Posted On :  17.09.2023 06:53 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 23 : பொருளாதார உயிரியல்

தேனீ வளர்ப்பு

தேனுக்காக தேனீக்களை வளர்த்தலே தேனீ வளர்ப்பு எனப்படும். இது தேனீக்களைப் பராமரித்தல் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு இலாபம் தரும் கிராமப்புறத் தொழிலாகும். இது விவசாயம் சார்ந்த குடிசைத் தொழிலாகவும் முன்னேறியுள்ளது. தேனை உற்பத்தி செய்வதற்காக தேனீக்கள் வளர்க்கப்படுகின்றன.

தேனீ வளர்ப்பு

தேனுக்காக தேனீக்களை வளர்த்தலே தேனீ வளர்ப்பு எனப்படும். இது தேனீக்களைப் பராமரித்தல் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு இலாபம் தரும் கிராமப்புறத் தொழிலாகும். இது விவசாயம் சார்ந்த குடிசைத் தொழிலாகவும் முன்னேறியுள்ளது. தேனை உற்பத்தி செய்வதற்காக தேனீக்கள் வளர்க்கப்படுகின்றன.

 

1. தேனீக்களின் வகைகள்

தேன்கூட்டில் மூன்று வகையான தேனீக்கள் காணப்படுகின்றன. அவையாவன: இராணித்தேனீ, ஆண் தேனீ மற்றும் வேலைக்காரத் தேனீ.

 இராணித் தேனீ: இராணித் தேனீயானது, தேன் கூட்டிலுள்ள மிகப்பெரிய உறுப்பினராகவும், இனப் பெருக்கம் செய்யும் பெண் தேனீயாகவும் உள்ளது. இவை ஆரோக்கியமான முட்டைகளிலிருந்து உருவாகின்றன. தேன் கூட்டில் முட்டையிடுவது இதன் பொறுப்பாகும்.

ஆண் தேனீ (ட்ரோன்கள்): இவை இனப்பெருக்கம் செய்யும் திறனுடைய ஆண் தேனீக்களாகும். இவை வேலைக்காரத் தேனீக்களைவிட அளவில் பெரியதாகவும், இராணித் தேனீக்களைவிட அளவில் சிறியதாகவும் உள்ளன. இராணித் தேனீ இடக்கூடிய முட்டைகளை கருவுறச் செய்தலே இவற்றின் முக்கியப் பணியாகும்.

வேலைக்காரத் தேனீ: இவை இனப்பெருக்கத் திறனற்ற பெண் தேனீக்கள் ஆகும். இவை தேன் கூட்டிலுள்ள மிகச்சிறிய உறுப்பினர்களாகும். தேன் சேகரித்தல், சிறிய தேனீக்களைப் பராமரித்தல், தேனடையைச் சுத்தம் செய்தல், தேன் கூட்டைப்  பாதுகாத்தல் மற்றும் தேன்கூட்டின் வெப்பத்தைப் பராமரித்தல் போன்றவை இவற்றின் பணிகளாகும்.


 

2. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தேனீக்களின் வகைகள்

உள்நாட்டு வகைகள்

 i. ஏபிஸ் டார்கேட்டா (பாறை மற்றும் காட்டுத்தேனீ)

 ii. ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ)

 ii. ஏபிஸ் இண்டிகா (இந்தியத் தேனீ)

வெளிநாட்டு வகைகள்

 iv. ஏபிஸ் மெல்லிஃபெரா (இத்தாலிய தேனீ)

v. ஏபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ)

 

3. தேனடையின் அமைப்பு

வேலைக்காரத் தேனீக்களின் வயிற்றில் உள்ள மெழுகுச் சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் பொருளினால், தேனீக்களின் தேனடையானது உருவாக்கப் படுகின்றது. மெழுகினாலான அறுங்கோண வடிவ அறைகளைக் கொண்ட செங்குத்தான இரட்டை அடுக்கு அட்டைகளே தேன்கூடு ஆகும்.

தேன் உற்பத்தி

தேனீக்கள், பல்வேறு பூக்களிலிருந்து மகரந்தத் தேனை உறிஞ்சுகின்றன. மகரந்தத் தேனானது, தேன் பைகளுக்குள் செல்கின்றது. தேன் பைகளுக்குள், மகரந்தத் தேனானது ஒருவித அமிலச்சுரப்புக்களுடன் கலக்கின்றது. நொதிகளின் செயல்பாட்டால், இது தேனாக மாற்றமடைந்து, தேன் கூட்டிலுள்ள சிறப்பு அறைகளில் சேமிக்கப்படுகிறது.

தேனின் தரமானது தேன் மற்றும் மகரந்தத்தூள் சேகரிப்பதற்குக் கிடைக்கும் மலர்களைப் பொருத்தது.

 

4. தேனீக்களிடமிருந்து கிடைக்கும் பயனுள்ளப் பொருட்கள்  

தேனீக்கள், தேன் மற்றும் மெழுகு தயாரிப்பில் பயன்படுகின்றன. தேன் மகரந்தம், ஜெல்லி, பிசின், மற்றும் தேனீ விஷம் ஆகியவை தேனீ வளர்ப்பில் கிடைக்கும் பயனுள்ள பொருட்கள்.

தேன்: தேன் ஒரு இனிப்பான, பாகு நிலை கொண்ட இயற்கையான தாவர உணவுப்பொருள் ஆகும். டெக்ஸ்ட்ரோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்றவை தேனுக்கு இனிப்புச் சுவையைத் தருகின்றன. அமினோ அமிலங்கள், அஸ்கார்பிக் அமிலம், 'B' வைட்டமின்கள், தாது உப்புக்கள் போன்றவை தேனில் உள்ளன. பார்மிக் அமிலம் தேனைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. தேனில் இன்வர்டேஸ் என்ற நொதியும் காணப்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா?

தேனீ தனது ஒரு பயணத்தில் குறைந்தது 50 முதல் 100 மலர்களிடம் தேனை சேகரிக்கும்.

சராசரியாக ஒரு தேனீ தனது வாழ்நாளில் 1/2  தேக்கரண்டி தேனை மட்டுமே சேகரிக்கிறது.

● 1 கி.கி. தேனில் 3200 கலோரி ஆற்றல் - உள்ளது. இது ஆற்றல் மிகுந்த உணவாகும்.

தேனின் பயன்கள்

தேன் புரைத் தடுப்பானாகவும், பாக்டீரிய எதிர்ப்புப் பொருளாகவும் பயன்படுகிறது. இது இரத்தத்தை தூய்மையாக்கப் பயன்படுகிறது.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.

ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் பயன்படுகிறது.

இருமல், சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை வறட்சியை நீக்கவும் பயன்படுகிறது.

நாக்கு, வயிறு மற்றும் குடற்புண்களை குணப்படுத்த உதவுகிறது.

இது செரிமானத்திற்கும், பசியைத் தூண்டுவதற்கும் பயன்படுகிறது.


 

நினைவில் கொள்க

தோட்டவியல் என்பது வேளாண்மையின் ஒரு பிரிவு ஆகும். இது கனிகள், காய்கறிகள் மற்றும் அழகுத் தாவரங்களை வளர்த்தலுடன் தொடர்புடையது.

தாவரக் கழிவுகள், விலங்குக் கழிவுகள் மற்றும் நுண்ணுயிகளின் சிதைவுகள் ஆகியவற்றிலிருந்து கனிம உரங்கள் உருவாக்கப்படுகின்றன. இவை மண்ணை வளமானதாக மாற்றுகின்றன.

மண்ணற்ற சூழலில் நீர் மூலம் செயற்கையில் தாவரங்களை வளர்த்தல் மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பு முறை எனப்படும்.

காற்று ஊடக தாவர வளர்ப்பு முறை அதிநவீன மண்ணில்லா வேளாண்மைத் தோட்டமாகும். இதன் முதன்மையான வளர் ஊடகம் காற்று.

பால் உற்பத்தியைப் பெருக்க கால்நடைகளைப் பராமரிக்கும் முறை பால்பண்ணை எனப்படும்.

நீர் உயிரி வளர்ப்பு என்பது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நீர் வாழ் உயிரிகளான மீன், இறால், முத்து மற்றும் நண்டு போன்றவற்றை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் போதிய தட்பவெப்ப நிலையில் நவீன தொழில்நுட்பத்தில் வளர்க்கும் முறையாகும்.

மீன் வளர்ப்பு என்பது குளங்கள், அணைகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வயல்வெளிகளில் மீன் குஞ்சு பொரித்தல் மற்றும் வளர்த்தலாகும்.

மண்புழுவை செயற்கை முறையில் வளர்த்து அதன் மூலம் மண்புழு உரம் தயாரித்தலை மண்புழு வளர்ப்பு என்கிறோம்.

 

 A-Z சொல்லடைவு

நீர்வாழ் உயிரின : நீரில் வளர்க்கும் முறையும், மண்ணில்லா வேளாண்மையும் இணைந்து உருவான முறை.

ஊடக வளர்ப்பு முறை : இதில் உயிரினங்களின் கழிவுகள் தாவரங்களுக்கு உணவாகின்றன.

கலப்பு உரம் : மண்ணை வளப்படுத்தக்கூடிய மற்றும் உரமாகச் செயல்படக்கூடிய, கரிமச்சேர்மங்களைக் கொண்ட பொருள்.

பூந்தோட்ட வளர்ப்பு : அலங்கார மலர்களை வளர்ப்பது.

பசுந்தாள் உரம் : லெகூம் தாவரங்களிலிருந்து பெறப்படும் சிதைவடையாத பொருள்.

மண்ணில்லா வளர்ப்பு முறை : நீரில் வளரக்கூடிய தாவரங்களை மண்ணின் உதவியின்றி வளர்த்தல்.

கடல்நீர் வாழ் உயிரி வளர்ப்பு : கடலோர நீர்ப்பகுதியில் மீன் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை வளர்க்கும் முறை.

மகரந்தத்தேன் : தாவரங்களால் சுரக்கப்படும் பாகுத்தன்மை கொண்ட திரவம்.

காய்கறி வளர்ப்பு : காய்கறிகளை உற்பத்தி செய்தல்.

மீன் வளர்ப்பு : கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் மீன்களை வளர்ப்பது.

பன்முக மீன்வளர்ப்பு : ஒன்றுக்கும் மேற்பட்ட மீன்களை வளர்த்தல்.

பழப்பண்ணை : பழங்களை உற்பத்தி செய்தல்.

மண்புழு உரம் : மண்புழுக்களால் சிதைக்கப்பட்ட அதிகளவு கரிம ஊட்டச்சத்துகளைக் கொண்ட எச்சம்

மண்புழு உரமாக்கல் : மண்புழுக்களின் உதவியுடன் கரிமப்பொருள்களை சிதைவுறச் செய்தல்.

மண்புழு வளர்ப்பு : மண்புழு உரத்தை தயார் செய்வதற்காக மண்புழுக்களை வளர்த்தல்

9th Science : Economic Biology : Apiculture and Honey Bee in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 23 : பொருளாதார உயிரியல் : தேனீ வளர்ப்பு - : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 23 : பொருளாதார உயிரியல்