Posted On :  17.09.2023 06:39 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 23 : பொருளாதார உயிரியல்

பால் பண்ணை

பால் பண்ணைகளில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. கால்நடைகளை முறையாகப் பராமரித்தல், அவற்றிடமிருந்து பாலினைப் பெற்று மனிதர்களுக்குப் பயன்படும் வகையில் பக்குவப்படுத்தப்பட்ட பாலாகவும், பால் பொருள்களாகவும் வழங்குதல் ஆகியவை இதில் உள்ளடங்கியுள்ளன. பால் மற்றும் அதன் பொருள்களை உருவாக்குவதும், சந்தைப் படுத்துவதும் பால் பண்ணைத் தொழில் எனப்படும்.

பால் பண்ணை

பால் பண்ணைகளில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. கால்நடைகளை முறையாகப் பராமரித்தல், அவற்றிடமிருந்து பாலினைப் பெற்று மனிதர்களுக்குப் பயன்படும் வகையில் பக்குவப்படுத்தப்பட்ட பாலாகவும், பால் பொருள்களாகவும் வழங்குதல் ஆகியவை இதில் உள்ளடங்கியுள்ளன. பால் மற்றும் அதன் பொருள்களை உருவாக்குவதும், சந்தைப் படுத்துவதும் பால் பண்ணைத் தொழில் எனப்படும்.

 

1. கால்நடை கலப்பினங்கள்

பசுமாடுகளும், எருமை மாடுகளும் இந்திய கால்நடைகளுள் அடங்கியுள்ளன. பால், உணவு தோல் மற்றும் போக்குவரத்திற்காக அவை வளர்க்கப்படுகின்றன. அவை, இரண்டுவித சிற்றினங்களாகக் காணப்படுகின்றன. அவையாவன: போஸ் இண்டிகஸ் (இந்திய பசுக்களும், காளைகளும்) மற்றும் போஸ் புபாலிஸ் (எருமைகள்). இந்தவகைக் கால்நடை விலங்கினங்கள் பாலிற்காகவும், வயல் வேலைகளுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இவ்விலங்குகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவை பால் உற்பத்தி இனங்கள். இழுவை இனங்கள் மற்றும் இரு பயன்களையும் தரும் இனங்கள்.

1. பால் உற்பத்தி இனங்கள்: பால் உற்பத்தி இனங்கள் பாலினைப் பெறுவதற்காக வளர்க்கப்படுகின்றன. பசுக்கள் (பால் சுரக்கும் பெண் இனம்) அதிகளவு பால் தருபவை (கறவை விலங்குகள்) ஆகும். பால் உற்பத்தி இனங்கள் உள்நாட்டு இனங்களாகவோ அல்லது வெளிநாட்டு இனங்களாகவோ இருக்கலாம்.

உள்நாட்டு இனங்கள் இந்தியாவைத்தாயகமாக் கொண்டவை. அவற்றுள் சாகிவால், சிவப்பு சிந்தி, தியோனி மற்றும் கிர் போன்றவை அடங்கும். இவ்வகை இனங்கள் வலுவான கால்களையும், நிமிர்ந்த திமில்களையும், தளர்வான தோல்களையும் கொண்டுள்ளன. பால் உற்பத்தியானது, பால் சுரக்கும் காலத்தைப் பொறுத்தே (கன்று பிறந்ததற்குப் பின் உள்ள காலம்) அமைகிறது. இவ்வகை உள்நாட்டுச் சிற்றினங்கள் சிறப்பான நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளன.

அயல்நாட்டு இனங்கள் (போஸ் டாரஸ்) வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. ஜெர்ஸி, ப்ரௌன் ஸ்விஸ் மற்றும் ஹோல்ஸ்டீய்ன் ஃப்ரெய்ஸ்யன் ஆகியவை இவ்வகை இனங்களுள் அடங்கும். அதிகமான பால் சுரப்புக் காலத்தைக் கொண்டிருப்பதால் இவை அதிகம் தேர்நதெடுக்கப்படுகின்றன.

2. இழுவை இனங்கள்: இவ்வகை இனமாடுகள் வேளாண்மைப் பயன்பாடுகளாகிய, உழுதல், பாசனம், வண்டியிழுத்தல் போன்ற வேலைகளைச் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. அம்ரித்மகால், காங்கேயம், உம்பளச்சேரி, மாலவி, சிரி மற்றும் ஹல்லிகார் போன்ற இனங்கள் இவற்றில் அடங்கும். இவற்றிலுள்ள எருதுகள் கடினமான இழுவை வேலையை நன்றாகச் செய்தாலும், பசுக்கள் குறைந்தளவே பாலினைக் கொடுப்பவையாக இருக்கின்றன.

 3. இரு பயன்களையும் தரும் இனங்கள்: இந்த வகை இனங்கள் பால் உற்பத்திக்காகவும், பண்ணை வேலைகளைச் சிறப்பாகச் செய்வதற்காகவும் பயன்படுகின்றன. இந்தியாவில் இவ்வகையைச் சார்ந்த மாடுகள் அதிகமாக விவசாயிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன. அர்யானா மாடுகள், ஓங்கோல் மாடுகள், நான்கரேஜ் மாடுகள் மற்றும் தார்பார்கர் மாடுகள் ஆகியவை பால் உற்பத்தி மற்றும் இழுவை ஆகிய இரண்டிற்கும் பயன்படுபவையாகும்.

தகவல் துணுக்கு

தமிழகத்தை தாயகமாகக் கொண்ட இழுவை மாடுகள்

காங்கேயம்: இவை காங்கேயத்தில் உருவாகியவை. தாராபுரம், பெருந்துறை, ஈரோடு, பவானி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் காணப்படுகின்றன.

புலிக்குளம் மாடுகள்: இவ்வின மாடுகள் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்திலுள்ள கம்பம் பள்ளத்தாக்குகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. இவை ஜல்லிக்கட்டு மாடு எனவும் அழைக்கப் படுகின்றன. நிலத்தினை உரமேற்றவும், உழவு செய்யவும் இவ்வகை மாட்டினங்கள் அதிகம் பயன்படுகின்றன.

 

2. கால்நடைத் தீவனத்தின் இயைபு

கால்நடைகளுக்கான தீவனங்கள், அவற்றின் ஆரோக்கிய வாழ்வுக்கும், அதிக பால் சுரத்தலுக்கும் துணைபுரிவதாக இருக்கவேண்டும். பால் உற்பத்தி செய்யும் கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன:

தவிடு அல்லது சக்கை போன்ற உணவுகள் கடின நார்ச்சத்து கொண்ட தீவனங்களாகும். இவை சதைப்பற்றுள்ளதாகவும் (பயிரிடப்பட்ட புல்வகைகள், தீவனம்மற்றும் தாவரவேர்கள்) உலர் தீவனமாகவும் (வைக்கோல், பயிரின் தட்டைகள் மற்றும் சாவிகள் விதையின் வெளியுறை) இருக்கின்றன.

செறியூட்டமிக்க உணவானது குறைவான நார்ச்சத்தையும், அதிகளவு கார்போ ஹைட்ரேட், புரதங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களையும் பெற்றுள்ளன. சோளம், கம்பு (முத்துத் தினை), ராகி (விரல் தினை), அரிசித் தவிடு, கோதுமைத் தவிடு, பருத்திக் கொட்டைப் புண்ணாக்கு, கடுகுப் புண்ணாக்கு, ஆளிவிதைப் புண்ணாக்கு, நிலக்கடலைப் புண்ணாக்கு, மாங்கொட்டைப் புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு மற்றும் எள்ளுப்புண்ணாக்குபோன்றவை செறியூட்டப்பட்ட உணவை உருவாக்கப் பயன்படுகின்றன. பசுந்தாள் உரங்களையும் (குதிரை மசால், மூவிலை மஞ்சள் புரதப்புல், சிறுதானியங்கள் மற்றும் யானைப்புல்) தீவனமாக அளிக்கலாம்.

 

3. தீவன மேலாண்மை

பால் உற்பத்தி செய்யும் கால்நடைகளுக்கு சமச்சீரான சரிவிகித உணவு அவசியமாகும். இத்தீவினங்களில் அனைத்துவித தீவனப் பொருட்களும் அதாவது தாதுக்கள், வைட்டமின்கள், உயிர் எதிர்பொருள்கள் மற்றும் ஹார்மோன்கள் சரிவிகித அளவில் காணப்படுகின்றன. இவை விலங்குகளின் வளர்ச்சி மற்றும் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் நோயிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்கும் உறுதுணையாக உள்ளன.

பால் உற்பத்தி செய்யும் பசுக்களுக்கு தினமும் கொடுக்க வேண்டிய தீவனத்தின் சராசரி விகிதங்களாவன:

i. 15 முதல் 25 கி.கி தவிடு அல்லது சக்கை (உலர் புல் மற்றும் பசுந்தாள் தீவனம்)

 ii. 4 முதல் 5 கி.கி தானியக் கலவை

iii. 100 முதல் 150 லிட்டர் நீர்

உங்களுக்குத் தெரியுமா?

முனைவர் வர்கீஸ் குரியன் என்பவரால் தேசிய பால் பண்ணைவளர்ச்சிக் கழகமானது (NDDB) உருவாக்கப்பட்டது. எனவே, அவர் நவீன இந்தியாவின் பால் பண்ணைத் தொழில் சிற்பி என்றும், வெண்மைப் புரட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். NDDB என்ற அமைப்பானது, உலகின் மிகப்பெரிய பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டமான Operation Flood என்ற திட்டத்தை செயல்படுத்தியது.

 

4. இந்தியாவில் கால்நடைப் பெருக்கத்தினை மேம்படுத்துதல்

கால்நடைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு இந்திய அரசாங்கமானது பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. முன்னேற்றமடைந்த கலப்பினத் தொழில் நுட்பமானது அதிகத்திறன் கொண்ட புதியவகை இனங்களின் உற்பத்தியை அதிகரித்துள்ளது.    

அதிதீவிர கால்நடை மேம்பாட்டுத் திட்டம் (Intensive Cattle Development Programme-ICDP): இந்தத் திட்டமானது பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக உள்நாட்டுப் பசு இனங்களை ஐரோப்பிய இனங்களோடு கலப்புச் செய்து புதிய இன மாடுகளை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டதாகும். இயந்திரம் மூலம் பால் கறப்பதற்கான புதிய முறைகள் மற்றும் நவீன சாதனங்கள் இத்திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.


பால் செயல்முறைத் திட்டம்: இது பால் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்கி, நகர்ப்புறங்களில் விநியோகம் செய்தலை அடிப்படையாகக் கொண்டதாகும்.

9th Science : Economic Biology : Dairy Farming in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 23 : பொருளாதார உயிரியல் : பால் பண்ணை - : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 23 : பொருளாதார உயிரியல்