Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | ஹைட்ரோகார்பன்கள்: அறிமுகம்
   Posted On :  03.01.2024 03:18 am

11 வது வேதியியல் : அலகு 13 : ஹைட்ரோகார்பன்கள்

ஹைட்ரோகார்பன்கள்: அறிமுகம்

ஹைட்ரோ கார்பன்கள் என்பன கார்பன் மற்றும் ஹைட்ரஜனை மட்டுமே கொண்டுள்ள கரிமச் சேர்மங்களாகும்.

அலகு 13

ஹைட்ரோகார்பன்கள்




சார்லஸ் அடால்ஃப் உர்ட்ஸ்

இவர் பிரஞ்சு கரிமவேதியியல் அறிஞர். பாஸ்போரைல் குளோரைடினைக் கண்டறிந்தவர். ஆல்கைல் ஹாலைடுகள், உலோக சோடியத்துடன் வினைபட்டு உயர் ஆல்கேன்களைத் தரும் என்பதைக் கண்டறிந்தார். பிற்காலத்தில், இவ்வினையானது உர்ட்ஸ் வினை என்று பெயரிடப்பட்டது. எத்தில் அமீன், கிளைக்கால் மற்றும் ஆல்டால் குறுக்க வினைகளையும் இவர் கண்டறிந்துள்ளார்.


கற்றலின் நோக்கங்கள்:

இப்பாடப்பகுதியைக் கற்றறிந்த பின்னர் மாணவர்கள்,

கார்பன் அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பின் தன்மையைக் கொண்டு ஹைட்ரோ கார்பன்களை வகைப்படுத்துதல்

ஹைட்ரோகார்பன்களுக்கு, IUPAC முறையினை பின் பற்றிப் பெயரிடுதல்,

ஹைட்ரோகார்பன்களை தயாரிக்கும் பல்வேறு முறைகளை விளக்குதல்.

தனி உறுப்புகள், சங்கிலி தொடர் வினையின் துவக்கநிலை, வினைத் தொடர்தல் நிலை மற்றும் முடிவுநிலை போன்ற கரிமவேதியியலில் இடம்பெறும் சொற்றொடர்களுக்கு பொருள் விளக்கமளித்து விளக்குதல்

ஹாலஜனேற்றம், எரித்தல், பிளத்தல் போன்ற வினைகளின் மூலம் ஆல்கேன்களின் வேதியியலை விளக்குதல்

மார்கோனிகாஃப் விதி மற்றும் பெர்ராக்சைடு விளைவுகளைப் பயன்படுத்தி, சீர்மையற்ற ஆல்கீன்களின் சேர்க்கை வினை விளை பொருட்களைக் கண்டறிதல்.

ஆல்கைன்களின் அமில ஹைட்ரஜனை அறிந்துணர்த்துதல்.

பென்சீனின் அமைப்பை அறிந்து கொள்ளுதல், அதன் அரோமேட்டிக் தன்மை மற்றும் எலக்ட்ரான் கவர்பொருள் பதிலீட்டு வினைகளின் வினை வழிமுறைகளை விளக்குதல்

ஒற்றை பதிலீட்டு பென்சீனில் உள்ள பதிலீட்டு தொகுதிகளின் ஆற்றுப்படுத்தும் பண்பினை கணித்தல் 

அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்களின் நச்சுத்தன்மை மற்றும் புற்றுநோய் காரணியாக செயல்படும் தன்மையை அறிந்து கொள்ளுதல் ஆகிய திறன்களை பெறுகின்றனர்.


அறிமுகம்:

ஹைட்ரோ கார்பன்கள் என்பன கார்பன் மற்றும் ஹைட்ரஜனை மட்டுமே கொண்டுள்ள கரிமச் சேர்மங்களாகும். இவை இயற்கையில் அதிக அளவில் காணப்படுகின்றன. பல ஹைட்ரோ கார்பன்கள் அடங்கிய ஒரு சிக்கலான கலவையே கச்சா எண்ணெயாகும். மாம்பழமானது சைக்ளோ ஹெக்சேன் என்ற வளைய ஹைட்ரோ கார்பனைக் கொண்டுள்ளது. கரப்பான் பூச்சிகள் தனது எதிர் பாலினத்தைக் கவர அன்டெக்கேன் எனப்படும் ஹைட்ரோ கார்பனைச் சுரக்கிறது. எரிபொருளாக பயன்படுவது ஹைட்ரோ கார்பன்களின் மிக முக்கியமான பயனாகும். உதாரணமாக, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவானது (LPG), திரவமாக்கப்பட்ட புரப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியனவற்றின் கலவையாகும். மேலும் ஹைட்ரோகார்பன்கள் கரைப்பான்களாகவும், மேலும் தொழிற்சாலைகளில் பல்வேறு செயல்பாடுகளிலும் பயன்படுகின்றன. அலிபாட்டிக் மற்றும் அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன்களின் வகைகள், தயாரிப்பு, பண்புகள் மற்றும் பயன்களை குறித்து இப்பாடப்பகுதியில் கற்றறிவோம்.


ஆல்கேன்களை வகைப்படுத்துதல்:

கார்பன் அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு, ஹைட்ரோகார்பன்கள் இரண்டு முக்கிய வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவையாவன அலிபாட்டிக் மற்றும் அரோமேட்டிக் ஆகியனவாகும். அலிபாட்டிக் என்ற சொற்கூறு 'aleiphar' என்ற கொழுப்பு என்ற பொருளைத் தரும் கிரேக்க வார்த்தையிலிருந்து வருவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் மற்றும் கொழுப்புகள், அலிபாட்டிக் ஹைட்ரோகார்பன்களின் முக்கிய மூலங்களாகும். அரோமா என்ற வார்த்தைக்கு மணமுடையது எனப்பொருள். நறுமணமுடைய தாவரச் சாற்றினை வேதிமுறைகளுக்கு உட்படுத்தி அரோமாட்டிக் சேர்மங்கள் பெறப்படுகின்றன.

அலிபாட்டிக் ஹைட்ரோகார்பன்கள் மூன்று முக்கிய வகைகளைக் உள்ளடக்கியுள்ளது. அவையாவன ஆல்கேன்கள், ஆல்கீன்கள் மற்றும் ஆல்கைன்கள் ஆகும். நிறைவுற்ற ஹைட்ரோகார்பனான ஆல்கேன்களில், கார்பன் அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்புகள் அனைத்தும் ஒற்றை பிணைப்புகளாகவும் ஆல்கீன்களில், குறைந்தது ஒரு இரட்டை பிணைப்பும், ஆல்கைன்களில் குறைந்தது ஒரு முப்பிணைப்பும் காணப்படுகிறது. உள்ளடங்கிய கார்பன் - கார்பன் பன்மை பிணைப்பினைப் பெற்றுள்ள ஹைட்ரோகார்பன்கள், நிறைவுறா ஹைட்ரோ கார்பன்கள் எனப்படுகின்றன.

அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் என்பன பென்சீன் வளையம் அல்லது அதன் பெறுதிகளைப் பெற்றிருக்கக் கூடிய வளையச் சேர்மங்களாகும்.



11th Chemistry : UNIT 13 : Hydrocarbons : Hydrocarbons: Introduction in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 13 : ஹைட்ரோகார்பன்கள் : ஹைட்ரோகார்பன்கள்: அறிமுகம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 13 : ஹைட்ரோகார்பன்கள்