பாடச் சுருக்கம்
மனித நலவாழ்விற்குப் பயன்படும் விலங்குகள் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு வணிக விலங்கியல் ஆகும். இவ்விலங்கியல் பிரிவு உணவு பாதுகாப்பையும், வேலைவாய்ப்பையும் உருவாக்குவதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது. பொருளாதார முக்கியதுவத்தின் அடிப்படையில் விலங்குகள் கீழ்க்கண்டவாறு வகைபடுத்தப்படுகிறது.(1) உணவுக்காகப்பயன்படும் விலங்குகள்(2) பொருளாதார முக்கியதுவம்வாய்ந்த விலங்குகள். (3)அழகுக்காகப் பயன்படும் விலங்குகள். (4) அறிவியல் ஆய்விற்காகப் பயன்படும் விலங்குகள். மண்புழு வளர்ப்பு என்பது மண்புழுக்களை பயன்படுத்தி கரிம உணவு பொருட்களை சிதைத்து அவற்றை நிலையான தாவர வளர்ச்சிக்கு தேவையான ஊட்ட பொருட்களாக மாற்றுவதாகும். பட்டு வளர்ப்பு என்பது பட்டு பூச்சியிலிருந்து பட்டு இழைகளை உருவாக்குவதாகும். வேளாண் சார்ந்த தொழிலான இது 3 நிலைகளைக் கொண்டுள்ளது. பட்டுப் புழுக்களுக்குத் தேவையான உணவு தாவரங்களை வளர்த்தல், பட்டு புழுக்களை வளர்த்தல், பட்டு இழைகளை உருவாக்குதல். தேன் உற்பத்திக்காக தேனீக்களை வளர்த்து பராமரித்தலே தேனீ வளர்ப்பு அல்லது ஏப்பிகல்சர் எனப்படும். அரக்கு பூச்சியிலிருந்து அரக்கு உருவாக்கப்படுகிறது.
அக்குவா போனிக்ஸ் (நீர் உயிரி - பயிர் வளர்ப்பு) என்பது நீர் உயிரி வளர்ப்பியலும் (aquaculture) நீர்தாவர வளர்ப்பியலும் (hydroponics) சேர்ந்த தொழில் நுட்பமாகும். இது மீன்களின் கழிவுபொருட்களை மறுசுழற்சி செய்து சூழ்நிலை மண்டலத்தைச் சமநிலைப்படுத்தவும், நீரோட்டத்தின் நச்சுதன்மையை குறைக்கவும் பயன்படுகிறது. நீர் உயிரி வளர்ப்பியல் எனப்படுவது, நீர் வாழ் உயிரிகளை பற்றிப்படிப்பதாகும். நீரின் ஆதாரவளத்தை அடிப்படையாகக் கொண்டு நீர் உயிரி வளர்ப்பியலானது நன்னீர் வளர்ப்பு, கழிமுக நீர்உயிரி வளர்ப்பு, கடல்நீர் உயிரிவளர்ப்பு என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மீன்கள், இறால்கள், நண்டுகள் மற்றும் சிப்பிகள் ஆகியவற்றை வளர்த்தல் அடங்கும். விலங்கு வளர்ப்பு என்பது பசு, எருமை, ஆடு, கோழி போன்ற பயனுள்ள விலங்குகளை வளர்ப்பதாகும். இது மனிதனுக்கு அதிகளவில் பயன்படக்கூடியது. பாலும், பால் சார்ந்த பொருட்களையும் உற்பத்தி செய்து வினியோகம் செய்வது பால்சார் தொழில் (Dairy) எனப்படும். பால்சார் தொழிலில் கால்நடைகளை முறையாக மேலாண்மை செய்வது, பால்பொருட்களை சேகரிப்பது, பால்சார்ந்த பொருட்களை தயாரிப்பது போன்றவை அடங்கும். பறவை வளர்ப்பு என்பது கோழி, வாத்து, வான்கோழி, நீள்கழுத்து வாத்து (geese) காடை, கினி கோழி போன்ற பறவையினங்களை வளர்த்து பெருக்குதல் ஆகும். பயன்பாட்டின் அடிப்படையில் பொதுவாக பறவைகளை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன, முட்டையிடுபவை, கறியினம், இரு பயன்பாட்டு இனம், விளையாட்டினம் மற்றும் அலங்கார இனம் ஆகியவையாகும்.