Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | ஜிப்சம்: பண்புகள், பயன்கள்
   Posted On :  25.12.2023 05:36 am

11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்

ஜிப்சம்: பண்புகள், பயன்கள்

ஜிப்சம் ஒரு மிருதுவான தாதுப்பொருள், நீரில் ஒரளவிற்கு கரையும், வெப்பநிலை இதன் கரைதிறன் மீது தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.

ஜிப்சம் (CaSO4.2H2O)

வரலாற்றுக்கு முந்தைய பெரிய கடல் வடிநில பரப்பில் இருந்த நீர் ஆவியாவதால் ஜிப்சப்படுகைகள் உருவாகின்றன. நீர் ஆவியாக மாறும் போது அதில் அடங்கியுள்ள தாதுப்பொருட்களின் செறிவு அதிகரிப்பதுடன் அவை படிகமாகின்றன


படம் 5.11 ஒரு ஜிப்சக் குவாரி

ஜிப்சத்தின் பண்புகள்

ஜிப்சம் ஒரு மிருதுவான தாதுப்பொருள், நீரில் ஒரளவிற்கு கரையும், வெப்பநிலை இதன் கரைதிறன் மீது தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. வெப்பநிலை அதிகரிக்கும் போது, மற்ற உப்புகளைப் போல் அல்லாமல் இதன் கரைதிறன் குறைகிறது. இப்பண்பு எதிர்க்கரைதிறன் (retrograde solubility) என அறியப்படுகிறது. இது ஜிப்சத்தின் தனித்துவமான பண்பாகும்.

ஜிப்சம் பொதுவாக நிறமற்றதாகவோ அல்லது வெளிர்ந்த நிறத்தையோ கொண்டிருக்கும். சில நேரங்களில், மாசுகள் காணப்படும் காரணத்தால் இளஞ்சிகப்பு, மஞ்சள், பழுப்பு மற்றும் வெளிர் பச்சை ஆகிய நிறங்களின் சாயல்களைப் பெற்றிருக்கும்.

சில நேரங்களில், ஜிப்சம் மலர்களின் இதழ்களை ஒத்த வடிவமைப்பில் கிடைக்கப் பெறுகிறது. இவ்வகைபாலைவன ரோஜா' என அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் பாலைவனப் பகுதிகளில் உண்டாகிறது.

ஜிப்சம் குறைவான வெப்பக் கடத்தும் திறனைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக உலர் சுவர்கள் மற்றும் சுவர்ப்பலகைகள் தயாரித்திட பயன்படுகிறது. ஜிப்சம் இயற்கை மின்காப்புப் பொருள் எனவும் அறியப்படுகிறது.


படம் 5.12 ஜிப்சத்தின் ஒரு வகையான அலபாஸ்டர்

அலபாஸ்டர் எனும் ஜிப்சத்தின் ஒரு வகையானது, அணிகல கற்கள் போன்று விலைமதிப்புமிக்கது. இது சிற்பிகளால் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது துகள் வடிவமுடைய, ஒளி ஊடுருவ இயலாத்தன்மை உடையது. "மோ" கடினத்தன்மை அளவீட்டில் (moh's scale) ஜிப்சத்தின் கடினத்தன்மை 1.5 முதல் 2 வரை. இதன் அடர்த்தி எண் 2.3 முதல் 2.4 வரை.


ஜிப்சத்தின் பயன்கள்

பண்டைய எகிப்து மற்றும் மெசபடோமியாவில் ஜிப்சத்தின் ஒரு வகையான அலபாஸ்டர் சிற்பிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜிப்சத்தினை, எவ்வாறு பாரீஸ்சாந்தாக மாற்றுவது என்பதை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்களால் அறியப்பட்டுள்ளது. தற்போது மனித சமுதாயத்தில் ஜிப்சம் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. அவற்றின் சில பயன்கள் கீழே   கொடுக்கப்பட்டுள்ளது.

உலர் பலகைகள், பூச்சுப் பலகைகள் தயாரிப்பதில் ஜிப்சம் பயன்படுகிறது. சுவர்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கவும், மேற்கூரைகள் மற்றும் அறைகளை பகுதிகளாக பிரிக்கவும் பூச்சுப் பலகைகள் பயன்படுகின்றது.

ஜிப்சத்தின் மற்றுமொரு பயன்பாடு பாரீஸ்சாந்து தயாரிப்பதாகும். ஜிப்சத்தினை 300 டிகிரி பாரன்ஹீட்டில் சூடுபடுத்தி பாரீஸ்சாந்து தயாரிக்கப்படுகிறது. இது ஜிப்சம் பூச்சு எனவும் அழைக்கப்படுகிறது. முக்கியமாக இது சிற்பங்களை வடிப்பதில் பயன்படுகிறது.

ஜிப்சம் எலும்பியல் துறையில் எலும்பு முறிவு சரிசெய்யும் கட்டுகள் மற்றும் அச்சுகள் தயாரிக்க பயன்படுகிறது.

வேளாண்மைத் துறையில், மண்ணுடன் சேர்க்கப்படும் பொருளாகவும், கட்டுப்படுத்தியாகவும், உரமாகவும் பயன்படுகிறது. களிமண் மற்றும் இறுக்கமான மண்ணை நெகிழச் செய்வதுடன், தாவர வளர்ச்சிக்கு முக்கியமாக பயன்படும் கால்சியம் மற்றும் சல்பரை தரும் பொருளாக உள்ளது. மண்ணிற்கு அதிக உப்புத் தன்மையைத் தரும் Na+ அயனிகளை நீக்கவும் பயன்படுகிறது.

ஜிப்சம் முக்கியமாக இணைத்தல் மற்றும் கெட்டியாக்கும் பண்புகளைப் பெற்றுள்ளதால் பற்பசை, ஷாம்புகள் மற்றும் முடித் தொடர்பான பொருட்களில் பயன்படுகிறது.

போர்ட்லாண்டு சிமெண்டுகளில், ஜிப்சம் ஒரு முக்கியப் பகுதிப் பொருளாகும். இது கடினமாதலை தாமதப்படுத்தும் காரணியாக செயல்படும் தன்மையைப் பெற்றிருப்பதால் கான்கிரீட்டுகள் கடினமாகும் வேகத்தினைக் கட்டுப்படுத்துகிறது.

அதிக அளவில் கிடைக்கும் தாதுப்பொருட்களின் முக்கியமானது ஜிப்சமாகும். இது கணக்கற்ற பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இத் தாதுவானது புவி மேற்பரப்பிற்கருகில் அதிக அளவில் கிடைப்பதால் இதனை வெட்டி எடுப்பது எளிதாகும் எனினும் அதிக அளவு ஜிப்சம் வெட்டி எடுத்தால் சுற்றுச் சூழலில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும். ஜிப்சத்தினை மறுசுழற்ச்சி செய்ய முடியும். ஆனால் இத்தாது அதிக அளவில் கிடைப்பதால், இதன் மறுசுழற்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை.


படம் 5.13 ஜிப்சத்தின் பயன்கள்

11th Chemistry : UNIT 5 : Alkali and Alkaline Earth Metals : Gypsum: Preparation, Properties, Uses in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள் : ஜிப்சம்: பண்புகள், பயன்கள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்