அலகு 8 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - புவிப்படங்களைக் கற்றறிதல் | 8th Social Science : Geography : Chapter 8 : Map Reading
அலகு -8
புவிப்படங்களைக் கற்றறிதல்
கற்றலின்
நோக்கங்கள்
>புவிப்படங்களையும், புவி மாதிரியையும் ஒப்பிடுதல்
>புவிப்படங்களின் கூறுகளை அடையாளம் காணுதல்
>புவிப்பட அளவைகளைக் குறிக்கும் முறைகளைத் தெரிந்து கொள்ளல்
>புவிப்படங்களில், குறீயிடுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றனர்
என்பதை விவரித்தல்
>பல்வேறு வகையான புவிப்படங்களைப் புரிந்து கொள்ளல்
அறிமுகம்
புவி
மாதிரிகளைப் போல், புவி வரைபடங்களும் புவியியலாளர்களுக்கு ஒரு முக்கிய கருவியாகும்.
பல்வேறு இடங்களை ஒப்பீடு செய்யவும், மக்களின் நடவடிக்கைகளை அவர்களின் வாழ்விடங்களுடன்
ஒப்பீடு செய்யவும் புவிப்படங்கள் பயன்படுகின்றன. புவிப்படவியளாளர்கள் புவிப்படங்களை
மிகச்சுருக்கமாக சித்தரிக்கும் பொருட்டு பல்வேறு முறைகளை கையாளுகின்றனர். உலகம் முழுவதும்
உள்ள மக்கள் படித்து புரிந்துகொள்ளும் வகையில் புவிப்படங்களை வடிவமைக்கின்றனர்.
புவிப்படம் என்றால் என்ன?
புவிப்படம்
என்பது முழுப்புவியையோ அல்லது புவியின் ஒரு பகுதியையோ ஒரு சமதளப்பரப்பில் அளவையுடன்
பதிலீட்டுக் காட்டும் ஒரு முறையாகும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள விவரங்களைக் குறிப்பாக
புவியியல் சார்ந்த விவரங்களைத் தெளிவாக காண்பிப்பதே புவிப்படத்தின் பணியாகும்.
புவிப்படத்தை கற்றறிதல்
(Map reading)
புவிப்படத்தைக்
கற்றறிதல் என்பது புவிப்படத்தில் உள்ள விவரங்களைப் புரிந்துகொள்ளுதல் அல்லது புவியியல்
சார்ந்த விவரங்களை விவரணம் செய்தல் ஆகும். புவிப்படத்தைக் கற்றலின் மூலம் புவிப்படக்
குறியீடுகளைப் பயன்படுத்தி ஒருவர் புவியின் மன வரைபடத்தை உருவாக்கும் திறனைப் பெறுகிறார்.
புவிப்படத்திற்கும் புவிக்கோள
மாதிரிக்கும் இடையேயான வேறுபாடு
புவிப்படமும்
புவிக்கோள மாதிரியும் பெரிய அளவில் வேறுபடுகின்றன. புவிப்படங்கள் புவியின் இருபரிமாண
சித்தரிப்பாகும். புவிக்கோள மாதிரியானது புவியை முப்பரிமாணத்தில் சித்தரிக்கின்றது.
இது புவியின் வடிவிலான ஒரு சிறிய தோற்றமாகும் (புவி மாதிரி)
உங்களுக்குத் தெரியுமா?
புவிப்படங்களைக் கற்றறிதல் மற்றும் புவிப்பட உருவாக்க நுணுக்கங்கள்
பற்றி விளக்கும் பாடப் பிரிவு புவிப்படவியல்
எனப்படும். இது புவிப்பட உருவாக்குதலின் அறிவியல் சார்ந்த ஒரு கலைநுட்பமாகும்.