முதல் பருவம் அலகு 1 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் | 7th Social Science : History : Term 1 Unit 1 : Sources of Medieval India
வரலாறு
அலகு -1
இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
கற்றலின் நோக்கங்கள்
• இடைக்கால இந்தியாவின் வரலாற்றுக்கான சான்றுகளை அறிந்துகொள்ளுதல்
• கோவில்கள், மசூதிகள், கல்லறைகள், அரண்மனைகள், கோட்டைகள் ஆகிய முக்கியச் சான்றுகளை அறிதல்
• இலக்கியங்கள், பொறிப்புகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல்
• அரேபிய, துருக்கியப் பயணிகளின் பயண நூல்களை அறிந்துகொள்ளுதல்
அறிமுகம்
இந்திய வரலாற்றில் கி.பி. (பொ.ஆ) 700 முதல் 1200 மற்றும் கி.பி. (பொ.ஆ) 1200 முதல் 1700 வரையிலான காலப்பகுதிகள் முறையே தொடக்க இடைக்கால இந்தியவரலாறு என்றும் பின் இடைக்கால இந்திய வரலாறு என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இடைக்கால இந்திய வரலாற்றைக் கற்கும் அறிஞர்களுக்கு நல்வாய்ப்பாக அதிக எண்ணிக்கையிலான பல்வகைப்பட்ட சான்றுகள் கிடைக்கப் பெறுகின்றன. கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள், நினைவுச்சின்னங்கள், நாணயங்கள் ஆகியவை அதிகச் செய்திகளை வழங்குகின்றன. அவற்றுடன் அராபிய, பாரசீக, துருக்கிய வரலாற்றுத் தொகுப்பாளர்களின் பதிவுகள் மேலதிகச் செய்திகளை முன்வைக்கின்றன.
இச்சான்றுகள் பல்வகைப்பட்ட விவரங்களைக் கொண்டுள்ளன. சாதாரண மக்களின் வாழ்நிலை குறித்துக் குறைவான செய்திகளை மட்டுமே முன் வைக்கும் இச்சான்றுகள் அரசர்களின் வாழ்க்கை பற்றி நேரடியான, செறிவான, அதிக எண்ணிக்கையிலான தகவல்களைக் வழங்குகின்றன. அரசர்களின் சாதனைகள் பற்றிய அரசவையைச் சார்ந்தோரின் கருத்துக்களும் வரலாற்று நிகழ்வுத் தொகுப்பாளர்களின் கருத்துக்களும் பெரும்பாலும் ஒருதலைப்பட்சமானதாகவும் மிகைப்படுத்தப்பட்டதாகவும் உயர்வுநவிற்சி மொழி நடையிலுமே அமைந்திருக்கின்றன. இடைக்கால இந்திய வரலாற்றைத் தெரிந்துகொள்ளக் கிடைக்கப்பெறும் பல்வகைப்பட்ட சான்றுகளை நாம் ஆய்வு செய்வோம்.
ஔரங்கசீப்பின் அவைக்கள வரலாற்று அறிஞராக இருந்த காஃபிகானின் புகழ் பெற்ற கூற்று உங்களுக்குத் தெரியுமா? "விசுவாசம் உள்ளவராக இருத்தல், லாப நோக்கம் இன்மை, ஆபத்துக்கு அஞ்சாமை, ஒருதலைபட்சமாக இல்லாதிருத்தல், விருப்பு வெறுப்பின்றி இருத்தல், நண்பருக்கும் அந்நியருக்குமிடையே வேற்றுமை பாராமை, நேர்மையுடன் எழுதுதல் ஆகியவை வரலாற்று ஆசிரியரின் கடமைகள்" என அவர் கூறியுள்ளார்.
சான்றுகள்
கடந்த காலத்தை மறுபதிவு செய்வதற்கு உதவக்கூடிய ஆதாரங்களான ஆவணங்கள் அல்லது பதிவுகளே சான்றுகள் எனப்படும். சான்றுகளின் உதவியுடன் நாம் அரசியல், பொருளாதார, சமூகப் பண்பாட்டு வளர்ச்சி விவரங்களைத் திறனாய்வு செய்கிறோம்.
சான்றுகளை வகைப்படுத்துதல்
முதல்நிலைச் சான்றுகள்
இரண்டாம் நிலைச் சான்றுகள்
முதல்நிலைச் சான்றுகள்:
பொறிப்புகள்,(கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள்), நினைவுச்சின்னங்கள், நாணயங்கள் ஆகியவையும் அவற்றிலிருந்து கிடைக்கப் பெறுகின்ற செய்திகளும் முதல்நிலைச் சான்றுகள் ஆகும்.
இரண்டாம் நிலைச் சான்றுகள்:
இலக்கியங்கள், காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள், பயணக்குறிப்புகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், சுயசரிதைகள் ஆகியன இரண்டாம் நிலைச்சான்றுகள் ஆகும்.
பொறிப்புகள் (Inscriptions)
பொறிப்புகள் என்பன பாறைகள், கற்கள், கோயிற்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மேல் பொறிக்கப்படும் எழுத்துக்களாகும். அரசர் பிறப்பித்த பேராணைகள், அவர் அர்ப்பணித்தவை, கொடுத்த கொடைகள், போர்களில் பெற்ற வெற்றிகளின் நினைவாகவும் போரில் மடிந்த வீரர்களின் நினைவாகவும் எழுப்பப்பட்ட நினைவுச்சின்னங்கள் ஆகியவை அக்காலக் கட்டம் குறித்த பல செய்திகளைத் தம்மகத்தே கொண்டுள்ளன. கொடைகள் வழங்கப்பட்டதைக் குறிக்கும் செப்புப்பட்டயங்கள் சட்டபூர்வமான ஆவணங்களாக ஐயப்பாடுகளுக்கு இடமில்லாத மதிப்பினைக் கொண்டுள்ளன. 13ஆம் நூற்றாண்டு முதலாக இஸ்லாமியப் பாரசீகத்தின் நடைமுறைகளின் காரணமாகவும் செப்புப்பட்டயங்கள் விலை அதிகமாக இருந்ததன் விளைவாகவும் அவற்றுக்கு மாற்றாகக் குறைந்த செலவிலான பனையோலைகளும், காகிதமும் பயன்பாட்டுக்கு வந்தன.
பிற்காலச் சோழர்கள் காலத்தில் (பத்து முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை) வெளியிடப்பட்ட பல செப்புப்பட்டயக் கொடை ஆவணங்களில் இந்து, பௌத்த அல்லது சமண சமயத்தைச் சேர்ந்த தனிப்பட்ட குருமார்களுக்கோ, துறவிகளுக்கோ அல்லது புகழ் பெற்ற மனிதர்களுக்கோ வழங்கப்பட்ட கொடைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் கொடை வழங்கியவர், கொடை பெற்றவர் ஆகியோர் குறித்து விரிவான செய்திகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு முரணாகக் கல்வெட்டுகள் உள்ளடக்கத்தில் மாறுபடுகின்றன. அவற்றில் கொடை வழங்கியவரின் அறச்செயல்களே அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொடை வழங்கியவர் மட்டுமே சிறப்புக் கவனம் பெறுகிறார். முதலாம் ராஜேந்திர சோழனின் திருவாலங்காடு செப்பேடுகளும் சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடுகளும் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாகும். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் எனும் ஊரிலுள்ள கல்வெட்டுகள், கிராமங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டன என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்கின்றன.
சோழ அரசர்களால் வழங்கப்பட்ட பல்வகைப்பட்ட நிலக்கொடைகளைக் கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகிறது அவை:
வேளாண் வகை – பிராமணரல்லாத உடைமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்.
பிரம்மதேயம் - பிராமணர்க்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்.
சாலபோகம் - கல்விநிலையங்களைப் பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள்.
தேவதானம் - கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்.
பள்ளிச் சந்தம் - சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக அளிக்கப்பட்ட நிலங்கள்.
நினைவுச் சின்னங்கள்
கோவில்கள், அரண்மனைகள், மசூதிகள், கல்லறைகள், கோட்டைகள், கோபுரங்கள்,ஸ்தூபிகள் ஆகிய கட்டடங்கள் நினைவுச் சின்னங்கள் எனும் வகையைச் சார்ந்தவையாகும். டெல்லி சுல்தான்கள் புதுவகையான கட்டடக் கலையை அறிமுகம் செய்தனர். வளைவுகள், ஒடுங்கிய வடிவக்கோபுரங்கள், குவிமாடங்கள் ஆகியன அதன் முக்கியக் கூறுகளாகும். இந்த நினைவுச் சின்னங்களிலுள்ள கல்வெட்டுகள் வரலாற்றைக் கட்டமைக்கத் தேவைப்படும் சிறந்த தகவல்களைக் கொண்டுள்ளன. இடைக்காலத்தைச் சேர்ந்த கஜுராகோ (மத்தியப்பிரதேசம்) எனுமிடத்திலுள்ள கோவில்கள், ராஜஸ்தான் மாநிலம், தில்வாரா (அபு குன்று) எனுமிடத்திலுள்ள கோவில்கள், கொனாரக்கில் (ஒடிசா) உள்ள கோவில்கள் ஆகியவை வடஇந்தியாவில் சமயத்தை மையமாகக் கொண்ட பண்பாட்டின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ள சிறந்த சான்றுகளாகும். தஞ்சாவூரிலுள்ள பெரிய கோவில் (பிரகதீஸ்வரர் கோவில்), கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய இடங்களிலுள்ள கோவில்கள் பிற்காலச் சோழர்கள் தமிழ்நாட்டில் கட்டியெழுப்பிய நேர்த்தியான பிரமாண்டமான கட்டடங்களுக்கு அடையாளங்களாகும்.
இவற்றைப் போலவே ஹம்பியிலுள்ள வித்தாலா, விருப்பாக்சா கோவில்கள் விஜயநகர அரசர்களின் (15ஆம் நூற்றாண்டு) பங்களிப்பைப் பறைசாற்றுபவையாகும்.
குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி, மோத்கி-மசூதி, ஜமா மசூதி, பதேப்பூர் சிக்ரி தர்கா (இவையனைத்தும் டெல்லியிலும் அதற்கருகாமையிலும் அமைந்துள்ளன), சார்மினார் (ஹைதராபாத்) ஆகியன இடைக்காலத்தைச் சேர்ந்த முக்கிய மசூதிகளாகும்.
ஆக்ரா கோட்டை, சித்தூர் கோட்டை, குவாலியர் கோட்டை, டெல்லி செங்கோட்டை மேலும் தௌலதாபாத் (ஔரங்காபாத்), பிரோஷ் ஷா கொத்தளம் (டெல்லி) ஆகிய இடங்களிலுள்ள கோட்டைகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஜெய்பூர், ஜெய்சால்மர், ஜோத்பூர் ஆகிய இடங்களிலுள்ள அரண்மனைகள், ராஜபுத்திரர்களின் மேன்மைக்கான அடையாளங்களாகும். குதுப்மினார், அலெய்-தர்வாஷா மற்றும் இல்துமிஷ், பால்பன் ஆகியோரின் கல்லறைகள், அனைத்து முகலாய அரசர்களின் கல்லறைகள் ஆகியவை மதிப்புமிக்க சான்றுகளாக அங்கீகரிக்கப்பட்ட சிறப்புமிக்க கட்டடங்களாகும். வடஇந்தியாவிலுள்ள பாழடைந்த நகரங்களான பிரோஷாபாத், துக்ளகாபாத் ஆகியனவும் தென்னிந்தியாவிலுள்ள ஹம்பியும் இடைக்கால இந்திய வரலாற்றுக்கான சான்றுக் கருவூலங்களாகும்.
நாணயங்கள்
நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள படங்களும் உருவங்களும், அரசர்களுடைய பெயர்கள், பட்டங்கள், அவர்களின் உருவப்படங்கள், நிகழ்வுகள், இடங்களின் பெயர்கள், நாட்கள், அரசவம்சத்தின் பெயர்கள், சின்னங்கள் ஆகியவற்றை நமக்கு உணர்த்துகின்றன. நாணயங்களில் உள்ள உலோகங்களின் கலவை பேரரசின் பொருளாதார நிலை குறித்த செய்திகளை வழங்குகின்றன.
pஅரசர்களின் இராணுவப் படையெடுப்புகள், பிரதேச விரிவாக்கம், வணிகத் தொடர்புகள், சமய நம்பிக்கைகள் போன்றவையும் நாணயங்களில் இடம்பெற்றுள்ளன.
முகமதுகோரி தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்துத் தனது பெயரையும் பொறிக்கச் செய்திருந்தார். இந்நாணயம், இந்தத் தொடக்ககாலத் துருக்கியப் படையெடுப்பாளர் மதவிசயங்களில் தாராளத்தன்மையுடன் நடந்துகொண்டார் என்பதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளையும் உணர்த்துகிறது.
டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்துகொள்ள 'ஜிட்டல் என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகின்றன. இல்துமிஷ் அறிமுகம் செய்த 'டங்கா' எனப்படும் வெள்ளி நாணயங்கள், அலாவுதீன் கில்ஜியின் தங்க நாணயங்கள், முகமது பின் துக்ளக்கின் செப்பு நாணயங்கள் போன்றவை நாணயங்கள் பரவலான பயன்பாட்டில் இருந்ததையும் நாட்டின் பொருளாதார வளம் அல்லது நலிவு ஆகியவற்றைச் சுட்டுவதாகவும் அமைந்துள்ளன.
ஒரு ஜிட்டல் 3.6 வெள்ளி - குன்றிமணிகளைக் கொண்டதாகும். 48 ஜிட்டல்கள் 1 வெள்ளி டங்காவுக்குச் சமமாகும்.
சமய இலக்கியங்கள்
தொடக்கத்தில் தென்னிந்தியாவிலும் பின்னர் வடஇந்தியாவிலும் தோன்றிய பக்தி இயக்கம், பக்தி இலக்கியங்களின் வளர்ச்சிக்கு வழியமைத்தன. சோழர்களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலம் என்று அழைக்கப்படுகின்றது. 'கம்ப ராமாயணம்', சேக்கிழாரின் 'பெரியபுராணம்', பன்னிரு ஆழ்வார்களால் இயற்றப்பட்டு நாதமுனியால் தொகுக்கப்பட்ட 'நாலாயிர திவ்விய பிரபந்தம்', அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பட்டு நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட 'தேவாரம்', மாணிக்கவாசகரின் 'திருவாசகம்' ஆகியவை சோழர்காலப் பக்தி இலக்கியங்களாகும். ஜெயதேவரின் கீதகோவிந்தம் (12 ஆம் நூற்றாண்டு) தென்னிந்திய பக்தி இலக்கிய மரபின் தொடர்ச்சியாகும். பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இறைநிலை உணர்வு பெற்ற கவிஞரான கபீர்தாஸ் பக்தி இயக்கத்தால் கவரப்பெற்றவராவார்.
சமயச் சார்பற்ற இலக்கியங்கள்
கங்காதேவியால் இயற்றப்பட்ட மதுரா விஜயம்', கிருஷ்ணதேவராயரின் 'அமுக்த மால்யதா ஆகிய இலக்கியங்கள் விஜயநகரப் பேரரசுடன் தொடர்புடைய நிகழ்வுகளையும் தனிநபர்களையும் நாம் அறிந்துகொள்ள உதவுகின்றன. சந்த்பார்தையின் 'பிருதிவி ராஜ ராசோ' ராஜபுத்திர அரசர்களின் மனத்துணிச்சலைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. துருக்கியப் படையெடுப்பின்போது நடந்தவை குறித்து இந்தியத் தரப்பிலிருந்து குறிப்புகள் ஏதுமில்லை. இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்து உள்ள ஒரே சான்று கல்ஹணரின் ராஜதரங்கினி' (11ஆம் நூற்றாண்டு) மட்டுமே.
நூல்கள், வாழ்க்கை வரலாறுகள், சுயசரிதைகள்
அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதின் மாமூதுவால் ஆதரிக்கப்பட்ட மின்கஜ் உஸ் சிராஜ் என்பார் 'தபகத்-இ-நஸிரி' எனும் நூலை எழுதினார். இந்நூலின் சுருக்க உரை முகமது கோரியின் படையெடுப்பில் தொடங்கி கி.பி. 1260 வரையிலான நிகழ்வுகள் குறித்த செய்திகளைக் கூறுகின்றன. தன்னை ஆதரித்த சுல்தானின் பெயரையே இச்சுருக்க உரைக்கும், மின்கஜ் உஸ் சிராஜ் சூட்டினார். பதிமூன்றாம் நூற்றாண்டில் சுல்தான் இல்துமிஷின் இறுதிக்காலத்தில் கஜினியிலிருந்து புலம் பெயர்ந்து வந்திருந்த ஹசன் நிஜாமி என்பார் தாஜ்-உல்-மா-அசிர் எனும் நூலை எழுதினார். குத்புதீன் ஐபக் பற்றிய பல செய்திகளை இந்நூல் முன்வைக்கிறது. இந்நூலே டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும், அரசின் இசைவு பெற்ற முதல் நூலாகும். முகமது பின் துக்ளக்கின் அரசவை வரலாற்றாசிரியர் ஜியா - உத் - பரணி தாரிக்-இ-பிரோஷாகி எனும் நூலைப் படைத்தார். இந்நூல் கியாசுதீன் பால்பன் முதல் பிரோஷ்ஷா துக்ளக்கின் தொடக்கக்கால ஆட்சி வரையிலான டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றை விளக்குகிறது. பெரிஷ்டாவின் (16ஆம் நூற்றாண்டு) தாரிக்-இ-பெரிஷ்டா இந்தியாவில் முகலாய ஆட்சியின் எழுச்சி குறித்து விவரிக்கின்றது.
தபகத் - அராபியச் சொல் இதற்கு தலைமுறைகள் அல்லது நூற்றாண்டுகள் என்று பொருள்.
தஜூக் - பாரசீகச் சொல் இதற்கு சுயசரிதை எனப்பொருள்.
தாரிக் அல்லது தாகுயூக் - அராபியச் சொல் இதன் பொருள் வரலாறு என்பதாகும்.
16ஆம் நூற்றாண்டில் பாபரின் 'பாபர் நாமா', அபுல் பாசலின் 'அயினி அக்பரி', 'அக்பர் நாமா' ஆகிய நூல்கள் இவ்விரு பேரரசர்கள் குறித்த முழுமையான விவரங்களை எடுத்துரைக்கின்றன. 17ஆம் நூற்றாண்டில் தனது வாழ்க்கை நினைவுகளாக ஜஹாங்கீர் எழுதிய "தசுக்-இ-ஜாஹாங்கீரி" அக்காலக் கட்ட வரலாற்றின் மீது அதிக வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. பேரரசர்கள் எழுதியுள்ள சுயசரிதை நூல்கள் தவிர நிஜாமுதீன் அகமத் என்பவரால் "தபகத்-இ-அக்பரி" எனும் நூல் எழுதப்பட்டது. அபுல் பாசலின் மிகைப்படுத்திக்கூறும் பாங்கினைக் கொண்ட நூல்களைக் காட்டிலும் இந்நூல் நம்பகத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதைப்போன்று பதானி எழுதிய மற்றொரு நூலான "தாரிக்-இபதானி" (பதானியின் வரலாறு) ஒரு மிகச் சிறந்த நூலாகும். 1595இல் வெளியிடப்பட்ட இந்நூல் மூன்று தொகுதிகளைக் கொண்டுள்ளது. அக்பருடைய ஆட்சியைப் பற்றி பேசுகிற தொகுதி, அவரின் நிர்வாகம் தொடர்பாக, குறிப்பாக மதக்கொள்கை குறித்து, ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக விமர்சன பூர்வமான கருத்துக்களை முன்வைக்கிறது.
பயணிகளும் பயணநூல்களும்
13ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தில் பாண்டிய அரசு வலிமை வாய்ந்த சக்தியாக மாறிக்கொண்டிருந்தபொழுதில் வெனிஸ் நகரைச் சேர்ந்த பயணி மார்கோபோலோ வருகை புரிந்தார். அவர் தமிழகத்தில் காயல் (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ளது) எனும் ஊருக்கு இருமுறை வந்துள்ளார். அக்காலத்தில் காயல் துறைமுகம், அராபியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் வந்த கப்பல்களால் நிரம்பியிருந்த துறைமுகப்பட்டினமாகும். சீனாவிலிருந்து தாம் கப்பலில் வந்ததாய் மார்க்கோபோலோ நம்மிடம் கூறுகிறார். அராபியாவிலிருந்தும் பாரசீகத்திலிருந்தும் ஆயிரக்கணக்கில் குதிரைகள் தென்னிந்தியாவில் கடல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டதாக மார்க்கோபோலோ குறிப்பிடுகின்றார்.
கஜினி மாமூதின் ஒரு படையெடுப்பின்போது அவருடன் அல்-பரூனி (11ஆம் நூற்றாண்டு) இந்தியாவிற்கு வந்து இங்குப் பத்து ஆண்டுகள் தங்கியிருந்தார். கஜினி மாமூதின் சோமநாதபுரப் படையெடுப்பு குறித்தத் துல்லியமான தகவல்கள் இவர் கொடுத்ததாகும். ஒரு கற்றறிந்த அறிஞரான இவர் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்தியாவையும் அதன் மக்களையும் புரிந்துகொள்ள முயன்றார். சமஸ்கிருத மொழியைக் கற்றுக்கொண்ட அவர் இந்தியத் தத்துவங்களையும் கற்றார். "தாகுயூக்-இஹிந்த்" என்ற தனது நூலில் இந்தியாவின் நிலைகளையும் அறிவு முறையினையும், சமூக விதிகளையும், மதத்தையும் குறித்து விவாதித்துள்ளார்.
அரேபியாவில் பிறந்த மொராக்கோ நாட்டு அறிஞரான இபன் பதூதா (14ஆம் நூற்றாண்டு) மொராக்கோவிலிருந்து புறப்பட்டு எகிப்தை கடந்து மத்திய ஆசியா வழியாக இந்தியா வந்தடைந்தார். அவருடைய பயணநூல் (ரிக்ளா [பயணங்கள்]) அவர் பயணம் செய்த நாடுகளையும் மக்களையும் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளது. அவருடைய கருத்தின்படி எகிப்தே செல்வம் கொழித்த நாடாகும். ஏனெனில் மேற்கத்திய நாடுகளுடனான இந்தியாவின் வணிகம் முழுவதும் எகிப்தின் வழியாகவே நடைபெற்றது. இந்தியாவின் சாதி குறித்தும் சதி (உடன்கட்டை ஏறுதல்) பற்றியும் கூறியுள்ளார். வெளிநாட்டுத் துறைமுகங்களில் இந்திய வணிகர்களின் விறுவிறுப்பான வணிக நடவடிக்கைகள் குறித்தும் கடலில் காணப்பட்ட இந்தியக் கப்பல்கள் பற்றியும் நாம் அவரிடமிருந்து தெரிந்துகொள்கிறோம். டெல்லி ஒரு பரந்து விரிந்த, நேர்த்தியான நகரமென்று அவர் விவரிக்கின்றார். இந்நாட்களில் தான் சுல்தான் முகமது பின் துக்ளக் தலைநகரை டெல்லியிலிருந்து தெற்கேயிருந்த தேவகிரிக்கு (தௌலதாபாத்) மாற்றி டெல்லியைப் பொட்டற்காடாக்கினார்.
தென்னிந்தியாவைப் பொறுத்தமட்டிலும் பல அயல்நாட்டுப் பயணிகள் விஜயநகரம் வந்துள்ளனர். அவர்கள் விஜயநகர அரசைப் பற்றிய முழுமையான விவரங்களை எழுதிவைத்துச் சென்றுள்ளனர். நிகோலோ கோண்டி எனும் இத்தாலியப் பயணி 1420இல் விஜயநகர் வந்தார். 1443இல் மத்திய ஆசியாவின் ஹீரட் நகரிலிருந்து (மத்திய ஆசியாவின் மாபெரும் அரசனான செங்கிஸ்கானின் அரசவை இருந்த இடம்) அப்துர் ரஸாக் விஜயநகருக்கு வந்தார். போர்த்துகீசியப் பயணியான டோமிங்கோ பயஸ் 1522இல் இந்நகருக்கு வருகை தந்தார். இவர்கள் அனைவரும் தங்கள் கண்டவற்றை பதிவுசெய்துள்ளனர். அவை விஜயநகரப் பேரரசின் பெரும் சிறப்பை நாம் புரிந்து கொள்ள உதவுகின்றன.
சுருக்கம்
• கி.பி.700 முதல் கி.பி.1200 வரையிலான காலப்பகுதி தொடக்க இடைக்காலமென்றும் கி.பி.1200 முதல் கிபி.1700 வரையிலான காலகட்டம் பின் இடைக்காலமென்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
• சான்றுகள் முதல்நிலைச் சான்றுகள், இரண்டாம் நிலைச்சான்றுகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
• கற்கள், பாறைகள், கோவில் சுவர்கள் ஆகியவற்றின் மீதுள்ள பொறிப்புகள், அரசு ஆணைகளையும் அரசவை நிகழ்வுகளையும் கொண்டுள்ள செப்புப்பட்டயங்கள் ஆகியவை தெளிவான சான்றுகள் ஆகும்.
• தொடக்க இடைக்கால நினைவுச் சின்னங்களான முகலாயர் காலக் கோவில்கள், அரண்மனைகள், மசூதிகள், கோட்டைகள், ஸ்தூபிகள், கோபுரங்கள் , கல்லறைகள் ஆகியவை கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
• இல்துமிஷ், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் நாணயங்கள், பிற்கால முஸ்லீம் அரசர்களின் செப்பு நாணயங்கள் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.
• பக்தி இயக்க சகாப்தத்தைச் சேர்ந்த பக்தி இலக்கியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
• இடைக்கால அரசியல், சமூகப் பொருளாதார நிலைகள் குறித்தத் தகவல்களை வழங்கும் நூல்கள், வாழ்க்கை வரலாறுகள், சுயசரிதைகள் ஆகியன விவரிக்கப்பட்டுள்ளன.
• இந்தியாவிற்கு வந்த பெரும்பாலான அராபிய, பாரசீகப் பயணிகளின் பயண நூல்கள் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.
சொற்களஞ்சியம்
1. வரலாற்றுப் பதிவாளர் - chronicler - a person who writes accounts of important historical events
2. விரோதம், பகைமை - animosity - hostility, antagonism
3. பயணக்குறிப்புகள் – travelogue - a book or illustrated account of the places visited and experiences encountered by a traveller
4. நினைவாக - commemoration - in remembrance of
5. விரிவாக – elaborately - in detail
6. தூபிகள் – minarets - a tall tower, typically part of a mosque
7. களஞ்சியங்கள் – repositories - the places, buildings where materials are stored or kept
8. உருவப்படங்கள் - portraits - pictures , images in drawing or painting
9. தொகுப்பு – compendium - a collection of detailed information about a particular subject , especially in a book
10. சான்றுகளுடன் நிரூபித்தல் – substantiate - to prove with evidence
p
1.Abraham Eraly, The Age of Wrath, New Delhi:Penguin Group, 2014.
2. Burton Stein, A History of India, New Delhi: Oxford University Press, 2004 (Reprint).
3. K.A. Neelankanta Shastri, Cholas. Madras: University of Madras (Reprint).
4. S.K. Singh, History of Medieval India. New Delhi: Axis Books Private Ltd, 2013.
இணையச்செயல்பாடு
இடைக்கால இந்தியா
நாணயங்களைக் கொண்டு இடைக்கால இந்தியாவைப்பற்றி அறிவோமா?
படிநிலைகள்:
படி 1: கீழ்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப் பக்கத்திற்குச் செல்லவும்.
படி 2: மேலே "INDIA" என குறிப்பிடப்பட்டிருக்கும், அதனை தேர்ந்தெடுக்கவும் .
படி 3: பின்பு அதில் கொடுக்கப்பட்டுள்ள DYNASTY யில் எதேனும் ஒரு KINGDOM ஐ தேர்வு செய்யவும்.
படி 4: நாணயங்களை படத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களைக் கொண்டு ஆராய்க.
p
இடைக்கால இந்தியா உரலி:
** படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.
* தேவையெனில் 'Adobe Flash' ஐ அனுமதிக்கவும்.