நமது சுற்றுச்சூழல் | பருவம் 3 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - திடக்கழிவு மேலாண்மை | 6th Science : Term 3 Unit 4 : Our Environment
திடக்கழிவு மேலாண்மை
கழிவுகள் உருவாதலைக் குறைத்து, சுற்றுச்சூழல் மாசுபடுதலைத் தவிர்ப்பது
நம் அனைவரின் கடமையாகும். பயன்பாட்டைக் குறைத்தல் (Reduce), மீண்டும் பயன்படுத்துதல்
செய்தல் (Recycle) (Reuse), மறுசுழற்சி ஆகியவை சுற்றுச்சூழலைக் காக்கும் முக்கிய மூன்று
வழிமுறைகள் ஆகும். இவற்றை நாம் 3R என்று அழைக்கிறோம்.
திடக்கழிவு மேலாண்மைப் பிரமிடு எவ்வாறு சிறந்த முறையில் திடக்கழிவுகளைக்
கையாளலாம் என நமக்குச் சுட்டிக்காட்டுகிறது
1. தவிர்த்தல்
தேவையற்ற பொருள்களையும், அதிகம் குப்பைகளை உருவாக்கும் பொருள்களையும்
பயன்படுத்துதலையும், வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பொருளையும் வாங்குவதற்குமுன்
இது நமக்கு அவசியம் தானா?எனசிந்தித்து வாங்க வேண்டும்.(எ.கா) பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட
உணவு வகைகளை தவிர்த்தல். ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப்பொருள்களை வாங்க
மறுத்தல்.
2. பயன்பாட்டைக்
குறைத்தல்
அதிகமான கழிவுகளை ஏற்படுத்தும் எந்தப் பொருள்களையும் பயன்படுத்தாமல்
நீண்ட காலத்திற்குப் பயன்படும் தரமான பொருள்களைத்
தேர்ந்தெடுத்து, அவற்றைத் தேவையான அளவிற்குப் பயன்படுத்துவதன் மூலம் நாம் கழிவுகளைக்
குறைக்க முடியும். (எ.கா) காகிதத்தின் இருபுறமும் எழுதுதல், தேவையற்ற அச்சிடுதலைக்
குறைத்து, மின்னணு வசதிகளைப் பயன்படுத்துதல். செய்தித்தாள்கள் மற்றும் வார இதழ்கள்
மற்றும் வாய்ப்புள்ள பிற பொருள்களைப் பிறருடன் பகிர்ந்து பயன்படுத்துதல்.
3. மீண்டும் பயன்படுத்துதல்
ஒருமுறை பயன்படுத்திய பின்னர் வீணாகப் போகும் பொருள்களுக்குப்
பதிலாக மீண்டும் மீண்டும் பயன்படும் பொருள்களைப் பயன்படுத்துதலே மீண்டும் பயன்படுத்துதல்
ஆகும்.
(எ.கா) ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப்பைகள், பேனாக்கள்,
மின்கலன்களுக்குப் பதிலாக, துணிப்பைகள், மைநிரப்பும் பேனாக்கள், மின்னேற்றம் செய்து
பயன்படுத்தக் கூடிய மின்கலன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துதல். காலணிகளில் பழுது ஏற்பட்டால்
சரிசெய்து பயன்படுத்துதல்
4. மறுசுழற்சி
கழிவுகளிலிருந்து பயன்தரத்தக்க பொருள்களைப் பிரித்தெடுத்து மீண்டும்
பயன்படுத்துவதற்கு மறுசுழற்சி என்று பெயர்.
(எ.கா) பழைய துணிகளை காகிதத் தயாரிப்பில் பயன்படுத்துதல். சிலவகை
நெகிழிகளை உருக்கி நடைபாதை விரிப்புகள், நெகிழி அட்டைகள், நீர்பாய்ச்சும் குழாய்கள்
போன்றவை தயாரித்தல்.
5. உரமாக மாற்றுதல்
மட்கும் குப்பைகள் நுண்ணுயிரிகளின் செயல்பாடுகளினால் இயற்கை
உரமாகச் சிதைவுறும் நிகழ்ச்சி உரமாதல் எனப்படும். இவ்வாறு குப்பைகளிலிருந்து பெறப்படும்
உரம் தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்பட்டு மண்வளத்தை அதிகரிக்கச் செய்கிறது.
6. எரித்துச் சாம்பலாக்குதல்
எரியக் கூடிய திடக்கழிவுகளை அதற்கென வடிவமைக்கப்பட்ட உலைகள்
மூலம் எரித்துச் சாம்பலாக மாற்றலாம். மனித உடல்கழிவுகள், மருத்துவக் கழிவுகள் (தூக்கி
எறியப்படும் மருந்துகள்,நச்சுத்தன்மை கொண்ட மருந்துகள், இரத்தம், சீழ்) போன்றவை இம்முறையில்
அழிக்கப்படுகின்றன. எரிக்கும்போது உருவாகும் அதிக வெப்பம் தொற்று நோய்க்கிருமிகளை அழிக்கிறது.
இந்த வெப்பத்தினைக் கொண்டு மின்சாரமும் தயாரிக்கலாம்.
7. நிலத்தில் நிரப்புதல்
நிலத்தில் காணப்படும் இயற்கைக் குழிகள் அல்லது மனிதனால் தோண்டப்பட்ட
பள்ளங்களில் கழிவுகளை நிரப்பி அதற்கு மேலாக மண்ணைப் பரப்பும் முறைக்கு நிலத்தில் நிரப்புதல்
என்று பெயர். இதிலுள்ள மட்கும் கழிவுகள் சில நாள்களுக்குப் பின் மெதுவாகச் சிதைவுற்று
உரமாக மாறி விடுகின்றன. இவ்வகை நிலங்கள் மீது பூங்காக்கள், தோட்டங்கள் போன்றவற்றை உருவாக்கலாம்.
படைப்பாக்க மறுபயன்பாடு
படைப்பாக்க
மறுபயன்பாடு அல்லது உயர்சுழற்சி என்பது கழிவுப்பொருள்கள் தேவையற்ற பொருள்களை, மற்றும்
சுற்றுச்சூழல் அல்லது உயர்தரமான மதிப்புடைய பொருள்களாக மாற்றிப் பயன்படுத்துதல் ஆகும்.
நாம் ஒரு பொருளை உயர்சுழற்சி செய்யும்போது அதற்கு நாம் வேறு பயன்பாட்டினைத் தருகிறோம்.
(எ.கா) பயன்படுத்திய டயர்களை அமரும் நாற்காலியாக மாற்றுதல். பயன்படுத்திய நெகிழிப்பாட்டில்களை
பேனா தாங்கியாக மாற்றிப் பயன்படுத்துதல்.
பாடப்பகுதியில் ராணி, சுற்றுச்சூழல் மாசுபாட்டை உருவாக்க விரும்பவில்லை
என்பதை அறிந்தோம். தினசரி வாழ்வில், நாம் எடுக்கும் சிறிய முயற்சிகள், சிறிய செயல்பாடுகள்
சுற்றுச்சூழலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கு நாம் இரண்டு படிகளை நினைவில்
வைத்திருக்க வேண்டும்.
1. எப்பொழுதும் கழிவுகளின் உருவாக்கத்தைக் குறைக்க வேண்டும்.
3R மற்றும் பிரமிடையும், அதன் படிநிலைகளையும் நினைத்துப் பார்த்து அதன்படி செய்யவேண்டும்.
2. கழிவுகளைப் பிரித்து வையுங்கள். இக்கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவதாலும்,
மறுசுழற்சி செய்வதாலும் சுற்றுச் சூழல் சுத்தமாகும். பல வகையான கழிவுகளை ஒன்றாகச் சேர்க்கும்போது
அந்த இடமே அசுத்தமாகிறது.
திடக்கழிவு மேலாண்மை விதிகள்
திடக்கழிவு
மேலாண்மை (SWM – Solid Waste Management) விதிகள் 2016 ன் படி,
1. ஒவ்வொரு வீட்டிலும் திடக்கழிவுகளை உயிரினச்சிதைவுக்கு உள்ளாகும்
கழிவுகள், உயிரினச்சிதைவுக்கு உள்ளாகாத கழிவுகள் மற்றும் வீட்டு உபயோக ஆபத்தான கழிவுகள்
என மூன்று பிரிவுகளாகப் பிரித்து, அதற்குரிய குப்பைக் கூடைகளில் வைத்திருந்து, உள்ளாட்சியால்
அங்கீகரிக்கப்பட்ட குப்பை சேகரிப்பவரிடமோ, தூய்மைப்பணி மேற்கொள்பவரிடமோ ஒப்படைக்க வேண்டும்.
2 எவரும் குப்பைகளை, தங்களது வளாகத்திற்கு வெளியே, தெருக்கள்,
திறந்த பொது வெளிகள், சாக்கடைகள் மற்றும் நீர்நிலைகளில் கொட்டவோ, புதைக்கவோ அல்லது
எரிக்கவோ கூடாது.
வீட்டு உபயோக ஆபத்தான கழிவுகள் என்பது, தேவையற்ற பெயிண்ட் ட்ரம்கள்,
பூச்சிக்கொல்லி மருந்து கேன்கள், சி.எப்.எல் பல்புகள், குழல் விளக்குகள், காலாவதியான
மருந்துகள், உடைந்த பாதரச வெப்பநிலைமானிகள், பயன்படுத்திய மின்கலன்கள், பயன்படுத்திய
ஊசிகள் மற்றும் சிரிஞ்சுகள் ஆகியவற்றைக் குறிக்கும்.
உலகளவில் தினந்தோறும் ஒவ்வொரு
மனிதனும் உருவாக்கும் கழிவுகளின் அளவு எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் ஒவ்வொருவரும் உருவாக்கும் கழிவுகளின் சராசரி அளவு 0.45 கிலோ கிராம். இது ஒப்பிடுகையில் குறைவான அளவாக இருந்தாலும், மக்கள் தொகை அதிகமுள்ள இந்திய நாட்டு மக்களினால் உருவாக்கப்படும் மொத்த கழிவுகளைக் கருத்தில் கொண்டால், அவற்றை எத்தனை வண்டிகளில் ஏற்ற வேண்டும்? வண்டிகள் வரிசையாக நிற்கும்
தூரத்தைக் கணக்கிட்டால், அது 2800 கிலோ மீட்டரைத் தாண்டும். இது கன்னியாகுமரியிலிருந்து டெல்லி வரை உள்ள இடைவிடாத தூரத்தைக் குறிக்கிறது. (நடப்பதற்குக் கூட இடமிருக்காது இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்). எனவே இயன்ற வரை கழிவுகளைக் குறைத்தல் அவசியம் ஆகும்.
ஒவ்வொரு
நாளும் 532 மில்லியன் திடக்கழிவுகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
நீங்கள் கழிவுகளை மூன்று வகைகளாக எப்படி பிரிக்கலாம் என்பதை
அறிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் நாம் நம் சுற்றுப்புறத்தைச் சுத்தமாகவும், அழகாகவும்
வைத்துக் கொள்ள முடியும்.
செயல்பாடு 4: மண்புழு உரம்
தயாரித்தல்
உங்கள்
வீட்டின் தோட்டத்தில் அல்லது பள்ளி வளாகத்தின் ஓரத்தில் ஒரு அடி ஆழத்தில் குழி ஒன்றைத்
தோண்டவும். குழியினுள் சிறிதளவு மணலை நிரப்பவும். அதன்மேல் மரத்திலிருந்து உதிர்ந்த
இலைகள், தேவையற்ற காகிதங்கள் மற்றும் சிதைவுறும் கழிவுகளை இட்டு சிறிது நீரை தெளிக்கவும்.
அக்குழியினுள் சில மண்புழுக்களைப் போடவும். பின் அக்குழியின் மீது சாக்கு அல்லது அட்டைப்பெட்டி
கொண்டு மூடவும். அதில் எப்பொழுதும் ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
45
நாள்களுக்குப்பின் அக்குழியினுள் மண்புழு உரம் தயாராக இருக்கும். இந்த உரத்தினை நமது
வீடு அல்லது பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களுக்கு இடலாம். இதில் நீரில் கரையும் சத்துக்கள்
உள்ளன. இந்த உரம் தாவர வளர்ச்சிக்கு உதவுவதுடன் மண்ணின் வளத்தையும் காக்கிறது.