மீன் வளர்ப்பு
வளர்ப்பு மீன்களின் பண்புகள்
வளர்க்கப்படும் மீன்களின் சிறப்புப் பண்புகளாவன:
I. குறைந்த வளர்ப்பு காலத்தில் அதிக வளர்ச்சி வீதம் கொண்டவை.
II. வழங்கும் துணை உணவை ஏற்றுக்கொள்பவை.
III. சில பொதுவான நோய்களை தாங்கும் திறன் மற்றும் ஒட்டுண்ணிகள் தாக்கத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்டவை.
IV. கலப்பு மீன் வளர்ப்பிற்கு உட்படுத்தும் மீன்கள், பிற இன மீன்களை தாக்காமலும், மற்றவை அவற்றின் இயல்பில் குறுக்கிடாமலும் இணைந்து வாழும் தன்மையுடையனவாக இருப்பது அவசியம்.
V. வழங்கப்படும் உணவை உடல் பொருளாக மாற்றும் திறன் மிகுதியாக இருத்தல் அவசியம்.
வளர்ப்பு மீன்களின் வகைகள்
வளர்ப்பு மீன்களை 3 வகைகளாகப் பிரிக்கலாம் (படம் 13.8).
அ) உள்நாட்டு (அல்லது) உள்ளூர் நன்னீர் மீன் வகைகள் (Indigenous or native freshwater fishes) (பெருங்கெண்டைகளான (Major carps) கட்லா, லேபியோ மற்றும் கெழுத்திமீன்).
ஆ) நன்னீரில் வாழும் தன்மை கொண்ட உவர் நீர் மீன்கள் (பால்மீன், மடவை).
இ) வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்கள் (சாதா கெண்டைகள்) (Common carps).
அனைத்து மீன்களிலும் பெருங்கெண்டைகள் இந்தியாவில் வளர்க்க மிகப் பொருத்தமான இனங்களாக கருதப்படக் காரணங்கள்:
1. விலங்கு மிதவை உயிரிகள், தாவர மிதவை உயிரிகள், அழுகும் களைச்செடிகள், கழிவுகள் மற்றும் நீர்த் தாவரங்களை உண்ணும் தன்மை.
2. கலங்கல் தன்மை அதிகமுள்ள, சிறிதளவு உயர் வெப்ப நிலையுடைய நீரிலும் வாழும் தன்மை.
3. நீரிலுள்ள O2 மாறுபாட்டை தாங்கும் திறன்.
4. ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குகொண்டு செல்வது எளிது.
5. இவை அதிக உணவூட்ட மதிப்பு கொண்ட உண்ணத் தகுந்த மீன்கள் ஆகும்.
மீன்வளர்ப்பை பாதிக்கும் புறக் காரணிகள்
வெப்பநிலை, ஒளி,மழைநீர், வெள்ளம், நீரோட்டம், நீரின் கலங்கல் தன்மை, அமில-காரத்தன்மை (pH), உப்புத்தன்மை மற்றும் கரைந்துள்ள O2போன்ற காரணிகள் மீன்வளர்ப்பை பாதிக்கும் புறக் காரணிகள் ஆகும். ஒளியும், வெப்பநிலையும் மீன் இனப்பெருக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மீன் பண்ணை பராமரிப்பு
மண்ணின் தன்மை, நீரின் தரம், நீராதாரம், நீரின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் காரணிகள் போன்ற மீன்வளர்ப்பின் பல்வேறு நிலைகளை மீன்வளர்க்க விரும்புவோர் அறிந்திருத்தல் வேண்டும். இனப்பெருக்கம், பொரித்தல், பேணுதல், பராமரிப்பு மற்றும் இருப்பு வைத்தல் போன்றனவற்றை சரிவர பராமரித்தல் வேண்டும். கீழ்க்காணும் பல்வேறு வகை குளங்கள் மீன்களின் பல்வேறு நிலைகளைக் கருத்தில் கொண்டு பராமரிப்பிற்காக பரிந்துரைக்கப்படுகின்றது.
இனப்பெருக்கக் குளம்
மீன் வளர்ப்பின் முதல்படி நிலை இனப்பெருக்கம் ஆகும். இனப்பெருக்கம் சரியாக நடைபெற இனப்பெருக்க குளம் தேவைப்படுகிறது. இவ்வகைக் குளங்கள் ஆறு அல்லது இயற்கை நீர் வளங்களின் அருகில் உருவாக்கப்படுகின்றன.
இனப்பெருக்க முறைகள்: இரண்டு வகை இனப்பெருக்க முறைகள் காணப்படுகின்றன. (1) இயற்கை முறை (2) தூண்டப்பட்ட இனப்பெருக்கம்.
1. இயற்கை முறை இனப்பெருக்கம் (Natural Breeding - Bundh Breeding)
இவை வளர்ப்பு மீன்களின் இனப்பெருக்கத்திற்காக பராமரிக்கப்படும் சிறப்புத் தன்மை வாய்ந்த குளங்களாகும். அதிக அளவு மழைநீரைத் தேக்கி வைக்கக்கூடிய பெரிய தாழ்மட்டப் பகுதிகளில் இவற்றின் வரப்புகள் அமைக்கப்படுகின்றன. இவ்வமைப்பின் ஆழம் குறைந்த பகுதிகள் குஞ்சு பொரிப்பு இடமாக பயன்படுத்தப்படுகின்றன.
2. தூண்டப்பட்ட இனப்பெருக்கம் (Induced Breeding)
பொதுவாக, விதை மீன்களை இனப்பெருக்கப் பரப்பிலிருந்து சேகரிக்கலாம். ஆனால், அனைத்து விதை மீன்களும் ஒரே இனத்தைச் சார்ந்ததாக அமைவது சாத்தியமற்றது. எனவே தரமான விதைமீன்களை உற்பத்தி செய்ய செயற்கை முறைக் கருவுறுதல் மற்றும் தூண்டல் இனப்பெருக்கம் எனும் மேம்பட்ட தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. செயற்கை கருவுறுதல் முறையில் மீன்களின் அண்ட செல்களும் விந்து செல்களும் சேகரிக்கப்பட்டு செயற்கை முறையில் கருவுறச் செய்யப்படுகின்றன. செயற்கை முறை கருவுறுதலுக்கு பெண் மீனின் அடிவயிற்றுப் பகுதியை நேராகப் பிடித்து வலது கை பெருவிரலால் வயிற்றின் முன்புறத்திலிருந்து பின்புறம் நோக்கி அழுத்தி முட்டைகள் தனியாக சேகரிக்கப்படுகின்றன. ஆண் மீனின் வயிற்றுப்பகுதி கீழ்நோக்கி இருக்கும்படி பிடித்துமேற்கூறிய முறையில் விந்து செல்கள் சேகரிக்கப்பட்டு, பின்னர், கருவுறுதலுக்காக இரண்டும் கலக்கப்படுகின்றன.
தூண்டப்பட்ட னப்பெருக்கம் ஹைபோஃபைசேஷன் (Hypophysation) முறையிலும் செய்யலாம். இம்முறையில் பிட்யூட்டரி ஹார்மோனான கொனடோட்ரோபின் ஹார்மோனைப் (FSH & LH) பயன்படுத்துவதால் மீன்களின் இனவுறுப்புகளின் முதிர்ச்சி மற்றும் முட்டை வெளிப்படுதல் தூண்டப்படுகின்றது. முதிர்ந்த ஆரோக்கியமான மீனில் இருந்து பிட்யூட்டரி சுரப்பி எடுக்கப்படுகிறது. எடுக்கப்பட்ட பிட்யூட்டரி சுரப்பியை 0.3% உப்புக்கரைசல் அல்லது கிளிசரின் சேர்ந்து அரைத்து (Homogenising) மையவிலக்கு சுழலியில் (centrifuge) 8000rpm ல் 15 நிமிடங்கள் மையவிலக்கம் செய்யப்படுகிறது. பின்னர், சேகரிக்கப்பட்டு வடிகட்டிய பிட்யூட்டரி கரைசலை மீன்களின் வால் துடுப்பின் அடிப்பகுதியில் தசைகளுக்கிடையிலோ அல்லது மார்புத்துடுப்பின் அடிப்பகுதியில் பெரிடோனியத்திலோ செலுத்தி மீன்களில் இனப்பெருக்கம் தூண்டப்படுகின்றது. ஆண் மற்றும் பெண் மீன்களில் இருந்து சேகரிக்கப்பட்ட இனச்செல்கள் (விந்து மற்றும் அண்ட செல்கள்) சேர்ந்து கருவுறுதல் நடைபெறுகிறது. கருவுற்ற முட்டைகள் சேகரிக்கப்பட்டு ஹாப்பா என்னும் பொரிப்பகங்களில் விடப்படுகின்றன.
மீன்விதைகள்
இனப்பெருக்கக் குளத்தில் இருந்து பென்சிஜால் (Benchijal) எனும் எறி வலையைக் (Shooting net) கொண்டு மீன் கருமுட்டைகள் அல்லது மீன் விதைகள் சேகரிக்கப்பட்டு பொரிப்புக் குளத்திற்கு மாற்றப்படுகின்றது.
பொரிப்புக்குழி
கருவுற்ற முட்டைகள் பொரிப்புக்குழியில் வைக்கப்படுகின்றன. பொரிப்புக்குழி இனப்பெருக்கத் தளத்திற்கு அருகில் இருப்பது அவசியம். இந்தச் சிறிய அமைப்பில் நல்ல தரமான நீர் இருக்க வேண்டும். பொரிப்புக் குழி 2 வகைப்படும். பொரிப்புக்குளம் (Hatcheries) என்பது சிறிய குளமாகும். இதில் கருவுற்ற முட்டைகள் விடப்பட்டு பொரித்தல் நடைபெறுகின்றது. பொரிப்பக ஹாப்பா (Hapa) என்பது கொசுவலைத் துணியால் உருவாக்கப்பட்ட செவ்வக வடிவத் தொட்டியாகும். இத்தொட்டியின் நான்கு மூலைகளும் மூங்கில் கழிகளால் வலுவூட்டப்பட்டுஆற்றில்பொருத்தப்படும் அமைப்பு ஆகும் (படம் 13.9).
நாற்றங்கால் குளம் (Nursery Pond)
பொரித்த இளம் மீன்குஞ்சுகள் (fries) ஹாப்பாவில் இருந்து நாற்றங்கால் குளத்திற்கு அனுப்பப்படுகின்றது. இங்கு இவை வளர்ந்து விரலி (Fingerlings) களாகின்றன.
பராமரிப்புக் குளம் (Rearing Pond)
விரலிகள் நாற்றங்கால் குளத்தில் இருந்து பராமரிப்புக் குளத்திற்கு மாற்றப்படுகின்றன. குறுகலான நீண்ட பராமரிப்புக்குளத்தில் விரலிகள் நீண்ட தூரம் நீந்த இயலும். இக்குளத்தில் நச்சுப்பொருட்களும் கொன்றுண்ணிகளும் இல்லாமை அவசியம். நோய் எதிர்ப்புப் பொருளைக் கொண்டு தூய்மை செய்யப்பட்ட விரலிகள் இருப்புக் குளத்திற்கு மாற்றப்படுகின்றன.
இருப்புக்குளம் (Stocking Pond)
இருப்புக்குளத்தில் களைகளும் கொன்றுண்ணி மீன்களும் இருக்கலாகாது. மாட்டுச்சாணம் கொண்டு (கரிம தொழுஉரம்) உற்பத்தித் திறன் மேம்படுத்தப்படுகின்றது. வேதி உரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
அறுவடை செய்தல் (Harvesting)
அறுவடை செய்தல் என்பது நீர்நிலையில் இருந்து மீன்களை பிடித்தல் ஆகும். நன்கு வளர்ந்த மீன்களை அறுவடை செய்து சந்தை படுத்துகின்றனர். சிறிய மீன்கள் மேலும், வளர்ச்சியடைய, இருப்புக் குளத்திற்குள்மீண்டும் விடப்படுகின்றன. பல்வேறு மீன்பிடி வகைகள் பயன்பாட்டில் உள்ளன. அவை துரத்திப் பிடித்தல், தூண்டில் போட்டு பிடித்தல், கண்ணிவைத்து பிடித்தல், மூழ்கு வலை, வீச்சு வலை, செவுள் வலை, இழுவலை, மற்றும் பர்ஸ் வலை ஆகியவற்றை பயன்படுத்துதல் போன்றவையாகும். பிடிக்கப்பட்ட மீன்கள் குளிர்பதனம், ஆழ் உறை நிலை முறை, உறைவு உலர்த்தல், சூரிய ஒளியில் உலர்த்தல், உப்பிடல், புகையூட்டல், பெட்டிகளில் அடைத்தல் ஆகிய முறைகளில் பதப்படுத்தப்படுகிறது.
கூட்டு மீன்வளர்ப்பு (Composite Fish Farming)
வெவ்வேறு சிற்றினங்களைச் சார்ந்த சில மீன்களை குறிப்பிட்ட விகிதத்தில் குளத்தில் ஒன்றாக வளர்க்கும் முறை கூட்டு மீன் வளர்ப்பு அல்லது பலமீன் வளர்ப்பு (Polyculture) ஆகும். இம்முறையின் நன்மைகள்
1. கிடைக்கக்கூடிய சூழ்நிலைக்கூறுகள்முழுவதையும் பயன்படுத்துதல்.
2. பொருத்தமான சிற்றினங்கள் ஒன்றை ஒன்று பாதிக்காது.
3. இவ்வளர்ப்பில் உள்ள சிற்றினங்களுக்கிடையே போட்டி இருக்காது.
கட்லா கட்லா (Catla catla), லேபியோ ரோஹிட்டா (Labeo rohita), சிர்ரைனா மிர்காலா (Cirrhinus mrigala) போன்றன கூட்டு மீன் வளர்ப்பு முறையில் வளர்க்கும் மீன்கள் ஆகும்.
வெளிநாட்டு மீன் வளர்ப்பு (Exotic Fishes)
மீன் வளர்ப்பிற்காக பிற நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மீன்கள் வெளிநாட்டு மீன்கள் எனப்படும். வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மீன்களை உள்நாட்டில் வளர்க்கும் முறைக்கு வெளிநாட்டு மீன் வளர்ப்பு என்று பெயர்.
சிப்ரினஸ் கார்பியோ (Cyprinus carpio), ஓரியோகுரோமிஸ் மொசாம்பிகஸ் (Oreochromis mossambicus) போன்றன இந்தியாவில் வளர்க்கப்படும் சில வெளிநாட்டு மீன் வகைகள் ஆகும்.
நோய் மேலாண்மை
வைரஸ் அல்லது பாக்டீரியாவால் நோய்கள் தோன்றுகின்றன. நீரின் தரம், காற்றோட்டம், உணவூட்டம், மீன்களின் இறப்பு போன்றவற்றை முறையாக சோதனை செய்தல் அவசியம். ஒட்டுண்ணி தாக்கம் மற்றும் நுண்ணுயிரித் தொற்று போன்றனவற்றை தொடர்ந்து கண்காணிப்பது அவசியமாகும்.
மீன்களின் பொருளாதார முக்கியத்துவம்
மீன்கள் புரத உணவிற்கான உயர்ந்த ஆதாரமாகும். இது மனிதனின் உணவூட்டத் தேவைக்கான பிரதான உணவாகவும் உள்ளது. சார்டைன் (மத்தி), மாக்கெரல் (கானாங்கெழுத்தி), டூனா (சூறை), ஹெர்ரிங் போன்ற மீன் இனங்கள் அதிக அமினோ அமில செறிவைக் கொண்டுள்ளன, குறிப்பாக, மீனுக்கு மணமளிக்கும் ஹிஸ்டிடின் என்னும் அமினோ அமிலத்தைக் கொண்டுள்ளன. மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. கால்சியம்,மெக்னீசியம்,பாஸ்பரஸ்,பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு, அயோடின் மற்றும் தாமிரம் போன்ற தனிமங்களும் உள்ளன. மீன்களில் இருந்து கிடைக்கும் சில உப பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தெரிந்து தெளிவோம்
மீன்கள், உணவை மாமிசமாக மாற்றும் திறமைசாலிகள் எனப்படுவது ஏன்?
மீன் எண்ணெய் (Fish Oil)
மீன் எண்ணெய் என்பது ஒரு மிக முக்கிய மீன் உப பொருளாகும். இது மீனின் கல்லீரல் மற்றும் உடலில் இருந்து பெறப்படுகின்றது. இதில், வைட்டமின் A மற்றும் D மிகுந்துள்ளது. மீன் உடல் எண்ணெயில் அயோடின் அதிகம் உள்ளதால் நாம் உட்கொள்ள இயலாது, ஆனால் இது சோப்பு, பெயிண்ட் மற்றும் நறுமணப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகின்றது.
மீன்மாவு (Fish Meal) அல்லது மீன் தூள்
மீனின் உடலில் இருந்து எண்ணெய் எடுத்தபிறகு உள்ள கழிவுகளில் இருந்து உருவாக்கும் பொருள் மீன் மாவு ஆகும். உலர்த்தப்பட்ட இக்கழிவுகளில் இருந்து பன்றி, பறவைகள் மற்றும் கால்நடைகளுக்கு உணவு தயாரிக்கப்படுகின்றது. மீன் மாவு தயாரித்த பின் எஞ்சியுள்ள கழிவுகள் உரமாகப் பயன்படுகின்றது.
இசின்கிளாஸ் (Isinglass)
இசின்கிளாஸ் என்பது ஒரு உயர்தர கொலாஜன் ஆகும். இது கெண்டை மற்றும் கெழுத்தி போன்ற மீன்களின் உலர்ந்த, பதப்படுத்தப்பட்ட காற்றுப்பைகளில் இருந்து பெறப்படும் பொருளாகும். பதப்படுத்தப்பட்ட காற்றுப்பைகளை கொதிநீரில் கரைக்கும் போது ஒட்டும் தன்மை பெற்ற ஜெலாடின் உருவாகின்றது. ஒயின், பீர், வினிகர் போன்ற பொருட்களை சுத்திகரிக்க இது பயன்படுகிறது.