Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ரோம்: ஹெலனிஸ்டிக் உலகம்

செவ்வியல் உலகம் | வரலாறு - ரோம்: ஹெலனிஸ்டிக் உலகம் | 9th Social Science : History: The Classical World

   Posted On :  04.09.2023 11:59 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : செவ்வியல் உலகம்

ரோம்: ஹெலனிஸ்டிக் உலகம்

கிரேக்க நகர அரசுகள் ஒருவிரிவான அதிகார வர்க்கத்தை கொண்டிருக்கவில்லை. ஆகவே அவர்களால் மாபெரும் சக்தியை வெளிக்காட்ட முடிந்தது. மகா அலெக்ஸாண்டரின் தலைமையின் கீழ் கிரேக்கர்கள் மாசிடோனியாவில் ஒரு அரசை நிறுவினர். இவ்வரசு வரலாற்றுப் புகழ்மிக்க எகிப்து, மத்திய கிழக்கு ஆகிய பேரரசுகளை தன்னோடு இணைத்துக் கொள்வதில் வெற்றி பெற்றது.

ரோம்: ஹெலனிஸ்டிக் உலகம்


ஹெலனிஸ்டிக் நாகரிகத்தின் தொடக்கம்

கிரேக்க நகர அரசுகள் ஒருவிரிவான அதிகார வர்க்கத்தை கொண்டிருக்கவில்லை. ஆகவே அவர்களால் மாபெரும் சக்தியை வெளிக்காட்ட முடிந்தது. மகா அலெக்ஸாண்டரின் தலைமையின் கீழ் கிரேக்கர்கள் மாசிடோனியாவில் ஒரு அரசை நிறுவினர். இவ்வரசு வரலாற்றுப் புகழ்மிக்க எகிப்து, மத்திய கிழக்கு ஆகிய பேரரசுகளை தன்னோடு இணைத்துக் கொள்வதில் வெற்றி பெற்றது. ஆனால் அலெக்ஸாண்டரின் காலம் முழுமையும் போர்களிலேயே கழிந்தது.


பெரிகிளிஸுக்குப்பின்னர் வந்த அரசாங்கம் உண்மையைக் கண்டறிய, சாக்ரடீஸ் முன்வைத்த வழிமுறைகளை விரும்பவில்லை. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கடவுள்களை சாக்ரடீஸ் ஏற்றுக் கொள்ள மறுத்தார் என்றும் இளைஞர்களைத் தவறான சிந்தனைக்கு இட்டுச் சென்றார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். நீதிமன்றக்குழு நடுவர் சாக்ரடீஸை குற்றவாளி எனத் தீர்மானித்து அவரை விஷம் (hemlock) அருந்தி உயிர்விடும்படி தீர்ப்பு வழங்கியது.

அலெக்ஸான்டரின் இறப்பிற்குப் பின்னர் பண்பாடு மிக விரைவாக வளர்ந்தது. வரலாற்று அறிஞர்கள் இதனை (கி.மு. (பொ..மு) 323) ஹெலனிஸ்டிக் நாகரிகம் என அழைக்கின்றனர்.

கிரேக்கர்களின் அறிவியல், கணிதம், தத்துவம் ஆகிய துறைகள் கிரேக்க-எகிப்திய நகரமான அலெக்ஸாண்டிரியாவில் வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டன. வடிவியல் (geometry) கணிதம் தொடர்பான அடிப்படைத் தேற்றங்களை யூகிளிட் முறைப்படுத்தினார். எரோட்டோஸ்தனிஸ் பூமியின் விட்டத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டார். ஹிப்பார்கஸ் முக்கோணவியலைக் (Trigonometric) கண்டுபிடித்தார். ஹிப்பார்கசின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கோள்களும் நட்சத்திரங்களும் எவ்வாறு நகர்கின்றன என்பது குறித்த ஒரு மாதிரி அமைப்பை டாலமி உருவாக்கினார்.

 

ரோம் குடியரசு

தொடக்க காலத்தில் ரோம் வம்சாவளிகளின் மூலம் கட்டமைக்கப்பட்ட வேளாண் சமூகத்தைக் கொண்ட நாடாக இருந்தது. இதனுள்ளிருந்து பரம்பரையாக ஆட்சி புரியும் ஒரு ஆளும் வர்க்கம் உருவானது. ரோமானிய மக்கள் இரண்டு வர்க்கங்களாகப் பிரிந்திருந்தனர். ஒரு வர்க்கத்தினர் பாட்ரீசியன்ஸ் (Patricians) என்றழைக்கப்பட்ட பணம்படைத்த நிலப்பிரபுக்கள். மற்றொரு வர்க்கத்தினர் பிளபியன்ஸ் (Plebeians) என்றழைக்கப்பட்ட சாதாரண மக்கள். வடக்குதெற்கு, கிழக்கு-மேற்கு ஆகிய திசைகளிடையே குறுக்கும் மறுக்குமாகச் செல்லும் வணிகப் பாதைகளுக்கு நடுவே கேந்திரமான இடத்தில் ரோம் அமைந்திருந்தது. இப்பாதைகள் வழி செல்லும் வணிகர்களிடம் பெறப்பட்ட வரியானது வேளாண்மை வருவாய்க்கு மேல் கூடுதல் வருவாயாக அமைந்தது. கி.மு. (பொ..மு ) ஆறாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ரோம் செழித்தோங்கிய நகரமாயிற்று.

 

பாட்ரீசியன்கள், பிளபியன்கள் இடையிலான வர்க்கப்போர்

ரோமில் போர்க் கைதிகள் அடிமைகளாக ஆக்கப்பட்டனர். இதன்மூலம் பணம்படைத்தோர் சுரண்டுவதற்கு ஏதுவாகப் பெரும் உழைப்பாளர் கூட்டத்தை ரோம் உருவாக்கியது. மிகப்பெரும் நிலப்பிரபுக்கள் இவ்வடிமைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி தங்கள் நிலங்களில் வேளாண் பணிகளில் ஈடுபடுத்தினர். அடிமைகளின் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது. கி.மு. (பொ..மு) முதலாம் நூற்றாண்டில் ரோமில் சுதந்திர மக்களின் எண்ணிக்கை 3.25 மில்லியன்களாக இருந்தபோது 2 மில்லியன் அடிமைகள் இருந்தனர். அடிமைகளின் உழைப்பால் சுதந்திர மனிதர்கள் வேலைவாய்ப்பை இழந்து வறியவர்கள் ஆயினர். பல ஏழை விவசாயிகள் தங்கள் குழந்தைகளைக் கைவிட நேர்ந்தது. அக்குழந்தைகளும் இறுதியில் அடிமைச் சந்தையை வந்தடைந்தனர். பாட்ரீசியன் பிளபியன் இடையிலான மோதல் இரத்தம் தோய்ந்ததாக மாறியது.

ரோம் அரசுக்கு அதிக வருவாயை அள்ளிக் கொடுத்தது அடிமை வியாபாரமாகும். டெலாஸ் தீவுமிகப்பெரிய அடிமைச் சந்தையாக மாறியது.

டைபிரியஸ் கிராக்கஸ் மற்றும் காரியஸ் டோ கிராக்கஸ் ஆகிய இருவரும். பாட்ரீசியப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களைக் கூறினர். ஏழை விவசாயிகள் இவ்விருவரையும் ஆதரித்ததால் அதிர்ச்சியடைந்த செனட்டர்கள் இவ்விருவரையும் கொலை செய்தனர். கிராக்கஸ் சகோதரர்களின் உயிர்த்தியாகம் ரோம் குடியரசு ரோமப் பேரரசாக மாற்றம் பெற்றதில் ஒரு முக்கியப் பங்கினை வகித்தது.


 

கான்சல்களிடமிருந்து பேரரசருக்கு அதிகார மாற்றம்

மாரியஸ் என்பவர், இக்குயிட்டிஸ் (புதிய பணம் படைத்தோர், அதிக சொத்துடைமையாளர்கள், செனட்டர்கள் ஆகியோருக்கு கீழான வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்) என்போரின் ஆதரவோடு கான்சலாக ஆன பின்னர், செனட் சபையில் நில விநியோக மசோதா ஒன்றை அறிமுகம் செய்யும் முயற்சியை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. மாரியஸின் ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர். இதன் விளைவாக மாரியஸின் ஆதரவாளர்கள் மற்றும் சுல்லா என்பவரின் ஆதரவாளர்களிடையே உள்நாட்டுப்போர் ஏற்பட்டது. இறுதியில் மாரியஸ் அகற்றப்பட்டு சுல்லா அதிகாரத்தைக் கைப்பற்றி மூன்று ஆண்டுகள் ஒரு முழுமையான சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்தார். பின்னர் அவரும் கொல்லப்பட்டு சின்னா, காட்டலினா என்போர் ஆட்சி புரிந்தனர்.

அடிமைகளின் கிளர்ச்சிகள்

கிரேக்கத்தைக் காட்டிலும் ரோமில்தான் அடிமைகளின் கிளர்ச்சிகள் அதிகம் நடந்தன. ஸ்பார்டகஸின் கிளர்ச்சியே அவற்றுள் புகழ் பெற்றதாகும். 70,000 அடிமைகள் பங்கேற்ற அக்கிளர்ச்சி கி.மு. (பொ..மு ) 73இல் தொடங்கியது. இப்புரட்சிரோமின் அதிகாரத்தை அச்சங்கொள்ள வைத்தது. ஆனாலும் இறுதியில் ஸ்பார்டகஸ் கொல்லப்பட்டு புரட்சி ஒடுக்கப்பட்டது. ஸ்பார்ட்டகஸை பின்பற்றிய 6000 புரட்சியாளர்களும் கொல்லப்பட்டனர்.

 

மன்னராட்சி (பிரின்சிபேட்) நிறுவப்படுதல்

சமூகப் பிரச்சனைகள் தொடர்பான உள்நாட்டுப்போர் முடிவடைந்தபோது போர்த் தளபதிகளுக்கு இடையிலான உள்நாட்டுப்போர் தொடங்கியது. சுல்லாவுக்கு எதிராக மாரியஸ், சின்னா இருவரும், ஜுலியஸ் சீசருக்கு எதிராகப் பாம்பி, ஜுலியஸ் சீசரின் இறப்பிற்குப் பின்னர் புருட்டஸ், காசியஸ் ஆகியோர் மார்க் ஆண்டனி மற்றும் ஆக்டேவியனுக்கு (சீசரின் ஒன்றுவிட்ட சகோதரன்) எதிராகவும் இறுதியில் ஆக்டேவியன்மார்க்ஆண்டனிக்கு எதிராகவும் எனப் பல போர்கள் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் அரசியல் உறுதித் தன்மையை மீண்டும் நிறுவுவதற்கான ஒரே வழி அகஸ்டஸை (முன்னர் ஆக்டேவியன்) முடியரசராக அரியணை ஏற்றுவதே என பரம்பரைச் செல்வந்தர்களும் புதிய பணக்காரர்களும் முடிவு செய்தனர். அகஸ்டஸ் அரசரான (கி.மு. (பொ..மு) 27) வருடத்திலிருந்து தொடங்கும் காலம் மன்ன ராட்சி காலம் (Principate) என அறியப்பட்டது. அகஸ்டஸ் தன்னை பேரரசன் (Imperator) என அழைத்துக் கொண்டார்.


 

ரோமானிய மன்னராட்சியில் சமூகம்

மன்னர் ஆட்சி காலத்தில் பிராந்திய அளவிலான ஆளும் வர்க்கத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து ஓர் ஏகபோக ஆளும் வர்க்கமாயினர். குடியரசின் கீழ் இருந்ததைக் காட்டிலும் இவ்வர்க்கமானது தற்போது மேன்மேலும் செழித்தோங்கியது. இக்காலத்தில் அதிக அளவில் ஆடம்பரப் பொருட்களான பட்டு, வாசனைத் திரவியங்கள், மிளகு, விலையுயர்ந்த ஆபரணக் கற்கள் போன்றவை கீழ்திசை நாடுகளிலிருந்து வந்து குவிந்தன. கோவில்கள், கலையரங்குகள், திறந்தவெளி விளையாட்டு அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கால்வாய்கள், குளியலிடங்கள், வட்டரங்குகள் மற்றும் சந்தைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நகரங்கள் இக்காலத்தில் எழுப்பப்பட்டன. பணம்படைத்தோர் ஏழைகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக விளையாட்டுகளை ஏற்பாடு செய்தனர், போட்டிகள் நடத்தினர். சண்டைக்காட்சி வீரர்களை (Gladiator) மோதவிட்டு யாரேனும் ஒருவர் கொல்லப்படுகின்றவரையிலான கட்டாயச் சண்டைகளை, மக்கள் கூடுகின்ற அரங்குகளில் நடத்தினர்


அகஸ்டஸின் காலத்தைச் சேர்ந்த பிரசித்திபெற்ற எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் மூலம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தனர். பிளினி (மூத்தவர்) அளவில் மிகப்பெரிதான அறிவியல் கலைக்களஞ்சியத்தை எழுதி முடித்தார். அதை அவர் இயற்கை வரலாறு (NaturalHistory) என அழைத்தார். அறிவியல் தொடர்பான கலைக் களஞ்சியத்தை உருவாக்கிய மற்றுமொரு ஆசிரியர் செனிக்கா ஆவார். தன்னுடைய 'ஓட்ஸ்' (odes) என்னும் நூலில் ஹேரெஸ், எப்பிகியூரியசின் தத்துவங்களை நியாயப்படுத்துவதையும், பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது இருக்கவேண்டிய மனோதைரியம் பற்றி ஸ்டாய்க் தத்துவம் முன்வைத்த கருத்துக்களையும் இணைத்து புதியதோர் தத்துவத்தை உருவாக்கினார். லிவி ஒரு வரலாற்று அறிஞர் என்பதைக் காட்டிலும் சிறந்த உரைநடையாளர் எனக் கூறலாம். மிகச் சிறந்த வரலாற்று அறிஞர் டேசிடஸ் ஆவார். வெர்ஜில் எழுதிய ஏனேய்ட் (Aeneid) ரோமானிய ஏகாதிபத்தியத்தைப் புகழ்வதாய் அமைந்தது. இக்காலத்தில் ரோமானியச் சட்டம் மேலோங்கிய வளர்ச்சி நிலையை எட்டியது.

பியூனிக் போர்களும் ஏகாதிபத்திய ரோமப் பேரரசின் தோற்றமும்

இத்தாலியில் ரோம் வளர்ச்சி பெற்றபோது வட ஆப்பிரிக்காவில் கார்த்தேஜ் வலிமையான சக்தியாக வளர்ந்தது. கார்த்தேஜ் மக்கள் கடற்பயணங்களிலும் வணிகத்திலும் சிறந்து விளங்கிய பீனிசியர்களின் சந்ததிகள் ஆவர். ரோமும் கார்த்தேஜும் கிரேக்கர்களை வெளியேற்ற ஒன்றிணைந்தனர். அதன் பின்னர் கார்த்தேஜ் சிசிலியைக் கைப்பற்றியது ரோம அரசுக்கே ஆபத்தாய் மாறியது. இவ்விரு சக்திகளிடையே நடைபெற்ற மூன்று போர்களே பியூனிக் போர்கள் என அழைக்கப்படுகின்றன. கார்த்தேஜ், ஹன்னிபால் என்ற தளபதியை அனுப்பிவைத்தது. ரோமின் படையைத் தோற்கடித்த அவர் இத்தாலியின் பெரும்பகுதியை பாலைவனமாக்கினார். ரோம் படைக்கு தலைமையேற்றிருந்த பாபியஸ் மனம் தளரவில்லை. இரண்டாம் பியூனிக் போரில் ஹன்னிபாலை எதிர்கொண்ட பாபியஸ், ஜாமா போர்க்களத்தில் அவரைத் தோற்கடித்தார். ரோமானியப் படைகளால் பின்தொடரப்பட்ட ஹன்னிபால் ஹன்னிபால் விஷமருந்தி மாண்டார். கார்த்தேஜின் மீது மூன்றாவது பியூனிக்போரை ரோம் அறிவித்தது. இப்போரில் கார்த்தேஜ் வெற்றிகொள்ளப்பட்டு அழிக்கப்பட்டது. இதன்பின்னர் மேலை உலகில் நிகரற்ற சக்தியாக ரோம் மாறியது.


.கி.பி. (பொ..) 14 இல் அகஸ்ட ஸ் மரணமடைந்தார். அவருக்குப் பின்வந்த ரோமானியப் பேரரசர்களில் சிலர் திறமை மிக்கவர்களாகவும் அறிவிற் சிறந்தவர்களாகவும் இருந்தனர். ஆனால் டிராஜன் (98-117) ஆண்டோனினஸ் பயஸ் (138-161) மார்க்க ஸ் அரிலியஸ் (161-180) ஆகியோர் தவிர்த்து மற்ற அனைவரும் கொடுங்கோலர்களே. மற்றவரிடமிருந்து தனித்து நிற்பவர் மார்க்கஸ் அரிலியஸ் ஆவார். ஒரு தத்துவ அறிஞரான இவர் பல நூல்களை எழுதியுள்ளார். சீனாவிற்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி ஒரு ஆசிய நாட்டுடன் தொடர்பை ஏற்படுத்திய முதல் ரோமானியப் பேரரசர் இவரே ஆவார்.

 

வெளிநாட்டவர் படையெடுப்பும் ரோமப் பேரரசின் சரிவும்

பண்பாட்டில் பின் தங்கியவர்களின் படையெடுப்புகளால் அபாயங்களை எதிர்கொண்ட ரோமப்பேரரசு அதிகச்செலவு மிக்க, கூலிப்படைகளைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. கி.பி. (பொ..) 330இல் அரசின் ஆட்சி மையம் இத்தாலியிலிருந்து கிரேக்க மொழியைப் பேசும் பைசாண்டியம் நகருக்கு மாறியது. ஆனால் அங்கிருந்து கொண்டு தொலை தூரத்திலிருந்த மேற்குப் பகுதிகளைக் கட்டுப்படுத்த அதனால் இயலவில்லை . கி.பி. (பொ..) 410இல் கோத் அலாரிக்ரோமாபுரியைச்சூறையாட பெரும்படையோடு புறப்பட்டார். பிராங்குகளின் தலைவர் குளோவிஸ், கால் பகுதியைக் கைப்பற்றினார். ஆஸ்ட்ரோகோத் இனத்தை சேர்ந்த தியோடெரித் தன்னை ரோமின் பேரரசராக அறிவித்துக் கொண்டார். இறுதியான ஆனால் கடுமையான தாக்குதலை நடத்தியோர் வாண்ட ல்கள் ஆவர். கி.பி. (பொ..) 476 இல் பேரரசர் ரோமுலஸ் அகஸ்டஸ் ஆட்சியின்மீது வெறுப்பு கொண்ட ரோம ராணுவம் ஒடோவாகர் என்பவரின் தலைமையில் அவரைப் பதவி நீக்கம் செய்தது. மேலை ரோமானியப் பேரரசும் இத்துடன் முடிவுக்கு வந்தது.

Tags : The Classical World | History செவ்வியல் உலகம் | வரலாறு.
9th Social Science : History: The Classical World : Rome: The Hellenistic World The Classical World | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : செவ்வியல் உலகம் : ரோம்: ஹெலனிஸ்டிக் உலகம் - செவ்வியல் உலகம் | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : செவ்வியல் உலகம்