Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | சோஷலிச சிந்தனையின் எழுச்சியும், பொதுவுடைமை சிந்தனையின் பிறப்பும்

ஐரோப்பாவில் அமைதியின்மை - வரலாறு - சோஷலிச சிந்தனையின் எழுச்சியும், பொதுவுடைமை சிந்தனையின் பிறப்பும் | 12th History : Chapter 12 : Europe in Turmoil

   Posted On :  12.07.2022 03:00 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 12 : ஐரோப்பாவில் அமைதியின்மை

சோஷலிச சிந்தனையின் எழுச்சியும், பொதுவுடைமை சிந்தனையின் பிறப்பும்

நவீனகால அடிப்படையில் சோஷலிச் சிந்தனை இயலாட்சி ஆதரவாளர்கள் (Physiocrats) அல்லது பொருளாதார நிபுணர்களால் உணவு மற்றும் சரக்கு ஆகியவற்றின் உற்பத்தியையும், விநியோகத்தையும் குறித்த விசாரணை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சோஷலிச சிந்தனையின் எழுச்சியும், பொதுவுடைமை சிந்தனையின் பிறப்பும்

நவீனகால அடிப்படையில் சோஷலிச் சிந்தனை இயலாட்சி ஆதரவாளர்கள் (Physiocrats) அல்லது பொருளாதார நிபுணர்களால் உணவு மற்றும் சரக்கு ஆகியவற்றின் உற்பத்தியையும், விநியோகத்தையும் குறித்த விசாரணை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கற்பனையுலகு குறித்த சிந்தனையாளரான (Utopian Thinker) எட்டியன்கேப்ரியல் மொராலி (Etienne-Gabriel Morally) 1755இல் தானியற்றிய நூலான கோட் டேலா நேச்சர் (Code de la Nature) என்பதில் தனியுடைமையைக் கண்டனத்திற்கு உட்படுத்தியதோடு சமூகத்தைப் பொதுவுடைமை அமைப்பாக மாற்றவேண்டி ஒரு முன்மொழிவை வெளிப்படுத்தினார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் சோஷலிசவாதிகள் என்று கூட்டாக அறியப்பட்ட யாவருக்கும் இவரே முன்னோடியாகத் திகழ்கிறார். பிரெஞ்சுப் புரட்சி நடந்த காலத்தில் செல்வாக்கு பெற்றுத்திகழ்ந்த அரசியல் கிளர்ச்சியாளரான ஃபிராங்கோய்ஸ் பேஃப் (Francois Babeuf) புரட்சி விவசாயிகள், தொழிலாளர்களின் தேவைகளை வெளிக்கொணரவில்லை என்றதோடு தனியுடைமையை ஒழித்து நிலங்களைப் பொதுவுடைமையாக்க வேண்டும் என்று வாதிட்டார்.


கற்பனைவாத சோஷலிசம் (Utopian Socialism)

ஐரோப்பாவில் ஆரம்பகட்டத்தில் தோன்றிய சோஷலிசவாதிகள் யாரும் புரட்சியாளர்கள் அல்லர். அவர்கள் சமூகத்தில் உள்ள அனைவரும் வேலைகளை பகிர்ந்துகொண்டு அது போலவே அவர்களின் முயற்சியால் விளைந்த உற்பத்தியைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு கூட்டுறவுமுறை சமூகத்தை முன்மொழிந்தார்கள். தங்களுக்கு முன்பாக வாழ்ந்த சோஷலிசவாதிகளை குறிப்பிடவே கார்ல் மார்க்சும் (Karl Marx). ஃபிரெட்ரிக் ஏங்கல்சும் (Fredrich Engels) கற்பனைவாத சோஷலிசம் என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறார்கள். அவ்வாறான கற்பனைவாத சோஷலிசம் உற்பத்திக்கான கருவிகளை கூட்டுடைமையாகக் கொள்ளும் மாதிரி சமூகத்தைப் பரிந்துரைத்தது. வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் இல்லாத ஒரு சோஷலிச் சமூகம் பிறக்கும் என்ற தொலைநோக்குச் சிந்தனையை அவர்கள் ஊக்குவித்தார்கள். அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பல மாதிரி சமூகங்கள் (model communes) உருவாயின. க்ளாட்- ஹென்றி செயின்ட் - சைமன் (Claude-Henri Saint Simon), ஃபிரங்கோய்ஸ்-மேரி - சார்லஸ் - ஃபூரியர் (Francois-Marie-Charles-Fourier), இராபர்ட் ஒவன் (Robert Owen) ஆகியோர் சிறப்புமிக்க கற்பனைவாத சோஷலிஸ்டுகள் ஆவர்.

 

க்ளாட் ஹென்றி செயின்ட்-சைமன் (1760-1825)

செயின்ட் சைமன் பிரிட்டிஷாருக்கு எதிராக அமெரிக்க சுதந்திரப் போரில் பங்கேற்ற ஒரு பிரெஞ்சு உயர்குடிமகனாவார். விஞ் ஞானத்திலும், முன்னேற்றத்திலும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த அவர் தன் சமகால பிரெஞ்சு சமூகம் நிலப்பிரபுத்துவத்தின் பிடியில் சிக்கியிருப்பதாக விமர்சித்தார். சமூகக் கட்டமைப்பில் சமயகுருக்களின் இடத்தை விஞ்ஞானிகளைக் கொண்டு நிரப்பவேண்டும் என்று பரிந்துரைத்தார். மேலும் அவர் வெளிப்படுத்திய எண்ணவோட்டத்தில் அரசியல் செல்வாக்கு கொண்ட சொத்துடைமையாளர்கள் தங்களின் நிலையை ஏழைகளுக்கு எதிராக தக்கவைத்துக்கொள்ள அறிவுப்பாதையின் வளர்ச்சியை முடக்குவதன் மூலமாகவே சாதித்துக் கொள்வதாகக் கருதினார். தனது நூலான புதிய கிறித்தவத்தில் (New Christianity) ஏழைகளை அரவணைக்க கிறித்தவக் கொள்கைகளைப் பின்பற்ற வலியுறுத்தினார்.



சார்லஸ் ஃபூரியர் (1772-1837)

சார்லஸ் ஃபூரியர் ஆரம்பகால கற்பனைவாத சோஷலிஸ்டுகளில் ஒருவராவார். அவர் சமூக சூழலே மனித இனத்தின் கவலைகளுக்கு முதல் காரணம் என்று நம்பினார். அனைவருக்கும் குறைந்தபட்ச தேவைகள் சார்லஸ் ஃபூரியர் கிடைத்து விட்டால் அதனூடாக சமூக மற்றும் பொருளாதார ஏற்றதாழ்வுகளை கடந்துவிடமுடியும் என்று வாதிட்டார். மனித இயல்பு நன்மையையே உள்ளடக்கியது என்று கூறிய அவர் முதற் பாவம் என்ற சமய மரபை மறுத்தார். நல்லிணக்கமே அகிலத்தின் சட்டவிதி என்று உணர்ந்த அவர் இயற்கைக்குப் பொருந்தும் மெய்யான யாவும், சமூகத்திற்கும் மெய்யானதாகவேத் திகழும் என்று கண்டார். நல்லிணக்கமும், தன்னிறைவும் கொண்ட ஃபலான்ஸ்டெரெஸ் (Phalansteres) என்ற பெயர் விளங்கும் கூட்டுறவு சமூகத்தை அவர் யூகித்தார். அச்சமூகத்தில் லாபமும், இழப்பும் சமமாகப் பகிர்ந்துகொள்ளப்படவும் அவர் விழைந்தார்.


 

இராபர்ட் ஓவன் (1771-1858)

மான்செஸ்டர் நகரின் தொழிற்சாலை அதிபர்களில் மனிதாபிமானம் கொண்டவராக இராபர்ட் ஓவன் திகழ்ந்தார். தொழிற்சாலை ஊழியர்களின் கொடுமையான வாழ்க்கைச் சூழலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அவரது தொழிற்சாலையில் அவர்களின் மேம்பாட்டிற்காகப் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அவரது தொழிற்சாலையில் பத்து வயதிற்கு குறைந்த குழந்தைகளைப் பணியமர்த்த அவர் மறுத்தார். காலப்போக்கில் அவர் தனியுடைமையையும், லாபநோக்கையும் விமர்சித்தார். தொழில் மற்றும் வேளாண் உற்பத்தியை கூட்டாகச் செயல்படுத்தும் ஒரு கூட்டுறவு சமூகத்தை அவர் வலியுறுத்தினார். 1818இல் தான் வெளியிட்ட நூலான சமூகத்தின் புதிய பார்வை ' (A New View of Society) என்பதில் தேசிய கல்வி கொள்கை , வேலைவாய்ப்பற்றோருக்கு பொதுப்பணி வழங்கல், வறுமை ஒழிப்பு சட்டங்களில் சீர்திருத்தம் போன்றவற்றை விவாதித்தார். அவரது முயற்சியின் விளைவாக பிரிட்டிஷ் பாராளுமன்றம் 1819ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தை இயற்றியது. மேலும் இராபர்ட் ஓவன் 1820களின் மத்தியில் சமூக சமத்துவத்தையும், கூட்டுறவையும் முன்னிறுத்தி ஒரு பெரும் கற்பனைவாத சோஷலிச கோட்பாட்டை உருவாக்கினார். அவரது பிற செயல்பாடுகளாக கிராண்ட் நேஷனல் கன்சாலிடேட்டட் ட்ரேட் யூனியனை (Grand National Consolidated Trade Union, 1834) உருவாக்கியதையும் வெவ்வேறு கூட்டுறவு அமைப்புகளுக்கு (Cooperative Congresses, 1831-1835) செயல்வடிவம் கொடுத்தமையையும் கூறலாம்.


இரவலர் சட்டங்கள் (Poor Laws): பிரிட்டனில் எலிசபெத் அரசியின் ஆட்சிக் காலத்தில் இரவலர் சட்டங்கள் இயற்றப்பட்டு (1597-98) அதன் மூலமாக வயது முதிர்ந்தோருக்கும், நோயாளிகளுக்கும், ஏழை சிறார்களுக்கும், ஆற்றலிருந்தும் வேலைவாய்ப்பில்லாமல் தவித்தோருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது.

 

பியர்ரி-ஜோசப் பிரௌதன் (1809-1865)

பிரெஞ்சு அரசின்மைவாத சிந்தனையாளராகக் (anarchist) கருதப்படும் பிரெளதன் சோஷலிச சிந்தனை செழுமைபெற முக்கியப் பங்காற்றியுள்ளார். இதற்கு முன்பான கற்பனைவாத சோஷலிஸ்டுகள் போல நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவராயல்லாமல் பிரௌதன் உழைக்கும் வர்க்கத்தில் பிறந்து வளர்ந்தவராவார். கூட்டுறவு சமூக அமைப்பினால் உத்வேகம் பெற்ற அவரும் பிற அரசின்மைவாத சிந்தனையாளர்களும் அரசை எதிர்த்தும், புரட்சியில் நம்பிக்கை கொண்டும் விளங்கினர். உடைமை என்றால் என்ன?" என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் உடைமைகள் யாவும் திருடப்பட்டவையே என்று குறிப்பிட்டார். சமூக அமைப்பை தொழிலே நிர்ணயிக்க வேண்டும் என்று நம்பிய அவர் அனைத்து வகை அரசுகளும் அடக்குமுறை தன்மை கொண்டவையே என்றும் கருதினார். தேசிய அரசுகளின் இடத்தில் தன்னாட்சி கொண்ட கூட்டு சமூகங்களின் கூட்டமைப்பு தோன்ற வேண்டுமென வலியுறுத்தினார். அவர் 1848-49 காலத்தில் தேசிய மன்றத்தின் உறுப்பினராக இருந்து பெற்ற அனுபவம் அதிருப்தியையே ஏற்படுத்தியிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அவரது சிந்தனைகள் பிரான்ஸ் நாட்டின் உழைக்கும் மக்களிடையே செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தன. அவர் வகுத்த பாதையைப் பின்பற்றிய சிலர் 1864இல் அறுபதுகளின் அறிக்கை என்ற ஒன்றை வெளியிட்டார்கள்.இவ்வறிக்கை 1789இன் பிரெஞ்சு புரட்சி அரசியல் சமத்துவத்தை மட்டுமே ஏற்படுத்தியதென்றும், பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்தவில்லை என்றும் அறிவித்தது. அவர்கள் உழைக்கும் வர்க்கத்தை உழைப்பாளிகளே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். பிரான்சின் பாராளுமன்றத்திற்கு 1863இல் நடந்த தேர்தலில் அவர்கள் மூன்று உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த வேட்பாளர்களைப் போட்டியிட வைத்தபோது அவர்கள் தோல்வியையே அடைந்தார்கள். பொது வேலைநிறுத்தத்தின் மூலமாக அரசைக் கவிழ்த்து அதனிடத்தில் மக்களாட்சி முறையில் தெரிவுசெய்யப்பட்ட கூட்டுறவு குழுக்கள் ஆட்சியிலமர்த்தப்பட வேண்டும் என்று நினைத்த ரஷ்யாவின் அரசின்மைவாத சிந்தனையாளரான மைக்கேல் அலெக்ஸாண்டரோவிச் பகுனினை பிரௌதனின் சிந்தனைகளே பெரிதும் ஆட்கொண்டது.


அரசின்மைவாதம் : அரசையும் சமூகத்தின் அமைப்பையும் நம்பிக்கைக் கொண்டு, அதற்காக வலிமையைப் பயன்படுத்தாமலும், கட்டாயப்படுத்தாமலும், தன்னார்வ அடிப்படையில் கூட்டுறவாக அமைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டோர்.

 

லூயி ஜீன் ஜோசப் சார்லஸ் பிளாங்க் (1811-1882)

தனக்கென அறிவுத்தளத்தில் தனி செல்வாக்கை ஏற்படுத்திக்கொண்ட பிரெஞ்சு சோஷலிசவாதியான லூயி பிளாங்க், 1839இல் ரெவ்யூ ரூ ப்ராக்ரஸ் (Revue du Progres) என்ற ஆய்விதழைத் துவக்கி அதில் மேம்பட்ட சமூக சிந்தனைகளை முன்வைத்தார். அவரது முக்கியமான கட்டுரை தொழிலாளர்களின் அமைப்பு (Organisation of Labour) என்ற தலைப்பில் 1839ஆம் ஆண்டு தொடராக வெளிவந்தது. அவரது எழுத்துக்களின் வாயிலாக தேசிய நிதியில் தொழிலாளர்களால் நடத்தப்படும் "சமூக பணிமனைகளின்" மூலம் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டு அதன்வழியே படிப்படியாக சோஷலிச் சமூகத்தை எட்டமுடியும் என்று அறிவுறுத்தினார். அரசு அதிகாரத்தின் துணை இல்லாமல் சோஷலிச் சமூகத்தை எட்டமுடியாது என்றும் லூயி பிளாங்க் வாதிட்டார். பிரான்ஸ் நாட்டில் 1848இல் உருவான தற்காலிக அரசின் உறுப்பினராகப் பங்குவகித்த அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பற்றோருக்கான பணிமனைகளை உருவாக்கி தேவைப்பட்டோருக்கு பணி கிடைக்க வழிவகை செய்தார்.


 

கார்ல் மார்க்சும், அறிவியல் சார்ந்த சோஷலிசமும்

 

கார்ல் மார்க்சும் (1818-1883) பிரெட்ரிக் ஏங்கல்சும் (1820-1895) சோஷலிச் சிந்தனைக்கு அரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்கள்.காலப்போக்கில் அவர்களது சிந்தனைகள் மார்க்சியம் அல்லது கம்யூனிசம் (பொதுவுடைமை ) என்று வழங்கப்படலாயின. அவர்களோ சோஷலிசம் சார்ந்த அவர்களது சிந்தனைகளை அறிவியல் சார்ந்த சோஷலிசம் என்றே குறிப்பிட்டார்கள். மார்க்சும், ஏங்கல்சும் 1848ஆம் ஆண்டின் புரட்சி நடந்த சமகாலத்தில் தங்களின் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ (The Communist Manifesto) என்ற நூலை வெளியிட்டார்கள். அதில் மிகவும் புகழ்பெற்ற தொழிலாளர்களைத் திரட்டும் கூக்குரலான உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு ஏதுமில்லை , அணிந்திருக்கும் விலங்குகளைத் தவிர என்பது இடம்பெற்றிருந்தது.

நிலப்பிரபுத்துவத்தை எவ்வாறு முதலாளித்துவம் மாற்றியமைத்ததோ அதே வழியில் முதலாளித்துவத்தை சோஷலிசம் மாற்றியமைக்கும் என்று மார்க்ஸ் நம்பினார். சமூகத்தில் வேலை கொடுக்கும் நிலையில் இருக்கும் வசதி படைத்தோருக்கும் வேலை பெறவேண்டிய நிலையில் இருக்கும் வறிய மக்களுக்குமிடையே ஒரு தொடர் முரண்பாடு இருந்துகொண்டிருப்பதாக மார்க்ஸ் நம்பினார். கல்விநிலை மேம்பாடே, பணியமர்த்தப்பட்ட பெருந்திரளான மக்கள் தங்களின் வர்க்க உணர்வால் உந்தப்பட்டு அது போன்றே ஆளும் வர்க்க உணர்வோடு வாழும் சிறுபான்மை மக்களை எதிர்க்கும் நிலையை ஏற்படுத்தும் என்று அவர் கருதினார். எவ்வாறாயினும் வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி புதிய சமூக அமைப்பிற்கு அடித்தளமமைப்பார்கள் என்று அவர் ஒரு தீர்க்கதரிசியைப் போன்று கூறினார்.

முதலாளித்துவத்தின் மீதான தமது விமர்சனத்தை முன்வைத்து தாஸ் கேப்பிடல் (Das Kapital) நூலின் முதல் தொகுதியை 1867இல் கார்ல் மார்க்ஸ் வெளியிட்டார். இந்நூலில் உழைக்கும் வர்க்கத்தை (Proletariat) முதலாளி வர்க்கம் (Bourgeoisie) சுரண்டுவதை கார்ல் மார்க்ஸ் அழுந்தக் கூறியுள்ளார்.

1864இல் அவரது சிந்தனையின் தாக்கத்தால், பன்னாட்டு உழைக்கும் ஆண்களின் சங்கம் (International Working Men's Association) TOOTM அமைப்பு உருவானது. பன்னாட்டு உழைக்கும் மக்களின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதே அதன் நோக்கமாக விளங்கியது. இப்பன்னாட்டு உழைப்பாளரமைப்பில் மிதவாதிகள் கலந்துவிடாமலும் ஃபெர்டினான்ட் லசால், பகுனின் போன்ற சோஷலிசவாதிகள் நுழைந்துவிடாமலும் மார்க்ஸ் எச்சரிக்கையோடு முனைந்து செயல்பட்டார். பன்னாட்டு அமைப்பை ஒருங்கிணைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் 1876இல் அது முழுவதுமாக சரிந்தது. எனினும் ஐரோப்பாவில் தோன்றிய பல சோஷலிச கட்சிகளாவன: 1875இல் ஜெர்மானிய சமூக மக்களாட்சி கட்சி, 1879இல் பெல்ஜிய சோஷலிச கட்சி, 1871இல் பாரிஸ் கம்யூன் மற்றும் 1905இல் உருவான சோஷலிச கட்சி இரண்டாம் பன்னாட்டு அமைப்பு 1889இல் பாரிஸில் உருவாகி முதலாம் உலகப் போர் துவங்கும் வரை சோஷலிச இயக்கங்களின் மீது தன் செல்வாக்கைச் செலுத்திக் கொண்டிருந்தது.

 

இங்கிலாந்தில் சாசனத்துவம் (Chartism)


இங்கிலாந்தின் உழைக்கும் வர்க்கம் அங்கு செயல்பட்டு வந்த சார்டிஸ்ட் இயக்கத்தை பின்புலமாக அமைத்துக் கொண்டது. மக்கள் உரிமை சாசன இயக்கம் என்பது ஒரு கலகமோ, கிளர்ச்சியோ அல்ல. அது அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட இயக்கமாகும். 1830இல் பிரெஞ்சு புரட்சியின் தாக்கமானது இங்கிலாந்தில் போராட்ட வடிவம் பெற்று தொழிலாளர் கிளர்ச்சியாக மாறியது. கிளர்ச்சியின் வெவ்வேறு போக்குகள் இணைந்து மக்கள் உரிமை சாசன இயக்கமாக நிலைகொண்டு எழுந்தது. சாசனத்துவவாதிகள் தங்களது சிந்தனைகளை ஏழை மனிதனின் பாதுகாவலன் (The Poor Man's Guardian), பட்டயம் (The Charter), வடக்கத்திய நட்சத்திரம் (The Northern Star), சார்டிஸ்ட் சுற்றறிக்கை (The Chartist Circular) போன்ற இதழ்களின் வாயிலாக பிரச்சாரம் செய்தனர். 1837இல் துவங்கப்பட்ட அதன் முக்கியப் பத்திரிகையான வடக்கத்திய நட்சத்திரம் குறுகிய காலத்தில் விநியோக அளவில் டைம்ஸ் பத்திரிகையை சமன் செய்தது. அதில் வெளியான கட்டுரைகளின் தகவல்கள் ஒவ்வொரு தொழிற்சாலைப்பகுதிகளிலும் அமைந்திருந்த பட்டறைகளிலும் பொது விடுதிகளிலும் எழுத்தறிவுபெறாதோருக்காக படித்துக்காட்டப்பட்டது.


1838-39 க்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற கூட்டங்களில் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள். லண்டன் உழைக்கும் ஆண்களின் சங்கத்தைச் சேர்ந்த வில்லியம் லவெட் என்பவர் சாசனத்துவவாதிகள் விரும்பிய தேர்தல் சீர்திருத்தங்களை ஆறு முக்கிய அம்சங்களாகக் கொண்டு மக்களின் பட்டயம் ஒன்றைத் தயாரித்து கொடுத்திருந்தமையை இக்கூட்டங்களில் அறிமுகப்படுத்தியதோடு அது ஆழ்ந்த ஆய்விற்கும் உட்படுத்தப்பட்டது.  அவ்வாறான ஆறு முக்கிய அம்சங்கள் கீழ்வருமாறு:

1. அனைவருக்கும் வாக்குரிமை.

2. அச்சுறுத்தலைத் தவிர்ப்பதற்காக வாக்குச்சீட்டுகள் மூலம் வாக்களித்தல்.

3. வேட்பாளர்களுக்கு சொத்துத்தகுதி நிர்ணயிக்கலாகாது.

4. ஏழைகள் தேர்தலில் போட்டியிடவும் பதவிகளில் இடம் பெறவும் வழிவகை செய்யும் முகமாக மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நிதி சலுகைகளை வழங்குதல்.

5. சம அளவிலான தேர்தல் மாவட்டங்களையும், சம அளவிலான பிரதிநிதித்துவத்தையும் வழங்கல்.

6. வருடாந்திரப் பாராளுமன்றம்.

மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என்ற வதந்திகளால் பீதியடைந்த அரசு, தொழிற்சாலை இருந்த பகுதிகளுக்கு இராணுவத்தை அனுப்பியது. லங்காஷயர் நகரின் தொழிலாளர்கள் 1842ஆம் ஆண்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு தொழிற்சாலைதோறும் சென்று பிற தொழிலாளர்களையும் தங்களோடு இணைந்துகொள்ள வற்புறுத்தியதன் வாயிலாக போராட்ட எல்லையை விரிவுப்படுத்தி நிலைமையைத் தீவிரமடையச் செய்தார்கள். பிரான்சில் 1848இல் ஏற்பட்ட பிப்ரவரி புரட்சியின் தாக்கம் ஐரோப்பா முழுமைக்கும் பரவியபோது பெருந்திரளான தொழிலாளர்கள் மோதலுக்குத் தயாரானார்கள். அரசும் கீழ் நடுத்தரவர்க்க மக்களின் துணையோடு விடாப்பிடியாக நின்றது. தெற்கு லண்டனில் அமையப்பெற்ற கென்னிங்டன் நகரில் 50,000 என்ற அளவில் தொழிலாளர்கள் கலந்துகொண்டபோது சாசனத்துவவாத தலைவர்களும் தீர்மானமான ஒரு முடிவெடுக்கத் தடுமாறினார்கள். அதற்கிடையே அவர்களில் பெரும்பான்மையானோரை கைது செய்ததோடு லண்டன் நகரின் பாதியை ஆயுதம் ஏந்தியோர் கட்டுப்பாட்டில் இருக்கும் முகாமாகவே அரசு மாற்றியிருந்தது.

பல்வேறு குழுக்களின் மாறுபட்ட கருத்துக்களின் புகலிடமாக சாசனத்துவவாதம் திகழ்ந்தது. அதன் தலைவர்கள் ஆட்சியில் இருந்துகொண்டிருப்போரை அரவணைத்துச்செல்ல நினைப்போர் என்ற ஒரு வகையாகவும், அவர்களைத் தூக்கியெறிய நினைப்போர் என்ற மற்றொரு வகையாகவும் பிரிந்து இருந்தார்கள். சாசனத்துவவாதம் வெற்றிபெறாவிடினும் 1832இன் சீர்திருத்த சட்டத்தில் அதன் கோரிக்கைகள் இடம்பெறவில்லை என்றாலும் அதற்குப்பின் கொண்டுவரப்பட்ட 1867ஆம் மற்றும் 1884ஆம் ஆண்டுகளின் பாராளுமன்ற சீர்திருத்த சட்டங்களில் கணிசமான அளவிற்கு அதன் கருத்துகள் உட்கொண்டுவரப்பட்டன.

 

ஜூலை புரட்சி (1830)

போர்பன் மன்னரான பத்தாம் சார்லஸ் 1830 ஜூலை 26 அன்று நான்கு அவசர சட்டங்களை வெளியிட்டு அவற்றின் மூலமாக பிரதிநிதிகளின் அவையை (Chamber of Deputies) கலைக்கவும் பத்திரிகைச் சுதந்திரத்தை ஒடுக்கவும் தேர்தல் சட்டங்களை மாற்றியமைப்பதன் வாயிலாக நான்கில் மூன்று பங்கு பேருக்கு ஓட்டுரிமையை இல்லாததாக்கவும் அவைக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க புதிய தேர்தல்களை அறிவிக்கவும் செய்தார். இதனால் 1795க்குப் பின் பாரிஸ் நகர மக்கள் வெகுண்டெழுந்து பெருந்திரளாகப் பொதுவெளிக்கு வந்து நின்றார்கள். அரசரின் படைகளால் கிளர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை . வெளிநாட்டிற்குப் புலம்பெயர் பத்தாம் சார்லஸ் அறிவுறுத்தப்பட்டு அவரது இடத்தில் அவரது உறவினரான ஆர்லியன்ஸ் நகர லூயி ஃபிலிப் நடுத்தர மக்களின் ஆதரவோடு பதவிக்குக் கொண்டுவரப்பட்டார் 

இந்த உத்தி பிரான்சில் கைகொடுத்தது. ஆனால் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் கிளர்ச்சி தொடர்ந்து வெடித்தவாறே இருந்தது. புரட்சி நெதர்லாந்தில் வெற்றி பெற்றதையடுத்து, அங்கே பெல்ஜியம் பிரிக்கப்பட்டு தனியான சுதந்திர நாடாக்கப்பட்டது. துருக்கியர்களின் ஆட்சியதிகாரத்தில் சிக்கிப் போராடிக் கொண்டிருந்த கிரேக்கர்கள் பெரும் சக்திகளின் ஆதரவைப்பெற்று 1832இல் விடுதலை அடைந்தார்கள். ஆனால் ரஷ்ய சார் மன்னருக்கு எதிரான போலந்து நாட்டினரின் போராட்டம் தோல்வியை அடைந்தது.



 

பிப்ரவரி புரட்சி (1848)


பாரிஸ் நகரில் தாமாக உதித்த மக்களின் எழுச்சி சீர்திருத்தத்தைக் கோரி கோஷமிட்ட (Vive de la reforme என்ற முழக்கம்) ஓசை அவர்களின் தேசப்பற்றை பறை சாற்றியதோடு அவ்வோசை படைவீரர்களிடையே பரவவும் அரண்மனையையும் அதன் அவை கட்டடங்களையும் ஊடுருவியதால் 1848இன் பிப்ரவரி மாதத்தில் வேறு வழியின்றி மன்னர் லூயி ஃபிலிப் பதவி துறந்து நாட்டைவிட்டகன்றார். எதிர்ப்பாளர்கள் பிரெஞ்சு நாட்டின் புரட்சிக்கவிஞர் லாமார்டினின் பின் அணிதிரண்டனர். சிறிது காலத்தில் லூயி பிளாங்கும் அவர்களை வந்து சேர்ந்தார். அனைத்து ஆண்களுக்கும் ஓட்டுரிமை என்ற அடிப்படையில் ஏப்ரல் 1848இல் நடத்தப்பட்ட தேர்தல்களில் மிதவாதிகள் அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சோஷலிசவாதிகளில் சொற்பமானவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். புதிதாகப் பதவியேற்ற சபையினர் சமூக ஒழுங்கிற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற வாதத்தை முன்வைத்து லூயி பிளாங்கின் முயற்சியால் உருவாக்கப்பட்ட பட்டறைகளை மூடினர். தொழிலாளர்கள் அதற்குத் தக்க பதிலடி கொடுத்ததோடு அரசை எதிர்க்க வும் துணிந்தனர். ஜூன் 24-26ஆம் தேதிகளுக்கிடையே ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படவும் பதினோராயிரம் புரட்சியாளர்கள் சிறையிலடைக்கப்பட்டும், நாடுகடத்தப்பட்டும் தண்டிக்கப்பட்டார்கள். இக்காலம் இரத்தந்தோய்ந்த ஜூன் தினங்கள் (Bloody June Days) என்று குறிப்பிடப்படுகின்றன. சட்டசபை இயற்றியப் புதிய அரசியல் சாசனத்தின்படி தேர்தல்கள் நடத்தப்பட்டன. நெப்போலியன் போனபார்ட்டின் மருமகனான லூயி நெப்போலியன் குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு டிசம்பர் 1848இல் பதவியேற்றார். நீண்டகாலம் செல்வதற்குள் அவர் ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தி அதன் வாயிலாக ஜனவரி 1852இல் தனக்குத்தானே பிரான்ஸ் நாட்டின் பேரரசராக முடிசூட்டிக்கொண்டார். தனக்கு மூன்றாம் நெப்போலியன் என்ற சிறப்புப்பெயரையும் சூட்டிக்கொண்டார்.


1848ஆம் ஆண்டு தேசியவாதத்திற்கு குறிப்பிடும்படியான வெற்றிகரமான ஆண்டாய் அமைந்தது. ஐரோப்பாவின் இடைத்தரகராகவும் தேசியவாதத்தின் பெரும் எதிரியாகவும் கருதப்பட்ட மெட்டர்னிக் மாறுவேடத்தில் வியன்னாவைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார். ஹங்கேரி நாடும், பொஹிமியா நாடும் தேசிய விடுதலை அடைந்துவிட்டதாகப்பிரகடனப்படுத்திக் கொண்டன. மிலான் ஆஸ்திரியர்களை வெளியேறச் செய்தது. வெனிஸ் விடுதலை பெற்ற குடியரசாக மாறியது. சார்டினியாவின் மன்னரான சார்லஸ் ஆல்பர்ட் ஆஸ்திரியா மீது போர்ப்பிரகடனம் செய்தார். சர்வாதிகாரப்போக்கு சிறிது காலம் மறைந்தது போன்ற பிம்பம் ஏற்பட்டது. ஆனால் உண்மையில் அவ்வாறு நிகழவில்லை. கோடைக்காலம் நெருங்கும் வேளையில்மன்னர்கள் புரட்சியாளர்கள் மீது தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்து வெற்றிகரமாக பெர்லின், வியன்னா, மிலான் போன்ற பகுதிகளில் பரவிக்கொண்டிருந்த மக்களாட்சி கோரிய இயக்கங்களை ஒடுக்கினர். அடுத்த ஓராண்டில் கண்டம் முழுவதும் எதிர் - புரட்சி வெற்றிகரமாகப் பரவியது.

 

தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் தேசியவாதம்

ஐரோப்பாவில் தேசிய ஒருமைப்பாட்டைக் கண்டடைந்த நாடுகளில் முதலாவதாய் பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகள் திகழ்ந்தன. கலைகளுக்கும், எழுத்துலகிற்கும் அரிய கொடைகளை வழங்கிய இத்தாலி இவ்வரசியல் மாற்றங்களில் பங்கெடுக்கவில்லை. இத்தாலியின் நகரங்களான ரோம், ஃபிளாரன்ஸ், வெனிஸ், நேப்பிள்ஸ், மிலான் போன்றவை குறுநிலங்களின் தலைநகரங்களாக அமைந்திருந்தன. அதனால் இவை அவ்வப்போது பேரரசுகளுக்குப் பலியாகும் சூழல் நிலவியது. இது தவிர, புத்துயிர்ப்புக்காலம் என்பது அறிவுசார்ந்த சுதந்திரத்தை முன்னிறுத்தியதேயன்றி அது அரசியல் விடுதலையை உள்ளடக்கியதல்ல. ஆக இத்தாலியின் குறுநாடுகள் பலவகையில் விழிப்புணர்வு கொண்டவையாகத் திகழ்ந்தாலும் அவற்றில் ஃபிளாரன்ஸின் மெடிஸி போன்றும், மிலானின் கொடூர விஸ்கான்டி, மத்திய இத்தாலியின் சீஸர் போர்ஜியா போன்றவர்களால் கொடுங்கோல் ஆட்சியே நடத்தப்பட்டு வந்தது. இத்தாலியின் உண்மைநிலையே ஜெர்மனிக்கும் பொருந்தக்கூடியதாக இருந்தது. புனித ரோமானியப் பேரரசு என்பது பெயரளவில் மட்டுமே பேரரசாக விளங்கியது. செயல்பாட்டளவில் ஜெர்மனி முந்நூறுலிருந்து நானூறு வரையான தனிநாடுகளைக் கொண்டதாக விளங்கியது. மன்னர்களே இந்நாடுகளை நிலப்பிரபுத்துவ அராஜகத்திலிருந்து காப்பாற்றி தேசங்களாக வடிவம் கொடுத்தார்கள். தேசிய அரசுகளாக ஏற்றம் பெறத் தேவையான சூழல் தேசியவாதம் பரவிய பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் இத்தாலியிலும் ஜெர்மனியிலும் ஏற்பட்டது.

 

இத்தாலிய இணைப்பு

நெப்போலியனின் காலத்திற்கு முன்பான இத்தாலி சிற்றரசுகளையும், குறுநில மன்னர்களையும் மட்டுமே உள்ளடக்கிய ஒன்றாக சீரற்றுத்திகழ்ந்தது. நெப்போலியன் அதனை மூன்று பிரிவுகளாக ஏற்படுத்தினார். ஒருமையைப் பேணக்கூடிய இந்நடவடிக்கை வியன்னா காங்கிரசால் அழிக்கப்பட்டது. எட்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட இத்தாலியின் வடக்குப் பகுதி ஜெர்மன்மொழி பேசும் ஆஸ்திரியர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இத்தாலி பன்னிரெண்டு பெரு மாநிலங்களையும் பல குறுநிலங்களையும்' உள்ளடக்கியதாக இருந்தது. இத்தாலி வெறும் பூகோள வெளிப்பாடே என்று மெட்டர்னிக் குறிப்பிட்டார். வடமேற்கில் பிரான்சின் எல்லையையொட்டி அமையப்பெற்றிருந்த பியட்மாண்ட்- சார்டினியப் பேரரசு இத்தாலியை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றியது. அதன் கிழக்கில் அமைந்திருந்த லம்பார்டி மற்றும் வெனிஷியா பகுதிகள் ஆஸ்திரியப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. குறுந்தேசங்களான டஸ்கனி, பார்மா, மொடினா ஆகியவற்றையும் அது தன் கட்டுக்குள் வைத்திருந்தது. மத்தியில் இருந்த போப்பாண்டவரின் நாடுகள் ரோமானிய கத்தோலிக்கத் திருசபையின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. தெற்கில் வீற்றிருந்த இரு சிசிலிய அரசுகள் அல்லது நேப்பிள்சும் சிசிலியும் போர்பன் குடும்ப வம்சத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

நெப்போலியனின் ஆட்சி ஒரே சீரான நிர்வாகத்தை வழங்கியமையால் இத்தாலியில் முதன்முறையாக ஒருமைப்பாட்டுணர்வு ஏற்பட்டது. இத்தாலியில் எழுந்த தேசியவாத ஆர்வத்தை வியன்னா காங்கிரஸ் அரசாட்சியை மீண்டும் நிறுவியதன் வாயிலாகவும், சிறு இராஜ்ஜியங்களை உருவாக்கியதன் மூலமாகவும் மடைமாற்றம் செய்தது. சுதந்திர கருத்துக்களையும், நாட்டுப்பற்றையும் வலியுறுத்திய கார்பொனாரி (Carbonari) போன்ற இரகசிய குழுக்கள் 1820களில் அதிகமாகப் பரவியது. தாராளமயவாத கருத்துக்களையும், தேசியவாதத்தையும் இக்குழுக்கள் உயிர்த்தெழச் செய்தன. நேப்பிள்ஸ், பியட்மாண்ட், லம்பார்டி ஆகியப் பகுதிகளில் புரட்சி வெடித்தது. ஆயினும் அவை ஆஸ்திரியாவால் ஒடுக்கப்பட்டன.


பிரான்சில் 1830இல் நடந்த புரட்சியின் சாயலில் மொடினா, பார்மா, மற்றும் போப்பாண்டவரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் கிளர்ச்சி வெடித்தாலும் அவையும் ஆஸ்திரியாவால் ஒடுக்கப்பட்டன. அது போன்றே 1848இல் பிரான்சின் பிப்ரவரி புரட்சியைத் தொடர்ந்து இத்தாலியின் மாநிலங்களான பியட்மாண்ட்சார்டினியா, சிசிலி, போப்பாண்டவரின் பகுதிகள், மிலான், லம்பார்டி, வெனிஷியா ஆகிய பகுதிகளில் மக்களின் கிளர்ச்சி மீண்டும் வெடித்தது. அதன் விளைவாக சிசிலி, பியட்மாண்ட்- சார்டினியா மற்றும் போப்பாண்டவரின் பகுதிகளில் தாராளக்கூறுகளைக் கொண்ட அரசியல் சாசனம் வழங்கப்பட்டது. புரட்சியால் உந்தப்பட்ட பியட்மாண்ட்- சார்டினியப் பகுதிகளின் மன்னரான சார்லஸ் ஆல்பர்ட் லம்பார்டி மற்றும் வெனிஷியா மீது படையெடுத்தார். எனினும், ரஷ்யப் படைகளின் உதவியைப் பெற்ற ஆஸ்திரியா அவரைத் தோற்கடித்தது. ஆஸ்திரியாவின் ஆக்கிரமிப்பில் இருந்து பியட்மாண்ட்- சார்டினியாவைக் காத்த சார்லஸ் ஆல்பர்ட் வீழ்ச்சிக்குரிய பழியைத் தான் ஏற்றுக்கொண்டு பட்டம் துறந்ததோடு தனது மகனான இரண்டாம் விக்டர் இம்மானுவேலை அரசராக்கினார். பியட்மாண்ட்- சார்டினியா தோல்வியை அடைந்தது போலப் பல குறு இராஜ்ஜியங்களில் எழுந்த கிளர்ச்சிகள் ஒடுக்கப்பட்டாலும், தாராளவாத கருத்துக்களும், தேசியவாதமும் தாக்குப்பிடித்து நின்றன.

மாஸினி, கவுன்ட் காமிலோ டி கவூர், க்யூசுப் கரிபால்டி ஆகிய மூவரும் இத்தாலிய ஒருங்கிணைவிற்கான முக்கிய ஆளுமைகள் ஆவர். கவூர் மூளையாகவும் மாஸினி ஆன்மாவாகவும் கரிபால்டி வாட்படையாகவும் நின்று இத்தாலியை ஒருங்கிணைத்தார்கள் என்றே கருதப்படுகிறது.

 

மாஸினி (1805-1872)

க்யூசுப்மாஸினி இத்தாலிய ஒருங்கிணைவிற்கு அடித்தளமிட்டார். ஜெனோவாவில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்த அவர் சட்டம் பயின்று பட்டம் பெற்றார். இளம் வயதிலேயே அரசியலின்பால் ஈர்க்கப்பட்ட அவர் இத்தாலி தேசத்தின் விடுதலையை வலியுறுத்தினார். கார்பொனாரியின் கலகச் செயல்பாடுகளில் தொடர்புகொண்டிருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார். காலப்போக்கில் திரைமறைவு செயல்பாடுகளிலிருந்துத் தம் கை ம விடுவித்துக் கொண்ட அவர் மன்னராட்சிக்கு எதிராக திறந்தவெளிப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் பயனுண்டு என்று நம்பலானார். பெரும் நாகரிகத்தின் எச்சமாக விளங்கிய இத்தாலியால் உலகின் பிறபகுதிகளுக்கு சீரிய தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்றும் அவர் நம்பினார். இளம் இத்தாலி இயக்கத்தை 1831இல் துவங்கிய அவரிடம் இத்தாலியை குடியரசாக்கும் குறிக்கோள் இருந்தது. இத்தாலிய ஒருங்கிணைவிற்காகப் பாடுபட்ட காரணத்திற்காக நாடு கடத்தப்பட்டிருந்த அவர், 1848ஆம் ஆண்டு வடக்கு இத்தாலியில் புரட்சி வெடித்த சூழலைப் பயன்படுத்தி ரோமிற்கு திரும்பினார். போப்பாண்டவர் வெளியேற்றப்பட்டு குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டபின் பொறுப்பேற்ற மூவரடங்கிய நிர்வாகக்குழுவில் மாஸினியும் பங்குபெற்றார். ஆனால் 1848ஆம் ஆண்டின் புரட்சி தோல்வியுற்று பிரெஞ்சு நாட்டாரின் உதவியோடு போப்பாண்டவர் மீண்டும் ரோமில் அரியணையேறியபின், மாஸினி பிரச்சாரத்திலும் அடுத்த கட்ட திட்டங்களை வகுத்தலிலும் ஈடுபடலானார்.


 

கவுன்ட் கவூர் (1810 – 1861)

இத்தாலிய தேசிய சிந்தனைகளால் உந்தப்பட்டவர்களில் கவுன்ட் கவூரும் ஒருவர். அவர் 1847இல் ஒரு செய்தித்தாளைப் பிரசுரித்தார். இல் ரிசார்ஜிமென்டோ (IL Risorgimento) என்ற அச்செய்தித்தாளின் பெயரே இத்தாலிய ஒருங்கிணைவுஇயக்கத்தைக் குறிப்பிடும் சொல்லாடலாக உருவானது. கொள்கை மற்றும் இலக்கிய இயக்கங்களை உள்ளடக்கிய ரிசார்ஜி மென்டோ (இத்தாலிய உணர்வின் மீள் உயிர்ப்பு) இத்தாலிய மக்களிடையே தேசிய உணர்வு ஏற்றம் பெற உதவியது. கவூர் சார்டினியாவின் பிரதம \அமைச்சராகப் பதவியேற்று இத்தாலியின் ஒருங்கிணைவிற்காக அரும்பாடுபட்டார். 



அவர் போரையும், இராஜதந்திரத்தையும் ஒருங்கே பயன்படுத்தி சார்டினியாவின் தலைமையில் இத்தாலிய ஒருங்கிணைவை ஏற்படுத்த முயன்றார். அயல்நாடுகளின் ஆதரவின்றி இத்தாலிய ஒருங்கிணைவு சாத்தியமில்லை என்பதை அவர் உணர்ந்தார். லம்பார்டியிலிருந்தும் வெனிஷியாவிலிருந்தும் ஆஸ்திரியாவை வெளியேற்ற பெரும் சக்திகளின் துணை அவருக்குத் தேவைப்பட்டது. அதனால் பியட்மாண்ட்- சார்டினியாவை கிரிமியப் போரில் பங்கெடுக்கவைத்து அதன் வாயிலாக உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதோடு இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளின் ஆதரவைப்பெற எண்ணினார். அவர் ஜூலை 1858இல் மூன்றாம் நெப்போலியனோடு ஏற்படுத்திய ஒப்பந்தத்தின்படி பிரான்ஸ் நாடு பியட்மாண்ட்சார்டினியாவை ஆஸ்திரியாவிற்கு எதிராக ஆதரிப்பதென்றானது.

ஆஸ்திரியாவுடனான போர், 1859

ஆஸ்திரியாவின் எல்லையருகே படைகளைக் குவித்து அந்நாட்டைப் போரில் ஈடுபட கவூர் தூண்டினார். ஆஸ்திரியா படைகளை விலக்கிக்கொள்ள விதித்த காலக்கெடு முடிந்த பின்பும் கவூர் அசையாதிருந்தார். அதன் விளைவாக ஏப்ரல் 1859இல் ஆஸ்திரியா தனது தாக்குதலை பியட்மாண்ட்- சார்டினியா மீது தொடுத்தது. பிரான்சின் படைகளோடு இணைந்த பியட்மாண்ட்- சார்டினியப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தன. சால்ஃபெரினோ போரில் அவர்களடைந்த வெற்றி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனால் போரைத் தொடர்ந்து நடத்தாமல் 1859 ஜூலை 11 அன்று வில்லா ஃபிராங்கா என்னும் இடத்தில் பிரான்சின் மூன்றாம் நெப்போலியன் ஆஸ்திரியப் பேரரசர் இரண்டாம் பிரான்சிஸ் ஜோசப்புடன் ஒரு அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார். பிரான்சின் மாற்றத்தால் ஏமாற்றமடைந்த கவூர் தனது பதவியை இராஜினாமா செய்தார். பின்னர் பியட்மாண்ட்- சார்டினியாவும் ஆஸ்திரியாவும் 1859ஆம் ஆண்டு நவம்பரில் எரிச் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டன. அதன்படிலம்பார்டியை விட்டுக்கொடுத்த ஆஸ்திரியா வெனிஷியாவை தன்னகப்படுத்திக் கொண்டது.

கவூர் மீண்டும் 1860இல் பிரதம அமைச்சராகப் பதவியேற்றார். பொதுவாக்கெடுப்பின் வாயிலாக பியட்மாண்ட்- சார்டினிய இராஜ்ஜியத்தோடு பார்மா, மொடினா, டஸ்கனி ஆகியவை இணைக்கப்பட்டன. அதுபோலவே பொதுவாக்கெடுப்பின் மூலமாக சவாய், நைஸ் பகுதிகள் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் சென்றன.

 

கரிபால்டியும் தெற்கு இத்தாலியப் படையெடுப்பும்

க்யூசுப் கரிபால்டி (1807-1882) கொரில்லா போர்முறை உத்தியைக் கைக்கொண்டு இத்தாலியின் ஒருங்கிணைவில் முக்கியப் பங்காற்றினார். மாஸினியின் இளம் இத்தாலி இயக்கத்தில் சேர்ந்த அவர் அதன் கருத்துக்களால் உத்வேகம் அடைந்தார். மாஸினி பியட்மாண்டில் நடத்திய கலகத்தில் கலந்துகொண்ட அவர், அதன்பின் தென் அமெரிக்காவில் அடைக்கலமானார். அங்கே இருந்த போராளிகளோடு இணைந்து ரியோ கிராண்ட் பகுதியையும், உருகுவே பகுதியையும் அர்ஜென்டினாவின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப் பாடுபட்டார். அதனால் அவர் இரு உலகங்களின் நாயகன் என்று அழைக்கப்படுகிறார். மேலும் அவர் 1843ஆம் ஆண்டு இத்தாலியப் படையணி' (Italian Legion) என்ற அமைப்பைத் துவங்கினார். தன்னார்வத் தொண்டர்களை உள்ளடக்கிய இப்படையமைப்பு செஞ்சட்டையினர் என்றும் அழைக்கப்படலானது.


கரிபால்டி முடியாட்சிக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த சிசிலிய மக்களின் அழைப்பை ஏற்றார். அவர் 1000 தன்னார்வலர்களோடு ஜெனோவா துறைமுகத்திலிருந்து கிளம்பி சிசிலியை சென்று சேர்ந்தார். சிசிலியின் கடற்கரையில் இரகசியமாகக் கால்பதித்த அவர்கள் தங்கள் வசமிருந்த உயிர்களுக்குச் சேதமேற்படாமல் 20000 படைவீரர்களைக் கொண்ட நேப்பிள்சின் ஒரு பெரும் படைப்பிரிவைத் தோற்கடித்தனர். அதன்பின் நேப்பிள்சை ஊடுருவி உள்ளூர் மக்களின் ஆதரவோடு அரசப்படைகளைத் தோற்கடித்தனர். எனினும், கரிபால்டியின் வெற்றிப்பயணத்தின் நோக்கத்தை சந்தேகித்த கவூர் பியட்மாண்டின் படைகளையனுப்பி அவர் ரோமை தாக்கிவிடாமல் தடுத்தார். தனது படையெடுப்பின் வெற்றியை மன்னர் இரண்டாம் விக்டர் இம்மானுவேலிடம் சமர்ப்பித்த கரிபால்டி தனது எஞ்சிய வாழ்வை அவரது சொந்த மண்ணான காப்ரிரா (Caprera) தீவில் செலவிட முடிவெடுத்துப் பின்வாங்கினார்.

சிசிலி, நேப்பிள்ஸ், மற்றும் போப்பாண்டவரின் பகுதிகளில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு அவை பியட்மாண்ட்- சார்டினியாவோடு இணைக்கப்பட்டன. போரின் முடிவில் ஆஸ்திரிய நாடு வெனிஷியா மீதும் போப்பாண்டவர் ரோம் மீதும் கட்டுப்பாட்டை நிறுவினர். இத்தாலியின் எஞ்சிய பகுதிகள் பியட்மாண் டோடு ஒருங்கிணைக்கப்பட்டன. பாராளுமன்றம் மே 1861இல் மன்னர் இரண்டாம் விக்டர் இம்மானுவேலை இத்தாலியின் ஆட்சியாளராகப் பிரகடனப்படுத்தியது. 1866இல் நடைபெற்ற ஆஸ்திரியப் பிரஷ்யப் போரில் பிரஷ்யாவோடு இத்தாலி இணைந்து செயல்பட்டமையால் அது வெனிஷியாவை பரிசாகப் பெற்றுக்கொண்டது. பிரெஞ்சுப் படைகள் 1871இல் நடந்த பிராங்கோ - பிரஷ்யப்போரில் பின்னடைவைச் சந்தித்து ரோமைவிட்டு அகன்றதால் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட இத்தாலி ரோமை இணைத்துக்கொண்டது. இவ்வாறாக இத்தாலிய இணைவு முழுமைபெற்றது.

 


ஜெர்மானிய இணைப்பு

ஒரே மொழி என்ற அடிப்படையிலும் இன்னபிற பண்புகளின் பொதுப்பின்புலமிருந்தும் ஜெர்மானிய மக்கள் பல குறுந் தேசங்களாகவே தொடர்ந்து பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். அறிஞர் பெருமக்களான ஜோஹன் வான் ஹெர்டர் (1744 - 1803), பிரைட்ரிக் ஷெலிகெல் (1772 - 1829) போன்றோர் ஜெர்மானியர்களின் உன்னதமான கடந்தகாலத்தைச் சுட்டிக்காட்டி சிந்தனையளவில் ஒரு ஜெர்மானிய தேசத்தை வரையறுத்தார்கள். சாதாரண மக்களின் கலாச்சாரத்தின் படைப்பே நாகரிகமாக ஏற்றம் பெற்றதாகக் கருதிய ஹெர்டர் ஜெர்மானிய வாழ்வியலின் (Volkgeist) தனித்துவத்தை கருத்தியலாகப் படைத்தார். ஜெர்மானிய தேசத்தை நோக்கி J.G. ஃபிக்ட் (J.G. Fichte) ஒரு தொடர் சொற்பொழிவையாற்றினார். ஏனைய பல வாழ்வியல் தனித்துவத்தைக் காட்டிலும் ஜெர்மானிய வாழ்வியல் முறையின் தனித்துவம் மேன்மையானது என்ற கருத்தை அவர் பரப்பினார் இக்கருத்து ஜெர்மானியர்களிடையே தேசிய உணர்வைத் தூண்டவும் வளர்த்தெடுக்கவும் வழிவகை செய்தது.


நெப்போலியனின் காலத்திற்கு முந்தைய ஜெர்மனி 360 குறுநிலங்களாகப் பிரிந்து கிடந்தது. நெப்போலியன்ரைன் கூட்டாட்சியை (Confederation of Rhine) ஏற்படுத்தியதன் விளைவாக அவரையும் அறியாமல் ஜெர்மானிய தேசிய உணர்வு அழுத்தம் பெற காரணமாக விளங்கினார். அதுவே முதன்முறையாக ஜெர்மானிய உணர்வு ஏற்பட காரணமாக அமைந்தது. எனினும் வியன்னா காங்கிரஸ் 39 நாடுகளின் கூட்டமைப்பாக ஜெர்மனியை மாற்றி அதனை ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டில் கொடுத்தது.

ஃபிக்ட் தனது சொற்பொழிவுகளை வழங்கிக்கொண்டிருந்த சமகாலத்தில் ஆஸ்திரியா ஜெர்மானிய கூட்டு நாடுகளில் பரந்துவிரிந்த பிரஷ்யாவின் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. அது பிரஷ்யாவிற்கு தங்கள் பழையகாலப் புகழினை மீட்டெடுக்க உதித்த உணர்விற்குப் புத்துயிர் அளித்தது. அதனால் அது தனது இராணுவத்தை மறுகட்டமைத்து பலப்படுத்தியது. பணிவழங்கலானது தகுதியை முன்னிறுத்தியதாக இருந்ததேயன்றி உயர்குடிபுகழின் பின்புலத்தைக் கொண்டதாக இருக்கவில்லை . தாராளமயத்தையும் நவீனத்துவத்தையும் இணைத்த தேசியவாதப்போக்கின் வேகம் பிரஷ்யாவில் உச்சம் பெற்றது.

பிரஷ்யா 1834இல் ஸோல்வரெய்ன் (Zoliverein) என்ற சுங்க ஐக்கியத்தை (Customs Union) வெற்றிகரமாய் ஏற்படுத்தியது. ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் நீங்கலாக மற்ற ஜெர்மானிய பகுதிகள் 1840களில் இணையவும் அவையாவும் ஒரு பொதுப்பொருளாதார நிர்வாகத்தின் கீழ்வரவும் தகுந்த சூழல் உருவானது. 1848இல் மக்கள் கொடுத்த அழுத்தத்தால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் சட்டசபைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டு ஃப்ராங்க்பர்ட் அவை கூட்டப்பட்டது. இதில் தெரிந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஜெர்மானிய தேசத்தைக் கட்டியெழுப்ப முடியுமென்று நம்பிய தாராளவாதிகள் ஆவர். அவர்கள் ஜெர்மன் தேசத்தை உள்ளடக்கும் உந்துசக்தி எது என்ற கேள்வியில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள். மாபெரும் ஜெர்மனி (Great Germany) என்ற சிந்தனையை முன்வைத்த பிரதிநிதிகள் ஹங்கேரி நீக்கப்பட்ட ஆஸ்திரியாவையும் உள்ளடக்கி, அதிக எண்ணிக்கையில் ஜெர்மன் மொழி பேசுவோரின் ஒருங்கிணைந்த நாடாக்கி அதன் மன்னராக ஆஸ்திரிய அரசருக்கு முடிசூட்டவேண்டும் என்று நினைத்தார்கள். 'சிறிய ஜெர்மனியை (Little Germany) ஆதரித்தப் பிரதிநிதிகள் ஆஸ்திரியா முற்றிலுமாக ஒதுக்கப்பட்டு பிரஷ்யமன்னருக்கு முடிசூட்ட வேண்டும் என்று நினைத்தார்கள். இறுதியாக ஆஸ்திரியா சட்டசபையில் பங்கெடுப்பதிலிருந்து பின்வாங்கியது. சட்டசபையில் அரசியல் சாசனம் இயற்றப்பட்டு அதன் நீட்சியாக சிறிய ஜெர்மனியைக் கோரியோர் பிரஷ்ய மன்னரான பிரெட்ரிக் வில்லியம்மை அரசியல் சாசன அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னராகப் பதவியேற்க அழைப்புவிடுத்தனர். சட்டசபை வழங்கிய மன்னர் பதவி என்ற கருத்தாக்கத்தில் உடன்பாடு கொள்ளாத பிரஷ்ய மன்னர் அவ்வழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.


பிரஷ்யாவின் பிரதம அமைச்சர் பதவி வகித்த ஆட்டோ வான் பிஸ்மார்க் (Otto von Bismarck) பிரஷ்யாவின் தலைமையில் ஜெர்மானியப் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டுமென்ற நோக்கோடு அதனை வலுப்படுத்தினார். ஒருங்கிணைவை அடைவதற்கு அவர் இரத்தமும், இரும்பும் என்ற வலுவான கொள்கையைக் கைக்கொண்டார். ஜெர்மானிய ஒருங்கிணைவை ஆஸ்திரியாவுடனும் பிரான்சுடனும் மோதாமல் அடைவது சாத்தியமில்லை என்று அவர் புரிந்து கொண்டிருந்தார். இராஜதந்திர நகர்வுகளின் வாயிலாக ஆஸ்திரியாவுடனும் பிரான்சுடனும் முரண்போக்கைக் கைக்கொள்ளலானார். ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளைத் துவங்கிய அவர் பிரஷ்யாவிற்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையே போர் ஏற்பட்டால் அந்நாடு தலையிடாது என்பதை உறுதி செய்து கொண்டார். அதன்பின் ஜெர்மானிய ஒருங்கிணைவை அடைய மூன்று போர்களை நடத்தும்படி ஆயிற்று.


பிஸ்மார்க் குறிப்பிட்டதாவது: வெறும் சொற்பொழிவுகளாலும், பெரும்பான்மையினரின் தீர்மானங்களினாலும் நெடுநாளைய பெரும் பிரச்சனைகளைத் தீர்த்துவிட முடியாது, மாறாக அது இரத்தத்தினாலும், இரும்பினாலுமே சாத்தியமாகும்.

 

ஷ்லெஸ்விக் - ஹால்ஸ்டின் சிக்கல்

ஷெல்ஸ்விக்கும், ஹோல்ஸ்டினும் டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருந்த இரு ஜெர்மானிய மாநிலங்களாகும். இவ்விரு பகுதிகளையும் (Duchies) 1863இல் டென்மார்க் மன்னர் தனது அரசுடன் இணைத்தார். பிஸ்மார்க் ஆஸ்திரியாவுடன் சேர்ந்து ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டு டென்மார்க்கை எதிர்க்க முன்மொழிந்தார். அதன்படி 1864இல் ஆஸ்திரியா, பிரஷ்யாவின் கூட்டுப்படைகள் டென்மார்க்கைப் போரில் தோற்கடித்தன. வியன்னா உடன்படிக்கையின் கீழ், டென்மார்க் அவ்விரு பகுதிகளையும் பிரஷ்யா - ஆஸ்திரியாவிடம் ஒப்படைத்தது. ஆனால் ஷெல்ஸ்விக், ஹால்ஸ்டின் பகுதிகளின் எதிர்காலம் பற்றிய கேள்வி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஆஸ்திரியா அவற்றை ஜெர்மானிய கூட்டமைப்போடு இணக்க விழைந்த போது, பிரஷ்யா அவற்றை தனியான நிர்வாகத்தின்கீழ் கொண்டுசெல்ல நினைத்தது. பின்னர் 1865இல் நடத்தப்பட்ட காஸ்டெய்ன் மாநாட்டின் வழிகாட்டுதலின்படி ஹால்ஸ்டின் ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டில் வைக்கப்படுவதென்றும் ஷெல்ஸ்விக்கை பிரஷ்யாவிடம் ஒப்படைப்பதென்றும் ஆனது. அதிகமான ஜெர்மானிய மக்கள்தொகையைக் கொண்டிருந்த ஹால்ஸ்டின் பிரஷ்யாவின் நிலவமைப்புக்குள்ளும் சிக்கியிருந்ததால் ஆஸ்திரியா ஹோல்ஸ்டினை நிர்வகிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டது. இச்சிக்கலை ஆஸ்திரியா ஜெர்மானியக் கூட்டமைப்பின் மையமான டயட்டில் முறையிட முடிவெடுத்தபோது அது காஸ்டெய்ன் மாநாட்டின் சரத்துக்களை மீறுவதானது. இறுதியில் பிரஷ்யப் படைகளை ஹோல்ஸ்டினுக்கு அனுப்பிய பிஸ்மார்க் அதனை முற்றுகையிடப் பணித்தார்,

 

ஆஸ்திரிய-பிரஷ்யப் போர், 1866


ஆஸ்திரிய-பிரஷ்யப் போர் தனது இராஜதந்திர செயல்பாடுகளின் வாயிலாக பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவின் நடுநிலையை பிஸ்மார்க் உறுதி செய்துகொண்டார். பின்னர் ஆஸ்திரியாவை வெனிஷியப் பகுதியை விட்டு அப்புறப்படுத்த விரும்பிய அவர் பியட்மாண்ட்- சார்டினியாவின் ஆதரவைப் பெற்றார். பெரும் சக்திகள் எதுவும் ஆஸ்திரியாவிற்கு ஆதரவளிக்காது என்பதனை உறுதி செய்துகொண்ட பிஸ்மார்க் பிரஷ்யாவை தாக்க ஆஸ்திரியாவைத் தூண்டும் செயல்களில் ஈடுபட்டார். இவ்வாறு நடந்த ஆஸ்திரிய - பிரஷ்யப் போர் ஏழு வாரப் போர்' என்றும் குறிப்பிடப்படுகிறது. பிரஷ்யா ஆஸ்திரியாவை பொஹிமியாவிலுள்ள சடோவா அல்லது கொனிக்ராட்ஸ் போரில் தோற்கடித்தது. பிரஷ்யப் படைகள் ஆஸ்திரியாவிற்குள் நுழைந்து வியன்னாவை வீழ்த்த எத்தனித்தபோது பிஸ்மார்க் அதனை எதிர்த்தார். பிரேக் உடன்படிக்கை மூலம் போருக்கு முடிவுகாணப்பட்டது. ஆஸ்திரியா ஜெர்மானியக் கூட்டமைப்பிலிருந்து விலகியது. வடக்கில் அமையப்பெற்றிருந்த நாடுகள் யாவும் பிரஷ்யாவின் தலைமையில் வடக்கு ஜெர்மானியக் கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டன. தோல்வியடைந்தாலும், பிரஷ்யாவை ஆதரித்தமைக்காக இத்தாலிக்கு வெனிஷியா பரிசாக அளிக்கப்பட்டது. இவ்வாறான வடக்கு ஜெர்மானிய கூட்டமைப்பில் மெய்ன் நதியின் வடக்கே வீற்றிருந்த 22 மாநிலங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஒரு புதிய அரசியல் சாசனம் 1867 ஜூலை 1இல் செயல்பாட்டிற்கு வந்தது. பிஸ்மார்க் தன் திட்டத்திற்கு ஈர்க்கும் முகமாக வடக்கு ஜெர்மானிய கூட்டமைப்பிற்கு தெற்கே இருந்த மாநிலங்களோடு நட்பு பாராட்டினார்.

பிராங்கோ -பிரஷ்யப் போர், 1870-71


பிஸ்மார்க் தெற்கு ஜெர்மானிய மாகாணங்களை ஒன்றிணைக்கும் பொருட்டு பிரஷ்யாவிற்கும், பிரான்சிற்குமிடையே பிளவை ஏற்படுத்த தனது கவனத்தைச் செலுத்தினார். அதற்கான வாய்ப்பு ஸ்பானிய அரசுரிமை வாரிசுப் பிரச்சனை தோன்றிய போது ஏற்பட்டது. ஸ்பெயினில் ஏற்பட்ட ஒரு புரட்சிக்குப்பின் இராணி இஸபெல்லா வெளியேற்றப்பட்டு பிரஷ்ய மன்னரின் உறவினரான இளவரசர் லியோபால்டிற்கு அரியணை வழங்கப்பட்டது. இந்நகர்வால் பிரான்ஸ் கொந்தளித்தது. போர்ச்சூழல் உருவானபோது இளவரசர் லியோபால்ட் அரியணையை ஏற்க மறுத்தார். இதனால் பிஸ்மார்க் ஏமாற்றமடைந்தார்

மற்றொரு வாய்ப்பு பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சரான கிரமான்ட் பிரஷ்ய மன்னரை எம்ஸ் நகரில் சந்தித்த சந்தர்ப்பத்தில் உருவானது. அமைச்சர் பிரஷ்யாவை ஸ்பானிய அரியணைக்கு எப்போதும் உரிமை கோராது என்ற வாக்குறுதியை ஏற்குமாறு பணித்தார். இது குறித்து பிரஷ்ய மன்னர் பிஸ்மார்கிற்கு தந்தி அனுப்பினார். அதை பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் அமைச்சர் சிறுமைப்படுத்தப்பட்டார் என்று கருதவும், பிரஷ்யர்கள் தங்கள் மன்னர் மதிக்கப்படவில்லை என்று நினைக்கவும் தக்கபடி பிஸ்மார்க் மாற்றியமைத்தார். இதனால் எம்ஸ் தந்தி பிராங்கோ பிரஷ்யப் போர் தோன்ற வழிவகுத்தது.


பிரான்ஸ் நாடானது பிரஷ்யா மீது போர்ப்பிரகடனம் செய்தது. செடானில் நடந்த போரில் (1870 செப்டம்பர் 2) பிரான்ஸ் தோல்வியடைந்தது. பிரெஞ்சு மன்னரான மூன்றாம் நெப்போலியன் சரணடைந்தார். எனினும், பிஸ்மார்க் பாரிஸ் வரை சென்று அதைக் கைப்பற்றினார். போர் 1871இல் ஏற்படுத்தப்பட்ட பிராங்க்பர்ட் உடன்படிக்கையின் வாயிலாக முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. பிஸ்மார்க் கடுமையான பல சரத்துக்களை பிரான்சின் மீது திணித்தார். அல்சேஸ் - லொரைன் பகுதிகளை விட்டுக்கொடுக்க நேர்ந்த பிரான்ஸ் பெருந்தொகையைப் போர் இழப்பீடாகவும் கொடுக்கும்படி ஆயிற்று. வெர்செய்ல்ஸ் அரண்மனையில் பிரஷ்ய மன்னர் முதலாம் வில்லியம் வடக்கு ஜெர்மானிய கூட்டமைப்பிற்கும், தெற்கத்திய ஜெர்மானிய மாகாணங்களுக்கும் மன்னராக அறிவிக்கப்பட்டார். இவ்வாறு இராஜதந்திர உத்திகளையும், போர் நடவடிக்கைகளையும் கொண்டு ஜெர்மானிய ஒருங்கிணைவு சாத்தியப்படுத்தப்பட்டது.

 

பிரான்சில் மூன்றாம் குடியரசு உருவாக்கம்

செடானில் நடந்த போருக்குப்பின் நெப்போலியன் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக பாரிஸ் நகரத்தின் குடியரசுவாதிகள் சிலரால் அவரது அரசுகவிழ்க்கப்பட்டது. புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் வரை நாட்டை ஆளும் பொறுப்பு தற்காலிக அரசிடம் விடப்பட்டது. தேசிய சட்டவரைவு மன்றத்திற்கான தேர்தல்கள் பிப்ரவரி 1871இல் நடத்தப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் முடியாட்சியின் ஆதரவாளர்களாகத் திகழ்ந்தார்கள். இதனால் பிரெஞ்சு மக்கள் மன்னராட்சியை விரும்பினார்கள் என்று கொள்வதைவிட அவர்கள் அமைதியை நேசித்தார்கள் என்பதே சரியாகும். மன்னராட்சி ஆதரவாளர்களும் ஒத்த கருத்துடையவர்களாக விளங்கவில்லை என்பதால் நான்கு ஆண்டுகள் வீணடிக்கப்பட்டு எத்தகைய அரசு பதவியேற்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையே தொடர்ந்து கொண்டிருந்தது. இறுதியாக, ஜனவரி 1875இல் தேசிய மன்றம் கூடி மக்களாட்சியை நிறுவுவதாக முடிவு செய்யப்பட்டது. இதுவே பிரான்சில் மூன்றாம் குடியரசு உருவாக வழிவகுத்தது.

 

பாரிஸ் கம்யூன், 1871

பெருந்தொகையைப் பெற எண்ணியும், அல்சேஸ் மற்றும் லொரைன் பகுதிகளைத் தனதாக்கிக்கொள்ள முடிவெடுத்தும் பிரஷ்யப் படைகள் பாரிஸ் நகரை முற்றுகையிட்டன. கடுமையான நெருக்கடியின் கீழ் பசிபட்டினியோடும், குளிருக்கு இதமூட்டக்கூடிய அடுப்பிற்கு விறகு கொண்டுவர முடியாமலும் பிரெஞ்சு மக்கள் ஐந்து மாதங்கள் வரை முற்றுகையைத் தாக்குப்பிடித்தார்கள். கடும் விலைவாசி ஏற்றத்தால் பணியாளர்களும், கைவினைஞர்களும் அவர்தம் குடும்பங்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். தேசியமன்றத்தில் பெரும்பான்மையாக மன்னராட்சி ஆதரவாளர்கள் வீற்றிருந்தமை பாரிஸ் நகர மக்கள் மனதைக் கசப்படையச்செய்தது. மேலும் தலைமைக்கு தையர்ஸ் என்ற 71 வயது மனிதரை நியமித்தமை குடியரசின்மீது மக்களை ஏமாற்றங் கொள்ளச் செய்தது. பாரிஸ் மீண்டும் ஆயுதமேந்தியது. முறையான இராணுவம் பிரஷ்யாவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் கலைத்து விடப்பட்டமையால் பாரிசின் மக்களே ஆயுதமேந்தலானார்கள். தேசியப் பாதுகாவலர்கள் (National Guard) என்ற உழைக்கும் வர்க்கத்தின் சிறப்பான ஓர் அமைப்போடு இணைந்து அவர்கள் இராணுவ வீரர்களை சூழ்ந்து கொண்டார்கள். லெக்கோம்ட் என்ற பெயர்கொண்ட இராணுவத் தலைவர்களில் ஒருவர் கூட்டத்தை நோக்கிச் சுட மும்முறை உத்தரவிட்டார். ஆனால் உத்தரவை ஏற்காமல் வீரர்கள் அசையாது நின்றார்கள். கூட்டம் இராணுவவீரர்களை சகோதரர்களாகப் பாவித்து அவர்களின் துணையோடு லெக்கோம்டையும், அவரது அதிகாரிகளையும் கைது செய்தார்கள். அந்நாளில் தையர்சும், அவரது அரசும் தலைநகரைவிட்டு அகன்றார்கள். உலகின் மிகச்சிறந்த நகரங்களில் ஒன்று ஆயுதமேந்திய உழைப்பாளர்களின் வசம் இருந்தது.


அடுமனையில் (Bakery) இரவுப்பணியைத் தடை செய்தும் தொழில் பட்டறைகளோ, தொழிற்சாலைகளோ உரிமையாளரால் மூடப்பட்டிருந்தால் அதனைத் தொழிலாளர்களைக் கொண்டு திறக்கவும் விதவைகளுக்கு ஓய்வூதியம் வழங்கவும் குழந்தைகளுக்குக் கட்டணமில்லாக் கல்வியைக் கொடுக்கவும் முற்றுகை காலத்தில் வாங்கப்பட்ட கடன்களை வசூலிக்கவிடாமல் தடுத்தும் கம்யூன் நடவடிக்கையில் இறங்கியது. இதற்கிடையே மக்களாட்சியின் அரசு கம்யூனை ஒடுக்க ஆயுதப்படையை முடுக்கியது. அது போர்க்கைதிகளை விடுவிக்க பிஸ்மார்க்கை வலியுறுத்தி வெற்றி கண்டது. வெர்செய்ல்ஸ் நகரில் விடுவிக்கப்பட்ட போர்க்கைதிகளோடு புதிதாக கிராமப்புறங்களில் இருந்து பணியமர்த்தப்பட்ட வீரர்களை இணைத்தார்கள். தேசியப் பாதுகாவலர் அமைப்பிலும், கம்யூனிலும் பிளாங்குவிஸ்டுகளும், பிரௌதனிஸ்டுகளுமே அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். மார்க்சால் பாரிசின் நிகழ்வுகள் மீது தாக்கம் செலுத்த முடியவில்லை . சிறிது காலத்தில் கம்யூன் தையர்ஸால் வீழ்த்தப்பட்டது. அதன்பின் கட்டுக்கடங்காத வன்முறை நிகழ்வுகள் அரங்கேறின. கம்யூனுக்காக முன்னின்றோர் யாவரும் விசாரணையில்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ரோந்துப்பணியில் ஈடுபட்ட படைகள் ஏழை மக்களை இரக்கமின்றி கொன்று குவித்தது. இவ்வன்முறைச் சம்பவங்களில் 20,000 முதல் 30,000 நபர்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. கம்யூனின் உறுப்பினர்களாக இருந்த 40,000 நபர்களில் 5,000 நபர்கள் நாடுகடத்தப்பட்டும், 5,000 நபர்கள் சிறையிலடைக்கப்பட்டும் தண்டிக்கப்பட்டார்கள்.

கம்யூனைப்பற்றிக் குறிப்பிடும் மார்க்ஸ் இவ்வாறு மொழிகிறார். அது முதலாளித்துவத்தின் புதிய உலகம் அதுவரை சந்தித்திராத பெரும் சவால்களை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு அதற்கு எதிராக உருவான வர்க்கத்திற்குப் பெரும் உந்துசக்தியாகவும் விளங்குகிறது.

 

நீண்டகால பெருமந்தம் (1873-1896)

உலகம் அதுவரை காணாத பொருளாதாரப் பாய்ச்சலை 1865 முதல் 1873 வரையிலான காலத்தில் கண்டது. ஜெர்மனியின் ஒருங்கிணைவு 1870 முதல் 1873 வரையிலான காலத்தில் பெரும் பொருளாதார ஏற்றத்திற்கு வழிவகுத்தது. இக்காலத்தில் 857 புது வர்த்தக நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஜெர்மானிய வரலாற்றில் இணையற்ற வளர்ச்சியாக அது கருதப்பட்டது. இருப்புப்பாதைப் போக்குவரத்து 1865 முதல் 1875 வரையான காலத்திற்கிடையே ஏறக்குறைய இரட்டிப்பானது. பல்லாயிரம் ஜெர்மானியர்கள் தங்களின் தேசப்பற்றை வெளிக்காட்டவும், ஜெர்மானியப் பேரரசின் மீதுகொண்ட நம்பிக்கையைப் பறை சாற்றவும் முதன்முறையாகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்தனர்.

உள்நாட்டுப்போரின் முடிவில் அமெரிக்க ஐக்கிய நாடும் பெரிய வியாபார நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வகையிலும், வேளாண்மையில் சிறப்பான வளர்ச்சியை ஏற்படுத்திய வகையிலும், தேசந்தழுவிய தொழிற்சங்கங்களின் தோற்றத்தாலும் பல பொருளாதார மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தது. அந்நாட்டில் 1870 முதல் 1900 வரையான காலத்தை போலியான பொருளாதார பகட்டுக் காலம் (Gilded Age) என்றே குறிப்பிடுகின்றனர். தொழில்மயத்தின் அதிவேகப் பரவலால் கூலியும் மெய்யாகவே அதிகரித்து 1860 முதல் 1890 வரையான காலத்திற்குள் 60 விழுக்காடு வளர்ச்சியைக் காட்டியது. ஓர் ஆண்டின் கூலி ஒரு தொழிலாளிக்கு (ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட்ட அனைவரையும் உள்ளடக்கியது) சராசரியாக $380 ஆக 1880இல் இருந்து $564 என்ற அளவிற்கு 1890இல் ஏறியிருந்தது. எனினும் போலியான பொருளாதார பகட்டுக் காலத்தில் லட்சக்கணக்கான ஏழை மக்கள் வறுமை சூழ்ந்த பகுதிகளிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு புலம்பெயர்ந்ததால் வறுமையும், ஏற்றதாழ்வும் அன்றாட சமூக வாழ்வின் அங்கமாகவே இருக்கத்தான் செய்தன. சிலரிடம் மட்டுமே அதிகமான செல்வங்கள் குவிந்து கிடப்பது வெளிப்படையாகவேத் தெரியவும் செய்தது.

அதன்பின் பெருமந்தம் ஏற்பட்டது. வியன்னா பங்குச்சந்தை மே, 1873இல் வீழ்ச்சியுற்றதே அதை சுட்டும் விதமாக அமைந்தது. இப்பெருமந்தம் உலகளாவிய ஒன்றாக இருந்து 1896 வரை தொடர்ந்தமையால் நீண்டகாலப் பெருமந்தம் என்று வர்ணிக்கப்படுகிறது. அது ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் மிகக் கடுமையாகப் பாதித்தது. அமெரிக்க இருப்புப்பாதை நிறுவனம் திவாலானது. ஜெர்மானியப் பங்குகளின் மதிப்பு 60 சதவிகிதம் வரை சரிந்தது. விலைகளின் வீழ்ச்சியால் விவசாயமும் பெரும் பாதிப்புக்குள்ளானது. பல்வேறு நாடுகளும் போட்டிச்சூழலைத் தவிர்க்கும் பொருட்டு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது பாதுகாப்புக் கட்டணங்களை விதித்தன.


போலியான பொருளாதார பகட்டுக் காலமாகச் சொல்லப்படும் காலம் உழைக்கும் வர்க்கம் தீவிரமாக ஒன்று திரட்டப்பட்ட சகாப்தம் துவங்கிய காலமுமாகும். சோஷலிசமும், தொழிலாளர் இயக்கங்களும் பல நாடுகளில் பரந்து விரிந்து ஏற்றம் பெறலாயின. தொழில் முதலாளித்துவம் (Industrial Capitalism) அமெரிக்க ஐக்கிய நாட்டில் உச்சத்திலிருந்த காலத்தில் சராசரியாக ஆண்டுக்கு 100,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். உதாரணமாக 1892இல் 164,000 தொழிலாளர்கள் 1,298 வேலைநிறுத்தப் போராட்டங்களில் அந்நாடு முழுவதும் கலந்து கொண்டார்கள். தொழிலாளர்களின் ஊதியம், வேலை நேரம், பணிச்சூழல் போன்றவற்றை நெறிப்படுத்தித் தொழிலாளர் நலன் காக்கும் முனைப்போடு பல தொழிற்சங்கங்கள் தோன்றின.

தொழிற்சங்கங்களின் எழுச்சியோடு இசைந்து செல்லமுடியாத முதலாளிகள் தொழிலாளர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். சோஷலிசவாதிகள் துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்கள். கார்னேஜி எஃகு வர்த்தக நிறுவனத்திற்கு (Carnegie Steel Company) சொந்தமான ஹோம்ஸ்டெட் எஃகு பட்டறையில் (Homestead Steel Works) 1892இல் நடந்த போராட்டம் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்த தொழிலாளர்களுக்கும், கம்பெனியால் பணிக்கப்பட்ட நபர்களுக்கும் துப்பாக்கிச்சண்டை வரை போனது. அரசு வர்த்தக நிறுவனத்தை ஆதரித்ததால் எஃகு நிறுவனத் தொழிலாளர்கள் சரிவை எதிர்கொண்டார்கள். இதுபோலவே 1894இல் அமெரிக்க இருப்புப்பாதை பங்கு பெற்ற புல்மேன் வேலைநிறுத்தப் போராட்டம் ஆயுதமேந்திய காவலரையும் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட பிங்கர்டன் தனியார் உளவு நிறுவனத்தாரையும் கொண்டு நிர்வாகத்தால் ஒடுக்கப்பட்டது.


ஜெர்மனியில் சோஷலிச ஜனநாயக கட்சி (Socialist Democratic Party) மக்கள் செல்வாக்குடன் ஏற்றம் பெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் சோஷலிசத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் முகமாக பிஸ்மார்க் சோஷலிச-விரோத சட்டங்களை அறிமுகப்படுத்தினார். பிஸ்மார்க்கின் இச்சட்டங்களையும் கடந்து சோஷலிச கட்சி மக்களின் ஆதரவைப்பெற்று வளர்ச்சியடைந்தன. சோஷலிச் தொழிற்சங்கங்களும், சோஷலிச ஜனநாயக கட்சியும் சோஷலிச் - விரோத சட்டங்கள் 1890களுக்குப்பின் ரத்துசெய்யப்பட்டபோது தடையில்லாமல் செயலாற்ற முடிந்தது. ரெய்க்ஸ்டாகில் (Reichstag) 1887இல் 3 சதவிகிதமாக இருந்த சோஷலிச ஜனநாயக கட்சியின் இருப்பு 1903 வாக்கில் 20 சதவீதமாக முன்னேறியது.

பிரிட்டனில் 1880ஆம் ஆண்டு, பிரையாண்ட் மற்றும் மே தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பெண்களாலும், பதின்பருவ சிறுமிகளாலும் நடத்தப்பட்டு புகழடைந்த மகளிர் தீப்பெட்டி தொழிலாளர் போராட்டம் வெற்றியடைந்தது. லண்டனின் துறைமுகத்தில் 1889ஆம் ஆண்டு கப்பல் செப்பனிடும் பட்டறை (dockyard) தொழிலாளர் போராட்டம் வெடித்தது. கார்டினல் மேனிங் போராளிகளின் சார்பில் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் 1890களில், அமெரிக்க ஐக்கிய நாட்டைப் போன்றே, பிரிட்டிஷ் முதலாளிகள் தொழில்முறைப் போராட்ட ஒழிப்பாளர்களைக் கொண்டு புதிய சங்கங்களை ஒடுக்கியதோடு, தொழிலாளர்களைப் பட்டினியில் நசித்தும், தாமாக முன்வந்து தொழிற்சாலையை மூடியும் அவர்களை பீதியடைய வைத்திருந்தார்கள். 


Tags : Europe in Turmoil | History ஐரோப்பாவில் அமைதியின்மை - வரலாறு.
12th History : Chapter 12 : Europe in Turmoil : Rise of Socialist Ideas and Birth of Communism Europe in Turmoil | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 12 : ஐரோப்பாவில் அமைதியின்மை : சோஷலிச சிந்தனையின் எழுச்சியும், பொதுவுடைமை சிந்தனையின் பிறப்பும் - ஐரோப்பாவில் அமைதியின்மை - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 12 : ஐரோப்பாவில் அமைதியின்மை