Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | தேனீ வளர்ப்பு (Apiculture)
   Posted On :  10.01.2024 06:47 am

11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள்

தேனீ வளர்ப்பு (Apiculture)

நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே மனிதன் தன்னைச் சூழ்ந்துள்ள உயிரினங்களை பல்வேறு விதமான நோக்கங்களுக்குப் பயன்படுத்த அவற்றை வளர்த்து எண்ணிக்கையில் பெருக்கினான்.

தேனீ வளர்ப்பு (Apiculture)

நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே மனிதன் தன்னைச் சூழ்ந்துள்ள உயிரினங்களை பல்வேறு விதமான நோக்கங்களுக்குப் பயன்படுத்த அவற்றை வளர்த்து எண்ணிக்கையில் பெருக்கினான். இதில் முக்கிய கண்டுபிடிப்பானது தேனீக்களால் சேகரிக்கப்பட்ட தேனை மனித பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. வணிக ரீதியாக தேனீ உற்பத்தி செய்வற்காக தேனீக்களை பாதுகாத்து வளர்க்கும் முறை தேனீ வளர்ப்பு (Apiculture or Bee keeping) எனப்படும். அதிக தேன்கூடுகளை கொண்ட தேன்வளர்ப்பிடம் ஏபியரிகள் (Apiaries) எனப்படும். ஏப்பிகல்ச்சர் (Apiculture) என்னும் சொல் Apis என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது. இதற்கு தேனீ என்று பொருள். தேனீ வளர்ப்பிற்கு பயன்படுத்தப்படும் பொதுவான ஐந்து இனங்களாவன: ஏபிஸ் டார்சேட்டா (Apis dorsata - பாறை தேனீ), ஏபிஸ்ஃப்ளோரியா (Apis florae - சின்ன தேனீ), ஏபிஸ்இன்டிகா (Apis indica- இந்திய தேனீ), ஏபிஸ்மெல்லிபெரா (Apis mellifera - ஐரோப்பிய தேனீ)மற்றும் ஏபிஸ் ஆடம்சோனி (Apis adamsoni - ஆப்பிரிக்க தேனீ) போன்றவை ஆகும்.


தேனீக்களின் சமூக கட்டமைப்பு

தேனீக்களில் நன்கு கட்டமைக்கப்பட்ட பணி பகிர்வு முறை காணப்படுகிறது. நன்கு வளர்ச்சி பெற்ற தேனீ கூட்டில் படம் 13.4 ல் காட்டியுள்ளபடி இராணி தேனீ, ஆண் தேனீக்கள் மற்றும் வேலைக்கார தேனீக்கள் என மூன்று வகைகள் உள்ளன. இம்மூன்று வகைகளும் தாம் வாழ்வதற்காக ஒன்றையொன்று சார்ந்துள்ளன. பொதுவாக, ஒரு கூட்டில் ஒரேயொரு இராணி தேனீயும் 10,000 முதல் 30,000 வேலைக்கார தேனீக்களும் சில நூறு ஆண் தேனீக்களும் (drones) உள்ளன.


பொதுவாக, ஒவ்வொரு தேன் கூட்டிலும் இராயல் ஜெல்லியை உணவாக உட்கொள்ளும் ஒரு இராணி தேனீ (செயல்படும் பெண் தேனீ) காணப்படும். வாழ்நாள் முழுமையும் முட்டையிடுதலே இதன் முக்கியப் பணியாகும். இந்த கன்னி இராணி தேனீயானது ஒரேயொரு முறை மட்டும் ஆண்தேனீயுடன் இன சேர்க்கையில் ஈடுபடும். அதற்காக, இனவிருத்திக் காலமான (breeding season) குளிர்காலத்தில் இராணி தேனீயானது பல ஆண் தேனீக்களுடன் கூட்டமாக பறந்து செல்லும். இது கலவிப்பறப்பு (Nuptial flight) எனப்படும். இராணி தேனீ சுரக்கும் பெரமோன்கள் எனப்படும் வேதிப்பொருளால் கவரப்பட்ட ஆண் தேனீயுடன் இனச்சேர்க்கையில் ஈடுபடும். அப்பொழுது, ஆண் தேனீயானது கருவுறுதலுக்கு தேவையான அளவு எண்ணற்ற விந்துக்களை வெளியிடுகிறது. ஒரு இராணி தேனீயானது தனது வாழ்நாளான 2 முதல் 4 வருடங்களில் 15 லட்சம் முட்டைகளை இடுகின்றது. இராணி தேனீ முட்டைகளை இடும் திறனை இழக்கும் பொழுது மற்றொரு வேலைக்கார தேனீயானது இராயல் ஜெல்லியை உண்டு புதிய இராணி தேனீயாக மாறும்.

வேலைக்கார தேனீயானது மலட்டு தன்மையுடைய சிறிய பெண் தேனீயாகும். ஒரு இயந்திரத்தின் முக்கிய கம்பிச்சுருள் போல அமைந்து அனைத்துவிதமான பணிகளையும் மேற்கொள்ளும் வேலைக்கார தேனீ வாழும் அறை வேலைக்காரத்தேனீ அறை (worker cells) எனப்படும். இத்தேனீக்கள் முட்டையிலிருந்து முதிர் உயிரியாக மாற 21 நாட்கள் ஆகும். இதன் வாழ்நாள் 6 வாரங்களாகும். இவை, தனது வாழ்நாளில் பலவகைப்பட்ட பணிகளைச் செய்கின்றன. தன் வாழ்நாளின் முதல் பகுதியில் இராயல் ஜெல்லி சுரத்தல், இளம் உயிரிகளுக்கு உணவூட்டுதல், இராணி தேனீயை உணவுண்ண செய்தல், இராணி தேனீயையும் ஆண் தேனீயையும் பாதுகாத்தல், தேன்மெழுகைச் சுரந்து தேன் கூட்டினை உருவாக்குதல், தேன் கூட்டினை சுத்தப்படுத்துதல், குளிரூட்டுதல், படைவீரராக செயல்பட்டு தேன்கூட்டினை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்யும் செவிலித் தேனீயாக பணியாற்றுகின்றன. மறுபாதியான கடைசி 3 வாரத்தில் தேன், மகரந்தம், புரோபோலிஸ் மற்றும் நீர் போன்றவற்றைத் தேடி சேகரிக்கின்றன.


குறிப்பு


தேனீயானது மலரிலிருந்து தனது நீண்ட குழல்போன்ற நாக்கினால் இனிப்புச் சுவையுடைய பூந்தேனை (nectar) உறிஞ்சி வயிற்றில் சேகரித்து இன்வர்டேஸ் என்ற நொதியுடன் சேர்த்து தேனை உருவாக்குகிறது. இது தேனைக் கெடாமல் பாதுகாத்து, அதை மருத்துவ முக்கியத்துவமுடையதாக மாற்றுகிறது.

கருவுறா முட்டையில் இருந்து உருவாகும் ஆண் தேனீயானது ட்ரோன் (Drone) எனப்படும். இதன் அறை ட்ரோன் செல் எனப்படும். இவை தேனுக்காக முழுமையாக வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்திருக்கின்றன. ட்ரோன்களின் ஒரே பணி இராணித் தேனீயை கருவுறச் செய்வதாகும். இதனால், அவை தேன்கூட்டின் அரசன் (King of the colony) எனப்படுகிறது. புதிய தேன்கூட்டை உருவாக்குவதற்காக இராணி தேனீயானது எண்ணற்ற வேலைக்கார தேனீக்களுடன் பழைய கூட்டத்திலிருந்து பிரிந்து செல்லுதல் ஸ்வார்மிங் அல்லது மொய்த்திரள் எனப்படும். மொய்த்திரளின் போது இராணித்தேனீயை பின்தொடரும் ஆண் தேனீ இராணி தேனீயுடன் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட பின் இறந்து விடும்.


தேன் கூட்டின் அமைப்பு

தேனீயின் இருப்பிடம் தேன் கூடு (hive or comb) எனப்படும். தேன்கூடானது வேலைக்காரத் தேனீக்களின் வயிற்றிலிருந்து சுரக்கும் மெழுகால் கட்டப்பட்ட அறுங்கோண வடிவ அறைகளால் ஆனது. இந்த அறைகள், ஒரு பொதுவான அடிப்பகுதியில் எதிர்எதிர் வரிசையில் அமைந்துள்ளன. தேன்கூடுகள் பாறைகள், கட்டிடங்கள் மற்றும் மரக்கிளைகளில் செங்குத்தாகத் தொங்கிக் கொண்டிருக்கும் (படம் 13.4). வளரிளம் பருவத்தில் உள்ள தேனீக்களானது தேன்கூட்டின் கீழ் பகுதியிலோ மையப்பகுதியிலோ உள்ள அடைகாப்பறைகளில் (brood cells) காணப்படும். பாறை தேனீக்களில் இத்தகைய அடைகாப்பு அறைகள் அளவிலும், அமைப்பிலும் ஒரே மாதிரியாக காணப்படும். ஆனால், மற்ற இனங்களில் இராணி தேனீ, ஆண் தேனீ வேலைக்கார தேனீ என ஒவ்வொரு வகைக்கும் தனித்தனி அடைகாப்பு அறைகள் காணப்படும் (படம் 13.5). தேன்கூட்டின் கீழ்பகுதி தேனீக்கள் வளர்வதற்கும் மேற்புறப்பகுதியானதுதேன், மகரந்தம் போன்றவற்றை சேமிக்கவும் பயன்படுகிறது.



தேனீ வளர்ப்பு முறைகள்

அதிகத் தரம் வாய்ந்த தேனை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். தேனீ வளர்ப்பவர்கள் (Apiculturist) பொதுவாக பழமையான (Indigenous method) முறை மற்றும் தற்கால முறை (Modern method) என இரண்டு வகையான முறைகளை பயன்படுத்துகின்றனர். பழமையான முறையில் மெழுகினாலான தேன்கூட்டிலிருந்து தேன் பிழிந்தெடுக்கப்படும். பழைய முறையில் உள்ள குறைகளை நீக்கி தேன் கூட்டின் அமைப்பை மேம்படுத்தி, புதிய கூடுகள் உருவாக்கப்படுகின்றன. இந்தியாவில் இரண்டு தேன்கூடுகள் புழக்கத்தில் உள்ளன. அவை: 1. லாங்ஸ்ட்ரோத் வகை 2. நியூட்டன் வகை இதில் (படம் 13.5)ல் காட்டியுள்ளபடி லாங்ஸ்ட்ரோத் தேன்கூடானது 6 பகுதிகளைக் கொண்ட மரத்தாலான அமைப்பு ஆகும். அவையாவன தாங்கி, அடிப்பலகை, அடைகாப்பறை (Brood chamber), சூப்பர், உள் உறை, மேல்மூடி. மேற்கண்ட முக்கிய சாதனங்களுடன் சில துணை சாதனங்களும் தேனீ வளர்ப்பில் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன ராணித்தேனீ விலக்கி (Queen excluder), தேனடை அடித்தளம் (comb foundation), தேனீ கையுறை, தேனீ முகத்திரை (Bee veil), புகையுண்டாக்கி (smoker), தேன் கூட்டு சாதனம் (Hive tools), மூடியகற்றும் கத்தி, தேனீ தூரிகை (Bee brush), இராணி தேனீயை அறிமுகப்படுத்தும் கூடு (Queen introducing cage), உணவூட்டி, தேன் பிரித்தெடுப்பான், தேன்கூட்டு வாயில் காப்பான் (Hive Entrance guard).



உங்களுக்குத் தெரியுமா?

தேனீக்கள் கூட்டாக சேர்ந்து வாழ்வது எப்படி என்ற படிப்பினையை நமக்கு கொடுக்கின்றன. ஒரு தேனீ 453.5 மி.லி தேனைச் சேகரிக்க நமது புவியின் சுற்றளவை போன்று இரண்டு மடங்கு தூரம் பயணிக்க வேண்டியுள்ளதன் மூலம் அதன் கடின உழைப்பை அறிந்து கொள்ளலாம்.


தேன் பொருட்களும் அதன் பொருளாதார முக்கியத்துவமும்

தேனும் தேன்மெழுகும் தேனீ வளர்ப்புத் தொழிலில் உருவாகும் முக்கிய பொருட்களாகும்

தேன்

சர்க்கரைக்கு மாற்றாக உதவும் முக்கிய ஊட்டபொருள் தேனாகும். லெவுலோஸ், டெக்ஸ்ட்ரோஸ், மால்டோஸ் மற்றும் சில சர்க்கரை பொருட்களுடன் நொதிகள், நிறமிகள் சாம்பல் மற்றும் நீர் ஆகியவை ஆகியவை தேனின் முக்கிய உட்கூறுகளாகும். இது தாவரங்களின் பூந்தேனிலிருந்து உருவான மணமுள்ள இனிப்பான பொருட்களைக் கொண்டுள்ளது. இது ஒரு இயற்கை உணவு. இதன் சுவையும், மணமும் தேனீக்களால் சேகரிக்கப்படும் மகரந்தத்தைப் பொறுத்தது.

நோய் தடுப்பானாகவும் மலமிளக்கியாகவும், தூக்கத்தை உண்டாக்கவும் பயன்படுத்தப்படும் தேன் ஆயூர்வேத மற்றும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கேக், ரொட்டி மற்றும் பிஸ்கட்டுகள் தயாரித்தலில் பயன்படுகிறது.


தேன்மெழுகு

இரண்டு வார காலம் வளர்ச்சியடைந்த வேலைக்கார தேனீக்களின் வயிற்றுப் புறத்திலிருந்து இத்தேன் மெழுகு சுரக்கப்படுகிறது. தேன் மெழுகானது நன்கு அரைக்கப்பட்டு, தலை சுரப்பிகள் (cephalic glands) சுரக்கும் சுரப்பு நீருடன் கலக்கப்பட்டு பிளாஸ்டிக் போன்ற பிசுபிசுப்பு தன்மையுள்ள பொருளாக மாற்றப்படுகிறது. தேன்மெழுகிலுள்ள பிசுபிசுப்பான வேதிப்பொருள் புரோபோலிஸ் (Propolis) எனப்படுகிறது. இது மகரந்தத் தூளிலிருந்து எடுக்கப்படுகிறது. தூய மெழுகு வெண்மை நிறத்தில் காணப்படும். ஆனால், கரோடினாய்டு நிறமிகளைக் கொண்டிருந்தால் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

தேன் மெழுகானது மெழுகுவர்த்திகள் தயாரிக்கவும், நீர் ஒழுகாமல் தடுக்கக் கூடிய நீர்காப்புப் பொருட்கள் தயாரிக்கவும், தரைகள், மரத்தளவாடப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், தோல் பொருட்கள் மற்றும் தண்ணீர் குழாய் போன்றவற்றை மெருகேற்றவும் பயன்படுகிறது. மேலும், இது தேனடை அடித்தளத் தகடு தயாரிக்கவும் மருந்துப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

11th Zoology : Chapter 13 : Trends in Economic Zoology : Apiculture in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள் : தேனீ வளர்ப்பு (Apiculture) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள்