Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | மேம்பாட்டுக் குறியீடு

இந்தியப் பொருளாதாரம் - மேம்பாட்டுக் குறியீடு | 11th Economics : Chapter 8 : Indian Economy Before and After Independence

   Posted On :  06.10.2023 09:33 pm

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும்

மேம்பாட்டுக் குறியீடு

1. மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI) 2. செய்திறன் குறியீட்டெண் (PQLI) - Physical Quality of Life Index

மேம்பாட்டுக் குறியீடு


1. மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI) 

1990 முதல் ஐக்கிய நாடுகள் முன்னேற்றக் கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மனித மேம்பாட்டு அறிக்கையைப் பிரசுரம் செய்கிறது. இக்குறியீடு கீழ்க்கண்ட மூன்று குறியீடுகளை அடிப்படையாக கொண்டது. இக்குறியீடு நாடு, மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் தற்போது தயாரிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு மக்களின் உண்மையான வாழ்க்கைத் தரத்தைக் கண்டறிய HDI பயன்படுகிறது.

மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)

HDI - என்பதை பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த பொருளியல் அறிஞர் மஹபூப் உல் ஹக் (Mahbul ul Haq) என்ப வரும், இந்தியாவைச் சேர்ந்த அமர்த்தியா குமார் சென் அவர்களும் 1990ல் மேம்படுத்தினர். இதனை ஐக்கிய நாடுகள் முன்னேற்ற திட்டம் (UNDP) வெளியிட்டது. இது எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் குறியீடு, கல்விக் குறியீடு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் அமைக்கப்பட்டது.

1) வாழ்நாள் (ஆயுட்காலம்) என்பது பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பின் மூலம் கணக்கிடப்படுகிறது

2) கல்வி தகுதி 

3) வாழ்க்கைத்தரம் வாங்கும் சக்தியின் அடிப்படையிலான தனிநபர் வருமானத்தைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

மனித மேம்பாட்டுக் குறியீட்டைக் கணக்கிடுவதற்கு முன் குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச மதிப்புகள் ஒவ்வொரு குறியீட்டிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பரிமாணத்திலும் அதன் செயல்பாடுகள் 0-க்கும் 1-க்கும் இடையிலான மதிப்பில் கீழ்க்கண்ட முறையில் கணக்கிடப்படுகிறது.

பரிமாணக்குறியீடு = உண்மை மதிப்பு - குறைந்தபட்ச மதிப்பு / அதிகபட்ச மதிப்புகுறைந்தபட்சமதிப்பு


திட்டக்குழுவின் 2011 ஆம் ஆண்டு மனித மேம்பாட்டு அறிக்கையின்படி மனித வளர்ச்சிக் குறியீடு 1980 முதல் 2011 வரை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளது. அதாவது மனித மேம்பாட்டுக் குறியீடு 1981-ல் 0.302 லிருந்து 2011-ல் 0.472 ஆக உயர்ந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் முன்னேற்ற சபையின் சமீபத்திய மனித முன்னேற்ற அறிக்கையின்படி (2016), 188 நாடுகளில் இந்தியா 131-வது இடத்திலுள்ளது. 188 நாடுகளில் இந்தியா நடுத்தர அளவிலான மனித மேம்பாட்டு வளையத்துக்குள் உள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, இந்தியாவில் உடல் நலம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் காணப்படும் வட்டார வேறுபாடுகளினால் இந்தியாவிற்கான மனித மேம்பாட்டு குறியீடு 27% சரிந்துள்ளது. இந்தியாவிற்கான மனித மேம்பாட்டுக் குறியீடு 2010ல் 0.580 ஆக இருந்தது; 2015ல் 0.624 ஆக உயர்ந்துள்ளது. 2014 ஆம் ஆண்டிலும் இந்தியாவின் தரவரிசை 131 ஆகவே இருந்தது.

மனித மேம்பாட்டுக் குறியீட்டுக்கான கணக்கீடானது மனித வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களை புறக்கணித்துள்ளது என்று பிஸ்வஜித்குஹா (BISW AJEET GUHA) கூறியுள்ளார். அவர் HDI1, HDI2, HDI3 மற்றும் HDI4 என்ற நான்கு விதமான மனித மேம்பாட்டுக் குறியீடுகளை உருவாக்கியுள்ளார். HDI1 என்பது ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மனித மேம்பாட்டு அறிக்கையினை பொறுத்துள்ளது. வாழ்க்கைதரம், வறுமை ஒழிப்பு மற்றும் நகரமாதல் போன்ற மூன்று பரிணாமங்களைச் சேர்ப்பதன் மூலம் அவர் மனித மேம்பாட்டுக் குறியீட்டுக்கான எல்லையை விரிவுபடுத்தியுள்ளார்.

இந்தியா உட்பட்ட பல்வேறு நாடுகள், மனித மேம்பாட்டு குறியீட்டை கணக்கிடத் தேவையான புள்ளி விவரங்களை மேம்படுத்தவும் குறியீட்டை விரிவுபடுத்தவும் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

முதல் மூன்று நாடுகள் (HDI)

நார்வே (0.949) 

ஆஸ்திரேலியா (0.939) 

சுவிட்சர்லாந்து (0.939)


2. செய்திறன் குறியீட்டெண் (PQLI) - Physical Quality of Life Index

செய்திறன் குறியீட்டெண்ணை (PQLI) மோரிஸ் டி.மோரிஸ் (MORRIS DMORRIS) உருவாக்கினார். இது ஒரு நாட்டின் வாழ்க்கைத் தரத்தினை அளவிடப்பயன்படுகிறது. இதற்காக அவர் எதிர்பார்ப்பு ஆயுட்காலம், குழந்தை இறப்பு வீதம் மற்றும் எழுத்தறிவு வீதம் போன்ற மூன்று குறியீடுகளைப் பயன்படுத்தினார். ஒவ்வொரு குறியீட்டெண்ணின் அளவும் 1 லிருந்து 100 வரையிலான எண்களுக்குள் இருக்கும், எண் 1 என்பது ஒரு நாட்டின் மோசமான செயல்பாட்டைக் குறிக்கும் 100 என்பது மிகச்சிறப்பான செயல்பாட்டைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, எதிர்பார்க்கப்படும் ஆயுளுக்கான குறியீட்டில், மேல் எல்லையான 100 என்பது 77 வருட ஆயுளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்குறியீட்டை ஸ்வீடன் நாடு 1973 ஆம் ஆண்டே அடைந்து விட்டது. 1 என்ற கீழ் எல்லையானது 28 வருட ஆயுளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை கயனா - பிசாவு (GUINEA – BISSAU) நாடு 1960 ஆம் ஆண்டு பெற்றுள்ளது. PQLI க்கும் HDI க்கும் ஒரு வேறுபாடு உள்ளது. HDI யில் வருமானம் சேர்க்கப்படுகிறது. PQLI லிருந்து வருமானம் நீக்கப்படுகிறது. உடல் மற்றும் பணம் சார்ந்த மேம்பாட்டை HDI குறிப்பிடுகிறது. PQLI உடல் சார்ந்த மேம்பாட்டை மட்டுமே குறிக்கிறது.





தொகுப்புரை

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு நல்ல ஆட்சியை வழங்குவதை விட இந்தியர்களிடமிருந்து பணத்தைப் பறிப்பதையே தங்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர் என்பது பலரின் கருத்தாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது சில சாதகமான செயல்பாடுகளும் நிகழ்ந்தன. அவர்கள் "சதி" (உடன் கட்டை ஏறும் வழக்கம்) போன்ற மூடப்பழக்கங்களை ஒழித்தனர். தொடர்வண்டி சேவை, ஆங்கில மொழி, கல்வி மற்றும் முதலாளித்துவப் பொருளாதாரத்திற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உருவாக்கினர். சுதந்திரத்திற்கு பிறகு பல்வேறு துறைகளில் வளர்ச்சி இலக்குகளை அடையத் தேவையான பல்வேறு கொள்கைகளை இந்திய அரசு ஐந்தாண்டுத் திட்டங்களின் உதவியோடு உருவாக்கியது. ஆனாலும் மோசமான உடல்நலம், பெண் சிசுக் கொலை, குழந்தைப் பாலின விகிதம், கழிவறை உபயோகித்தல் குறைவு மற்றும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போன்றவை முக்கிய சவால்களாக இன்றும் தொடர்கின்றன.


சொற்களஞ்சியம்

ஜமீன்தாரி

நிலவருவாயை அரசுக்கு செலுத்தக்கூடிய நில உரிமையாளர்

மஹல்வாரி

நில வருவாயை நிர்வகிக்க கூடிய கிராம மக்களாலான குழு.

இரயத்துவாரி

நிலத்தை பயன்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்தும் உரிமைகளை நிலத்தை உழுபவரே பெற்றிருத்தல் 

பசுமைப்புரட்சி

விவசாய முறைகளை நவீன தொழில்நுட்ப முறையில் புதுப்பித்தல் பொதுத்துறை வங்கி

பெருவாரியான பங்குகளை அரசாங்கமே வைத்திருக்க்கூடிய வங்கி

தனியார்துறை வங்கி 

பெருவாரியான பங்குகள் தனியார் கழகங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வசம் இருப்பது 

தேசியமயமாதல் 

தனியார் சொத்துக்கள் மற்றும் உரிமைகளை அரசாங்கத்தின் உரிமைக்கு மாற்றுதல் 

மனித மேம்பாட்டுக் குறியீட்டெண் 

மனித மேம்பாட்டை தரமிடக் காரணமாகவுள்ள வாழ்வியல் எதிர்பார்ப்பு, கல்வி, தனிநபர் வருமானம் போன்ற புள்ளியியல் விவரங்களின் மூலம் கணக்கிடப்படும் குறியீட்டெண்

வாழ்க்கைதர குறியீட்டெண்

வாழ்க்கையின் தரத்தினை (ஒரு நாட்டின் நல்ல நிலமையை) அளவிட உதவும் ஓர் அளவுகோல்


Tags : Indian Economy இந்தியப் பொருளாதாரம்.
11th Economics : Chapter 8 : Indian Economy Before and After Independence : Development Indicators Indian Economy in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும் : மேம்பாட்டுக் குறியீடு - இந்தியப் பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும்