Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | சேயின் சந்தை விதி

வேலைவாய்ப்பு பற்றிய தொன்மைக் கோட்பாடு - சேயின் சந்தை விதி | 12th Economics : Chapter 3 : Theories of Employment and Income

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 3 : வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்

சேயின் சந்தை விதி

பொருளாதாரத்தில், நிறுவனங்கள் பொருட்களை உற்பத்தி செய்ததற்கு உற்பத்திக்காரணிகளுக்கு ஊதியத்தை அளிக்கப்படுகின்றனது.

வேலைவாய்ப்பு பற்றிய தொன்மைக் கோட்பாடு (Classical Theory of Employment)

வேலை பற்றிய தொன்மைக் கோட்பாடு எந்த ஒரு தனிகோட்பாட்டையும் பெற்று இருக்கவில்லை . நாட்டில் வருமானம் மற்றும் வேலை பற்றி பன்முக பார்வையில் வேலை பற்றிய தொன்மைக் கோட்பாடுகள் இருந்தன. ஆடம் ஸ்மித் என்ற பொருளியல் வல்லுநர் 1776ம் ஆண்டு "நாடுகளின் செல்வம் பற்றிய இயல்பு மற்றும் காரணங்கள் அடங்கிய விசாரணை" என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் டேவிட் ரிக்கார்டோ , J.S. மில், J.B. சே மற்றும் A.C பிகு ஆகியோரால் தொன்மைக் கோட்பாடு வளர்ச்சி பெற்றது.

ஒரு பொருளாதாரம் நீண்டகாலத்தில் பணவீக்கம் இன்றி முழு வேலைநிலையுடன் இயங்கும் என்று தொன்மை பொருளியல் அறிஞர்கள் அனுமானித்தனர். மேலும் பொருளாதாரத்தில் கூலியும் விலையும் நெகிழ்ச்சி உடையதாக இருக்கும் எனவும், சந்தையில் போட்டி நிலவும் எனவும், அரசு தலையிடாக் கொள்கையை (Laissez - faire economy) பின்பற்றும் என்றும் நம்பினர்.



சேயின் சந்தை விதி (Say's Law of Market)


வேலைவாய்ப்பு பற்றிய தொன்மைக் கோட்பாட்டின் முக்கிய அங்கமாக சேயின் சந்தை விதி திகழ்கிறது. பிரென்ச் (French) பொருளியலறிஞரான J.B. சே (1776 - 1832) ஒரு தொழிலதிபர் ஆவர். ஆடம்ஸ்மித் மற்றும் டேவிட் ரிக்கார்டோ போன்றவர்களின் எழுத்துக்களினால் கவரப்பட்டார். J.B. சேயின் கருத்துப்படி, "அளிப்பு அதன் தேவையை தானே உருவாக்கும்" (Supply Creates its own demand). சேயின் கருத்துப்படி, பொருளாதாரத்தில், நிறுவனங்கள் பொருட்களை உற்பத்தி செய்ததற்கு உற்பத்திக்காரணிகளுக்கு ஊதியத்தை அளிக்கப்படுகின்றனது. அந்த ஊதியத்தைக் கொண்டு குடும்பங்கள், நிறுவனங்கள் செய்த உற்பத்தி செய்த பொருட்கள் மற்றும் பணிகளை வாங்குகின்றன. ஆகவே ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அதற்கான தேவையை அங்காடி மதிப்பில் தானே உருவாக்கும் என்று J.B. சேகருதினார். ஒரு உழைப்பாளி பெறும் ஊதியத்தை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதால், உற்பத்தி செய்த அனைத்தும் விற்கப்பட்டுவிடும் என்று சேயின் சந்தை விதி கூறுகிறது. சேயின் கருத்துப்படி, ஒரு பொருளதாரத்தில் மொத்த உற்பத்தியும் மொத்த வருவாயும் சமமாக இருக்கும்.

சுருக்கமாக, வேலைவாய்ப்பு பற்றிய தொன்மைக் கோட்பாட்டின்படி "உற்பத்தியின் மூலம் ஒரு நபர் அவர் வருவாயை ஈட்டுகிறார், அது மற்றவர் உற்பத்தி செய்யும் பண்டங்கள் மற்றும் பணிகளை வாங்குவதற்கு செலவிடப்படுகிறது. நாடு முழுவதிலும் மொத்த உற்பத்தி மொத்த வருவாய்க்கு சமமாக இருக்கும்"




சேயின் அங்காடி விதியில் முந்தைய பிந்தைய கருத்துக்கள்

அளிப்பு அதன் தேவையை தானே உருவாக்கும் அல்லது தொகு முதலீடு, தொகு சேமிப்புக்கு சமம் என்ற விதிகள் பிந்தைய கருத்துக்கு உகந்ததாக இருக்கும். இது சாதாரணமாக கணக்கியல் நோக்கிற்கு மட்டும் அமையும். சேயின் அங்காடி விதி, தொகு அளிப்பு அதாவது உற்பத்தியாளர் உற்பத்தி செய்யும் மொத்த உற்பத்தி அதை வாங்குபவரின் தொகு தேவைக்கு சமம் என்பது முந்தைய கருத்துக்கு உகந்ததாகும்.




சேயின் சந்தை விதியின் எடுகோள்கள்

சேயின் சந்தைவிதி கீழ்கண்ட எடுகோள்களை அடிப்படையாக கொண்டுள்ளது.


1. ஒரு தனி வாங்குவோரோ, விற்பவரோ அல்லது உள்ளீடோ பொருளின் விலையை மாற்ற முடியாது.


2. முழு வேலை நிலை நிலவும்.


3. மக்கள் அவர்களின் சுய விருப்பங்களால் உந்தப்படுகிறார்கள். அவர்களின் விருப்பங்கள் பொருளாதார முடிவுகளை நிர்ணயிக்கின்றன.


4. சந்தைச் சக்திகளே அனைத்தையும் நிர்ணயிக்கின்றன. ஒரு பொருளாதாரம் தானே சரிசெய்து கொள்ளும் சூழல் பெற்று முழு வேலைநிலை சமநிலை அடைய அரசின் தலையிடாக் கொள்கை அவசியமாக உள்ளது.


5. உழைப்பு மற்றும் பண்டங்களின் சந்தையில் நிறைவுப்போட்டி நிலவும்.


6. கூலி மற்றும் விலையில் நெகிழ்வுத் தன்மை உண்டு.


7. பரிவர்த்தனைக்கு மட்டுமே பணம் உதவும்.


8. இது நீண்ட கால பகுத்தாய்வை அடிப்படையாக கொண்டது.


9. அதிக உற்பத்திக்கோ வேலையின்மைக்கோ வாய்ப்பில்லை


10. பயன்படுத்தப்படாத வளங்கள் இருந்தால், முழு வேலைவாய்ப்பு வரை அவற்றை பயன்படுத்துவது இலாபகரமாக இருக்கும். உற்பத்திக்காரணிகள் அவற்றின் உற்பத்தித் திறனுக்கேற்ப ஊதியம் பெற விருப்பமுடன் இருப்பார்கள் என்ற நிபந்தனை இவ்விதியில் இருக்கும்.


11. விலைக் கருவி (Price mechanism) தானாக இயங்குவதால் அங்கு அரசின் தலையீடு தேவை இருக்காது.


12. வட்டிவீத நெகிழ்வுத் தன்மை, சேமிப்பிற்கும் முதலீட்டிற்கும் சமநிலையை உருவாக்கும்.



சே - விதியின் விளைவுகள்

1. அதிக உற்பத்திகோ, வேலையின்மைக்கோ வாய்ப்பில்லை.

2. பயன்படுத்தாத வளங்கள் நாட்டில் இருந்தால், முழுவேலை வாய்ப்பு வரை அவற்றை பயன்படுத்துவது இலாபகரமாக இருக்கும். உற்பத்தி காரணிகள் அதன் உற்பத்தி திறனுக்கு இணையாகும் வரை ஏற்றும் கொள்ளும்.

3. விலைக் கருவி தானாக இயங்குவதால் அங்கு அரசின் தலையீடு தேவை இருக்காது.

4. வட்டி வீத நெகிழ்வுத்தன்மை, சேமிப்பிற்கும் முதலீட்டிற்கும் சமநிலையை உருவாக்கும்

5. பரிவர்த்தனைக்கு மட்டுமே பணம் செயல்படும். பணத்தை மக்கள் கையிருப்பாக வைத்திருக்க மாட்டார்கள்.



சேயின் விதி பற்றிய திறனாய்வு (Criticism of Say's Law)

கீழ்கண்டவை J.B. சேயின் சந்தை விதியின் திறனாய்வு ஆகும்.

1. கீன்ஸின் கருத்துப்படி, அளிப்பு அதற்கான தேவையை உருவாக்காது. உற்பத்தி அதிகரிக்கும் அளவிற்கு தேவை அதிகரிக்காவிட்டால் இந்த விதி செயல்படாது.

2. பொருளாதாரத்தில் தானாக சரி செய்து கொள்ளும் அமைப்பு வேலையின்மையைக் குறைக்காது. மூலதனவிகிதத்தை அதிகரித்து வேலையின்மையைக் குறைக்கலாம்.

3. தனிநபர்கள் எதிர்பாராத சூழ்நிலைகளுக்காகவும், வியாபாரிகள் எதிர்கால நடவடிக்கைகளுக்காகவும் பணத்தை இருப்பாக வைத்திருப்பார்கள். ஆகவே பணம் நடுநிலையாக இருக்காது.

4. சேயின் சந்தை விதி, அளிப்பு தன் தேவை தானே உருவாக்கும் என்ற அடிப்படையில் செயல்படுவதால், அதிக உற்பத்திக்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகிறது, ஆனால் கீன்ஸின் கூற்றுப்படி அளவுக்கு அதிகமான உற்பத்திக்கு வாய்ப்பு உள்ளது.

5. முதலாளித்துவ நாடுகளில் குறைவான (Underemployment) உள்ளதால், முழு வேலை வாய்ப்புக்குச் சாத்தியமில்லை என கீன்ஸ் கூறுகிறார்.

6. அளவுக்கு அதிகமான உற்பத்தியும், அதிக வேலையின்மையும் பல முதலாளித்துவ நாடுகளில் காணப்படுவதால் அரசுத் தலையீடு அவசியம் எனக் கீன்ஸ் கருதுகிறார்.


Tags : Classical Theory of Employment வேலைவாய்ப்பு பற்றிய தொன்மைக் கோட்பாடு.
12th Economics : Chapter 3 : Theories of Employment and Income : Say’s Law of Market Classical Theory of Employment in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 3 : வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் : சேயின் சந்தை விதி - வேலைவாய்ப்பு பற்றிய தொன்மைக் கோட்பாடு : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 3 : வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்