வரலாறு - பாடச் சுருக்கம் - பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள் | 11th History : Chapter 11 : Later Cholas and Pandyas
பாடச் சுருக்கம்
I சோழர்
•
சோழரின் ஆட்சி விஜயலாய சோழன் (850-871) மூலம் புத்துயிர்ப்பு பெற்று முதலாம் பராந்தக சோழன் (907-955) மூலம் வலிமையூட்டப்பட்டது.
• முதலாம் இராஜராஜன்(985-1014) சோழப் பேரரசை உருவாக்கினார். சோழ அரச மரபுக்குப் பெருமையும் புகழும் சேரும் விதத்தில் தஞ்சாவூரில் பிரகதீசுவரர் (பெருவுடையார்) கோவிலைக் கட்டினார்.
• முதலாம் இராஜேந்திரன் கடல் கடந்த படையெடுப்புகள் மூலம் கடாரம் முதல் ஸ்ரீ விஜயா வரை ஆட்சிப்பகுதியை மேலும் விரிவாக்கினார். அவர் வடஇந்தியா மீது படையெடுத்துச் சென்றதில் கிடைத்த வெற்றிகளின் நினைவாகக் கங்கை கொண்ட சோழபுரத்தில் கோவிலைக் கட்டினார்.
• சோழர் ஏரி, கால்வாய் பாசன அமைப்புகளை உருவாக்கியதால் வேளாண்மையிலும் வணிகத்திலும் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது.
• கோவில்கள் சமூக மையங்களாக மாறியதால் கலை, கல்வி போன்ற செயல்பாடுகளுக்கு ஆதரவு பெருகின.
• அரசர்களால் கட்டப்பட்ட தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய கோவில்கள் கட்டுமானக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, சிலைவடித்தல் ஆகியவற்றில் சோழர் அடைந்திருந்த முழுமையான வளர்ச்சிகளுக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.
• கடல்வழி வணிகம் செழித்தது. சந்தனக்கட்டை, கருங்காலி, சுவையூட்டும் பொருள்கள், விலை உயர்ந்த கற்கள், மிளகு, எண்ணெய், நெல், தானியங்கள், உப்பு ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன. கற்பூரம், செம்பு, தகரம் மற்றும் பாதரசம் போன்றவை முக்கியமான இறக்குமதிப் பொருள்களாகும்
II பாண்டியர்
• களப்பிரர்களுக்குப் பிறகு, பாண்டியர் ஏறத்தாழ பொ.ஆ. 6ஆம் நூற்றாண்டில் தங்கள் அரச மரபை நிறுவினர்.
• சோழரின் வீழ்ச்சிக்குப் பிறகு, 13ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த பாண்டிய அரச மரபின் புத்துயிர்ப்பால் தமிழகம் மீண்டும் ஒளி பெற்றது.
• பாண்டியர் குடவரைக் கோவில்களையும் கட்டமைப்புடன் கூடிய கோவில்களையும் கட்டினார்கள்.
• மார்க்கோ போலோ மற்றும் அரபிய பயணிகள் கூற்றுப்படி, துறைமுக நகரமான காயல் வணிகம், பண்டமாற்று ஆகியவற்றுக்கான மையமாக விளங்கியுள்ளது.