Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | துணைப்பாடம்: வளரும் செல்வம்

இயல் 1 | 9 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: வளரும் செல்வம் | 9th Tamil : Chapter 1 : Amuthendru ber

   Posted On :  19.08.2023 03:50 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுதென்று பேர்

துணைப்பாடம்: வளரும் செல்வம்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுதென்று பேர் : துணைப்பாடம்: வளரும் செல்வம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழி – க

விரிவானம் 

வளரும் செல்வம்



நுழையும்முன்

சொற்கள் வரலாற்றைப் பேசுபவை. ஒவ்வொரு சொல்லிலும் இனத்தின், மொழியின் வரலாறு இருக்கிறது. தமிழ்ச் சொற்கள்வழி தமிழர் நாகரிகத்தையும் வாழ்வையும் அறியமுடியும். இதேபோலத்  தமிழில் வழங்கும் பிறமொழிச் சொற்களும் அவைசார்ந்த இனத்தின், மொழியின் வரலாற்றைக் காட்டுகின்றன. தமிழ்மொழி, பிறமொழிச் சொற்களை அப்படியே ஏற்பதில்லை என்பது மரபு. அந்த வகையில் கலைச்சொல்லாக்கத்திற்கான பணிகள் இன்று முதன்மை பெற்றுள்ளன. இதுவே மொழி வளர்ச்சிக்கான வாயிலாகவும் உள்ளது. சொற்கள் புலப்படுத்தும் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை உரையாடல்வழிக் காண்போம்.


உரையாடல்

பங்கு பெறுவோர் 

ஆனந்தி, மும்தாஜ், டேவிட்


டேவிட்: ஆனந்தி, தமிழில் முதல்  மதிப்பெண் பெற்றுள்ளாய். என் வாழ்த்துகள்.

ஆனந்தி: நன்றி.

மும்தாஜ்: எனக்கு ஓர் ஐயம். உன்னைக் கேட்கலாமா?

ஆனந்தி: உறுதியாக! கேள் மும்தாஜ்.

மும்தாஜ்: நாமெல்லோரும் மடிக்கணினி ( Laptop) பயன்படுத்துகிறோம். கணினி தொடர்பான சொற்களை அப்படியே ஆங்கிலத்தில் வழங்குகிறோமே? அவற்றுக் கெல்லாம் தமிழ்ச்சொற்கள் உள்ளனவா ஆனந்தி?

ஆனந்தி: அவ்வாறான தமிழ்ச் சொற்கள் இப்போது எங்கும் நிறைந்துள்ளன.

எடுத்துக்காட்டாக

சாப்ட்வேர் [software] - மென்பொருள்

ப்ரௌசர் [browser) - உலவி

க்ராப் [crop] - செதுக்கி

கர்சர் (cursor] - ஏவி அல்லது சுட்டி

சைபர்ஸ்பேஸ் [cyberspace] - இணையவெளி

சர்வர் (server] - வையக விரிவு வலை வழங்கி

ஃபோல்டர் [Folder] - உறை

லேப்டாப் [Laptop] - மடிக்கணினி என்றெல்லாம் பயன்படுத்தத் தொடங்கி விட்டோம்.

டேவிட்: எனக்கும் ஐயம் இருக்கிறது.

ஆனந்தி: சொல் டேவிட்.

டேவிட்: கணிதத்தில் ஒன்று, பத்து, ஆயிரம் ஆகிய எண்ணிக்கைகளுக்கான தமிழ்ச்சொற்கள் எனக்குத் தெரியும். 1/320, 1/160 ஆகிய பின்ன எண்ணிக்கைகளுக்கான தமிழ்ச் சொற்களை எனக்குச் சொல்வாயா?

மும்தாஜ்: சொல். நானும் கேட்கிறேன்.

ஆனந்தி:


போன்ற பின்ன இலக்கங்களுக்கும் தமிழ்ச்சொற்கள் உள்ளன.

டேவிட்: இவையெல்லாம் புழக்கத்தில் இருந்திருந்தால் நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் இல்லையா?

ஆனந்தி: ஆம். நம் முன்னோர்கள் பயன்படுத்திய சொற்களைக் கால மாற்றத்தில் கைவிட்டுவிட்டோம். நாம் நினைத்தால் அவற்றை மீட்டெடுக்கலாம். என்ன சிந்தனை மும்தாஜ்?

மும்தாஜ்: நீ சொல்வதெல்லாம் நன்றாகப் புரிகிறது. இவ்வளவு வளர்ச்சி பெற்ற நாம் ஏன் கணினித்துறைச் சொற்களை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கிறோம்?

ஆனந்தி: நல்ல கேள்வி மும்தாஜ். ஒரு துறை எங்கு வளர்க்கப்படுகிறதோ அங்குள்ள மொழி, அத்துறையில் செல்வாக்குப் பெற்றிருக்கும். அத்துறையைப் பெறுபவர்கள் அது சார்ந்த மொழிக்கூறுகளைத் தம் மொழியில் மாற்ற வேண்டும்.

மும்தாஜ்: ஏன் மாற்ற வேண்டும்?

ஆனந்தி: வேற்று மொழிச்சொற்களை எளிதாக நாம் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அவ்வாறு நினைவில் வைத்துக் கொள்வதற்கு மேலும் நேரத்தைச் செலவிட வேண்டும். நம் சிந்தனை வேகத்தையும் இது மட்டுப்படுத்தும். சொற்கள் அந்தந்த மொழி பேசுவோரின் பேச்சுறுப்புகளுக்கு ஏற்ப அமைந்தவை. அவற்றை நாம் பேசும்போது ஒலித்திரிபு ஏற்பட்டுப் பொருள் மயக்கம் உண்டாகும். கேட்போர்க்குப் பொருள் புரியாத நிலை ஏற்படும்.

இது ஒருபுறமிருக்க ஒரு காலகட்டத்தில் தாய்மொழி சார்ந்த சொற்களின் எண்ணிக்கையை விட வேற்று மொழிச் சொற்களின் எண்ணிக்கை மிகுதியாகும். எனவேதான் நம் வாழ்க்கையில் இடம்பெறும் அறிவியல் கருத்துகளுக்கான கலைச்சொற்களை எல்லாம் நம் மொழியிலும் உருவாக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

டேவிட்: ஆமாம். கலைச்சொற்களை ஒலிபெயர்ப்புச் செய்தோ மொழிபெயர்ப்புச் செய்தோ உருவாக்கலாம் என எங்கோ படித்திருக்கிறேன். ஆனாலும், எனக்கோர் ஐயம்.

ஆனந்தி: என்ன?

டேவிட்: வளர்ந்த துறைகளுக்கான சொற்களை வேற்று மொழிகளிலிருந்து தமிழ் மொழி பெறுவதைப் போன்று, வேற்று மொழிகள் தமிழிலிருந்து பெற்றுள்ளனவா?

ஆனந்தி: பெற்றுள்ளன டேவிட். தமிழர்கள் பழங்காலத்திலேயே கடல்துறையில் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்தனர். சங்க இலக்கியத்தில் நாவாய், வங்கம், தோணி, கலம் போன்ற பலவகையான கடற்கலன்கள் இயக்கப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. இதில் தமிழ்ச்சொல்லாகிய நாவாய் என்பதே ஆங்கிலத்தில் நேவி என ஆகியுள்ளது டேவிட்.

மும்தாஜ்: தமிழரின் கடல் ஆளுமை சார்ந்த வேறு எவ்வகைச் சொற்கள் எந்தெந்த மொழிகளில் இடம்பெற்றுள்ளன ஆனந்தி?

ஆனந்தி: உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழிகளுள் ஒன்றாகவும் திகழ்வது கிரேக்க மொழியாகும். ஓம் மொழியின் கடல் சார்ந்த சொற்களில்

எறிதிரை {'Epoopav [எறுதிரான்)}, கலன் {T.adkov கலயுகோய்)}, நீர் {Nnpjos [ நீரியோஸ்]}, Nnpéo. (நீரிய), பாவாய் {Nad [நாயு]}, தோணி {Gov; [தோணீஸ்]}


போன்ற தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளன.

மும்தாஜ்: மிக வியப்பாக இருக்கிறது. கடல் சார்ந்த சொற்கள் மட்டும்தாம் தமிழிலிருந்து வற்று மொழிகளுக்குச் சென்றுள்ளனவா?

ஆனந்தி: இல்லை மும்தாஜ், பல்வேறு புறை சார்ந்த தமிழ்ச்சொற்களும் வேற்று மாழிகளுக்குச் சென்றுள்ளன.


டேவிட்: இதைக் கேட்பதற்கு ஆவல் உண்டாகிறது. விரிவாகக் கூறுகிறாயா?

ஆனந்தி: கடல்சார் துறையில் மட்டுமல்லாது பண்டைத் தமிழர்கள் கவிதையியலிலும் முன்னேற்றம் பெற்றிருந்தனர். கவிதை சார்ந்த சொற்களைத் தமிழிலும் கிரேக்க மொழியிலும் ஒப்பாகக் காணமுடிகிறது.

தமிழில் பா என்றால் என்னவென்று உனக்குத் தெரியும். இச்சொல் கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியமாகிய இலியாத்தில் பாய்யியோனா (rainova) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போலோ என்னும் கடவுளுக்குப் பாடப்படுவது 'பா' எனக் கிரேக்கத்தில் குறிக்கப்படுகிறது.

பா வகைகளுள் ஒன்று வெண்பா என்பது உனக்குத் தெரியும். வெண்பாவின் ஓசையானது செப்பலோசை ஆகும். கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் சாப்போ என அழைக்கப்படுகின்றன.

இது கிரேக்கத்திலிருந்து இலத்தீன் மொழிக்கு வந்து பின் ஆங்கிலத்தில் சேப்பிக் ஸ்டேன்சா என இன்று வழங்கப்படுகிறது.

பாவின் சுவைகளில் ஒன்றாக இளிவரல் என்ற துன்பச் சுவையினைத் தமிழிலக்கணங்கள் சுட்டுகின்றன. கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் இளிகியா (E λ€yxia) என அழைக்கப்படுகின்றன.

டேவிட்: நீ கூறும் இலியாத் காப்பியம் கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது அல்லவா?

ஆனந்தி: ஆமாம்.

டேவிட்:  இன்று வேற்று நாட்டினருடன் தொடர்புகொள் வதற்குக் கணினி உள்ளது, சென்றுவர வானூர்தி உள்ளது. அன்றைய காலகட்டத்தில் அவர்கள் எவ்வாறு தகவல் தொடர்புகொண்டிருந்தனர் ஆனந்தி?

ஆனந்தி: நல்ல கேள்வி. நான் முன்னரே தமிழரின் கடல் ஆளுமை பற்றி விளக்கினேன் அல்லவா. தமிழரும் கிரேக்கரும் கடல்வழியாகவும் தொடர்புகொண்டனர்.

மும்தாஜ்: விளக்கமாகச் சொல் ஆனந்தி.

ஆனந்தி : கிரேக்கத்தி லிருந்து தமிழ்நாட்டிற்குக் கடலில் எவ்வழியாக வரவேண்டும் என்பதைக் கிரேக்க நூலொன்று விளக்குகிறது.

டேவிட்:  எவ்வளவு வியப்பாக உள்ளது. அந்நூலில் தமிழ்நாடு பற்றியெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளதா ஆனந்தி?

ஆனந்தி: ஆம். குறிப்பிடப்பட்டுள்ளது டேவிட். அவ்வளவு ஏன், எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ் (Periplus of the Erythraean Sea) என்னும் அந்நூலின் பெயரிலேயே தமிழ்ச்சொல் இருப்பதாகக் கூறுகின்றனர்.

மும்தாஜ்: அப்படியா? என்ன சொல் அது?

ஆனந்தி: எறிதிரை என்பதுதான் அது. கடலைச் சார்ந்த பெரிய புலம் என்பதே எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ் என ஆகியுள்ளது. இதுபோல் தொல்தமிழின் வளர்ச்சி தொடரவும் நிலைத்திருக்கவும் நம்மாலான பணிகளைச் செய்ய வேண்டும்.

டேவிட்:  நம் தமிழ்மொழி நிலைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

ஆனந்தி: வளர்ந்து கொண்டிருக்கும் அறிவியல் துறைக் கலைச்சொற்களை உடனுக்குடன் தமிழ்மொழியில் மொழி பெயர்த்து அத்துறைகளை மேலும் வளர்க்க வேண்டும். அப்போதுதான் நம் தமிழ்மொழி அறிவுக்கான கருவியாக மாறும். தமிழில் உள்ள தத்துவம், அரசியல் ஆகிய துறைகளின் சிந்தனைகளை எல்லாம் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்லவேண்டும். இதுவும் நம் தமிழ்மொழி நிலைத்திருக்க நாம் செய்யவேண்டிய இன்றியமையாத பணியாகும்.

மும்தாஜ்: ஆமாம்... ஆமாம். சரியாகச் சொன்னாய்.

நம்மொழி தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமானால் வளர்ந்துவரும் மருத்துவம், பொறியியல், கணினி, விண்வெளி போன்ற பிறதுறைகளின் பதிவுகள் எல்லாம் உடனுக்குடன் நம் மொழிக்குக் கொண்டுவரப்பட வேண்டும். நம்மொழியில் புதிய புதிய சொல்வளம் பெருகவேண்டும்.

ஆனந்தி: நன்றாகச் சொன்னாய் மும்தாஜ். நாமும் நம்மாலான பணிகளைத் தொடர்ந்து செய்வோம்.

டேவிட், மும்தாஜ்: ஆம். அப்படியே செய்வோம்.

(மூவரும் விடைபெற்றுச் சென்றனர்)

தமிழ் எண்கள் அறிவோம்.



Tags : Chapter 1 | 9th Tamil இயல் 1 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 1 : Amuthendru ber : Supplementary: Valarum Selvam Chapter 1 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுதென்று பேர் : துணைப்பாடம்: வளரும் செல்வம் - இயல் 1 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுதென்று பேர்