை சிறைக்குள் கொண்டு சேர்த்தது. சிறையில் இருக்கும் காலத்தில் அவர் தனது அரசியல் சிந்தனைகளை மையமாகக் கொண்டு எனது போராட்டம்' (மெய்ன் காம்ப் - Mein Kampf) என்ற சுயசரிதை நூலை எழுதினார்.

ஜெர்மானிய அரசின் பலவீனத்தை வெளிப்படுத்தும் இரு சம்பவங்கள் 1929இல் நடந்தேறின. ஸ்ட்ரெஸிமணின் மரணம் ஒரு அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியிருந்தது. நியூயார்க் பங்குச்சந்தையில் நேர்ந்த வீழ்ச்சி பொருளாதார மந்தத்தை ஏற்படுத்தியதோடு அமெரிக்க ஐக்கிய நாட்டை தாம் ஜெர்மனிக்கு வழங்கியிருந்த கடன்களை குறித்த காலத்திற்கு முன்பே வசூலிக்க நிர்ப்பந்தித்தது. உலகப் பொருளாதாரப் பெருமந்தம் 1931இல் வலுவிழந்த நிலையிலிருந்த ஜெர்மனியை தன்பிடிக்குள் சிக்கவைத்தது. பொதுவுடைமை கட்சி 1932இல் நடந்த குடியரசுத்தலைவர் தேர்தலில் 60,00,000 வாக்குகளைப் பெற்றது. இதனால் சுதாரித்துக்கொண்ட முதலாளிகளும் நிலவுடைமையாளர்களும் பாசிசவாதத்தின் பக்கம் சரிந்தனர். அதை நன்கு பயன்படுத்திக்கொண்ட ஹிட்லர் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினார்.

மூன்றாவது ரெய்ச் (ஹிட்லரின் நாஜி அரசு)

சமூக ஜனநாயகவாதிகளோடு பொதுவுடைமைவாதிகள் இணைந்துப் பணியாற்ற விரும்பாததால் குடியரசு கட்சியின் அரசு வீழ்ச்சியுற்றது. இதனைத்தொடர்ந்து தொழிலதிபர்கள், வங்கி உரிமையாளர்கள், அரசப் பாரம்பரியப் பின்புலம் கொண்டவர்கள் ஆகியோர் ஹிட்லரை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்ள விழைந்து 1933ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் வான் ஹின்டன்பர்கை (Von Hindenberg) அணுகி அவரை பிரதம அமைச்சராகப் (Chancellor) பணித்தார்கள். மூன்றாவது ரெய்ச் (Third Reich) என்று குறிப்பிடப்படும் ஹிட்லரின் நாஜி அரசு ஜெர்மனியில் முதல் உலகப்போருக்குப் பின்பு ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்ற மக்களாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ஹிட்லர் வெய்மர் குடியரசின் கொடியை அகற்றி அவ்விடத்தில் தேசிய சோஷலிசத்தின் ஸ்வஸ்திகா சின்னத்தைப் பதித்தார். ஜெர்மனி முழுமையாகவே ஒரு மையப்படுத்தப்பட்ட அரசாக மாற்றப்பட்டது. நாஜி கட்சி நீங்கலாகப் பிற கட்சிகள் சட்டத்திற்குப் புறம்பானவையாக அறிவிக்கப்பட்டன. பழுப்பு நிற சட்டையும், முழங்கால் வரையிருக்கும் காலணியும் (jackboot) அணிந்த அதிரடிப்படையினரின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே சென்றது. ஹிட்லரின் இளைஞரணி ஏற்படுத்தப்பட்டு, தொழிலாளர் முன்னணி உருவாக்கப்பட்டது. தொழிற்சங்கங்கள் ஒழிக்கப்பட்டு அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தொழிலாளர்களனைவரும் ஜெர்மானிய தொழிலாளர் முன்னணியில் உறுப்பினர்களாக சேரக்கட்டாயப்படுத்தப்பட்டார்கள். வேலைநிறுத்தங்கள் சட்டத்திற்குப் புறம்பானவைகளாக்கப்பட்டும் ஊதியத்தை அரசே நிர்ணயித்தும் ஜெர்மானிய தொழிலாளர் முன்னணியை கொண்டு நாஜிக்களே தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்தவும் என்பதான நிலை உருப்பெற்றது. பத்திரிகை, நாடக அரங்கு, திரைப்படம், வானொலி மற்றும் கல்வி போன்றவை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

நாஜி கட்சியின் பரப்புரையை, மக்களின் கருத்தோட்டத்தைத் திட்டமிட்டு திசைதிருப்பும் ஆற்றல் கொண்டிருந்த ஜோசப் கோயபெல்ஸ் (Josef Goebbels) தலைமையேற்று வழிநடத்தினார். ஒருமுறை அவர் எந்தப் பொய்யும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் போது உண்மை என நம்பப்படும் என்றார். கெஸ்டபோ (Gestapo) என்ற நாட்டின் இரகசியப்போலீஸ் பிரிவை ஹிம்லர் (Himmler) கட்டுப்படுத்தியதோடு ஹிட்லரின் மெய்க்காவலர்களையும் அவரே நியமித்தார்.

நாஜிக்களின் யூதக் கொள்கை

உள்ளபடியே செயலாற்றிக்கொண்டிருந்த ஒடுக்குமுறைகளோடு ஹிட்லரின் அரசு யூதர்களை ஒடுக்கும் கொள்கையைப் பின்பற்றியது. யூதர்கள் அரசுப்பணிகளிலிருந்து நீக்கப்படவும், பல்கலைக்கழகங்களில் ஒதுக்கப்பட்டும், குடியுரிமை மறுக்கப்பட்டும் சிரமத்திற்கு உட்படுத்தப்பட்டார்கள். யூதர்களின் வியாபாரங்கள் முடக்கப்பட்டு அவர்களின் நிறுவனங்கள் தாக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போர் துவங்கிய போது யூதர்கள் குவிமுகாம்களிலும் மின்சாரவேலியாலும் காவற்கோபுரங்களாலும் சூழப்பட்ட குறுகலான இருப்பிடங்களிலும் சிறைவைக்கப்பட்டு சரியான உணவு வழங்கப்படாமல் கட்டாய ஊழியத்திற்கு உட்படுத்தப்பட்டார்கள். இவையாவும் யூதர்களைக் கொல்லும் களங்களாக மாற்றப்பட்டு விஷவாயு அறைகள் போன்ற தொழில்முறை உயிரெடுக்கும் உத்திகளைக் கொண்டிருந்தன. இறுதியான தீர்வு (Final Solution) என்று நாஜிக்களால் குறிப்பிடப்படும் இந்த நடவடிக்கையின் கீழ் ஐரோப்பாவில் 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். யூதர்கள் நீங்கலாக நாடோடி குழுக்கள் மற்றும் மனநிலை பிறழ்வுகொண்டோர் ஆகியோரும் கொல்லப்பட்டனர். ஹிட்லரை எதிர்த்தப் பல்லாயிரக்கணக்கான ஜெர்மானியர்களும் கொல்லப்பட்டார்கள்.

வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் சரத்துகளை மீறுதல்

ஹிண்டன்பர்க் ஆகஸ்ட் 1934இல் இறந்ததும் ஹிட்லர் பிரதம அமைச்சராக மட்டுமல்லாமல் குடியரசுத்தலைவராகவும் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் பொறுப்பேற்றார். நாஜி கட்சி 1938இல் இராணுவத்தின் மீதான தனது பிடியை இறுக்கியது. ஹிட்லரின் வெளியுறவுக் கொள்கையானது ஜெர்மனியின் ஆயுதப்படை வலிமையை அதிகரிப்பதும் நாட்டின் பெருமையை சீர்குலைத்த வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களை மீறுவதையுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது. அவர் வேண்டுமென்றே வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தை முறிக்க (பின்வரும் பாடத்தில் அது விவாதிக்கப்படுகிறது) எடுத்துக்கொண்ட முயற்சிகளே இரண்டாம் உலகப் போர் வெடிக்கக் காரணமாயிற்று.

Tags : Imperialism and its Onslaught | History ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - வரலாறு.
12th History : Chapter 13 : Imperialism and its Onslaught : Rise of Fascism and Nazism Imperialism and its Onslaught | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 13 : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் : பாசிசவாதமும் நாசிசவாதமும் தோன்றுதல் - ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 13 : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்