Posted On :  10.01.2024 09:08 am

11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள்

இறால் வளர்ப்பு

நீர் வாழ் கிரஸ்டேஷியன்களில் மிக முக்கியமானது இறால் ஆகும். இது உலகம் முழுதும் வளர்க்கப்படுகின்றது. இறால் மாமிசம் சுவைமிக்கது. இதில், கிளைக்கோஜன், புரதம் ஆகியன அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் உள்ளது.

இறால் வளர்ப்பு

நீர் வாழ் கிரஸ்டேஷியன்களில் மிக முக்கியமானது இறால் ஆகும். இது உலகம் முழுதும் வளர்க்கப்படுகின்றது. இறால் மாமிசம் சுவைமிக்கது. இதில், கிளைக்கோஜன், புரதம் ஆகியன அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் உள்ளது.

இறால் பிடிப்பு வகைகள்

1. ஆழம் குறைந்த நீரில் இறால் பிடிப்பு: இம்முறை மேற்குக்கடற்கரைப்பகுதியின் ஆழம் குறைந்த குதியில் மேற்கொள்ளப்படுகின்றது.

2. கழிமுக அல்லது உப்பங்கழிகளில் இறால் பிடிப்பு: இம்முறை மேற்குக்கடற்கரைப் பகுதிகள், எண்ணூர், புலிகட் ஏரி, சில்கா ஏரி, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகளின் முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்றது

3. நன்னீர் இறால் பிடிப்பு: இந்தியா முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகளில் இருந்து இறால் பிடிக்கப்படுகிறது.

4. கடல் இறால் பிடிப்பு: பினேய்டியே குடும்பத்தைச் சேர்ந்த கடல் இறால்கள் இந்திய கடற்கரைப் பகுதிகளில் இருந்து பிடிக்கப்படுகின்றன


இறால் சிற்றினங்கள்

பினேயஸ் இன்டிகஸ் (Penaeus indicus), பினேயஸ் மோனோடான் (Penaeus monodon), மெட்டாபினேயஸ் டோப்சானி (Metapenaeus dobsoni) மற்றும் மேக்ரோபிராக்கியம் ரோஸன்பெர்ஜி (Macrobrachium rosenbergii) போன்ற இறால் வகைகள் நீர் நிலைகளில் காணப்படுகின்றன.


நன்னீர் இறால் வளர்ப்பு

மேக்ரோபிராக்கியம் ரோஸன்பெர்ஜி (படம் 13.10) பொதுவாக ஆறுகள், வயல்கள், குறை உப்புத்தன்மை கொண்ட கழிமுகம் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. ஏரிகள், ஆறுகள் மற்றும் நெல் வயல்களில் இருந்து சேகரிக்கப்பட்ட இறால்கள் காற்று நிறைந்த குளத்தில் (காற்றோட்டம் பெற) விடப்படுகின்றன. ஓரிணை இறால்கள் இனப்பெருக்கத்திற்காக தனி தொட்டியில் பராமரிக்கப்படுகின்றன. இவை, கலவிக்குப்பின் முட்டைகளை இடுகின்றன. தகுந்த காற்றோட்டத்துடன் கூடிய பல்வேறு அளவுகளில் இனப்பெருக்கத் தொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. பொரிப்புக்குளத்தில் 24°C முதல் 30°C வெப்பநிலையும் மற்றும் 7- 8 வரை pHம் இருக்குமாறு பராமரிக்க பராமரிக்க வேண்டும். முட்டைகள் பொரிந்து முதல் மற்றும் இரண்டாம் நிலை லார்வா நிலையை அடைகின்றன. செயற்கை உணவு அளிக்கப்படுகின்றது. 60 நாட்கள் வயதான 5 செ.மீ நீளமுள்ள இளம் இறால்கள் நன்னீர் அல்லது குறைந்த உப்புத்தன்மையுள்ள கழிமுக நீர்குளம் மற்றும் நெல் வயல்களில் வளர்க்கப்படுகின்றன. ஆண்டுக்கு 2 முறை இறால்களை அறுவடை செய்யலாம்.



கடல் இறால் வளர்ப்பு

இடத்தேர்வு, நீரின் தரம், மண்ணின் தரம், இறால் விதை கிடைத்தல் ஆகிய காரணிகள் கடல் இறால் வளர்ப்பின் வெற்றியை நிர்ணயிக்கின்றன


பண்ணை தயார் செய்தல்

பாசிகள் வளர்வதற்கும் அதனைத் தொடர்ந்து இறால்களை இருப்பு வைப்பதற்கும் குளத்தில் உள்ள நீரை வெளியேற்றி சூரிய ஒளியில் தரைப்பரப்பை உலரச் செய்து, பிறகு லேசாக உழுதலும் அவசியம். உபரி CO2 நீக்கவும் மற்றும் இறால் தோலுரிக்கத் தேவையான கால்சியத்தை அளிப்பதற்கும் விவசாயச் சுண்ணாம்பை இடுதல் வேண்டும். அரிசித்தவிடு, பறவைப்பண்ணைக் கழிவுகள், கால்நடைக்கழிவுகள் போன்ற ஊட்டப்பொருட்களைப் பயன்படுத்தி மண் வளம்கூட்டப்படுகின்றது. இறால்பிடி கருவிகள் மற்றும் கலன்களான வீச்சுவலை, பை வலை, இழுவலை மற்றும் தடுப்பு வலை ஆகியவற்றைப் பயன்படுத்தி இறால்களைப் பிடிப்பது பொதுவாக நடைபெறுகின்றது. ஓடுநீக்குதல் மற்றும் குடல் நீக்குதல் அல்லது வேகவைத்து ஓடு நீக்குதல் முறையில் இறால்கள் பதப்படுத்தப்படுகின்றன.

11th Zoology : Chapter 13 : Trends in Economic Zoology : Prawn Culture in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள் : இறால் வளர்ப்பு - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள்