பருவம் 3 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நமது சுற்றுச்சூழல் | 6th Science : Term 3 Unit 4 : Our Environment
அலகு 4
நமது சுற்றுச்சூழல்
கற்றல் நோக்கங்கள்
❖ சூழ்நிலை மண்டலம் பற்றியும், அதன் கூறுகள் பற்றியும் உள்ள அறிவினைப்
பெறுதல் உணவுச் சங்கிலி என்றால் என்ன என்பதையும், அது சூழ்நிலை மண்டலத்தில் என்ன பங்காற்றுகின்றது
என்பதையும் புரிந்து கொள்ளுதல்
❖ கழிவுகளின் மேலாண்மை மற்றும் அதனை மறு சுழற்சி செய்வது எவ்வாறு என்பதையும்
ஆய்ந்தறிந்து கொள்ளுதல்
❖ உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளுக்கும், உயிரினச் சிதைவிற்கு
உள்ளாகாத கழிவுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அறிதல்
❖ மாசுபாடுகளின் வகைகளையும் அவை சுற்றுச்சூழலில் உருவாக்கும் தாக்கத்தையும்
அறிதல்
அறிமுகம்
மனிதர்கள், விலங்குகள் அல்லது தாவரங்கள் வாழக்கூடிய பகுதி மற்றும்
அவற்றைச் சுற்றியுள்ள சூழலை நாம் சுற்றுச்சூழல் என்கிறோம். சுற்றுச் சூழல் என்பது நம்மைச்
சுற்றியிருக்கும் அனைத்தையும் குறிப்பதாகும். அவை உயிருள்ளவையாகவோ அல்லது உயிரற்றவையாகவோ
இருக்கலாம். சூரியன், காற்று, நீர், தாதுப்பொருள்கள் மற்றும் மண் போன்ற காரணிகளுக்கு
உயிரற்ற காரணிகள் என்று பெயர். தாவரங்கள் விலங்குகள் மற்றும் பாக்டீரியா போன்றவைகளுக்கு
உயிருள்ள காரணிகள் என்று பெயர். உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழ்வதோடு, சுற்றுச்சூழலுக்கு
ஏற்பவும் தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன.