Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | பிற்காலச் சோழர்கள்

தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் | முதல் பருவம் அலகு 3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - பிற்காலச் சோழர்கள் | 7th Social Science : History : Term 1 Unit 3 : Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas

   Posted On :  13.05.2022 06:38 am

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : முதல் பருவம் அலகு 3 : தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

பிற்காலச் சோழர்கள்

கற்றலின் நோக்கங்கள் * பிற்காலச் சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் தோற்றத்தைக் கண்டறிதல் * இவ்விரு அரசுகளின் முக்கியமான அரசர்களைப்பற்றி அறிந்துகொள்ளுதல் * அவர்களின் நிர்வாகமுறைகளை அறிந்துகொள்ளுதல் * அவர்களின் ஆட்சிக்காலத்திய சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு வளர்ச்சியைப் புரிந்துகொள்ளுதல்

அலகு - III

தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்



கற்றலின்  நோக்கங்கள்

* பிற்காலச் சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் தோற்றத்தைக் கண்டறிதல் 

* இவ்விரு அரசுகளின் முக்கியமான அரசர்களைப்பற்றி அறிந்துகொள்ளுதல்

* அவர்களின் நிர்வாகமுறைகளை அறிந்துகொள்ளுதல் 

* அவர்களின் ஆட்சிக்காலத்திய சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு வளர்ச்சியைப் புரிந்துகொள்ளுதல்


பிற்காலச் சோழர்கள்



அறிமுகம்

தென்னிந்திய வரலாற்றில் பிரபலமான நன்கறியப்பட்ட முடியாட்சி அரசுகளில் சோழர்அரசும் ஒன்றாகும். அவர்களின் அரசுக் கட்டமைப்பு விரிவானது. நீர்பாசன அமைப்புமுறை விரிந்து பரந்தது. அதிக எண்ணிக்கையிலான கோவில்களை அவர்கள் கட்டியுள்ளனர். கலை மற்றும் கட்டடக்கலைக்குச் சோழர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். கடல் கடந்து அவர்கள் சாதனைகள் பல புரிந்துள்ளனர். இவையனைத்தும் அவர்களுக்கு வரலாற்றில் உயர்ந்த இடத்தை வழங்கியுள்ளது.


சோழர்கள் ஆட்சியின் புத்தெழுச்சி 

பண்டைய சோழ அரசு காவிரி ஆற்றின் கழிமுகப்பகுதியை மையப்பகுதியாகக் கொண்டிருந்தது. அதன் தலைநகர் உறையூர் (இன்றைய திருச்சிராப்பள்ளி) ஆகும். கரிகாலனின் ஆட்சிக்காலத்தில் இவ்வரசு சிறப்பான இடத்தை வகித்தது. அவருக்குப் பின்வந்தோர் காலத்தில் படிப்படியாகச் சரிவினைச் சந்தித்தது. ஒன்பதாம் நூற்றாண்டில் காவிரிக்கு வடக்கே ஒரு சிறு பகுதியை ஆண்டுவந்த விஜயாலயன் சோழ வம்சத்தை மீட்டெழச்செய்தார். அவர் தஞ்சாவூரைக் கைப்பற்றி அதைத் தனது தலைநகராக ஆக்கினார். பிற்காலத்தில் முதலாம் ராஜேந்திரனும் அவருக்குப் பின்வந்தோரும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு சோழப்பேரரசை ஆட்சி செய்தனர்.

முதலாம் ராஜராஜன் (கி.பி (பொ.ஆ) 985 -1014) சோழப் பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற பேரரசர் ஆவார். அவர் காலத்தை வென்ற புகழை ஈட்டினார். தென்னிந்தியாவின் பெரும் பகுதியின் மீது சோழர்களின் அதிகாரத்தை அவர் நிலைநாட்டினார். அவருடைய கப்பற்படையெடுப்புகள் மேலைக்கடற்கரையிலும் இலங்கையிலும் சோழர் ஆட்சி விரிவடைவதற்கு வழிவகுத்தன. புகழ்பெற்ற ராஜராஜேஸ்வரம் கோவிலைத் (பிரகதீஸ்வரர் கோவில்) தஞ்சாவூரில் கட்டினார். அவருடைய மகனும் அவருக்குப்பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவருமான முதலாம் ராஜேந்திரன் (கி.பி. (பொ.ஆ) 1014 - 1044) தந்தையைப் போலவே பேரரசை விரிவுபடுத்தி கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்தார். அவருடைய ஆட்சிக்காலத்தில் சோழப்பேரரசு தென்னிந்தியாவில் ஒரு வலுவான சக்தியாக விளங்கியது. அரியணை ஏறிய பின்னர் அவருடைய மிக முக்கியப் படையெடுப்பான வட இந்தியப் படையெடுப்பில் பல பகுதிகளைக் கைப்பற்றினார். கங்கை கொண்டான் (கங்கையைக் கைப்பற்றியவர்) என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். வட இந்தியப் போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் கோவில் எழுப்பப்பட்டது. அவருடைய கடற்படை ஸ்ரீவிஜயப் பேரரசைக் (தெற்கு சுமத்ரா) கைப்பற்ற அவருக்குத் துணைபுரிந்தது. சோழர்களின் கடற்பகுதிகளின் மீதான கட்டுப்பாடு கடல் கடந்த வணிகம் செழித்தோங்க உதவியது. 


சோழப் பேரரசின் சரிவு 

முதலாம் ராஜேந்திர சோழனைத் தொடர்ந்து பதவியேற்ற மூவரும் திறமை வாய்ந்த அரசர்களாக இல்லை . மூன்றாவதாகப் பதவி ஏற்ற வீர ராஜேந்திரனின் மகன் அதி ராஜேந்திரன் உள்நாட்டுக் கலகம் ஒன்றில் கொல்லப்பட்டார். அவருடன் விஜயாலயனின் வழிவந்தோரின் ஆட்சி முடிவுக்கு வந்தது.


முதலாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் சோழர்களுக்கும் கீழைச் சாளுக்கியர்களுக்கும் இடையிலான திருமணஉறவு தொடங்கியது. அவருடைய மகளான குந்தவை சாளுக்கிய இளவரசர் விமலாதித்தனை மணந்தார். அவர்களின் மகனான ராஜராஜ நரேந்திரன் முதலாம் ராஜேந்திரனின் மகளான அம்மங்கா தேவியை மணந்தார். அவர்களின் மகனே முதலாம் குலோத்துங்கன் ஆவார்.

அதி ராஜேந்திரனின் மறைவைக் கேள்விப்பட்டவுடன் கீழைச் சாளுக்கிய இளவரசரான ராஜேந்திர சாளுக்கியன், சோழ அரியணையைக் கைப்பற்றினார். முதலாம் குலோத்துங்கன் எனும் பெயரில் சாளுக்கிய - சோழ வம்சத்தின் ஆட்சியை அவர் தொடங்கிவைத்தார். சோழ அரியணைக்கு ஏற்பட்டிருந்த அச்சுறுத்தல்களை விரைவில் ஒழித்துக்கட்டி முதலாம் குலோந்துங்கன் தனது நிலையை உறுதிப்படுத்திக்கொண்டார். தேவையற்ற போர்களைத் தவிர்த்த அவர் பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்றார். ஆனால் இலங்கையில் சோழர்களுக்குச் சொந்தமாக இருந்த பகுதிகளை இழந்தார். பாண்டிய நாட்டிலிருந்த பகுதிகளும் சோழர்களின் கட்டுப்பாட்டிலிருந்து நழுவின. காஞ்சிபுரத்தைத் தெலுங்குச் சோழர்களிடம் இழக்க நேரிட்டது. 1279இல் பாண்டிய அரசன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் மூன்றாம் ராஜேந்திர சோழனைத் தோற்கடித்துப் பாண்டியர் ஆட்சியை இன்றைய தமிழகத்தில் நிறுவினார். அத்துடன் சோழ வம்சத்தின் ஆட்சி முடிவுற்றது.


நிர்வாக முறை

மத்திய அரசின் நிர்வாகம் அரசரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தது. நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்த அவர் பெருமளவு அதிகாரத்தைக் கொண்டிருந்தார். அரசரின் ஆணைகள் அவருடைய அதிகாரிகளால் பனையோலைகளில் எழுதப்பட்டன அல்லது கோவில் சுவர்களில் பொறிக்கப்பட்டன. அரசுரிமை பரம்பரை இயல்புடையதாய் இருந்தது. அரசர் தனது மூத்த மகனைத் தனது வாரிசாகத் தெரிவு செய்தார். மூத்தமகன் யுவராஜன் என்றழைக்கப்பட்டார். யுவராஜாக்கள் நிர்வாகத்தில் பயிற்சி பெறுவதற்காக மண்டல ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர்.

சோழ அரசர்கள் நன்கு கட்டமைக்கப்பட்ட நிர்வாக முறையை உருவாக்கியிருந்தனர். நிர்வாக வசதிக்காகப் பேரரசு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மண்டலமும் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாட்டுப் பிரிவுக்குள்ளும் பல கூற்றங்கள் (கிராமங்களின் தொகுப்பு) இடம் பெற்றிருந்தன. கிராமமே நிர்வாக அமைப்பின் மிகச் சிறிய அலகாகும்.


உள்ளாட்சி நிர்வாகம்

உள்ளாட்சி நிர்வாகமானது ஊரார், சபையோர், நகரத்தார், நாட்டார் எனும் அமைப்புகளின் மூலமாகச் செயல்பட்டது. வேளாண்மையின் விரிவாக்கத்தினால் கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகளின் குடியிருப்புகள் உருவாயின. அவை ஊர்கள் என அறியப்பட்டன. நிலஉடமையாளர்களாக இருந்த ஊரார், ஊரின் சார்பாகப் பேசுபவர்களாக இருந்தனர். பிராமணர் கிராமங்களைச் சேர்ந்த சபையோர் பொது நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும், நீதி வழங்குதலையும் மேற்கொண்டனர். வணிகர்களின் குடியிருப்புகளை நகரத்தார் நிர்வகித்தனர். இருந்தபோதிலும் தனித்திறன் பெற்ற கட்டுமானக் கலைஞர்கள், இரும்புத் தொழில் செய்வோர், தங்கவேலை செய்வோர், நெசவு செய்வோர், மட்பாண்டம் வனைவோர் ஆகியோரும் நகரத்தில் வாழ்ந்தனர். நாடுகளில் நாட்டார் எனும் அமைப்பு நாடோடு தொடர்புடைய பூசல்களையும் ஏனைய சிக்கல்களையும் தீர்த்துவைத்தது.

ஊர், சபை, நகரம், நாடு ஆகியவற்றில் இருந்த மன்றங்கள் பல்வேறு குழுக்கள் மூலம் பணிகளை மேற்கொண்டன. இக்குழுக்கள் நீர்ப்பாசனம், சாலைகள், கோவில்கள், தோட்டங்கள், வரிவசூல், மத விழாக்களை நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டன. 


உத்திரமேரூர் கல்வெட்டுகள்

இன்றைய காஞ்சிபுர மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் கிராமம் பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட ஒரு பிரம்மதேய கிராமமாகும். இக்கிராமத்தில் கிராம சபைக்கான உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறித்துத் தெளிவாக விளக்கும் கல்வெட்டுகள் உள்ளன.

ஒவ்வொரு குடும்பிலிருந்தும் (வார்டு) உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். மொத்தம் 30 குடும்புகள் இருந்தன. போட்டியிடும் ஆடவர் 35 -70 வயது வரம்புக்குள் இருத்தல் வேண்டும். வேதநூல்களிலும், சமய நூல்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பதும், நிலஉரிமையாளராகவோ, சொந்த வீடு உடையவராகவோ இருக்க வேண்டும் என்பவை தகுதிகளாகும். தேர்ந்தெடுக்கும் முறை: ஒவ்வொரு குடும்பிலிருந்தும் தகுதியுடைய வேட்பாளர்களின் பெயர்கள் பனையோலைத் துண்டுகளில் எழுதப்படும். அவை மட்பாண்டம் ஒன்றில் போடப்படும். மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஒரு சிறுவனை அழைத்து குடத்துக்குள் உள்ள ஓலைத் துண்டுகளை எடுக்கச் சொல்லி அதில் எழுதப்பட்டுள்ள பெயரை அறிவிப்பார். இம்முறையின்படி பல குழுக்கள் முடிவு செய்யப்படும்.



வருவாய்

சோழ அரசின் பொதுவருவாய் முக்கியமாக நிலவரி மூலம் பெறப்பட்டது. நிலவரியானது 'காணிக்கடன்' என அழைக்கப்பட்டது. நிலவரியை நிர்ணயம் செய்வதற்காகச் சோழஅரசு விரிவான அளவில் நிலஅளவைப் பணியை மேற்கொண்டது. மகசூலில் மூன்றில் ஒரு பகுதி வரியாக வசூலிக்கப்பட்டது. இவ்வரி பெரும்பாலும் தானியமாகவே வசூல் செய்யப்பட்டது. நிலவரியைத் தவிர தொழில் வரிகளும் வணிகத்தின் மீதான சுங்கவரிகளும் வசூலிக்கப்பட்டன. 


நிலம் சார்ந்த உறவுகளை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு 

சோழஅரசர்கள் வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலங்களை அரசு அதிகாரிகளுக்கும், பிராமணர்களுக்கும், கோவில்களுக்கும் (தேவதானக் கிராமங்கள்), மத நிறுவனங்களுக்கும் கொடையாக வழங்கினர். சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் 'பள்ளிச்சந்தம்' என அழைக்கப்பட்டது. 'வேளாண்வகை' என்னும் நிலங்களின் உடைமையாளர்கள் வேளாளர் என்றழைக்கப்பட்டனர். வேளாளரில் ஒரு பிரிவினரான 'உழுகுடி என்போர் நிலங்களின் உடைமையாளர்களாக இருக்க இயலாது. அவர்கள் பிரம்மதேய, வேளாண்வகை நிலங்களில் வேளாண் பணிகளைச் செய்யவேண்டியிருந்தது. மொத்த விளைச்சலில் வேளாண்வகை நிலவுடைமையாளர்கள் 'மேல்வாரத்தைப் (விளைச்சலில் பெரும்பகுதி) பெற்றனர். உழுகுடிகள் 'கீழ்வாரத்தைப் (விளைச்சலில் சிறிய பகுதி) பெற்றனர். அடிமை மற்றும் பணிசெய் மக்கள் என்போர் சமுதாயத்தின் கீழ்நிலையில் இருந்தனர். சமூகத்தின் இடை மட்டத்தில் போர் செய்வோரும் வணிகர்களும் இடம் பெற்றனர். 


நீர்ப்பாசனம் 

சோழர்கள் நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் வழங்கினர். கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட பதினாறு மைல் நீளம் கொண்ட ஏரிக்கரைத் தடுப்பணை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். காவிரியின் கழிமுகப் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக மரபுசார்ந்த முறையில் நீரினைத் திசைமாற்றிவிடுவதற்கான வடிவாய்க்கால்கள்' அமைக்கப்பட்டிருந்தன. தேவைப்படும் நீரைக் கொண்டுவருவது 'வாய்க்கால்'. தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்றுவது 'வடிகால்'. பொதுமக்கள் அனைவருக்கும் சொந்தமான வாய்க்கால் ஊர் வாய்க்கால்' என அழைக்கப்பட்டது. நாடு எனும் நிர்வாகப் பிரிவின் மட்டத்தில் பயன்பட்ட வாய்க்கால்கள் 'நாடு வாய்க்கால்கள்' என குறிப்பிடப்பட்டன. நீர் விநியோகத்தில் சுற்றுமுறை நடைமுறையில் இருந்தது.


மதம்

சோழர்கள் சைவத்தின் மீது மிகுதியான பற்றுக் கொண்டவராவர். சிவபெருமானின் திருவிளையாடல்கள் சைவ அடியார்களான நாயன்மார்களால் பாடல்களாக இயற்றப்பட்டுள்ளன. நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட அவை 'திருமுறைகள்' என அழைக்கப்படுகின்றன.


கோவில்கள்

சோழர்கள் காலத்தில் பிரமாண்டமான கோவில்கள் கட்டப்பட்டன. தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய இடங்களிலுள்ள கோவில்கள் சோழர்களின் கலைகளான கட்டடங்கள், சிற்பங்கள், செப்புச்சிலைகள் ஓவியங்கள், படிமவியல் ஆகியவற்றின் களஞ்சியமாக உள்ளன. சோழர்கள் காலக் கோவில்கள் வழிபாட்டிற்கான இடங்கள் மட்டுமல்லாமல் பெருமளவு நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்தன. அவை கல்வியையும், பக்திக் கலைகளின் வடிவங்களான நடனம், இசை, நாடகம் ஆகியவற்றையும் வளர்த்தன. நடனமாதர், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், இசைக்கருவிகளை மீட்டுவோர், அர்ச்சகர்கள் ஆகியோர் கோவில் பணியாளர்கள் ஆவர்.



சோழர்களின் கல்விப் பணி

சோழ அரசர்கள் கல்விப் பணிகளுக்குப் பெரும் ஆதரவு நல்கினர். முதலாம் ராஜேந்திரன் எண்ணாயிரம் (தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள) எனும் கிராமத்தில் வேதக் கல்லூரி ஒன்றை நிறுவினார். அக்கல்லூரியில் 14 ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் 340 மாணவர்கள் வேதங்கள், இலக்கணம், உபநிடதங்கள் ஆகியவற்றைக் கற்றனர். அவருக்குப் பின்வந்த ஆட்சியாளர்கள் அவருடைய அப்பணியை முன்உதாரணமாகக் கொண்டு பின்பற்றினர். அதன் விளைவாக இன்றைய புதுச்சேரிக்கு அருகேயுள்ள திருபுவனை எனும் ஊரிலும், இன்றைய செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருமுக்கூடலிலும் முறையே 1048, 1067 ஆகிய ஆண்டுகளில் இதே போன்ற கல்லூரிகள் நிறுவப்பட்டன.

உன்னதமான இலக்கியங்களான பெரியபுராணமும் கம்பராமாயணமும் இக்காலப் பகுதியைச் சேர்ந்தவையாகும்.


வணிகம்

சோழர்களின் காலத்தில் வணிகம் தழைத்தோங்கியது. 'அஞ்சு - வண்ணத்தார்', மணி - கிராமத்தார்' எனப்படும் வணிகக் குழு அமைப்புகளைச் (கில்டு) சேர்ந்த வணிகர்கள் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அஞ்சு - வண்ணத்தார் குழுவானது மேற்கு ஆசியர்கள், அராபியர்கள், யூதர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும். அவர்கள் கடல் கடந்து வணிகம் செய்தோர் ஆவர். அவர்கள் மேற்கு கடற்கரையோரத் துறைமுக நகரங்களில் குடியிருந்தனர். மணி - கிராமத்தார் வணிகக் குழு அமைப்பைச் சேர்ந்த வணிகர்கள் உள்நாட்டு வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர் எனச் சொல்லப்படுகிறது. காலப்போக்கில் அவ்விரு அமைப்புகளும் 'ஐநூற்றுவர்', 'திசை - ஆயிரத்து ஐநூற்றுவர்' எனும் பெயர்களில் ஒருங்கிணைந்தன. அவை கர்நாடக மாநிலம் ஐகோலில் இருந்த தலைமை அமைப்பின் வழிகாட்டுதலில் செயல்பட்டன. இந்த ஐநூற்றுவர் அமைப்பு தென்கிழக்காசிய நாடுகளை உள்ளடக்கிய கடல் கடந்த வணிக நடவடிக்கைகளைச் செயல்படுத்தியது. தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு மேற்கொள்ளப்பட்ட கடல் கடந்த வணிகத்தின் மூலம் யானைத் தந்தங்கள், பவழம், சங்குகள், ஒளிபுகும் - புகா கண்ணாடிகள், பாக்கு, ஏலம், வர்ணப் பட்டு நூல்களோடு நெய்யப்பட்ட பருத்தி இழைத்துணிகள் ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன. சந்தனக்கட்டை, கருங்காலிக்கட்டை, சுவையூட்டும் பொருட்கள், விலையுயர்ந்த ஆபரணக் கற்கள், மிளகு, எண்ணெய், நெல், தானியங்கள், உப்பு ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன.


Tags : Emergence of New Kingdoms in South India | Term 1 Unit 3 | History | 7th Social Science தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் | முதல் பருவம் அலகு 3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : History : Term 1 Unit 3 : Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas : The Later Cholas Emergence of New Kingdoms in South India | Term 1 Unit 3 | History | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : முதல் பருவம் அலகு 3 : தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் : பிற்காலச் சோழர்கள் - தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் | முதல் பருவம் அலகு 3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : முதல் பருவம் அலகு 3 : தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்