ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - வரலாறு - பொருளாதாரப் பெருமந்தம் | 12th History : Chapter 13 : Imperialism and its Onslaught
பொருளாதாரப் பெருமந்தம்
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பங்குச்சந்தை வீழ்ச்சியைத்
தொடர்ந்து ஏற்பட்டப் பொருளாதார மந்தநிலை பன்னாட்டு தன்மை கொண்டு உலக பொருளாதாரத்தையே
கடுமையான சறுக்கலுக்கு உட்படுத்தியது. முதல் உலகப்போரில் ஐரோப்பிய நாடுகள் ஈடுபட்டுக்கொண்டிருந்த
வேளையில் அமெரிக்கா தனக்குரிய சந்தைகளை ஆக்கிரமித்துக் கொண்டும், முதலீட்டிற்கான தளத்தை
விரிவுபடுத்தி அதனூடாக தனது தொழிற்துறையையும், வேளாண்துறையையும் செழுமைப்படுத்திக்
கொண்டும் இருந்தது. போரின் முடிவில் அமெரிக்கா உலகின் மிக செல்வச்செழிப்பான நாடாக உருவாகியிருந்தது.
போர் அதீதமான கடன் சுமையை ஒவ்வொரு ஐரோப்பிய
நாட்டின் மீதும் ஏற்றியிருந்தது. போரால் பாதிக்கப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகளுக்கு
அமெரிக்கா பெருமளவு கடன் வழங்கியிருந்தது. அமெரிக்காவிலிருந்து வெளியேறிய முதல் புது
முதலீட்டுத் தளங்களைக் கண்டுகொண்டு அங்கு போய் சேர்ந்தது. ஆனால் இம்முதலீடுகள் எதிர்பார்த்த
விளைவுகளை சிலகாலம் சென்ற பின்பே விளைவிக்கும். இதற்கிடையே உள்நாட்டில் ஏற்பட்ட வணிகச்சரிவின்
காரணமாக வெளியில் கொண்டு செல்லப்பட்ட முதலீடுகள் வேறுவழியின்றி திரும்பப் பெறப்பட்டன.
அமெரிக்க முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டதால் ஏற்றுமதிகளின் அளவும், மதிப்பும் உலகளாவியப்
பெரும் சரிவை எதிர்கொண்டன. இதனால் ஏற்பட்ட விளைவுகளை அமெரிக்கப் பங்குச் சந்தை வீழ்ச்சி
தீவிரப்படுத்தியது.
முதலாவது மாபெரும் பங்குச்சந்தை வீழ்ச்சியானது 1929 அக்டோபர் 24 அன்று ஏற்பட்டது. இதனால் அதிகமான மக்கள் தங்கள் வசமிருந்த பங்குகளை விற்று சந்தையிலிருந்து வெளியேறினார்கள். ஆனால் பங்குகளை வாங்குவோர் யாருமில்லை. இதனைத் தொடர்ந்து அமெரிக்க வங்கிகள் பேரிழப்பைக் கண்டன. அமெரிக்க நிதியாளர்கள் வெளிநாடுகளில் செய்துவைத்திருந்த முதலீடுகளைத் திரும்பப்பெற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஜெர்மனிக்கு அமெரிக்கா கொடுக்கவிருந்த கடனை நிறுத்தியதால் அங்கிருந்த இரு பெரும் வங்கிகள் வீழ்ச்சியுற்றன. வெளிநாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருந்த வங்கிகளுக்கு தாராளமாகக் கடன் வழங்கி வந்த இங்கிலாந்து வங்கியும் (Bank of England) திவாலானது.
செலவு குறைப்பு, அதிகமான வரிவிதிப்பு போன்ற
அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டும் இங்கிலாந்தின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
பெருமந்தத்திற்கு எதிர்வினையாற்றவும், உள்ளூர் சந்தையைக் காக்கவும் ஒவ்வொரு நாடும்
தனிப் பாதுகாப்புக் கொள்கையை உருவாக்கிக் கொண்டதோடு தங்களின் பணமதிப்பை குறைத்துக்கொள்ளவும்
செய்தன. பணமதிப்பிறக்கம் கடன்வழங்குவோரை கடனளிப்பதை நிறுத்திக்கொள்ளத் தூண்டியது. இதனால்
உலகளாவிய கடன் புழக்கம் சுருங்கியது. வெவ்வேறு நாடுகளால் கைக்கொள்ளப்பட்ட இத்தற்காப்பு
நடவடிக்கை உலகப் பொருளாதார சுழற்சியில் எதிர்பாராத கடும் வீழ்ச்சியை விளைவித்தது. அதன்
பாதிப்புகள் ஆழமாகவும், நீண்டகாலம் நீடித்ததாகவும் இருந்ததால் பொருளாதார நிபுணர்களும்,
வரலாற்றாசிரியர்களும் இந்நிகழ்வைப் பொருளாதாரப் பெருமந்தம் என்று குறிப்பிடுகிறார்கள்.
பெருமந்தம்பலநாடுகளிலும் அரசியல் நிலையில்
மாற்றங்களை விளைவித்தது. இங்கிலாந்தில் 1931இல் நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி
தோற்கடிக்கப்பட்டது. அமெரிக்காவில் பெருமந்தத்திற்கு முந்தைய வளமான ஏற்றத்திற்குக்
காரணமானோர் என பெருமை பெற்ற குடியரசு கட்சி மந்தத்திற்குப் பின் தொடர்ச்சியாக இருபது
ஆண்டுகளுக்கு ஆட்சியமைக்க முடியாமல் போனது. நாம் கீழே காணப்போவது போல பாசிச் கட்சிகள்
ஜெர்மனியிலும், இத்தாலியிலும் அரசு அதிகாரத்தைத் தங்கள் வசமாக்கிக் கொண்டன. தென் அமெரிக்காவின்
அர்ஜென்டினா, பிரேசில், சிலி ஆகிய நாடுகளிலும் அரசுமாற்றம் நிகழ்ந்தது.