வெப்பம் | பருவம் 2 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வெப்பம் பரவுதல் | 6th Science : Term 2 Unit 1 : Heat
வெப்பம் பரவுதல்
நீர்மட்டமும்,
வெப்பநிலையும் ஓர் ஒப்பீடு
வெப்பநிலையானது வெப்ப ஆற்றல் பாயும் திசையை நிர்ணயிக்கிறது என்பதை
நாம் அறிவோம். நீர் உயரமான பகுதியிலிரு ந்து தாழ்வான பகுதிக்குப் பாய்வதைப்போல, வெப்பஆற்றலானது
உயர்ந்த வெப்பநிலையில் உள்ள பொருளிலிருந்து, குறைந்த வெப்பநிலையில் உள்ள பொருளுக்குக்
கடத்தப்படுகிறது.
நீரானது உயரமான இடத்திலிருந்து பள்ளத்தை நோக்கிப் பாயும். அது
எந்தப்பக்கம் நீர் அதிகமாக உள்ளது, எந்தப்பக்கம் நீர் குறைவாக உள்ளது என்பதனைப் பொறுத்ததல்ல.
அது குட்டையிலிருந்து பெரிய நீர்த்தேக்கத்துக்கும் பாயலாம், அல்லது நீர்த்தேக்கத்திலிருந்து
குட்டையை நோக்கியும் பாயலாம். நீர்மட்டமே நீர்பாயும் திசையைத் தீர்மானிக்கிறது.
நீர்மட்டம் நீர்பாயும் திசையைத் தீர்மானிப்பது போல, பொருள்களின்
வெப்பநிலை, வெப்ப ஆற்றல் பாயும் திசையைத் தீர்மானிக்கிறது.
A. B என்ற இரு பொருட்களைக் கருதுவோம். A யின் வெப்பநிலை அதிகமாகவும்
B யின் வெப்பநிலை குறைவாகவும் உள்ளது. A மற்றும் B யை ஒன்றுடன் ஒன்று தொடர்புக்கு கொண்டு
வரும்பொழுது, வெப்பமானது வெப்பப்பொருள் A யிலிருந்து குளிர்பொருள் B க்குப் பாய்கிறது.
இரண்டு பொருள்களும் ஒரே வெப்பநிலைக்கு வரும்வரை வெப்பம் தொடர்ந்து பரிமாற்றம் செய்யப்படும்.
வெப்பநிலை,
வெப்பம் பாயும் திசையைத் தீர்மானிக்கிறது.
1. நீ ஒரு சூடான காப்பிக் கோப்பையைக் கையில் பிடித்துள்ளாய்.
வெப்ப ஆற்றல்,
அ. உன் உடலிலிருந்து காப்பிக்குச் செல்கிறதா? அல்லது
ஆ. காப்பியிலிருந்து உன் உடலுக்குப் பாய்கிறதா?
2 ஒரு கோடை நாளில் நீ வெயிலில் நிற்கிறாய். வெளி வெப்பநிலையானது
40°C அளவில் உள்ளது (மனித உடலின் சராசரி வெப்பநிலை 37°C) வெப்ப ஆற்றலானது,
3. அ. உன் உடலிலிருந்து காற்று மூலக்கூறுகளுக்குப் பாய்கிறதா?
அல்லது
ஆ. காற்று மூலக்கூறுகளிலிருந்து உன் உடலுக்குப் பாய்கிறதா?
ஒரு பொருள் மற்றொரு பொருளின் வெப்பநிலையை பாதிக்குமானால் அவை
இரண்டும் வெப்பத்தொடர்பில் உள்ளன எனலாம். வெப்பத்தொடர்பில் இருபொருட்களின் வெப்பநிலையும்
உள்ள சமமாக இருந்தால் அவை வெப்பச்சமநிலையில் உள்ளன எனப்படுகிறது. இரு பொருட்கள் வெப்பச்சமநிலையில்
உள்ளபோது ஒன்றின் வெப்பநிலை மற்றொன்றை பாதிப்பதில்லை.
எடுத்துக்காட்டாக, குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து சமையலறை
மேடையில் வைக்கப்பட்ட பால்பாத்திரமும், சமையலறை மேடையும் வெப்பத்தொடர்பில் உள்ளன. குறிப்பிட்ட
நேரத்திற்குப் பின் அவை ஒரே வெப்பநிலைக்கு வருகின்றன, அப்போது அவை வெப்பச்சமநிலையில்
உள்ளன.