ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - வரலாறு - ஏகாதிபத்தியத்தின் தோற்றம் | 12th History : Chapter 13 : Imperialism and its Onslaught
ஏகாதிபத்தியத்தின் தோற்றம்
பதினேழாம் நூற்றாண்டில் ஒரு நாட்டின் பெருமையானது
அதன் வணிகத்தைக் கொண்டே நிர்ணயிக்கப்படுவதாகக் கருதப்பட்டது. இதனால் இயல்பாகவே நாட்டின்
ஆர்வமும் வியாபார வர்க்கத்தின் ஆர்வமும் ஒத்திருந்தன. தொழிற்புரட்சிக்கு வித்திட்ட
மூலதன குவிப்பே வணிக காலம் (1600-1700) முழுவதிலும் ஐரோப்பாவில் வியாபித்து நின்றது.
முக்கிய சக்திகளான ஹாலந்து, பிரான்ஸ், இங்கிலாந்து போன்றவை காலனிய ஆதிக்க தேசங்களாக
உருவெடுத்ததோடு கடல் கடந்து பரந்துவிரிந்த சந்தைகளைக் கொண்டவைகளாகவும் திகழ்ந்தன. எனினும்
இங்கிலாந்தே தொழிற்புரட்சியின் பலன்களை முதலாவதாக முழுவதுமாகப் பயன்படுத்தி பெரும்
சக்தியாக வெளிவந்தது. ஆரம்பத்தில் ஏற்றுமதி சந்தைகள் அந்நாட்டிற்கு ஐரோப்பாவினுள்ளே
அமைந்திருந்தன. ஆனால் மற்ற நாடுகள் தொழில்மயத்தில் இறங்கியவுடன் மிகை உற்பத்தி செய்யப்பட்ட
பொருள்களை ஏற்றுமதிக்குட்படுத்த ஏற்ற சந்தைகளைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
துவக்கத்தில் இருந்தே வணிகவாதம் கடும் தாக்குதலுக்கு
உள்ளாகி வந்தது. பிரான்சில் தொழில்களுக்கு அளவுகடந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டமை,
பின்னர் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மொத்தத்தில் தளர்த்தக் கோருமளவிற்குச் சென்றது.
பிரான்சின் இயலாட்சி ஆதரவாளர்கள் (Physiocrats) தடையற்ற வாணிபத்தை நடைமுறைப்படுத்தக்
கோரினார்கள். டெகௌர்னே என்ற பிரெஞ்சு வணிகர் உருவாக்கிய அரசின் தடையற்ற
(Laissez-faire) என்னும் சொல் உலகளாவியப் பிரபலமானது. ஸ்காட்டிய தத்துவஞானியும், பொருளாதார
அறிஞருமான ஆடம் ஸ்மித் 1776இல் An Inquiry into the Nature and Cause of the
Wealth of Nations எனும் தனது நூலில் வணிக வர்க்கத்தின் காலனியக் கொள்கைகளை விமர்சித்து
தடையற்ற வணிகத்தையும், தடையில்லாத சந்தைகளையும் வரவேற்றார். அக்காலத்தையஅரசியல் தலைவர்களை
ஸ்மித்தின் நாடுகளின் செல்வம் பெரிதும் கவர்ந்ததோடு பத்தொன்பதாம் நூற்றாண்டை தடையற்ற
வணிகத்தின் காலமாக உருவாக்கவும் வழிவகுத்தது.
தனது ஏகபோக வணிகத்தால் பெரும் லாபம் சம்பாதித்திருந்த இங்கிலாந்து 1833இல் தடையற்ற வணிகக்கொள்கையை நடைமுறைப்படுத்த முடிவு செய்தது. இங்கிலாந்தின் இம்முடிவைப் பின்பற்றி பெல்ஜியம், நெதர்லாந்து, நார்வே, பியட்மாண்ட், போர்த்துகல், ஸ்பெயின், ஸ்வீடன் ஆகிய நாடுகளும் தடையற்ற வியாபாரக்கொள்கையை ஏற்றுக்கொண்டன. இதன் விளைவாக வணிகத்தடங்கள் சுருங்கவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் ஏற்றமும் பெறலாயிற்று. தடையற்ற போட்டியை உள்வாங்கி வளர்ந்த முதலாளித்துவம் (அரசின் கட்டுப்பாடோ, முறைப்படுத்தலோ இல்லாத தடையற்ற வணிகத்தை கொள்கையாகக் கொண்டு) பின்னர் ஏகபோக முதலாளித்துவமாக வடிவெடுத்தது. மார்க்சின் பார்வையில் போட்டியென்கிற போரில் சிறு வணிகங்கள், பெரு வணிகங்களால் நசுக்கப்படவோ, மேலும் விரிவுப்படுத்திக்கொள்ளும் நோக்கோடு உள்வாங்கப்படவோ உள்ளாயின. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் கூட்டு வணிகமுறையும் (Partnership), கூட்டுப் பங்கு வர்த்த க முறையும் (Joint Stock Company), தளர்ந்து அறக்கட்டளைகளுக்கும் (Trust), அதன்பின் கார்டெல்களுக்கும் (Cartel) வழியேற்படுத்தின. வலிமை பெற்ற அறக்கட்டளைகளும், கார்டெல்களும் அரசிடம் மிகுந்த செல்வாக்குக் கொண்டிருந்தன.
விலையையும், தயாரிப்பையும் கட்டுப்படுத்துவதற்காக ஒரு பொருளின் தயாரிப்பாளர்கள் அனைவருமோ அல்லது பெரும்பகுதியினரோ கூடி உருவாக்குவதே அறக்கட்டளையாகும். அமெரிக்க ஐக்கிய நாட்டில் கனரக தொழிற்சாலைகள் யாவும் அறக்கட்டளை - சங்கம் (Trust-Association) மூலமாகவே நிர்வகிக்கப்பட்டு அவற்றின் தயாரிப்பில் மூலப் பொருள்களை எடுப்பதில் துவங்கி தயாரித்து முடிக்கப்பட்ட பொருள்களை வெளியேற்றுவது வரை கட்டுப்படுத்தியது. ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு தாங்கள் விற்பனை செய்யும் பொருள்களில் போட்டியை வரையறைப்படுத்த உருவாக்கப்படும் அமைப்பே கார்டெல் ஆகும். ஜெர்மானிய தயாரிப்பாளர்களின் செயல்திறனை உலக வணிகத்தில் பெரிதும் மேம்படுத்தியதால் கார்டெல்கள் செழித்துப் பரவின.