Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | விலங்கு வளர்ப்பு மற்றும் மேலாண்மை (Animal Husbandry and Management)
   Posted On :  10.01.2024 09:33 am

11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள்

விலங்கு வளர்ப்பு மற்றும் மேலாண்மை (Animal Husbandry and Management)

விலங்கு வளர்ப்பு என்பது இனப்பெருக்க யுக்திகளைப் பயன்படுத்தி கால்நடைகளான பசுக்கள், எருமைகள், ஆடுகள் மற்றும் பறவைகளை வளர்ப்பதாகும்.

விலங்கு வளர்ப்பு மற்றும் மேலாண்மை (Animal Husbandry and Management)

விலங்கு வளர்ப்பு என்பது இனப்பெருக்க யுக்திகளைப் பயன்படுத்தி கால்நடைகளான பசுக்கள், எருமைகள், ஆடுகள் மற்றும் பறவைகளை வளர்ப்பதாகும். போதிய காற்றோட்டம், வெப்பநிலை, போதிய வெளிச்சம், நீர்மற்றும் சரியான இடவசதி ஆகிய காரணிகளை பால் பண்ணை மற்றும் பறவைப் பண்ணை அமைக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டும். விலங்குகள் போதிய கவனத்துடன் நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுதல் அவசியம். பார்வையிட வந்துள்ள கால்நடை மருத்துவரின் பதிவுகளைப் பராமரித்தல் வேண்டும். அதிக உற்பத்தித் திறனும் நோய் தடுப்பாற்றலும் கொண்ட இனங்களைத் தேர்வுசெய்தல் மிகவும் முக்கியமானது


விலங்கு இனப்பெருக்கம்

தொடக்க காலம் முதல் கால்நடைகள் மற்றும் அவற்றின் பொருட்களை நம்பியே மனிதர்கள் உள்ளனர். பொதுவாக, அதிக உற்பத்தித்திறன் உடைய விலங்குகளை இனக்கலப்பு மூலம் உருவாக்கி பறவைப்பண்ணை மற்றும் பால் பண்ணைகளில் பராமரிக்கப்படுகின்றன. தொடக்க காலத்தில் விலங்குகளை அதன் சிறப்புப்பண்புகளின் அடிப்படையிலேயே தேர்வு செய்து வளர்த்து வந்தனர். மரபியல் மற்றும் மரபுக்கடத்தல் தத்துவங்களை அறிந்த பின்னர் இனக்கலப்பு தொழில்நுட்ப ஆய்வுகளைப் பயன்படுத்தி விலங்குகளை வளர்ப்பதில் வெற்றியடைந்து வருகின்றனர். இனக்கலப்பு ஆய்வுகள் மேற்கொள்ளும் போது சிக்கலான பிரச்சனைகளை எதிர்கொண்டதன் விளைவாக உயர்ந்தபட்ச விரும்பத்தக்க பண்புகளைக் கொண்ட விலங்கினங்களையே விலங்கு உற்பத்தியாளர் தேர்வு செய்கின்றனர்.

ஒரு இனம் என்பது பொதுவான அமைப்பு, அளவு, மற்றும் பண்புகள் போன்றவற்றில் ஒத்து காணப்படும் ஒரு இனத்தொகுப்பு ஆகும். இனக்கலப்பு செய்யும் போது தேர்வுக்கலப்பின் (selective breeding) மூலம் மரபு வகையில் மாற்றம் செய்து மேம்பட்ட புதுஇனங்களை உருவாக்கலாம்.


கலப்பின உருவாக்கத்தின் நோக்கங்கள் 

) வளர்ச்சி வீதத்தை மேம்படுத்துதல்.

) பால், இறைச்சி, முட்டை போன்றனவற்றின் உற்பத்தியை உயர்த்துதல்.

) விலங்கு உற்பத்தி பொருட்களின் தரத்தை உயர்த்துதல்.

) நோய்களுக்குஎதிரானதடுப்பாற்றலைமேம்படுத்துதல்.

) இனப்பெருக்க வீதத்தை உயர்த்துதல்.


விலங்கு இனப்பெருக்க வகைகள் 

விலங்குகளின் இனப்பெருக்கம் உள் இனக்கலப்பு மற்றும் வெளியினக்கலப்பு என இரு வகைப்படும்.

உள்இனக்கலப்பு (Inbreeding): 4 முதல் 6 தலைமுறைகளுக்கு ஒரே இனத்தின் விலங்குகளுக்கிடையே இனக்கலப்பு செய்வது உள்இனக்கலப்பு எனப்படும். உள்இனக்கலப்பினால் ஒத்த கருநிலைத்தன்மை (Homozygosity) உயர்கின்றது. இதனால், ஒடுங்கு ஜீன்களின்கொடிய விளைவுகள்வெளிப்படுகின்றன. தொடர் உள்இனக்கலப்பு இனப்பெருக்கத்திறனையும் உற்பத்தித்திறனையும் குறைக்கின்றது. இதன் விளைவாக உள் இனக்கலப்பு தொய்வு / தாழ்வு (Inbreeding depression) ஏற்படுகின்றது. இதைத் தவிர்க்க, இனகலப்பு செய்யவேண்டிய இனத்தொகையிலிருந்து சில விலங்குகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை அதே இனத்தைச் சேர்ந்த, ஆனால், மேற்கூறிய இனத்தொகையுடன் தொடர்பில்லாத, மேம்பட்ட வகையுடன் இனக்கலப்பு செய்யலாம். இது இனப்பெருக்கத்திறனையும் உற்பத்தித் திறனையும் மீட்க உதவுகின்றது.

வெளியினக் கலப்பு (Out Breeding): ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த சந்ததி தொடர்பில்லாத விலங்குகளுக்கிடையே இனக்கலப்பு செய்வது வெளி இனக்கலப்பு ஆகும். இதில் உருவாகும் விலங்குக்கு 4 முதல் 6 தலைமுறை வரை பொது மூதாதையர் கிடையாது. இவ்விதக் கலப்பால் புதிய, விரும்பத்தக்க பண்புகளும் உயர் பண்புகளைக் கொண்ட புதிய கலப்பின உயிரிகளும் தோன்றுகின்றன. இதன் மூலம் விரும்பத்தக்க புதிய ஜீன்கள் இனத்திற்குள் நுழைக்கப்படுகின்றன

i) வெளிக்கலப்பு (Outcrossing): பொது மூதாதையர்களற்ற, தொடர்பில்லாத ஒரே இனத்தின் வெவ்வேறு விலங்குகளுக்கிடையே கலப்பு செய்வது வெளிக்கலப்பு ஆகும். இதனால் வெளிப்படும் இள உயிரிகளுக்கு வெளிக்கலப்பு உயிரிகள் என்று பெயர். இம்முறையை சராசரிக்கும் குறைவான உற்பத்தித் திறன் கொண்ட விலங்குகளிடையே செய்வது உகந்ததாகும்.

ii) குறுக்குக் கலப்பு (Cross breeding): இது உயர்தர பண்புகளை உடைய ஒரு இனத்தின் ஆண் விலங்கு மற்றும் உயர்தர பண்புகளை உடைய மற்றொரு இனத்தின் பெண் விலங்கு, இவற்றின் இடையே செய்யப்படும் கலப்பு ஆகும். இதனால் உண்டாகும் தலைமுறை உயர்தர பண்புகளைக் கொண்டு அமையும் (கலப்பின வீரியம் அல்லது கலப்பினத்திறன்).

iii) சிற்றினங்களுக்கிடையே கலப்பினம் செய்தல் (Interspecific Hybridization): இம்முறையில் இருவேறு சிற்றினங்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் விலங்குகளுக்கு இடையே கலப்பு செய்யப்படுகின்றது. இதனால் உருவாகும் உயிரிகள் பெற்றோர் பண்புகளில் இருந்து மாறுபட்டுக் காணப்படும். இவை பெற்றோர்களின் விரும்பத்தக்க பண்புகளைக் கொண்டிருக்கலாம். கோவேறு கழுதை எனும் உயிரி ஆண் கழுதை மற்றும் பெண் குதிரை இணைவால் தோன்றுவதாகும்


கட்டுப்பாடான இனக்கலப்பு ஆய்வுகள் 

செயற்கை விந்தூட்டம் (Artificial Insemination):  இம் முறையில் ஆண் உயிரியில் இருந்து சேகரிக்கப்பட்ட விந்துநீர்மம் தேர்வு செய்யப்பட்ட பெண் உயிரியின் இனப்பெருக்கப் பாதையினுள் செலுத்தப்படுகின்றது. இம்முறையில் சில காளைகள் மட்டுமே உயர்ந்த பட்ச பயன்பாட்டிற்கு போதுமானது. எனவே இது சிக்கனமான முறையாகும்.


தெரிந்து தெளிவோம்

உருகுதல் என்பது நீர்மமாகுதல் என்பதாகும். விந்து நீர்மம் செயற்கை விந்தூட்டத்திற்காக நீண்ட தூரம் எடுத்துச் செல்லவும் நீண்ட காலம் சேமித்துவைக்கவும் உறைந்தநிலைக்கு எடுத்துச்செல்லப்படுகின்றது. இதனை மெதுவாக அறையின் வெப்பநிலைக்கு கொண்டுவருதலுக்கு உருகுதல் (Thawing) என்று பெயர்.


செயற்கை விந்தூட்டத்தின் நன்மைகள் 

I. இது கருவுறுதல் வீதத்தை உயர்த்துகின்றது.

II. இதனால் இனப்பெருக்க நோய்கள் தவிர்க்கப்படுகின்றன.

III. விரும்பத்தக்க பண்புகள் கொண்ட காளைகள் காயம்பட்டு இருந்தாலும் அவற்றிடமிருந்து விந்து நீர்மம் சேகரிக்கலாம்.

IV. உயர்பண்புகள் கொண்ட விலங்குகள் தொலைவில் இருந்தாலும் அவற்றின் விந்து நீர்மத்தைக் கொண்டு கருவுறச் செய்யலாம்


பல அண்ட வெளியேற்ற கரு மாற்ற தொழில் நுட்பம் (Multiple Ovulation Embryo Transfer Technology - MOET)

விரும்பத்தக்க பண்புகளைக் கொண்ட விலங்குகளைப் பெருக்கும் இன்னொரு முறை MOET ஆகும். இம்முறை, செயற்கை முறை விந்தூட்டத்தின் வெற்றி வீதம் குறைவாக இருக்கும் தருணத்தில் பயன்படுகின்றது. இம்முறையில், ஃபாலிகிள் தூண்டும் ஹார்மோன் (FSH) பசுக்களுக்குச் செலுத்தி நுண்பை செல்களின் வளர்ச்சியும் (follicular cells) மற்றும் தேர்ந்த அண்டச்செல் வெளியேற்றமும் தூண்டப்படுகிறது. இம்முறை மூலம் ஒரு சுழற்சிக்கு ஒரு அண்டச் செல் வெளியேற்றப்படுவதற்கு பதில் 6 முதல் 8 அண்டச் செல்கள்(முட்டை) வெளியேற்றப்படுகின்றன. இம் முட்டைகள் கவனமாக மரபுத் தாயிடம் இருந்து அறுவை சிகிச்சையின்றி வெளியேற்றப்பட்டு செயற்கை கருவூட்டம் செய்யப்படுகின்றது. கருவானது 8 -32 செல் நிலையில் இருக்கும்போது அது வாடகைத் தாயின் கருப்பையில் பதியப்படுகின்றது. மீண்டும் அடுத்தசுற்று அண்ட வெளியேற்றத்திற்கு மரபுத்தாய் பயன்படுகின்றது. இந்தத் தொழில் நுட்பம் பசுவினம், ஆட்டினம் மற்றும் எருமையினங்களில் பயன்படுத்தப் படுகின்றது. இத்தொழில் நுட்பம் அதிக பால் உற்பத்தி செய்யும் பெண் பசுக்களையும் அதிக இறைச்சி தரும் ஆண் காளைகளையும் குறைந்த காலத்தில் உருவாக்கப் பயன்படுகின்றது.


கால்நடை இனங்கள்

பால்பண்ணை என்பது பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியையும் அவற்றைச் சந்தைப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகும். பால் பண்ணை செயல்பாட்டில் கால்நடைகள் பராமரிப்பு, பால் சேகரிப்பு, பால், பால்பொருட்கள் பதப்படுத்துதல் ஆகிய செயல்முறைகள் அடங்கும். இந்தியாவில் 26 கால்நடை இனங்களும் 6 எருமை இனங்களும் உள்ளன. கால்நடைகள் அவற்றின் பயன்கள் அடிப்படையில் 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை கறவை இனங்கள் (Dairy breeds (or) Milch breeds), இழுவை இனங்கள் (Drought purpose breeds), மற்றும் இரு பயன்பாட்டு இனங்கள் (Dual purpose breeds) என்பனவாகும்.

I. கறவை இனங்கள்: இவ்வகை மாடுகள் நீண்ட கறவைக் காலத்துடன் அதிக பால் தரும் தன்மையுடையன (.கா.) சிந்தி, கிர், சாஹிவால், ஜெர்சி, பிரௌன் ஸ்விஸ், ஹோல்ஸ்டீன் ஆகியன.

II. இழுவை இனங்கள்: இவ்வகை காளைகள் இழுவைப்பணிகளுக்கு ஏற்றன.(.கா.) காங்கேயம், மால்வி.

III. இரு பயன்பாட்டு இனங்கள்: இவ்வகையில் பசுக்கள் அதிக பால் தருவன, மற்றும் காளைகள் இழுவை வேலைக்கு உகந்தன (.கா.) ஓங்கோல், ஹரியானா (படம் 13.12).


வளரும் மக்கள் தொகையின் தேவையை எதிர்கொள்ள சிறிய அளவில் பண்ணையமைத்து கறவை இனங்களை வளர்ப்பதை விவசாயிகள் விரும்புகின்றனர். நம்நாட்டில் வெள்ளாடுகளும் பால் உற்பத்தியில் துணைபுரிகின்றன. கங்கை மற்றும் யமுனை நதிக்கரை பகுதியில் உள்ள ஜமுனாபாரி (Jamunapari), பஞ்சாபின் பீடல் (Beetal), உத்திரபிரதேசத்தின் பார் -பாரி (Bar-bari) ஆகியன நல்ல பால் தரும் பசுவினங்கள் ஆகும்.


உங்களுக்குத் தெரியுமா?

வெச்சூர் இனம் உலக கின்னஸ் பதிவுகளின் படி மிகச்சிறிய பசுவினம் ஆகும். சராசரி நீளம் 124 செ.மீ. சராசரி உயரம் 87 செ.மீ

தோற்றம்: வெச்சூர் கிராமம், கோட்டயம் மாவட்டம், கேரள மாநிலம், இவை உண்ணும் உணவைவிட அதிக அளவு பால் தருவன.


தெரிந்து தெளிவோம்

உலக அளவில் அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியாவாகும். இந்தியாவில் பல பிரபலமான பசு மற்றும் எருமை இனங்கள் உள்ளன.

இந்தியாவில் நன்கு அறிமுகமான சில பசுவினங்கள் கிர், சிவப்பு சிந்தி, சஹிவால், ஹல்லிகர், அமிர்தமாகல், கில்லாரி, காங்கேயம், பர்கூர், உம்பளச்சேரி, புலிக்குளம், ஆலம்பாடி, தார்பார்கர், ஹரியானா, காங்க்ரெஜ், ஓங்கோல், கிருஷ்ணா வேலி மற்றும் தியோனி.


கால்நடைகளின் பொதுவான நோய்கள் 

ஒரு நலமான விலங்கு தொடர்ந்து நல்ல முறையில் உண்டு, நீர் அருந்தி நல்ல முறையில் உறங்கும் தன்மையுடையன, நலமான கால்நடைகள் பொலிவுடனும், சுறுசுறுப்பாகவும் மிகை விழிப்புடனும் பளபளப்பான தோலுடனும் காணப்படுகின்றன. நலமற்ற கால்நடைகள் சுறுசுறுப்பின்றி, நிலையற்ற தன்மையுடன் அடிக்கடி தங்களுடைய தோரணையை மாற்றிக் கொண்டும் பால் உற்பத்தித்திறன் குறைந்தும் காணப்படும். முக்கியமான கால்நடை நோய்கள் ரின்டர்பெஸ்ட், கால் மற்றும் வாய் நோய், பசுஅம்மை, இரத்தக்கசிவுடன் காய்ச்சல், ஆந்த்ராக்ஸ் போன்றன.


பால் பொருட்களின் பயன்கள்

பால் பொருட்கள்: கறவை மாடுகள் சுரக்கும் பாலானது பால்மமாக்கப்பட்ட கொழுப்பு மற்றும் லாக்டோஸின் கலவையாகும். பாலில் உள்ள நொதிகளானது பாலைக்காய்ச்சித் தூய்மைப்படுத்தும்போது (Pasteurization) அழிக்கப்படுகின்றது. பாலில் வைட்டமின் A, B1, B2, ஆகியன அதிக அளவுகளில் உள்ளன.வைட்டமின் C குறைவாக உள்ளது. இதன் மிகை உணவூட்ட மதிப்பால் இது குழந்தைகளின் முழுமையான உணவாகக்கருதப்படுகின்றது.பால்பொருட்களான யோகர்ட், பாலாடைக்கட்டி, வெண்ணெய், ஐஸ்கிரீம், சுண்டியபால், தயிர், பால் பவுடர் போன்றவை பாலை பதப்படுத்தி தயாரிக்கப்படுகின்றது. இதனால் பால் பண்ணைத் தொழில் வரவேற்பைப் பெறுகின்றது.

இறைச்சி (Meat): இறைச்சியில் புரதம் அதிகம் உள்ளது. மேலும், இதில் இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும் உள்ளன. மனித உணவிற்குத் தேவையான வைட்டமின்களும் இதில் உள்ளன.

நிலமேலாண்மை: கால்நடைகளின் மேய்ச்சல் சிலசமயங்களில் களைச்செடிகளைக் கட்டுப்படுத்தவும் அவற்றின் வளர்ச்சியைக்குறைக்கவும் பயன்படுகின்றது.

தொழுஉரம்: தொழுஉரத்தை விவசாய நிலங்களில் தெளிப்பதன் மூலம் பயிர் உற்பத்தி உயர்கின்றது.


பறவை வளர்ப்பு

Poultry எனும் ஆங்கில வார்த்தையானது, கோழிகள், வாத்துகள், வான் கோழிகள், காடை மற்றும் கினி கோழிகள் போன்றவற்றை வளர்த்தல் மற்றும் எண்ணிக்கையை பெருக்குதல் எனும் பொருளைக் குறிக்கிறது. பொதுவாக, வணிகரீதியிலான பண்ணைகளில் கோழிகளும் வாத்துகளும் வளர்க்கப்படுகின்றன. பறவைப் பண்ணையானது இறைச்சி, முட்டை மற்றும் இறகு உற்பத்திகளுக்காக உருவாக்கப்படுகிறது. வணிக ரீதியிலான பறவை வளர்ப்பு லாபகரமான தொழில் ஆகும். இப்பாடப்பகுதியில் கோழி மற்றும் வாத்து இனங்களின் வளர்ப்பு முறைகளையும் அதன் நன்மைகளையும் அறியலாம்


கோழியின வகைகள்

நூற்றுக்கும் மேற்பட்ட கோழி இனங்கள் உள்ளன. அவற்றின் பயன்பாட்டினைப் பொறுத்துகோழிகளை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். அவை, முட்டையிடுபவை, கறிக்கோழி அல்லது இறைச்சி வகை, இரு பயன்பாட்டு வகை, விளையாட்டு வகை மற்றும் அலங்கார வகை ஆகியன (படம் 13.13).


1. முட்டையிடுபவை

இவை முட்டை உற்பத்திக்காக வேவளர்க்கப்படுகின்றன.

லெக்ஹார்ன்

இத்தாலியிலிருந்து தோன்றிய கோழியினம் லெக்ஹார்ன் ஆகும். இது இந்தியாவில் வணிக ரீதியில் புகழ்பெற்ற இனமாகும். அளவில் சிறியதாகவும், அடக்கமான உருவத்துடன் ஒற்றைக் கொண்டை மற்றும் கீழ்த்தாடையில் தசைத்தொங்கலுடனும் காணப்படும். இது வெண்மை, பழுப்பு மற்றும் கருப்பு நிறங்களில் காணப்படும். இக்கோழியினம் விரைவில் முதிர்ச்சியடைந்து 5 முதல் 6 மாதங்களில் முட்டை இடத்துவங்குகின்றன. எனவே, வணிகரீதியாக பண்ணைகளில் இவை விரும்பப்படுகின்றன. வறண்ட பகுதிகளிலும் இது நன்கு வளரும்

சிட்டகாங்

மேற்கு வங்கத்தில் முதன்மையாகக் காணப்படும் ஒரு இனம். இவை பொன்னிற அல்லது வெளிர் மஞ்சள் நிறத்துடன் உள்ளன. அலகு நீண்டும் மஞ்சள் நிறத்துடனும் உள்ளது. காது மடல்களும் கீழ்த்தாடை தசைத்தொங்கலும் சிவப்பு நிறத்துடன் சிறியதாகக் காணப்படும். இவை முட்டையிடுவதில் சிறந்தவை மற்றும் சுவை மிகுந்தவை.

2. பிராய்லர் வகை (கறிக்கோழி வகை): வேகமாக வளர்ச்சியடைந்து, மென்மையான, தரமான இறைச்சியைக் கொடுப்பவை இவ்வகைக் கோழிகள்ஆகும்.

வெள்ளை பிளைமவுத் ராக்

இவை உடல் முழுவதும் வெண்ணிற இறகுகளைக் கொண்டவை. இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு அமெரிக்க இன வகை. இது வேகமாக வளரக்கூடியது. பண்ணை வளர்ப்பிற்கு ஏற்றது.

3. இரு பயன்பாட்டு இனங்கள்: இவ்வகைக் கோழிகள் இறைச்சிக்காகவும் முட்டை உற்பத்திக்காகவும் பயன்படுகின்றன.


பிரம்மா

இக்கோழிகள் பெரிய திரட்சியான உடலும் கனமான எலும்புகளும் நல்ல இறகுகளும் சரியான உடல் அளவையும் கொண்டவை.பட்டாணிக்கொண்டை இதன் முக்கியப்பண்பாகும். இதில் வெளிர்நிற பிரம்மா மற்றும் அடர்நிற பிரம்மா என இருவகை உண்டு


4. விளையாட்டு வகைகள்: பழங்காலம் தொட்டே சேவற்சண்டை விளையாட்டிற்கென சில சேவல் வகைகள் வளர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன

அசீல்

இவ்வினக்கோழிகள் வெள்ளை அல்லது கருமை நிறத்துடன் உள்ளன. கோழிகள் அதிக எண்ணிக்கையிலான முட்டைகளை இடுவதில்லை. ஆனால், அடைகாப்பதில் சிறந்தவை. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காணப்படுகிறது. இவற்றின் ஆக்ரோஷமான சண்டையிடும் பண்பு, உறுதியான உடல், கம்பீரமான தோற்றம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். இவை, குறைந்த உற்பத்தியாளர்கள் என்றாலும் அவற்றின் இறைச்சியின் தரம் நன்றாக உள்ளது.

அலங்கார வகைகள் :66

6முட்டை மற்றும் இறைச்சிக்காக மட்டுமல்லாமல்,அலங்காரவகைக்கோழிகள்,நட்புவிலங்குகளாகவும் வளர்க்கப்படுகின்றன.

சில்க்கி

இவ்வகைக்கோழிகள்சிறப்பான,பட்டுப்போன்ற மிருதுத்தன்மையுடன் கூடிய இறகுப்போர்வையுடன் காணப்படுகின்றன. இவ்வகைக்கோழிகள் கருப்புத்தோல் மற்றும்எலும்புகளையும்,ஊதாநிறக்காதுமடல்களையும் வ்வொரு காலிலும் ஐந்து விரல்களையும் மற்றபண்புகளாகக் கொண்டு காணப்படுகின்றன. பெரும்பாலான கோழிகளில் நான்கு விரல்கள் மட்டுமே உள்ளன. பல்வேறு வண்ணங்களில் உள்ள இவை கோழிக் கண்காட்சிகளில் காட்சிப் பொருளாக வைக்கப்படுகின்றன. சில்க்கி வகை கோழிகள் அமைதியான சுபாவத்திற்கும் நட்பாகப் பழகும் விதத்திற்கும் சிறந்தவை. சில்க்கி வகைக் கோழிகள் செல்லப்பிராணிகளாக வைத்திருக்க ஏற்றவை.

பண்ணைக்கோழி வளர்ப்பு முறைகள் 

இறைச்சிக்கோழி மற்றும் முட்டையிடும் கோழிகளை வளர்க்க வேறுபட்ட முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை, கட்டுப்பாடின்றி வளர்க்கப்படுபவை, கரிம முறை, முற்றத்தில் வளர்க்கும் முறை, கூண்டு வளர்ப்பு முறை மற்றும் வசதியான கூண்டு வளர்ப்பு முறை போன்றவையாகும்.

பெரிய பண்ணைகளில் கூண்டு வளர்ப்பு முறையில் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. மற்ற முறைகளும் சூழல் நட்பு முறைகளாக உள்ளன. இம்முறைகளில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் சந்தைகளில்அதிகம்விற்கப்படுகின்றன.

வளர்ப்பு முறையின் நிலைகள்

கோழி வளர்ப்பில் சில நிலைகள் உள்ளன.

1) சிறந்த முட்டையிடும் கோழிகளைத் தேர்ந்தெடுத்தல்: புத்திக்கூர்மையுடைய சுறுசுறுப்பான, பளபளப்பான கொண்டைகளையுடைய, அதிக பருமன் இல்லாத கோழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

2) முட்டைகளைத்தேர்ந்தெடுத்தல்:முட்டைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். வளமையான, நடுத்தர அளவுள்ள, அடர் பழுப்பு நிறமுடைய, ஓடுகளுடைய மற்றும் புதிதாக இடப்பட்ட முட்டைகள் அடைகாத்தலுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. முட்டைகளைநன்கு கழுவி சுத்தம் செய்து உலர்த்திப் பயன்படுத்த வேண்டும்.

3) அடைகாத்தலும் குஞ்சு பொரித்தலும்: புதிதாக இடப்பட்ட முட்டைகளிலிருந்து குஞ்சு பொரித்து வெளிவரும் வரை அவற்றை உகந்த சூழ்நிலைகளில் வைத்து பராமரித்தல் அடைகாத்தல் எனப்படும். வளர்ச்சியடைந்த கோழிக்குஞ்சானது அடைகாத்தல் காலமான 21-22 நாட்கள் கழித்து முட்டையிலிருந்து வெளிவருகின்றன. இதில் இருவகை அடைகாத்தல் உள்ளன. அவை, இயற்கை மற்றும் செயற்கை அடைகாத்தல் எனப்படும். இயற்கை அடைகாத்தல் முறையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முட்டைகளை பெண் கோழி அடை காக்கிறது. செயற்கை அடைகாத்தலில் இன்குபேட்டர்என்னும் கருவியின் மூலம் அதிக எண்ணிக்கையிலான முட்டைகளை அடை காக்கலாம்.

4) பேணிக்காத்தல்: பொரித்து வெளிவந்த சிறிய கோழிக்குஞ்சுகளை 4 முதல் 6 வாரங்களுக்கு கவனத்துடன் மேலாண்மை செய்யும் முறை பேணிக்காத்தல் எனப்படும். இதுவும் பேணிகாக்கும் தன்மையின் அடிப்படையில் இயற்கை மற்றும் செயற்கை முறை என இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன

பறவை வளர்த்தலுக்கான இடவசதி 

வெயில்,மழைமற்றும்கொன்றுண்ணிகளிடமிருந்து பறவைகளைப் பாதுகாக்கசரியான இடவசதி அளித்தல் அவசியம். இவ்விடங்கள் ஈரத்தன்மையற்றும்,எலித்தொல்லை இல்லாமலும், சுலபமாக சுத்தம் செய்யக் கூடியதாகவும், நீண்டநாள் தாங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்

ஊட்டப்பொருட்கள்

கோழிகுஞ்சுகளின் முறையான வளர்ச்சிக்குத் தேவையான உணவு, நீர், கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் ஆகியவற்றை சரியான அளவில் கொண்டிருக்க வேண்டும்.

பறவை வளர்ப்பின் உற்பத்திப்பொருட்கள் 

முட்டையும், மாமிசமும் பறவை வளர்ப்பின் முக்கிய உற்பத்தி பொருட்களாகும். இந்தியாவில் பறவை வளர்ப்பின் முக்கிய நோக்கம் முட்டை உற்பத்தியே. முட்டையும், மாமிசமும் அதிகளவில் புரதமும் வைட்டமின்களும் நிறைந்த உணவாகும்.

பறவை வளர்ப்பினால் கிடைக்கும் துணை பொருட்கள்

பறவை இறகுகள், தலையணைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் (quilts) தயாரிக்க பயன்படுகிறது. பறவை எச்சத்தில் நைட்ரஜன், பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட் போன்ற உயர்சத்து பொருட்கள் நிறைந்துள்ளதால் மிகச்சிறந்தஉரமாக பயன்படுத்தப்படுகிறது.

பறவை வளர்ப்பகத்திலிருந்து உருவாகும் இரத்த உணவு, இறகுணவு, உபபொருள் உணவு மற்றும் முட்டை பொரிப்பகத்திலிருந்து உருவாகும்பொருட்கள் போன்றவை மாமிசத்திற்காக வளர்க்கப்படும் விலங்கு மற்றும் பறவை வளர்ச்சிக்கு நல்ல உணவாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், இப்பொருட்களில் விலங்குகள் வளர்ச்சிக்குத் தேவையான புரதங்கள், கொழுப்பு வைட்டமின்கள் மற்றும் அதிகளவிலான தனிம ஊட்டங்கள் நிறைந்துள்ளன.

பறவை நோய்கள்

ராணிகெட், காக்சிடையோசிஸ் மற்றும் கோழி அம்மை போன்றவை பறவைகளை தாக்கும் பொதுவான நோய்களாகும்.

பறவை வளர்ப்பின் பயன்கள்

1. பறவை வளர்ப்பகம் உருவாக்கவும் மேலாண்மை செய்யவும் அதிக மூலதனம் தேவையில்லை.

2. அதிகளவிலான இடப்பரப்பு தேவையில்லை

3. குறைந்த காலத்தில் அதிகளவு லாபம் தரக்கூடியது.

4. புதியஊட்ட சத்து மிக்க பொருட்களை தருகின்றன. இதற்கு உலக அளவிலான தேவை அதிகம் உள்ளது.

5. அதிகளவு வேலை வாய்ப்பினை உண்டாக்கப் பயன்படுகிறது.

குறிப்பு

பல்வேறுவகையான கொன்றுண்ணிகளின் வருகைபற்றி நண்பர்களை எச்சரிக்கவும், தங்களின் நலம் பற்றி தாய்க்கு அறிவிக்கவும் கோழிகள்தனித்தன்மையுள்ள 24ற்கும் மேற்பட்ட, ஒலிகளைக் கொண்டு தம்முள் தொடர்பு கொள்கின்றன.


வாத்து வளர்ப்பு

வாத்து நீரில் வாழக்கூடிய பறவையாகும். இது நம்நாட்டு பறவைகளில் 6% வளர்ப்பின உயிர்த்தொகையைப் பெற்றுள்ளது. 20 வகைபட்ட வாத்துஇனங்கள்இவ்வளர்ப்பில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியன் ரன்னர் மற்றும் சைலட்மெட்டா போன்றவை நாட்டு இனங்களைச் சார்ந்தவை. மஸ்கோரி, பெகின், அய்ல்ஸ்பரி மற்றும் கேம்பெல் போன்றவை வெளிநாட்டு இனங்களாகும். காட்டு இனமான மாலார்டு (அனஸ் போஸ்கஸ்) எனப்படும் வாத்தினத்திலிருந்து வீட்டில் வளர்க்கப்படும் வாத்தினங்கள் உருவாக்கப்பட்டன. நீர் உயிரி வளர்ப்பியலுடன் சேர்த்து வாத்து பண்ணை அமைப்பது அதிக லாபமீட்டக் கூடியது ஆகும்.

வாத்தின் தனி பண்புகள்

உடல் முழுமையும் நீர் ஒட்டாதன்மையுள்ள (Oily feathers) இறகுகளால் மூடப்பட்டுள்ளது. தோலின் கீழுள்ள ஓரடுக்கு கொழுப்புபடலம் இறகுகளை ஈரத்தன்மை அடையாமல்பாதுகாக்கிறது. இவை காலையிலோ அல்லது இரவிலோ முட்டையிடுபவை. இவை அரிசித் தவிடு, சமையலறை கழிவுகள், மீன் மற்றும் நத்தைகளை உட்கொள்ளக் கூடியவை.

வளர்ப்பு இனங்கள்

பயன்பாட்டின் அடிப்படையில் வாத்தினங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை கறிக்காகப் பயன்படும் இனங்கள், முட்டை உற்பத்திக்குப் பயன்படும் இனங்கள், கறிக்காகவும், முட்டைக்காகவும் பயன்படும் இரு பயன்பாட்டு இனங்கள் என்பன ஆகும்.

வாத்து வளர்ப்பின் நன்மைகள்

இவற்றை நீருள்ள சிறிய புழக்கடைப்பகுதிகளிலும் வளர்க்கலாம். இவற்றிற்கு குறைவான பராமரித்தலும் மேலாண்மையும் போதுமானது. இவை அனைத்து சூழ்நிலைகளிலும் தகவமைத்து வாழும் தன்மை கொண்டவை. இவ்வகை விலங்குகள், நல்ல உணவுண்ணும் திறனும் வளரும் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு தன்மையும் கொண்டவை.

11th Zoology : Chapter 13 : Trends in Economic Zoology : Animal Husbandry and Management in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள் : விலங்கு வளர்ப்பு மற்றும் மேலாண்மை (Animal Husbandry and Management) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள்