ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் (1931-2015) - இந்தியாவின் ஏவுகணை நாயகன் | 7th Science : Term 3 Unit 2 : Universe and Space
இந்தியாவின் ஏவுகணை நாயகன்
ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் (1931-2015)
அப்துல் கலாம் பள்ளிப்படிப்பை இராமேஸ்வரத்தில் உள்ள அரசுப்பள்ளியில் தொடங்கினார். இவர் அறிவியல் மற்றும் கணிதப் பாடத்தில் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டிருந்தார்.
கலாம் பள்ளிப் பருவத்தில் களப்பயணத்தின் போது, அங்கு பறவைகள் எவ்வாறு பறக்கின்றன என்பது பற்றி ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இதுதான் பின்பு அவர் அறிவியல் அறிஞர் ஆவதற்கும், விமானத்தை வடிவமைக்கவும் தூண்டுகோளாக அமைந்தது.
கலாம் எம்.ஐ.டி இல் படித்து முடித்து உள்நாட்டுத் தொழில்நுட்ப அறிஞர்களின் துணையுடன் உள்நாட்டிலேயே கிடைத்த பொருள்களைக் கொண்டு நந்தி' என்ற விமானத்தை வடிவமைத்தார் அதனைத் தானே, இயக்கியும் காட்டினார்.
சிறுவயதிலேயே பத்திரிகை விற்கும் தன் உறவினருக்கு உதவியாளராக சேர்ந்து தன் படிப்புச் செலவுகளைத் தானே மேற்கொன்டார்
கல்லூரிப் படிப்பில் இயற்பியலில் இளம் அறிவியல் பட்டத்தினை 1954 ஆம் ஆண்டு பெற்றார். 1955 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள எம்.ஐ.டி-இல் தன்னுடைய விண்வெளி பொறியியல் படிப்பைத் தொடங்கினார்.
1983 ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும், பாதுகாப்பு அமைச்சக அறிவியல் ஆலோசகராகவும் கலாம் பொறுப்பேற்றார்.
கலாம், 1980 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எஸ்.எல்.வி.3 என்ற செயற்கைக்கோள் செலுத்தியினைப் பயன்படுத்தி ரோகினி - என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினார். இந்திய இராணுவத்தில் உள்ள திரிசூல் (Thrilshul), அக்னி (Agni), பிருத்வி (Prithvi) நாக் (Nag) மற்றும் ஆகாஷ்(Akash) ஆகிய ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்ட போது அதன் திட்ட இயக்குநராகவும் செயல்பட்டார்.
அப்துல் கலாம் 1999 ஆம் ஆண்டு “ஆப்ரேசன் சக்தி" என்ற திட்டத்தில் பொக்ரான் அணுவெடிப்புச் சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ளார். இவரே, இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய பெருமைக்குரியவர்.
இந்தியாவின் உயரிய விருதான "பாரத ரத்னா" விருது, மத்திய அரசால் இவருக்கு வழங்கப்பட்டது மேலும், இந்தியாவில் 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராகவும் இருந்தார்
இந்தியாவில் முதன்முறையாக 1974 ஆம் ஆண்டு "சிரிக்கும் புத்தர்" என்ற திட்டத்தில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்ந்தது. இந்த நிகழ்வின்போது அறுபது விண்வெளி பொறியியல் அறிஞர்களின் பங்களிப்பு இருந்தது. இதில் கலாமும் ஒர் உறுப்பினர் ஆவார்.
கலாம் ஐந்து ஏவுகணைத் திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். இவர் இந்திய ராணுவ ராக்கெட் வடிவமைப்பின் முதன்மையாளராகவும் விளங்கினார்
மனிதர்களுக்கு கஷ்டங்கள் தேவை, ஏனென்றால் மகிழ்ச்சியை அனுபவிக்க அவை தான் காரணம் என்றும், உங்கள் கனவுகள் நனவாகும் முன் நீங்கள் அந்தக் கனவை தொடர்ந்து காணவேண்டும் என்று கூறிய ஏவுகணை நாயகன் மறைந்தும் நம்மிடையே இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். அவர் போல நாமும் இந்த நாட்டிற்காக நம்மை அர்பணிபோம்.