வரலாறு - பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள் | 11th History : Chapter 11 : Later Cholas and Pandyas
பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள்
கற்றல் நோக்கங்கள்
பிற்காலச் சோழர், பாண்டியர் ஆட்சியின்போது நடைபெற்ற கீழ்கண்டவை குறித்து அறிவு பெறுதல் ஆகும்.
I சோழர்
•
சோழ அரசர்களின் சாதனைகள்
• சோழப் பேரரசின் கீழ் ஏற்பட்ட பண்பாட்டு வளர்ச்சி
• நன்கு வளர்ச்சி அடைந்த வேளாண்மைக் கட்டமைப்பு, நீர்ப்பாசன முறை ஆகியவற்றின் தோற்றம்
• இடைக்காலத் தமிழ்ச் சமூகத்தில் கோவில்களின் பங்களிப்பு
• சோழர் காலக் கடல்வழி வணிகம்
II பாண்டியர்
• மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டியரின் எழுச்சி
• மாலிக் காபூரின் படையெடுப்பும் வீழ்ச்சியும்
• அலாவுதீன் கில்ஜியை வரவழைத்த வாரிசுரிமைச் சண்டை
• பாண்டியர் ஆட்சியில் வேளாண்மை , நீர்ப்பாசனம், வணிகம்
• தென் தமிழ்நாட்டில் மதமும் பண்பாடும்
அறிமுகம்
வரலாற்றின் தொடக்க காலத்தில் மூன்று வலிமை வாய்ந்த மரபுவழி அரசர்கள் தமிழகத்தை ஆட்சி செய்தனர். சங்க இலக்கியம் மூவேந்தர்கள் என்று அவர்களைக் குறிப்பிடுகிறது. பல சங்கப் பாடல்கள் சோழ அரசர்களின் மரபு பற்றிக் குறிப்பிடுகின்றன. எனினும், சங்க காலத்திற்குப் பின், பொ.ஆ. 9ஆம் நூற்றாண்டு வரை சோழர் குறித்த சான்றுகளை அறிய முடியவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட அசைவியக்கங்கள் இப்பகுதியில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட வழிவகுத்தன. அம்மாற்றங்கள் முடியாட்சி தோன்றி நிலைத்திருக்கக் காரணமாயின. அவற்றுள் ஒன்றுதான் பிற்காலச் சோழப் பேரரசு ஆகும்.
பிற்காலச் சோழரின் தோற்றத்துக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று வேளாண்மை விரிவாக்கம் ஆகும். இந்த விரிவாக்கம் ஆற்று வடிநிலங்களில் ஏற்பட்டது. இதன்மூலம் வேளாண் உற்பத்தி பன்மடங்கு பெருகியது. இந்த வேளாண் பெருவளர்ச்சி அபரிமிதமான உபரி தானிய உற்பத்திக்கு இட்டுச் சென்றது. ஆனால் இந்த உபரி சமமற்ற செல்வப் பகிர்வுக்கும் காரணமாயிற்று. தொடக்க காலத்தில் இருந்ததைப் போல் அல்லாமல், சமூகம் படிப்படியாகப் பெரிய அளவில் வேறுபாடுகளுக்கு உள்ளானது. இதே காலகட்டத்தில், இந்தியாவின் வட பகுதியிலிருந்து அறிமுகமான மதங்கள், அவை சார்ந்த கோவில்கள் போன்ற நிறுவனங்களும் சிந்தனைப் போக்குகளும் புதிய சக்திகளாக வடிவெடுத்தன. பக்தி இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய நாயன்மார்களும், ஆழ்வார்களும் தமது கருத்தியலை பரப்புரை செய்தனர். இதேபோன்று, வட இந்தியாவில் உருவான அரசியல் சிந்தனைகளும் நிறுவனங்களும் விரைவில் தெற்கில் பரவின. இம்மாற்றங்களின் ஒட்டுமொத்த விளைவாக இங்கு அரசு உருவானது. முடியாட்சிமுறையைக் கொண்ட இவ்வரசுக்குப் பண்டைய சோழ மன்னனின் வழிவந்தவர்களாகத் தங்களை பறைசாற்றிக் கொண்டோர் தலைமையேற்றனர்.
சோழப் பேரரசு
செல்வாக்கு இழந்ததும்,
வைகை ஆற்று
வடிநிலமான மதுரை
பகுதியில் பாண்டியர்
ஆட்சி செய்யத்
தொடங்கினர். பதினான்காம்
நூற்றாண்டுவாக்கில் பாண்டியரின் ஆட்சி வலிமை பெற்றது. சோழர் போலவே பாண்டியர்களும் வேளாண்மை, வணிகம் மூலம் பெரும் வருவாய் ஈட்டினர். இக்கால கட்டத்திலும் கடல் கடந்த வாணிபத்தின் விரிவாக்கம் தொடர்ந்தது. பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்த திருநெல்வேலியிலிருந்து மலபார் கடற்கரைப்பகுதிக்குத் தானியங்களும் பருத்தியும் பருத்தித்துணிகளும் காளைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டன. மேற்கு, தென்கிழக்கு ஆசியா பகுதிகளுடனும் வணிகத் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது. பாண்டிய மன்னர்கள் மத, பண்பாட்டு, அரசியல் கூறுகளைத் தொகுத்து உருவாக்கிய பண்பாட்டு மரபானது குப்த அரசர்கள் செவ்வியல் காலத்தில் உருவாக்கியதாகக் கருதப்படும் ஒற்றைப் பரிமாணப் பண்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.