பருவம் 2 இயல் 5 | 3 ஆம் வகுப்பு தமிழ் - வாலு போயி கத்தி வந்தது! டும்...டும்... டும்...டும் | 3rd Tamil : Term 2 Chapter 5 : Vaalu poyi Kathi vanthadu dum dum dum dum
5. வாலு போயி கத்தி வந்தது!
டும்....டும்...டும்...டும்
ஒருநாள், ஓணான் ஒன்று வேலியைத் தாண்டும்போது அதன்வாலில் முள் குத்தி மாட்டிக்கொண்டது
குத்திய முள்ளை எடுத்துவிட ஊருக்குள் நுழைந்து உதவி கேட்க நினைத்தது
ஐயா, உழவரே! என் வாலில் முள் குத்திவிட்டது. கொஞ்சம் எடுத்து விடுங்களேன்
உழவர் வாலிலுள்ள முள்ளை எடுக்கும்போது வால் அறுந்துவிட்டது
ஆ! என் வால் அறுந்து விட்டதே!
ஏ... உழவரே! என் வாலைத் தருகிறாயா? இல்லை, உன் கத்தியைத் தருகிறாயா?
இந்தா! கத்தியை வைத்துக்கொள், ஆளை விடு…….
காட்டில் ஒருவர் மரம் வெட்டிக்கொண்டிருந்தார் அவரைப்பார்த்து...
ரொம்ப சிரமப்படுகிறாய். இந்தா கத்தி, இதனால் வெட்டு
மரத்தை வெட்டும்போது கத்தி உடைந்துவிட்டது
அட ! கத்தி உடைந்துவிட்டதே!
விறகு வெட்டியே... என் கத்தியைத் தருகிறாயா? இல்லை விறகைத் தருகிறாயா?
இந்தா... விறகை நீயே வைத்துக்கொள்
பிறகு, வழியில் தோசை சுடும் பாட்டியைப் பார்த்தது
பாட்டி! இந்த விறகை வைத்துக்கொள். தோசையைச் சுடு
பிறகு ஓணான், அடடா! எல்லா விறகையும் எரித்துவிட்டாயா?
இதப்பாரு பாட்டி, என் விறகைத் தருகிறாயா? இல்லை தோசையைத் தருகிறாயா?
சரி! சரி! இந்தா தோசையை எடுத்துக்கொள்
பிறகு ஓணான், மோர் விற்கும் பெண்ணை வழியில் பார்த்தது
பெண்ணே பசியா ? இந்தா, தோசையைச் சாப்பிடு.
மோர் விற்கும் பெண் தோசையைச் சாப்பிட்டு முடித்தாள்
ஓ…. தோசை முழுவதையும் சாப்பிட்டு விட்டாயா?
பெண்ணே என் தோசையைத் தருகிறாயா? இல்லை, பானையைத் தருகிறாயா?
பானையை ஓணான் பெற்றுக்கொண்டது
இந்தா ... என் பானையை வைத்துக்கொள்.
வழியில் தோட்டக்காரரைப் பார்த்த ஓணான்,
தோட்டக்காரரே, தண்ணீர் எடுத்து ஊற்றுவதற்கு இந்தப்பானையை வைத்துக்கொள்...
தோட்டக்காரர் செடிகளுக்கு நீரூற்றும்போது பானை உடைந்துவிட்டது
ஆ! என் பானை உடைந்து போயிற்றே!
என் பானையைத் தருகிறாயா? இல்லை, பூவைத் தருகிறாயா?
இந்தா… பூக்களைத் தருகிறேன், எடுத்துக்கொள்
வழியில் மேளம் வாசிக்கும் பெண்ணை ஓணான் பார்த்தது
இந்தா.. பெண்ணே ! பூக்களைத் வைத்துக்கொள், அழகாக இருப்பாய்.
அந்தப் பெண் பூக்களைத் தலையில் வைக்கும்போது, அவை உதிர்ந்தன
அடடே! என் பூக்கள் உதிர்ந்து போயிற்றே
பெண்ணே! பூக்களைத் தருகிறாயா? இல்லை, மேளத்தைத் தருகிறாயா?
அந்தப் பெண் பயந்தவாறு
சரி சரி இந்த மேளத்தை வைத்துக்கொள்...
ஓணான் அந்த மேளத்தை அடித்தவாறே மகிழ்ச்சியோடு பாடியது
வாலு போயி கத்தி வந்தது டும்....டும்...டும்...டும்
கத்தி போயி விறகு வந்தது டும்... டும்... டும்...டும்
விறகு போயி தோசை வந்தது டும்...டும்... டும்...டும்
தோசை போயி பானை வந்தது டும்...டும்...டும்...டும்
பானை போயி பூவு வந்தது டும்...டும்...டும்...டும்
பூவு போயி மேளம் வந்தது டும்...டும்...டும்...டும்
நீதிக் கருத்து: துன்பம் வரும் வேளையில் மனம் சோர்வு அடையக்கூடாது.
அறிந்து கொள்வோம்
உலக கதைசொல்லல் நாள் - மார்ச் 20