Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | புவிப்படத்தின் கூறுகள் (Components of Map)

புவிப்படங்களைக் கற்றறிதல் | அலகு 8 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - புவிப்படத்தின் கூறுகள் (Components of Map) | 8th Social Science : Geography : Chapter 8 : Map Reading

   Posted On :  12.06.2023 10:40 pm

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 8 : புவிப்படங்களைக் கற்றறிதல்

புவிப்படத்தின் கூறுகள் (Components of Map)

கீழ்க்கண்டவை ஒரு புவிப்படத்தின் அடிப்படைக் கூறுகளாகும். 1. தலைப்பு (Title) 2. புவிப்பட அளவை (Scale), 3. புவிப்பட விளக்கம் அல்லது திறவு விசை (Legend or key), 4. திசைகள் ( Directions), 5. புவிப்படமூலம் (Source), 6. புவிப்பட கோட்டுச் சட்டம் மற்றும் அமைவிட குறிப்பு (Mapprojectionand Locational information), 7. மரபு குறியீடுகள் மற்றும் சின்னங்கள் (conventional signs and symbols).

புவிப்படத்தின் கூறுகள் (Components of Map)

கீழ்க்கண்டவை ஒரு புவிப்படத்தின் அடிப்படைக் கூறுகளாகும். 

1. தலைப்பு (Title) 

2. புவிப்பட அளவை (Scale), 

3. புவிப்பட விளக்கம் அல்லது திறவு விசை (Legend or key), 

4. திசைகள் ( Directions), 

5. புவிப்படமூலம் (Source), 

6. புவிப்பட கோட்டுச் சட்டம் மற்றும் அமைவிட குறிப்பு (Mapprojectionand Locational information), 

7. மரபு குறியீடுகள் மற்றும் சின்னங்கள்  (conventional signs and symbols).

 

1. தலைப்பு (Title)

புவிப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கம் குறித்துக் கூறுவது தலைப்பாகும். பொதுவாக தலைப்பானது புவிப்படத்தில் மேல் அல்லது கீழே உள்ள ஒரு விளிம்புப் பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும்.


2. புவிப்பட அளவை (Scale)

புவிப்பட அளவை என்பது புவிப்பரப்பில் உள்ள தொலைவிற்கும் புவிப்படப்பரப்பில் உள்ள தொலைவிற்கும் இடையிலான விகிதத்தைக் குறிப்பதாகும். புவியை அதே அளவில் புவிப்படத்தில் வரைய இயலாது, இதனால் புவியின் அளவானது ஒரு விகிதாச்சார அடிப்படையில் குறைக்கப்பட்டு புவிப்படமாக்கப்படுகிறது. இதனால் புவிப்படங்கள் அளவைகளைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. பொதுவாக அளவையானது ஒரு கோட்டுப் பட்டை மற்றும் எண் அளவையில் குறிக்கப்பட்டு அவை புவிப்பட தலைப்பின் கீழோ அல்லது புவி படத்தின் கீழ் பகுதியிலோ கொடுக்கப்பட்டிருக்கும். புவிப்படங்கள், பரப்பின் அடிப்படையில் சிறிய அளவை புவிப்படங்கள் மற்றும் பெரிய அளவை புவிப்படங்கள் எனப் பிரிக்கலாம்.

சிறிய அளவை புவிப்படங்கள் (Small scale maps)

கண்டங்கள் அல்லது நாடுகள் போன்ற பெரிய நிலப்பகுதிகளைக் காண்பிக்கச் சிறிய அளவை புவிப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இடப்பற்றாக்குறையின் காரணமாக இவ்வகை புவிப்படத்தில் சிறு விவரங்கள் தவிர்க்கப்பட்டு பெரும் அளவிலான தோற்றங்களை மட்டும் காண்பிக்கப்படுகின்றன. உதாரணமாக உலக இயற்கை அமைப்பு, புவிப்படத்தில் மிகப்பெரிய நிலத்தோற்றங்கள் மட்டுமே காண்பிக்கப்படுகின்றன. இவ்வகைப் புவிப்படங்கள் அதிக பரப்பை உள்ளடக்கியதாக இருந்தாலும் குறைந்த தகவல்களையே அளிக்கின்றன.

பெரிய அளவை புவிப்படங்கள் (Large scale maps)

சிறிய பகுதிகளான வட்டம் அல்லது மாவட்டம் போன்றவற்றைக் காண்பிக்க பெரிய அளவை புவிப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்புவிப்படங்கள் சிறிய அளவை புவிப்படங்களை விட அதிக விவரங்கள் தருகின்றன. உதாரணமாக இந்திய இயற்கை அமைப்பு வரைபடம் உலகின் ஒரு நிலப்பகுதியைக் காண்பிப்பதால் அதிக விவரங்களை தருகின்றது. புவிப்படங்களை வகைப்படுத்துவதில் அளவையானது ஓர் ஒப்பீடு ஆகும். புவிப்படங்களை வகைப்படுத்த அளவையை ஓர் அடிப்படையாக கருத இயலாது.

செயல்பாடு

உலக மற்றும் இந்தியா இயற்கை அமைப்பு வரைபடங்களை ஒப்பிட்டு உலக வரைபடத்தில் இந்தியாவின் விடுப்பட்ட இயற்கை தோற்றங்களைக் கண்டறிக.

புவிப்படங்களில் அளவைகள் மூன்று வகைகளில் குறிப்பிடப்படுகின்றன. அவை

1. வாக்கிய முறை அல்லது சொல்லளவை (Statement or verbal scale)

2. பிரதிபின்ன முறை அல்லது விகிதாச்சார முறை (Representative fraction or Ratio scale)

3. வரைகலை அளவை அல்லது நேரியல் (Graphical or Bar scale)

1. வாக்கிய முறை அல்லது சொல்லளவை

இம்முறையில் அளவுத்திட்டமானது சொற்களால் விவரிக்கப்படுகிறது. 1 செ.மீ என்பது 1 கி.மீ. அதாவது வரைபடத்தில் 1 செ.மீ என்பது நிலப்பகுதியில் 1 கி.மீ. தூரத்தைக் குறிக்கின்றது. ஆகையால் வரைபடத்தில் 1 செ.மீ : 1 கி.மீ., 1 அங்குலம் : 1 மைல் எனக் குறிக்கப்பட்டிருக்கும்.

ஒரு எளிமையான வாக்கிய அளவுத்திட்டம் என்பது கீழ்க்கண்ட குணாதிசியங்களைப் பெற்றிருக்கும்.

அ) அளவையின் தொகுதி சென்டி மீட்டரிலிருந்தால் அதன் விகுதி மீட்டரிலோ அல்லது கிலோ மீட்டரிலோ இருக்கும்.

ஆ) தொகுதி அங்குலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அதன் விகுதி மைல்களில் இருக்கும்

2. பிரதிபின்னமுறை (அ) எண்சார் பின்னமுறை (அ) விகிதாச்சார முறை.

இம்முறையில் புவிப்படப்பரப்பில் உள்ள தொலைவும் புவிப்பரப்பில் உள்ள தொலைவும் ஒரே அளவில் குறிப்பிடப்படுகிறது உதாரணமாக 1: 50,000 என்பது புவிப்படத்தில் 1 அலகு என்பது புவியில் 50,000 அலகுகளைக் குறிக்கின்றது. அதாவது வரைபடத்தில் 1 செ.மீ அல்லது 1 அங்குலம் என்பது புவியில் 50,000 செ.மீ அல்லது 50,000 அங்குலம் என்பதைக் குறிக்கின்றது. பிரதி பின்ன முறையில் அளவையானது 1/50,000 அல்லது 1:50,000 எனக் குறிப்பிடப்படுகிறது.



3. வரைகலை அளவை அல்லது நேரியல் அளவை

இந்த அளவை ஒரு சிறிய வரைக்கோல் போன்று வரைபடத்தின் அடிப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும். இக்கோடு மேலும் சிறிய அளவிலான பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். இதன் ஒவ்வொரு சிறு பகுதியும் நிலப்பகுதியிலுள்ள ஒரு குறிப்பிட்ட தூரத்தை குறிப்பதாக அமைந்துள்ளது. ஒரு சிறு துண்டு நூல் அல்லது பிரிப்பான்களின் உதவியோடு புவிப்படத்தில் குறிப்பிடப்பட்ட அளவையைக் கொண்டு நேரடியாக நிலப்பகுதியில் உள்ள சரியான தூரத்தை அளவிட முடியும். இவ்வளவைகள் மாறாதவை என்பதால் புவிப்பட நகல்கள் எடுத்துக் கொள்ள ஏதுவாக உள்ளது இதன் சிறப்பம்சமாகும்.



3. புவிப்பட விளக்கம் அல்லது திறவுவிசை (Legend or key)

புவிப்படத்தைப் பற்றிய விவரங்களை புரிந்து கொள்வதற்குப் புவிப்பட விளக்கம் அல்லது திறவுவிசை புவிப்படத்தில் கொடுக்கப்படுகின்றது. இவை புவிப்படத்தின் கருத்தை அறிந்துகொள்ள தேவையான விவரங்களைத் தருகின்றன. புவிப்படத்தில் பல்வேறு குறியீடுகள் மற்றும் வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவைகள் எவற்றை குறிக்கின்றன என்பதைத் திறவுவிசை விளக்குகின்றன. திறவுவிசை படங்களாகவோ, சின்னங்களாகவோ அல்லது குறியீடுகளாகவோ புவிப்படத்தில் பயன்படுத்தப்படுகின்றன.


4. திசைகள் (Direction)

புவிப்படத்தில் திசைகள் குறிப்பிடுவது அவசியமாகும். புவிப்படங்களில் பொதுவாக வடதிசை மேல்நோக்கிஇருக்கும்படி வரையப்படுகிறது. வடதிசை மூலம் மற்ற திசைகளை அறிந்து கொள்வது எளிதாகும். பொதுவாக வரைபடத்தில் திசைகளானது திசை காட்டி குறியீடுகள் மூலம் குறிக்கப்படுகின்றது. சில புவிப்படங்களில் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய முதன்மை திசைகள் குறிக்கப்படுகின்றன. இடைநிலை திசைகளான, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆகியனவும் புவிப்படங்களில் கொடுக்கப்படலாம்.


5. புவிப்பட மூலம் (Source)

அனைத்துப் புவிப்படங்களிலும் அளவைகள் பயன்படுத்தப்பட்டுள்ள புள்ளி விவரங்களைக் காண மூலங்களைக் குறிப்பிடுதல் அவசியமான ஒன்றாகும். பொதுவாக இம்மூலங்கள் புவிப்படத்தின் கீழ் வலது புறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். புவி வரைப்படத்தின் கீழ் இடது புறத்தில் ஆசிரியரின் பெயர், வெளியீடுவோர் விவரம், வெளியிடும் இடம், வருடம் ஆகிய விவரங்கள் கொடுக்கப்படுதல் வேண்டும்.

6. புவிப்படகோட்டுச் சட்டம் மற்றும் அமைவிட குறிப்பு (Map projection and locational information)

கோள வடிவமான புவியை ஒரு சமதளப் பரப்பில் வரைவதற்குப் பின்பற்றப்படும் ஒரு நுணுக்க முறையே வரைபட கோட்டுச் சட்டமாகும். வளைவான மேற்பரப்புடைய புவியை புவிப்படத்தில் சரியான முறையில் வரைவது கடினம். புவிப்படங்களில் ஏற்படும் இவ்வகை தவறுகளை குறைக்க வரைபட வல்லுநர்கள் புவியின் மேற்பரப்பைப் படத்தில் குறிப்பதற்குப் புவிப்பட கோட்டுச் சட்டங்களை பயன்படுத்துகின்றனர். புவிப்படங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அட்ச மற்றும் தீர்க்க கோடுகள் படத்தில் குறிக்கப்பட்டுள்ள பகுதியின் அமைவிட தகவல்களை அளிக்கின்றன.

7. மரபு குறியீடுகள் மற்றும் சின்னங்கள் (Conventional sings and symbols)

புவிப்படத்தில் பல்வேறு தோற்றங்களைக் குறிப்பிடப்படுவதற்குப் புவிப்படக் குறியீடு மற்றும் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இச்சின்னங்கள் புவிப்பட திறவு விசை பகுதியில் விளக்கப்பட்டுள்ளன. ஒரு சிறிய பகுதியில் அதிக தகவல்களை இக்குறியீடுகள் மற்றும் சின்னங்கள் அளிக்கின்றன. இதன் மூலம் புவிப்படங்களை எளிதாக உருவாக்கலாம். மேலும் இவற்றின் மூலம் புவிப்பட கருத்துக்களையும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். சில குறியீடுகள் மற்றும் சின்னங்களைபயன்படுத்த சர்வதேச ஒப்பந்தம் அல்லது நடைமுறை பின்பற்றப்படுகிறது. இவை மரபுக் குறியீடுகள் மற்றும் சின்னங்கள் எனப்படுகின்றன. சூழல் சின்னங்கள் அல்லது குறியீடுகள் என்பதை குறிப்பிட வல்லுனர்கள் முடிவு செய்யப்படும் மற்றொரு வகையாகும்.


Tags : Map Reading | Chapter 8 | Geography | 8th Social Science புவிப்படங்களைக் கற்றறிதல் | அலகு 8 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Geography : Chapter 8 : Map Reading : Components of a map Map Reading | Chapter 8 | Geography | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 8 : புவிப்படங்களைக் கற்றறிதல் : புவிப்படத்தின் கூறுகள் (Components of Map) - புவிப்படங்களைக் கற்றறிதல் | அலகு 8 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 8 : புவிப்படங்களைக் கற்றறிதல்