சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் உயிரியல் முக்கியத்துவம்
சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் ஒற்றை மின்சுமையுடைய நேர் அயனிகள் அதிக அளவில் உயிர்த்திரவங்களில் காணப்படுகிறது. அயனிச் சமநிலை மற்றும் நரம்பு தூண்டலை கடத்துதல் ஆகிய செயல்களில் இந்த அயனிகள் மிகமுக்கியப் பங்காற்றுகின்றன. 70kg எடையுடைய ஒரு மனிதனின் உடலில் 5g இரும்பு மற்றும் 0.06g காப்பருடன் ஒப்பிடும் போது, சுமாராக 90g சோடியம் மற்றும் 170g பொட்டாசியம் அடங்கியுள்ளது.
செல்களுக்கு வெளியே இரத்த பிளாஸ்மா மற்றும் செல்லைச் சூழ்ந்துள்ள இடைதிரவங்களில் சோடியம் அயனிகள் முதன்மையாகக் காணப்படுகின்றன. நரம்பு சமிக்கைகளை கடத்துவதில் இந்த அயனிகள் பங்கு வகிக்கின்றன. செல் சவ்வுகளின் வழியே நீர் கடத்தலுக்கும், சர்க்கரை மற்றும் அமினோ அமிலங்களை செல்லின் உள்ளே கடத்துவதற்கும் இந்த அயனிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. சோடியம் மற்றும் பொட்டாசியம், ஒத்த வேதிப்பண்புகளைக் கொண்டிருந்த போதிலும், இந்த அயனிகள் கடத்தும் வழிமுறைகள் மற்றும் நொதிகளை செயலுற வைப்பதிலும், செல்சுவரை ஊடுருவுவதிலும் இவை குறிப்பிடத்தக்க வேறுபாட்டினைப் பெற்றுள்ளன.
செல் திரவங்களின் உள்ளே பொட்டாசியம் அயனியானது அதிக அளவில் காணப்படுகிறது. இங்கே இவை பல நொதிகளை செயலுறச் செய்கிறது. குளுக்கோஸை ஆக்சிஜனேற்றம் செய்து ATPயை உருவாக்குகிறது. நரம்பு சமிக்கைகளை கடத்துவதில் சோடியம் - பொட்டாசியம் இறைப்பி முக்கியப் பங்காற்றுகிறது.
படம் 5.4 சோடியம் - பொட்டாசியம் இறைப்பி (sodium-potassium pump)