Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கிரீஸ்: ஹெலனிக் உலகம்

செவ்வியல் உலகம் | வரலாறு - கிரீஸ்: ஹெலனிக் உலகம் | 9th Social Science : History: The Classical World

   Posted On :  04.09.2023 11:45 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : செவ்வியல் உலகம்

கிரீஸ்: ஹெலனிக் உலகம்

கி.மு. (பொ.ஆ.மு) 8ஆம் நூற்றாண்டுவரை கிரேக்கம் உலகின் ஏனைய நாடுகளிலிருந்து வேறுபட்டிருக்கவில்லை. மக்கள் படிப்பறிவு அற்றவர்களாக இருந்தனர். பொருள் உற்பத்தியானது புராதன முறையிலேயே இருந்தது. வாழ்க்கை கடினமாக இருந்தது. ஸ்பார்ட்டா தவிர்த்து ஏனைய பகுதிகள் மலைப்பாங்கான பகுதிகளாக இருந்தமையால் வேளாண்மை விரிவடையச் சாத்தியமில்லை .

கிரீஸ்: ஹெலனிக் உலகம்

கி.மு. (பொ..மு) 8ஆம் நூற்றாண்டுவரை கிரேக்கம் உலகின் ஏனைய நாடுகளிலிருந்து வேறுபட்டிருக்கவில்லை. மக்கள் படிப்பறிவு அற்றவர்களாக இருந்தனர். பொருள் உற்பத்தியானது புராதன முறையிலேயே இருந்தது. வாழ்க்கை கடினமாக இருந்தது. ஸ்பார்ட்டா தவிர்த்து ஏனைய பகுதிகள் மலைப்பாங்கான பகுதிகளாக இருந்தமையால் வேளாண்மை விரிவடையச் சாத்தியமில்லை .


இருந்தபோதிலும் கடற்கரைப்பகுதிகளில் சில காலனிகளை நிறுவுவதில் கிரேக்கர்கள் வெற்றி பெற்றதால் வணிகத்தின் வழியாகப் பொருள் ஈட்ட முடிந்தது. இதன் விளைவாக கி.மு. (பொ..மு) 6ஆம் நூற்றாண்டில் கிரேக்கம் பல நகர அரசுகளைக் கொண்ட ஒருங்கிணைப்பாக மாறியது. ஏதென்ஸ் நகர குன்றின்மீது பண்டைய கிரேக்கர்களால் நிறுவப்பட்டுள்ள அக்ரோபொலிஸ் என்னும் கோட்டையால் சூழப்பட்டுள்ள நகரம் கிரேக்கர்களின் மேம்பட்ட நிலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்நகர அரசுகள் ஒன்றுடன் ஒன்று போரிட்டுக் கொண்டாலும் இவை வணிகம், பொதுவான எழுத்துமுறை, ஒரே மாதிரியான மத நடைமுறைகள் மற்றும் விழாக்கள் போன்றவற்றால் பிணைக்கப்பட்டிருந்தன. இப்பிணைப்பிற்கு ஒப்பற்ற ஓர் எடுத்துக்காட்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளாகும்.

கிரேக்கத்தில் ஆளும் வர்க்கம் நிலங்களைக் கட்டுப்படுத்தியது. அடிமைகள் நிலங்களில் பாடுபட்டனர். அடிமைகளைக் கொண்டிருப்பது என்பது ஒரு நாகரிக வாழ்வின் அவசியம் என கிரேக்க எழுத்தாளர்களும் தத்துவ ஞானிகளும் கருதினர். ஆண்டானுக்கும் அடிமைக்குமான உறவை அரிஸ்டாட்டில் கணவனுக்கும் - மனைவிக்குமான, தந்தைக்கும் பிள்ளைகளுக்குமான உறவுகளோடு ஒப்பிடுகின்றார்.

 

பாரசீகத்தினர் மீதான கிரேக்கத்தின் வெற்றி

பாரசீகப் பேரரசின் அரசனான டேரியஸ் (கி.மு. (பொ..மு) 550-486 ), கிரேக்க நகர அரசுகளைக் கைப்பற்றுவது என முடிவு செய்தார். கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் முதல் தாக்குதல் தோல்வியில் முடிந்தது. படையெடுப்பின்போது ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையும் நோய்களின் தாக்குதல்களுமே பாரசீகத்தின் தோல்விக்குக் காரணமாயின. எனவே இரண்டாவது தாக்குதலைத் திட்டமிடும்போது நிலத்தின் வழியாய் படையெடுப்பதைத் தவிர்த்து நீர்வழித் தாக்குதலை மேற்கொண்டனர். நாட்டுப்பற்றால் உந்தப்பட்ட கிரேக்கர்கள் அல்லது ஹெலினியர்கள், வீரத்துடன் போரிட்டு கி.மு. (பொ..மு) 490இல் மராத்தான் என்னுமிடத்தில் பாரசீகப்படைகளைத் தோற்கடித்தனர். டேரியஸ்க்குப் பின்னர் அரசப் பதவியேற்ற ஜெர்க்சஸ் மீண்டும் ஒருமுறை படையெடுத்து வந்தார். இம்முறை ஸ்பார்ட்டன் படைகளோடு சேர்ந்து ஏதென்ஸ் நகர மக்கள் பாரசீகப்படைகளை முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்தினர். சில நகர அரசுகள் சரணடைந்த போதிலும் ஏதென்ஸ் பின்வாங்க மறுத்தது. 'சலாமிஸ்' என்னுமிடத்தில் நடை பெற்ற இறுதிகட்டப் போரில் பாரசீகப் போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. தன் எண்ணம் நிறைவேறாததால் மனமுடைந்த ஜெர்க்சஸ் நாடு திரும்பினார்.

 

ஹெலினிய கிரேக்கத்தில் "மக்களாட்சி"

கிரேக்க நகர அரசுகள் முதன்முதலாகத் தோன்றியபோது அவை கடந்தகால மரபுரிமைப் பண்புகளில் சிலவற்றை இன்னமும் சுமந்து கொண்டிருந்தன. ஆள்வோர்கள் தலைவர்களின் வம்சாவளி வந்தவர்களாவே இருந்தனர். விரிவடைந்த வணிகத்தின் மூலம் செல்வந்தர்களாக மாறியவர்கள் ஆட்சியதிகாரத்தைக் கொண்டிருக்கும் இப்பழைய குடும்பங்கள் அனுபவிக்கும் உரிமைகள் மற்றும் சலுகைகளை வெறுத்தனர். இதன் விளைவாக பலநகர அரசுகளில் முடியாட்சி அரசர்கள் (Monarchy) தூக்கி எறியப்பட்டனர். இருந்தபோதிலும் கொடுங்கோலர்களின் ஆட்சி நடைபெற்ற (கி.மு. (பொ..மு) 6ஆம் நூற்றாண்டு முதல் 4ஆம் நூற்றாண்டு வரை) காலத்தில்தான் புதிய கட்டடங்களோடும், மிகப்பெரிய கோவில்களோடும் நகரங்கள் வளர்ச்சியடைந்தன. (.கா). ஏதென்சிலுள்ள ஒலிம்பியா ஜீயஸ் கோவில்.

 

ஏதென்ஸ் நகர மக்களாட்சி

ஏதென்சில் அடித்தள மக்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக குழு ஆட்சியும், கொடுங்கோலாட்சியும் அகற்றப்பட்டு மக்களாட்சி முறை நிறுவப்பட்டது. ஏதென்சில் சட்டம் இயற்றும் அதிகாரம் அனைத்தும், சுதந்திர மக்கள் (Freemen) பங்கேற்கும் மக்கள் மன்றத்தின் வசம் வழங்கப்பட்டிருந்தது. நீதிபதிகளும் கீழ்நிலை அதிகாரிகளும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இம்முறை சமூகத்தின் மேல்தட்டு மக்களால் வெறுக்கப்பட்டது. அவர்கள் மக்களாட்சியைக் 'கும்பலின் ஆட்சி' எனக் கருதினர்.

பாரசீகப் படையெடுப்பின் அபாயம் கிரேக்கர்களை ஒற்றுமையுடன் இருக்கச் செய்திருந்தது. அந்த ஆபத்து நீங்கியவுடன் அவர்கள் மீண்டும் தங்களிடையே சண்டையிடத் தொடங்கினர். பலகிரேக்க நகர அரசுகளின் வரலாறு பணம்படைத்த நிலப்பிரபுக்கள் மக்களாட்சியை எதிர்த்து நடத்திய தொடர் போராட்டங்களாகவே அமைந்தது. இவற்றில் விதிவிலக்காக இருந்தது ஏதென்ஸ் மட்டுமே. அங்கு மக்களாட்சிமுறை 200 ஆண்டுகள் நீடித்தது

மக்களாட்சி என்னும் சொல்லின் நேர்பொருள் “மக்களே ஆட்சி புரிவது” என்பதாகும். ஆனால் நடைமுறையில் மெடிக்ஸ் என்று அழைக்கப்ட்ட அடிமைகள், பெண்கள், நகரில் தங்கியிராதவர்கள் (வணிகர்கள், கைவினைஞர்கள்) ஆகியோர் விலக்கியே வைக்கப்பட்டிருந்தனர். 

 

பெரிகிளிஸ் (கி.மு. (பொ.. மு.) 461-429)

ஏதென்ஸ் நகர் பெரிகிளிஸ் என்னும் மாபெரும் தலைவரைப் பெற்றிருந்தது. அவர் முப்பதாண்டு காலம் அதிகாரத்தில் இருந்தார். இவருடைய ஆட்சியின் போது ஏதென்சும் ஸ்பார்ட்டாவும் ஒன்றுக்கெதிராக மற்றொன்று தொடர்ந்து போர் செய்தன.


இப்போர்கள் 'பெலப்போனேசியப் போர்கள்" என அறியப்பட்டன. ஸ்பார்ட்டாவோடு பகைமை, அந்நகர அரசு செய்த இடையூறுகள் ஆகியவை இருந்தபோதிலும் அவற்றையும் மீறி ஏதென்ஸ் பிரமிக்கச் செய்யும் கட்டடங்களைக் கொண்ட உன்னதமான நகரமாக மாறியது. மாபெரும் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் அந்நகரத்தில் இருந்தனர். ஆகவே வரலாற்று அறிஞர்கள் இக்குறிப்பிட்ட காலத்தை 'பெரிகிளிசின் காலம் என அழைக்கின்றனர்.

Tags : The Classical World | History செவ்வியல் உலகம் | வரலாறு.
9th Social Science : History: The Classical World : Greece: The Hellenic World The Classical World | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : செவ்வியல் உலகம் : கிரீஸ்: ஹெலனிக் உலகம் - செவ்வியல் உலகம் | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : செவ்வியல் உலகம்