மீன் வளர்ப்பு (Pisciculture)
பிசிகல்ச்சர் அல்லது மீன் வளர்ப்பு என்பது மீன்களை, குளம், நீர்த்தேக்கம் (டேம்),
ஏரிகள், ஆறுகள் மற்றும் விளைநிலங்கள் போன்ற இடங்களில் இனப்பெருக்கம் செய்யவைத்து, வளர்த்தெடுக்கும் செயல்முறையாகும். இம்முறையில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மீன்கள்,
கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் வளர்க்கப்படுகின்றன.
விரிவான மீன்வ ளர்ப்பு (Extensive
Fish Culture): இது பரந்த இடங்களில் குறைவான எண்ணிக்கையிலான மீன்களை, இயற்கையான உணவளித்து வளர்த்தல்.
தகவல் துணுக்கு
1947ஆம் ஆண்டு கேரளா மாநிலத்திலுள்ள கொச்சின் என்ற இடத்தில் மத்திய கடல்சார் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனமானது
(The Central Marine Fisheries
Research Institute - CMFRI) நிறுவப்பட்டது.
இந்நிறுவனமானது கடல் மீன் வளர்ப்பு நிலையங்கள், வகைப்பாட்டியல் மற்றும் உயிரிகளின் பொருளாதாரப் பண்புகளை ஆராய்ச்சி செய்தல் போன்ற செயல்களில் அதிக கவனம் செலுத்துகின்றது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 1987ம் ஆண்டு மத்திய உவர் நீர் வாழ் உயிரிவளர்ப்பு நிறுவனமானது
(CIBA- Central
Institute of Brackish water aquaculture) நிறுவப் பட்டது.
இந்த நிறுவனத்தின் நோக்கமானது, கிளிஞ்சல்கள் மற்றும் துடுப்புள்ள மீன்களை வளம் குன்றாமல் உவர் நீர்நிலைகளில் வளர்த்துநிர்வகித்தல் ஆகும்.
இந்நிறுவனமானது, துடுப்பு மீன் மற்றும் இறால் ஆகியவற்றை சிறிய அளவில் வளர்ப்போருக்கு நவீன தொழில்நுட்பங்களை வழங்கி உதவிபுரிகிறது.
தீவிர மீன் வளர்ப்பு (Intensive Fish Culture):
இது மிகக் குறுகிய இடங்களில் அதிகமான எண்ணிக்கையிலான மீன்களை, உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், செயற்கையான உணவளித்து வளர்க்கும் முறையாகும்.
ஒற்றைவகை மீன்வளர்ப்பு (Mono Culture):
ஒரு வகை மீனை மட்டும் நீர்நிலைகளில் வளர்த்தல் ஒருவகை மீன் வளர்ப்பு எனப்படுகிறது. இது ஒற்றையின மீன் வளர்ப்பு முறை என்றும் அழைக்கப்படுகிறது.
பலவகை மீன்வளர்ப்பு (Poly Culture): ஒன்றுக்கும் மேற்பட்ட மீன் வகைகளை ஒன்றுசேர நீர்நிலைகளில் வளர்த்தல் ஆகும். இது கலப்பு மீன்வளர்ப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த மீன் பண்ணை : விவசாயப் பயிர்கள் அல்லது கால்நடைவளர்ப்புப் பண்ணைகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களை வளர்க்கும் முறையே ஒருங்கிணைந்த மீன் பண்ணை எனப்படுகிறது. நெற்பயிர்,
கோழிகள், கால்நடை, பன்றிகள் மற்றும் வாத்துகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களும் வளர்க்கப்படுகின்றன.
மீனின் பல்வேறு வளர்ச்சி நிலைகளுக்கேற்ப பல்வேறுபட்ட குளங்கள் மீன் பண்ணைகளுக்குத் தேவைப்படுகின்றன. அவையாவன:
இனப்பெருக்க குளம்: ஆரோக்கியமான, இனப்பெருக்கத்திற்கேற்ற, முதிர்ச்சியுற்ற ஆண் மற்றும் பெண் மீன்களானவை சேகரிக்கப்பட்டு இனப்பெருக்கத்திற்காக இக்குளத்தினுள் அனுப்பப்படுகின்றன. பெண் மீன்களால் வெளியிடப்பட்ட முட்டைகள் விந்துக்கள் மூலம் கருவுறுதல் அடைகின்றன. இந்த கருவுற்ற முட்டைகள் நீரின் மேற்பகுதியில் நுரைபோன்று கூட்டமாக மிதந்து காணப்படுகின்றன.
குஞ்சு பொரிக்கும் குழிகள்: இனப்பெருக்கக் குளங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கருவுற்ற முட்டைகள்,
பொரிக்கும் குழிகளுக்கு மாற்றப்படுகின்றன. பொரிப்பகங்கள் மற்றும் பொரிப்பு வலைத்தொட்டிகள் ஆகியவை,
இரண்டு வகையான மீன் பொரிக்கும் குழிகளாகும்.
நாற்றாங்கால் குளங்கள்: குஞ்சு பொரிக்கும் குழிகளில் பொரிக்கப்பட்ட இளம் மீன் குஞ்சுகள் 2 முதல் 7 நாட்களுக்குப் பிறகு,
வளர்க்கும் குளங்களுக்கு மாற்றப்படுகின்றன. இந்த மீன் குஞ்சுகள் 60 நாட்கள் வரை நாற்றாங்கால் குளத்தில் சரியான அளவு உணவு கொடுக்கப்பட்டு 2-2.5 செமீ அளவு வளரும் வரை பாதுகாக்கப்படுகின்றன.
வளர்க்கும் குளங்கள்: இளம் மீன்களை வளர்ப்பதற்கு, வளர்க்கும் குளங்கள் பயன்படுகின்றன. இளம் மீன்கள் நாற்றாங்கால் குளத்திலிருந்து வளர்க்கும் குளத்திற்கு மாற்றப்பட்டு மூன்று மாதம் வரை அதாவது 10 முதல் 15 செமீ நீளமுடைய மீனாக வளரும் வரை வளர்க்கப்படுகின்றன. இங்கு இளம் மீன்கள் இளரிகளாக (fingerlings)மாற்றமடைகின்றன.
இருப்புக் குளங்கள்: இவை வளர்ப்புக்குளம் அல்லது உற்பத்திக்குளம் எனவும் அழைக்கப்படுகின்றன. விற்பனைக்கு ஏற்ற அளவினை அடையும் வரை மீன்குஞ்சுகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.
நன்னீரில் வளர்க்கப்படும் மீன்கள்: இந்திய கெண்டை மீன்கள் -
கட்லா, ரோகு, மிரிகால், கெளுத்தி மீன்கள், விறால் மீன்கள் மற்றும் ஜிலேப்பி மீன்கள் ஆகியவை நன்னீரில் வளர்க்கப்படும் மீன்களாகும்.
கடல்நீரில் வளர்க்கப்படும் மீன்கள்: கொடுவாய் மீன்கள், மடவை, சானஸ் சானஸ் (பால் மீன்) ஆகியவை கடல் நீரில் வளர்க்கப்படும் மீன்களாகும்.
நன்னீர் மற்றும் கடல்நீரில் உணவிற்காக வளர்க்கப்படும் மீன்கள் அதிகளவு ஊட்டச்சத்துடையவையாகவும், விலங்குப் புரதத்திற்கான சிறப்பான ஆதாரமாகவும் மற்றும் எளிதில் செரிக்கும் பண்புடையதாகவும் உள்ளன. இவை முக்கியத்துவம் வாய்ந்த அமினோ அமிலங்களான லைசின் மற்றும் மெத்தியோனைன்களையும்,
நிறைவுறாத கொழுப்பு அமிலங்களையும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுப்பொருள்களையும் கொண்டுள்ளன. கொழுப்பில் கரையும் வைட்டமின்களாகிய ஏ,
டி வைட்டமின்களும் நீரில் கரையும் பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான பைரிடாக்சின், சையனோகோபாலமின் மற்றும் நியாசின் போன்றவைகளும் மீன்களில் காணப்படுகின்றன.
செயல்பாடு 3
அருகிலுள்ள மீன் பண்ணையை மீன்களின் இனப்பெருக்கக் காலத்தில் பார்வையிட்டு கீழ்க்காணும் தகவல்களைப் பெறவும். அ. குளத்தில் காணப்படும் பல்வேறு வகையான மீன்கள் ஆ. வேறுபட்ட வகையான குளங்கள் இ. மீனுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அவற்றை உருவாக்கப் பயன்படும் பகுதிப்பொருட்கள்