Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | துணைப்பாடம் : தலைமைப் பண்பு

பருவம் 3 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம் : தலைமைப் பண்பு | 5th Tamil : Term 3 Chapter 1 : Naadu, samugam, arasu, niruvagam

   Posted On :  24.07.2023 04:23 am

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நாடு, சமூகம், அரசு, நிருவாகம்

துணைப்பாடம் : தலைமைப் பண்பு

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நாடு, சமூகம், அரசு, நிருவாகம் : துணைப்பாடம் : தலைமைப் பண்பு | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்று

துணைப்பாடம்

தலைமைப் பண்பு


செந்தூர் என்ற சிற்றூரில் வேம்பன் என்ற ஊர்த்தலைவர் வாழ்ந்து வந்தார். அவ்வூரை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகப் பலரை நாடிச்சென்று பொருளுதவி பெற்றார். பல திட்டங்களைச் செயல்படுத்த திறமையான நிருவாகி ஒருவரை நியமிக்க எண்ணினார். இச்செய்தியை ஊர்மக்களுக்குத் முரசு அறைந்து அறிவித்தார். அவ்வூரைச் சேர்ந்த பாலன், பூவண்ணன் இருவருமே அப்பொறுப்பைத் தம்மிடம் வழங்குமாறு விருப்பம் தெரிவித்தனர். இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று சிந்தித்த தலைவர் ஒரு முடிவிற்கு வந்தார். மக்கள்மீது உண்மையான அன்புகொண்டு, தேவையானவற்றைச் செய்து, சரியான நிருவாகத் திறமை உள்ளவர் யார் என்பதை அறிந்து கொள்வதற்காக அவர்களுக்கு மூன்று போட்டிகள் வைத்தார்.


அவ்விருவரும் போட்டிகளில் கலந்து கொண்டனர். முதல் போட்டி, மக்களுக்குப் பிடித்தவராக இருக்க வேண்டும். போட்டியைப் புரிந்துகொண்ட பாலன், அவ்வூர் மக்களுக்கு அறுசுவை விருந்தளித்தார். மக்கள்மகிழ்ந்தனர். பூவண்ணன் அவ்வூரிலுள்ள திறமைசாலிகள் சிலரைத் தேர்ந்தெடுத்துத் தொழில் சார்ந்த பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்தார்.

இரண்டாவது போட்டியானது, அவ்வூர் மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்த வேண்டும் என்பதாகும். இதற்காகப் பாலன் தம்மிடமிருந்த செல்வங்களைமக்களுக்குப்பிரித்துக் கொடுக்கத் தொடங்கினார். இதனால்,மக்களுக்குப் பாலன்மீது அளவற்ற நம்பிக்கை ஏற்பட்டது. பூவண்ணன் தாம் தேர்ந்தெடுத்த திறமைசாலிகளுக்குக் கல்வியுடன் மற்ற கலைகளையும் சேர்த்துக் கற்றுக் கொடுக்க ஏற்பாடுகளைச் செய்தார். மக்கள், இந்தச் செயல்களைக் கண்டு அவரை ஏளனமாகப் பார்த்தனர். அதனைப் பார்த்த பாலனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

மூன்றாவது போட்டி மக்களிடம் பரிவு காட்டவேண்டும் என்பதாகும். அதனை ஒப்புக்கொண்டு இருவரும் சென்றனர். மறுநாள் பாலன் சிந்தித்துக் கொண்டே நடந்து சென்றார். அவ்வழியில் மூதாட்டி ஒருவர் மரத்தடியில் படுத்திருந்தார். "தம்பி, என்னைத் தூக்கிவிடு, என்னால் எழுந்திருக்க முடியவில்லை" என்றார். "எனக்கு அவசர வேலை இருக்கிறது" என்று கூறிக்கொண்டே பாலன் வேகமாகச் சென்றுவிட்டார். சற்று நேரத்தில் அவ்வழியே வந்த பூவண்ணன், அந்த வயதான மூதாட்டியின் அருகில் சென்று, "என்ன வேண்டும்" என்று கேட்டார். "தம்பி என்னைத் தூக்கிவிடு" என்று அந்த மூதாட்டி கூறினாள். உடனே பூவண்ணன் மூதாட்டியின் அருகில் சென்று, அவரைத் தூக்கி உட்கார வைத்தார். பிறகு, மூதாட்டியின் களைப்பைப் போக்க உணவும் வாங்கிக் கொடுத்தார்.

மறுநாள் ஊர்மக்கள் முன்னிலையில், நிருவாகி பதவி யாருக்கு கிடைக்கப்போகிறது என்பதைஅறிவிக்க ஊர்த்தலைவரால் கூட்டம் கூட்டப்பட்டது. மக்களில்பெரும்பாலனோர் பாலனே நிருவாகி பதவிக்குத் தகுதியானவர் என முணுமுணுத்தனர். பூவண்ணன் அமைதியாக நின்றிருந்தார்.

ஊர்த் தலைவர் இருவரின் செயல்களையும் கேட்டறிந்தார். பாலன், மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கியதையும், தம் செல்வத்தைப் பகிர்ந்து கொடுக்க திட்டமிட்டதையும் கூறினார். மேலும், அனைவருடனும் அன்பாகப் பழகுவதாகவும் கூறினார். அதுமிட்டுமின்றி, தமக்கு அப்பதவி கிடைத்தால் சிறப்பாகச் செயல்படுவேன் என்றும் கூறினார்.

பூவண்ணன், திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்துக் கல்வியுடன் தனியாகத் தொழில் செய்து, பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பயிற்சிகள் கொடுத்திருக்கிறேன் என்று சொன்னார். மேலும், மற்றக்கலைகளையும் கற்றுத்தர ஏற்பாடு செய்திருக்கிறேன் என்றார். இருவரின் கருத்துகளைக் கேட்ட ஊர்த்தலைவர், மக்களின் இப்போதைய தேவைக்குப் பாலனால் வழங்கப்படும் அறுசுவை உணவும் செல்வமும் பயன்படலாம். அதைப் பகிர்ந்து கொடுக்க நினைத்ததில் மகிழ்ச்சி. ஆனால், எதிர்காலத்தேவை, மக்கள் முன்னேற்றம், சமூக முன்னேற்றத்திற்குக் கல்வியறிவு இன்றியமையாதது. அதனால், இந்த நிருவாகிப் பதவிக்கு ஏற்றவர் பூவண்ணனே என்று கூறினார். மக்களிடம் சலசலப்பு ஏற்பட்டது. அவர் கூறியதை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்கினர். அதைப் புரிந்து கொண்ட ஊர்த்தலைவர், "சற்றுப் பொறுத்திருங்கள். இதோ வருகிறேன்" என்று கூறிச் சென்றார். சிறிதுநேரம் கழித்துப் பாலன், பூவண்ணனிடம் உதவி கேட்ட மூதாட்டி தள்ளாடியபடியே மக்கள் கூடியிருக்கும் இடத்திற்கு வந்தார். தட்டுத் தடுமாறிக் கீழே விழப்போன மூதாட்டியைப் பூவண்ணன் விரைந்து சென்று, தாங்கிப் பிடித்தார். எல்லாரும் அவரைப் பார்த்தனர். தடுமாறி விழுந்த மூதாட்டி, தம்முடைய வேடத்தைக் கலைத்தார். அவர் வேறு யாரும் அல்லர்; ஊர்த்தலைவர் வேம்பனே ஆவார்.


மக்களே, நான் பூவண்ணனைச் சிறந்த நிருவாகி என்றபோது, அதை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயங்கினீர்கள். இப்பொழுது உண்மையை உணர்ந்து கொண்டீர்களா? எதிர்காலச் சிந்தனை, சமூகப் பொருளாதார முன்னேற்றம், மக்களிடம் பரிவு காட்டும் தன்மை இவை அனைத்தையும் பெற்றவரே சிறந்த நிருவாகத் திறமை உடையவர் என்றார் ஊர்த்தலைவர். இந்தத் திறமை முழுவதும் பூவண்ணனிடமே உள்ளது. எனவே, அவரே சிறந்த நிருவாகி என்றார். ஊர்த்தலைவரின் முடிவை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்.

Tags : Term 3 Chapter 1 | 5th Tamil பருவம் 3 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ்.
5th Tamil : Term 3 Chapter 1 : Naadu, samugam, arasu, niruvagam : Supplementary: Thalamai Panpu Term 3 Chapter 1 | 5th Tamil in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நாடு, சமூகம், அரசு, நிருவாகம் : துணைப்பாடம் : தலைமைப் பண்பு - பருவம் 3 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : நாடு, சமூகம், அரசு, நிருவாகம்