வரலாறு - ஐரோப்பாவில் அமைதியின்மை | 12th History : Chapter 12 : Europe in Turmoil
கற்றலின் நோக்கங்கள்
கீழ்க்காணும் அம்சங்களோடு அறிமுகமாதல்
•சமதர்ம (சோஷலிசம்) சிந்தனையின் எழுச்சியையும், பொதுவுடைமை (கம்யூனிசம்)
கருத்துகளின் தோற்றத்தையும் அறிதல்
•இங்கிலாந்தின் மக்கள் உரிமை சாசன இயக்கத்தைப் பற்றி தெளிதல்
•பிரான்சில் நிகழ்ந்த ஜூலை (1830) மற்றும் பிப்ரவரி (1848) புரட்சிகளின்
முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளல்
•மாஸினி, கவூர், கரிபால்டி போன்றவர்கள் இத்தாலிய ஒருங்கிணைப்பிற்காக
ஆற்றிய பங்களிப்பை உணர்ந்து கொள்ளல்
•ஜெர்மனியின் ஐக்கியத்தை நிறுவ பிஸ்மார்க் மேற்கொண்ட 'இரத்தமும்
இரும்பும்' கொள்கையைப் புரிந்து தெளிதல்
•ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் 1873 முதல் 1896 வரையுள்ள காலத்தில்
ஏற்பட்ட நீண்ட பெருமந்தத்தையும் அதன் விளைவுகளையும் அறிதல்
அறிமுகம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில்
நடந்த பல முன்னேற்ற நிகழ்வுகள் ஐரோப்பிய கண்டம் முழுதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆஸ்திரியா, ரஷ்யா, பிரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையே புனிதகூட்டணியை உருவாக்கி
அதன் மூலம் ஐரோப்பாவில் எழுந்த மக்களாட்சி உணர்வையும், தேசியவாதப் போக்கையும் ஒடுக்க
முனைந்த ஆஸ்திரிய - ஹங்கேரியின் பிரதம அமைச்சர் கிளெமென்ஸ் வான் மெட்டர்னிக்கின் வரலாற்று
சிறப்புமிக்க கூற்றானது: "பிரான்ஸ் தும்மினால், ஐரோப்பாவிற்கு ஜலதோஷம் பிடிக்கும்.
அவ்வாறாயின் பிரான்சில் மும்முறை புரட்சி வெடித்த ஆண்டுகளான 1789, 1830, மற்றும்
1848களில் பிரான்ஸ் தும்மியதாகவே கருத்தில் கொள்ள வேண்டும். சுதந்திர சிந்தனையின் தோற்றுவாயிலாக
1789இல் நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரங்களாக சுதந்திரம், சமத்துவம்,
சகோதரத்துவம் ஆகியவை திகழ்கின்றன. புரட்சி வெளிப்படுத்திய சக்தியையும், அது வளர்த்தெடுத்த
சிந்தனைகளையும் புரட்சியின் நிகழ்விலேயே நெப்போலியன் போனபர்ட் உடைத்தெறிந்தார். சில
ஆண்டுகளுக்கு அவரது ஆட்சி வெற்றிகரமான பாதையில் நகர்ந்தது. எனினும் கடல் வெளியில் பிரிட்டிஷாரின்
ஆதிக்கத்தை அவரால் சரிக்க முடியாமலேயே போனதால், 1805இல் அவரது கடற்படை மோசமான தோல்வியைச்
சந்தித்தது. ஸ்பெயின் நாடு 1808இல் நெப்போலியனுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்ததோடு, வெலிங்டன்
தலைமையிலான பிரிட்டிஷ் படைப்பிரிவு ஒன்று பிரெஞ்சுப்படைகளை அத்தீபகற்பத்திலிருந்து
வெளியேற்றியது. நெப்போலியன் 600,000 வீரர்களைக் கொண்ட பெரும்படைப்பிரிவுடன் 1812இல்
ரஷ்யா மீது போர் தொடுத்து கடுமையான சரிவை எதிர்கொண்டார். நெப்போலியன் பட்டம் துறந்து
(1814) எல்பாவிற்கு நாடு கடத்தப்பட்டாலும், கடைசி முயற்சியாக 1815 இல் மீண்டும் பிரான்சிற்கு
திரும்பி அதிகாரத்தை மீட்க முயன்றார். ஆனாலும் அவர் பெல்ஜியத்தில் அமையப்பெற்ற வாட்டர்லூவில்
பிரிட்டிஷ், பெல்ஜிய மற்றும் பிரஷ்ய கூட்டுப்படைகளால் தோற்கடிக்கப்பட்டார். இறுதியாக
மேற்கு அட்லாண்டிக்கில் வெகுதொலைவில் அமைந்திருந்த செயின்ட் ஹெலனா தீவில் தனிமையில்
சிறைவைக்கப்பட்ட நெப்போலியன் 1821இல் அங்கேயே இறந்தார்.
நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின்வந்த நாற்பதாண்டுகளில்
நிலையற்ற ஒரு அமைதியே நிலவியது. 1854 முதல் 1871 வரையான காலத்தில் போர் மூண்டெழ இரு
காரணிகள் வழியமைத்துக் கொடுத்தன. முதலாவதாக சொல்லப்படுவது மன்னராட்சி மீண்டமைந்ததும்
புரட்சிக்காலத்தில் ஒழிக்கப்பட்ட நியாயமற்ற சலுகைகள் மீண்டும் தலைதூக்கியதுமாகும்.
பழைய நிலைக்குத் திரும்பியவுடன் கடந்தகாலம் புகட்டியப் பாடங்களை மறந்து ஆட்சியாளர்கள்
மீண்டும் சர்வாதிகாரத்தை நோக்கிய இலக்குகளை முன்வைக்கலாயினர். இரண்டாவதாக வியன்னா காங்கிரசில்
பங்கெடுத்த இராஜதந்திரிகள் தேசம்சார்ந்த கோட்பாடுகளைப் புறந்தள்ளி பின்பற்ற முடியாத
பூகோள எல்லைகளை நிர்ணயித்திருந்ததுமாகும்.
மெட்டர்னிக்கின் தலைமையில் செயலாற்றிக் கொண்டிருந்த
முடியரசை ஆதரிக்கும் முன்னேற்றம் விரும்பா பழமைவாத சக்திகள் ஐரோப்பிய இணைவின்
(Concert of Europe) வாயிலாக கொடுங்கோன்மை முறையை கையாளத்துவங்கின. சுதந்திர இயக்கங்கள்
கடுமையாக ஒடுக்கப்பட்டன. வெளிநாடுகளின் துணைகொண்டு மக்களின் எழுச்சி ஒடுக்கப்பட்ட வகையில்
நேப்பிள்ஸில் (1820) ஆஸ்திரியப் படைகளைக் கொண்டும், ஸ்பெயினில் (1822) பிரான்சின் படைகளைக்
கொண்டும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஐரோப்பாவின் ஒரு நாட்டில் கூட சொற்ப
சுதந்திரத்திற்கான இடம் இருக்கவில்லை .
ஆனபோதிலும் அமெரிக்கப் புரட்சியும், பிரெஞ்சுப்
புரட்சியும் மக்களாட்சி பற்றியும், அரசியல் சுதந்திரம் பற்றியுமான கருத்துக்களை செழுமைப்படுத்தியதில்
அவை வெகுவாக அறியப்பட்டு, விடுதலை வேட்கைமிக்க சிந்தனையாளர்களால் ஆதரிக்கப்படலாயின.
முற்போக்கு சிந்தனையாளர்களும் தாராளமயக் கோட்பாட்டாளர்களும் மக்களாட்சியின் நற்தன்மை
மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்ததோடு அதை அடைந்துவிட முயற்சி மேற்கொள்ளலானார்கள்.
ஆனால் மக்களாட்சி வறுமையை ஒழிக்கவும், வர்க்க பேதங்களை நீக்கவும் தெளிந்த தீர்வுகளை
முன்வைக்கவில்லை. ஆக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஐரோப்பா முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியம்,
தேசியவாதம் மற்றும் எல்லை கடந்த தேசியவாதம், செழுமை மற்றும் வறுமை' என பலவற்றின் விநோதமான
கூட்டுக்கலவையாக விளங்கியது.
தொழிற்புரட்சி குடியிருப்போடு இணைந்த தொழில்
முறைக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு தொழிலாளர்களை தொழிற்சாலைகளுக்கருகே குடியமர நிர்ப்பந்தித்தது.
நீண்ட வரிசையிலான குடியிருப்புகள் அவர்களுக்காகக் கட்டப்பட்டன. கூலியோ ஏற்றுக்கொள்ள
முடியாத அளவில் மிகக்குறைவு. வேலை நேரமோ பதினைந்து முதல் பதினெட்டு மணிநேரம் வரை என்று
மிக அதிகமாக அமைந்தது. பெண்களும் குழந்தைகளும் அதிக எண்ணிக்கையில் பணியில் அமர்த்தப்பட்டார்கள்.
தொழிற்சாலைகள் சொற்ப எண்ணிக்கையிலான முதலாளிகளின் உரிமையாக இருந்ததோடு அவற்றின் நோக்கம்
தங்குதடையில்லாமல் லாபம் குவிப்பதாகவே இருந்தது. ஆரம்பகட்டத்தில் ஒருங்கிணைக்கப்படாமலிருந்த
தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளின் கருணையை முழுதும் நம்பி வாழ்ந்தனர். ஒருங்கிணைந்த
அமைப்புமுறையும் ஒற்றுமையும் தொழிலாளர்களிடையே ஏற்படாதவரையில் நிரந்தரமான முன்னேற்றம்
என்பது சாத்தியமில்லை என்று அவர்கள் குறுகிய காலத்திலேயே உணர்ந்தார்கள். ஆகவே அவர்கள்
தொழிற்சங்கங்களை ஏற்படுத்த விழைந்தனர். அவ்வாறு தொழிற்சங்கங்கள் தோன்றிய முதற்கட்டத்தில்
அவற்றை அரசாங்கங்கள் சட்டவிரோதமானவை என்றே அறிவித்தன. இதற்கு முந்தைய பாடத்தில் சொல்லப்பட்ட
முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்கள் பலரும் சிறையிலடைக்கப்படவோ, நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்படுதலுக்கோ
உள்ளானார்கள். எனினும் 1824இல் தொழிற்சங்கங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது. தொழிற்சங்கங்களின்
அபரிமிதமான வளர்ச்சியைத் தொடர்ந்து, முதலாளித்துவத்திற்கு மாற்றானதொருமுறை சிந்தனையளவில்
வலுப்பெற்று அதுவே சோஷலிசமாக வடிவம் கொண்டு நாடுகளைச் சாடவும், தொழிலாளர் நலன் காக்கவும்
எனப் பலருக்கும் வழிகாட்டியது. பிரான்சின் பாரிஸ் கம்யூன் போலவே, இங்கிலாந்தின் தொழிலாளர்
வர்க்கம் மக்கள் உரிமை சாசன (சார்டிஸ்ட்) இயக்கமாக உருவெடுத்து முதலாளித்துவத்திற்கு
பெரும் சவாலாக நின்று போராடியபோது முதலாளிகள் முதலாளித்துவ நாட்டின் துணைகொண்டு தொழிற்சங்கங்களை
ஒடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை உள்ளடக்கிய கூறுகளை இப்பாடம் எடுத்தியம்புகிறது.
ஐரோப்பிய ஒருங்கிணைவு (Concert of Europe): நெப்போலியனின் சகாப்தத்திற்கு பிற்பட்ட காலத்தில் ஐரோப்பாவின் முக்கிய சக்திகளான ஆஸ்திரியா, பிரஷ்யா, ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட இவ்வமைவு ஐரோப்பாவில் ஒழுங்கை நிலை நிறுத்திடவும், அதிகார சமநிலையைக் காத்திடவும் பாடுபட்டது. மெட்டர்னிக்கின் சகாப்தம் (1815 - 1848) என்று சொல்லப்பட்ட காலத்தில், முன்பிருந்த நிலையைப் பாதுகாக்கும் நோக்கத்தை வெளிப்படுத்திக் கொண்ட பெரும் சக்திகள் இவ்விணைவின் உள்நாட்டுக் கலவரத்தால் அச்சுறுத்தப்பட்ட நாடுகளின் விவகாரத்தில் தலையிட்டு இணைவின் ஒட்டுமொத்த முடிவை அந்நாடுகளின் மீது திணித்தது.
நெப்போலியனின் ஆட்சியில் இத்தாலி மூன்று அரசியல்
பிரிவுகளாகப் பகுக்கப்பட்டது. ஒற்றுமையை முன்னோக்கிய இந்நகர்விற்கு 1815இல் நடந்த வியன்னா
காங்கிரசில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. எட்டு மாநிலங்கள் உருவாக்கப்பட்டு வடக்கு
இத்தாலி முழுமையாக ஜெர்மன் மொழி பேசும் ஆஸ்திரியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஜெர்மனியும்
அதுபோலவே 38 மாநிலங்களின் கூட்டமைப்பாக ஏற்படுத்தப்பட்டு ஆஸ்திரியாவின் தலைமையில் டயட்
அமைப்பால் நிர்வகிக்கப்படலானது. ஆயினும் இத்தாலியிலும், ஜெர்மனியிலும் தேசிய உணர்வு
மங்கிவிடவில்லை . இத்தாலியும், ஜெர்மனியும் அவர்களின் எல்லைகளுக்குள் தனியான நாடுகளாக
உருவெடுத்தன.