Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | வரைபடங்களின் வகைகள் (Types of Maps)

புவிப்படங்களைக் கற்றறிதல் | அலகு 8 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வரைபடங்களின் வகைகள் (Types of Maps) | 8th Social Science : Geography : Chapter 8 : Map Reading

   Posted On :  12.06.2023 10:50 pm

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 8 : புவிப்படங்களைக் கற்றறிதல்

வரைபடங்களின் வகைகள் (Types of Maps)

புவிப்படங்கள் பல்வேறு அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு அடிப்படையிலும் புவிப்படங்கள் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இப்பாடப் பகுதியில், நிலத்தோற்றம் அல்லது இயற்கையமைப்புப் புவிப்படங்கள், காணிப்படங்கள் மற்றும் கருத்துப் படங்களின் தன்மைகள் மற்றும் பண்புகளைப் பற்றி கற்கலாம்.

வரைபடங்களின் வகைகள் (Types of Maps)

புவிப்படங்கள் பல்வேறு அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு அடிப்படையிலும் புவிப்படங்கள் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இப்பாடப் பகுதியில், நிலத்தோற்றம் அல்லது இயற்கையமைப்புப் புவிப்படங்கள், காணிப்படங்கள் மற்றும் கருத்துப் படங்களின் தன்மைகள் மற்றும் பண்புகளைப் பற்றி கற்கலாம்.


1. நிலத்தோற்றம் அல்லது இயற்கையமைப்பு புவிப்படங்க ள் (Relief or Physical map)

ஒரு பகுதியின் பல்வேறு இயற்கை அம்சங்களைக் காண்பிப்பதற்கு வரையப்படும் படங்கள் இயற்கையமைப்பு அல்லது நிலத்தோற்றப் படங்கள் எனப்படுகின்றன. முக்கிய இயற்கையமைப்புகளான பாலைவனங்கள், ஆறுகள், மலைகள், சமவெளிகள் மற்றும் பீடபூமிகள் ஆகியவற்றை குறிப்பிடுவது இதன் முதன்மையான நோக்கமாகும். இவ்வகை புவிப்படங்கள் ஓரிடத்தின் பொதுவான நிலஅமைப்பைக் காண்பிக்கின்றன. பல அளவுகளில் உள்ள பகுதிகளின் உயரங்கள் மற்றும் ஆழங்களையும் இவை காண்பிக்கின்றன. பொதுவாக ஆழம் குறைந்த நீர்ப் பகுதிக்கு வெளிர் நீல வண்ணமும், ஆழமான நீர்ப் பகுதிக்கு அடர் நீல வண்ணமும் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த உயரமுள்ள பகுதியிலிருந்து அதிக உயரமுள்ள பகுதிகளைக் குறிப்பிட முறையே, வெளிர் பச்சை, வெளிர் பழுப்பு, அடர்பழுப்பு, வெளிர் சிவப்பு மற்றும் சிவப்பு வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பனி படர்ந்த உயரமான பகுதிகளைக் குறிப்பிட வெள்ளை நிறம் பயன்படுத்தப்படுகிறது.


2. காணிப் புவிப்படங்கள் (Cadastral maps)

ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் நில உடமைகள் பற்றிய விவரங்களை காண்பிக்க காணிப் புவிப்படங்கள் பயன்படுகின்றன. இவ்வகைப்படங்கள் திட்ட புவிப்படங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவை பெரிய அளவையைக் கொண்டுள்ளதால் குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் கட்டடங்களின்முழு விவரங்களையும் அளிக்கின்றன. இப்புவிப்படங்கள் உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி, வரிவிதிப்பு, பெரும் பண்ணை , பராமரிப்பு, சட்ட ஆவணங்களில் சொத்து விவரங்களைக் குறிப்பிடுதல் போன்றவற்றிற்குப் பயன்படுகின்றன. இப்புவிப்படங்கள் பொதுப் பதிவிற்கான ஆவணங்களாக பயன்படுத்தப்படுவதால் இவை அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

உங்களுக்குத் தெரியுமா?

"கெடஸ்ட்ரல்" எனும் வார்த்தை ஃப்ரெஞ்ச் ' மொழியிலுள்ள "கெடஸ்டர்" எனும் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பிராந்திய சொத்துக்களின் பதிவேடு என்பதாகும்.

காணிப்புவிப்படத்தின் முக்கியத்துவம்

காணிப்புவிப்படங்கள், ஒரு நிலத்தின் நில உடமை, எல்லைகள், மாதிரிப் படங்கள், கட்டடத்திட்டப் படங்கள், விளக்கப் படங்கள் ஆகியவை மூலம் ஆவணங்களாக பதிவு செய்கின்றன. தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தின் மதிப்பினை அறிந்துகொள்ளவும், வரிவிதிப்பிற்கும் இவ்வகை புவிப்படங்கள், பயன்படுத்தப்பட்டன.

காணிப் புவிப்பட அளவை

பொதுவாக 1:500 லிருந்து 1:10000 வரை உள்ள அளவைகளில் இவ்வகைப் படங்கள் உருவாக்கப்படுகின்றன. கட்டடங்கள், வடிகாலமைப்பு போன்ற துல்லிய விவரங்களை அளிக்கும் பெரிய அளவை புவிப்படங்கள் காணிப்பட அளவாய்வு மூலம் தயாரிக்கப்படுகின்றன.


செயல்பாடு

உங்கள் ஆசிரியரின் உதவியோடு உங்கள் பள்ளி கட்டடம் மற்றும் பள்ளி வளாகத்தின் காணிப் புவிப்படம் ஒன்றினை தயார் செய்க.


3. கருத்துப்படங்கள் (Thematic map)

கருத்துப்படங்கள் என்பவை வெப்பநிலை வேறுபாடுகள், மழைப்பரவல், மக்களடர்த்தி போன்ற ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்காகத் தயாரிக்கப்படுபவை ஆகும். இப்படங்கள் உலகளாவிய மக்களடர்த்தி, நோய்த்தாக்கம் போன்றவற்றின் பிரதேச வேறுபாடுகளை காண்பிக்க முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இவை பொது புவிப் படங்களிலிருந்து வேறுபடுகின்றன. பொதுப் புவிப்படங்கள் இயற்கை பிரிவுகளான நில அமைப்புகள், போக்குவரத்து, ஆறுகள், குடியிருப்புகள், அரசியல் மற்றும் நிர்வாக எல்லைகள் போன்றவற்றைக் காண்பிக்கின்றன. பொதுவாக வரையப்படும் புவிப்படங்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தை விரிவாக வெளிப்படுத்துவதில்லை.

கருத்துப்படங்களின் வகைகள்

கருத்துப்படங்களானது, பண்புசார் கருத்துப்படங்கள் மற்றும் அளவு சார் கருத்துப்படங்கள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. பண்புசார் கருத்துப்படங்கள் ஒரு குறிப்பிட்ட பொருளின் தன்மை அல்லது அவ்விடத்தில் அக்குறிப்பிட்ட பொருள் உள்ளதா? அல்லது இல்லையா? என்பதை காண்பிக்கப் பயன்படுகிறது. உதாரணமாக ஒரு பகுதியில் காணப்படும் தாவர இனங்கள் மற்றும் அவை பரவியுள்ள பகுதிகள் ஆகியனவற்றைத் தெளிவாக உணர்த்தும். மண் பரவலைக் காட்டும் படங்களும் பண்புசார் கருத்துப்படங்களேயாகும். அளவுசார் கருத்துப் படங்கள் எண் அளவுகளைக் கொண்ட உயரங்கள் (மீட்டரில்), வெப்பநிலை,  (செல்சியஸ்) போன்ற தகவல்களைக் கொண்டிருக்கும். நிழற்பட்டைப்படம், சம அளவுக்கோட்டுப் படம் மற்றும் புள்ளியடர்த்தி படங்கள் அளவுசார் கருத்து படங்களில் அதிகம் பயன்படுத்தப்படுபவைகளாகும்.


நிழற்பட்டைப் படம் (Choropleth map)

நிழற்பட்டைப் படம் என்பது ஒரு கருத்துப் படமாகும். இவற்றில் மக்களடர்த்தி, தனிநபர் வருமானம் போன்றவற்றைக் காண்பிக்கலாம். = மேலும் பிரதேச வேறுபாடுகளையும் நிழற்பட்டைகள் மூலம் காண்பிக்கப்படுகிறது.



சம அளவுக்கோட்டுப் படங்கள் (Isopleth Maps)

இவ்வகை படங்கள் பொதுவான மதிப்புள்ள வெவ்வேறு இடங்களை இணைத்து வரையப்படுகின்றன. ஆங்கிலச் சொல்லான "Isoline" என்பதில் இதன் முன்னிடைச் சொல்லான ஐசோ என்பது கிரேக்க மொழி சொல்லாகும் இதற்கு சமம் என்று பொருள். எனவே சம அளவுக்கோடுகள் என்பவை சம மதிப்புள்ள இடங்களை இணைப்பதாகும். வளிமண்டல அழுத்தப் பரவலைக் குறிக்கும். "சம் அழுத்தக் கோடுகள்" வெப்பப் பரவலைக் குறிக்கும் "சம வெப்ப நிலைக்கோடுகள்" ஆகியன சம அளவுக்கோட்டுப் படங்களுக்குச் சிறந்த உதாரணங்களாகும்.



புள்ளியடர்த்தி வரைபடங்கள் (Dot Density Maps)


புள்ளியடர்த்தி படங்கள் கருத்து வரைபடத்தின் ஒரு வகையாகும். இவை ஒன்று அதற்கு மேற்பட்ட எண்ணிகையிலான தரவு புலங்களைக் காண்பிக்கப் பயன்படுகிறது. இப்படத்தில் உள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு குறிப்பிட்ட அளவிலான தரவைக் குறிக்கின்றது. இவ்வகைப் படத்தில் புள்ளிகள் அடர்த்தியாக இருக்குமாயின் குறிப்பிட்ட அளவுள்ள தரவு செறிந்தும், புள்ளிகளின் அடர்த்தி குறைவாக இருக்குமாயின் குறிப்பிட்ட அளவுள்ள தரவு குறைந்து காணப்படுவதையும் குறிக்கும்.

Tags : Map Reading | Chapter 8 | Geography | 8th Social Science புவிப்படங்களைக் கற்றறிதல் | அலகு 8 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Geography : Chapter 8 : Map Reading : Types of Maps Map Reading | Chapter 8 | Geography | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 8 : புவிப்படங்களைக் கற்றறிதல் : வரைபடங்களின் வகைகள் (Types of Maps) - புவிப்படங்களைக் கற்றறிதல் | அலகு 8 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 8 : புவிப்படங்களைக் கற்றறிதல்