Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | நுகர் உணர்வேற்பிகள் (Olfactory Receptors)

தோல் - நுகர் உணர்வேற்பிகள் (Olfactory Receptors) | 11th Zoology : Chapter 10 : Neural Control and Coordination

   Posted On :  09.01.2024 09:21 am

11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு

நுகர் உணர்வேற்பிகள் (Olfactory Receptors)

சுவை மற்றும் மணம் இவற்றிற்கான உணர்வேற்பிகள் வேதிவுணர்வேற்பிகள் (chemoreceptors) எனப்படுகின்றன.

நுகர் உணர்வேற்பிகள் (Olfactory Receptors)

சுவை மற்றும் மணம் இவற்றிற்கான உணர்வேற்பிகள் வேதிவுணர்வேற்பிகள் (chemoreceptors) எனப்படுகின்றன. காற்றில் கரையக் கூடிய வேதிப்பொருட்கள் நுகர்ச்சி உணர்வேற்பிகளைத் தூண்டுவதால் மணம் உணரப்படுகிறது.

நாசியறைகளின் கூரைப்பகுதியில் காணப்படும் மஞ்சள் நிறத்தினால் ஆன நுகர்ச்சி எபிதீலிய (Olfactory epithelium) திட்டுக்களே நுகர்ச்சி உறுப்புகள் எனப்படுகிறது.

நுகர்ச்சி எபித்தீலியமானது கீழ்புறம் கோழைப்படலத்தாலும், மேல்புறம் நுகர்ச்சி சுரப்பிகளைக் கொண்ட இணைப்புத்திசுக்களாலும் சூழப்பட்டுள்ளது.

நுகர்ச்சி உறுப்பில் மூன்று வகையான செல்கள் காணப்படுகின்றன. அவை (i) ஆதரவு செல்கள் (supporting cells) (ii) அடிப்படை செல்கள் (Basal cells) (iii) ஆயிரக்கணக்கான ஊசி வடிவ நுகர்ச்சி உணர்வேற்பி செல்கள் (Olfactory receptor cells). மயலினுறை அற்ற இந்த உணர்வேற்பிகளின் மெல்லிய இழைகள் இணைந்து நுகர்ச்சி நரம்பாக (மூளை நரம்பு I) மாறியுள்ளது. இது நுகர்ச்சி குமிழில் (Olfactory bulb) இணைகிறது. நுகர்ச்சி மின்தூண்டல்கள் இங்கிருந்து மூளையின் முன்நெற்றி பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மணம் உணரப்படுகிறது. மூளையின் முன்நெற்றி பகுதிக்குச் செல்லும் அதே நேரம் தூண்டல்கள் லிம்பிக் தொகுப்புக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மணத்திற்கான உணர்வு அடிப்படையிலான பதில் செயல் பெறப்படுகிறது.


சுவை உணர்விகள் (Gustatory Receptor) 

எல்லா உணர்வுகளுக்கும் மேலான மகிழ்வூட்டும் உணர்வாகச் சுவை உணர்வு உள்ளது. நாவில் காணப்படும் சிறிய புடைப்புகள் பாப்பிலாக்கள் (papillae) எனப்படுகின்றன. இவை நாக்குக்குச் சொரசொரப்புத் தன்மையைத் தருகிறது. நாக்கு முழுவதும் பரவிக் காணப்படும் பாப்பில்லாக்களில் சுவை மொட்டுக்கள் அதிகம் காணப்படுகின்றன. எனினும் மேலண்ணத்தின் மென்மையான பகுதி, கன்னத்தின் உள்பரப்பு, தொண்டை பகுதி, குரல்வளை மூடி போன்ற பகுதிகளிலும் சுவை மொட்டுகள் குறைந்த அளவில் காணப்படுகின்றன.

சுவை மொட்டுகள் குடுவை வடிவமுடையவை. இவற்றில் 50-100 வரையிலான எபிதீலியல் செல்கள் காணப்படுகின்றன. இரண்டுவகை எபிதீலியல் செல்கள் உள்ளன. அவை 1) சுவை எபிதீலியல் செல்கள் (சுவை உணர்விகள்) (Gustatory cells) 2) அடிப்படை அல்லது பேசல் எபிதீலியல் செல்கள் (புதுப்பிக்கும் செல்கள்) (basal cells) ஆகியவையாகும். சுவை எபிதீலிய செல்களிலிருந்துவெளிவரும்சுவைநுண்இழைகள் (Gustatory hair cells) சுவைத் துளைகளின் வழியாக (taste pore) வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். இவை உமிழ்நீரில் அமிழ்ந்து காணப்படுகின்றன. சுவை உணர் செல்களில் உள்ள சுவை நுண் இழைகளே சுவையை உணரும் பகுதியாகும். இச்செல்களில் உணர்தன்மை கொண்ட டென்ட்ரைட்டுகள் (Dendrite) சுவைக்கேற்பக் குறிப்புகளை (signal) மூளைக்கு அனுப்புகின்றன.பேசல் செல்கள், மூலச்செல்களாக செயல்பட்டு, புதிய சுவை எப்பிதீலியல் செல்களை உருவாக்குகின்றன (படம் 10.20).



குறிப்பு

சுவை மொட்டு செல்கள், அவை இருக்கும் இடத்தின் தன்மையால் அதிக அளவில் உராய்வுகளை எதிர்கொள்கின்றன. மேலும் தொடர்ச்சியாக சூடான, மற்றும் காரமான பொருள்களை அதிகம் உட்கொள்வதாலும் அவை பாதிப்படைகின்றன. இருப்பினும், இவை உடலிலேயே வேகமாகப் புதுப்பித்தலடையும் செல்களாகும். இச்செல்கள் ஒவ்வொரு ஏழு முதல் பத்து நாட்களுக்குள் புதிய செல்களால் ஈடுசெய்யப்படுகின்றன.


தோல்- தொடு உணர் உறுப்பு (Skin - Sense of Touch)

தோல் ஒரு மிகப்பெரிய தொடு உணர்வு உறுப்பாகும். தோல் பரப்பு முழுவதும் பரவியுள்ள மில்லியன் கணக்கான நுண்உணர்வேற்பிகள், தொடுதல், அழுத்தம், வெப்பம், குளிர்ச்சி, வலி ஆகிய உணர்வுகளை அறிய உதவுகின்றன. விரல் நுனிகளில் இவ்வுணர்வேற்பிகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதால் அப்பகுதி அதிக உணர்வுகளை கண்டறிகிறது.தோலில் உள்ள உணர்வேற்பிகளில் சில (படம். 10.21) கீழே தரப்பட்டுள்ளன.


எபிடெர்மிஸ் அடுக்கில் ஆழ்பகுதியிலுள்ள, மென்மையான தொடுதல்களை உணரக்கூடியவை மெர்கெல் வட்டுகள் (Merkel disc) ஆகும்.

மயிர்க்கால்களைச் சுற்றியுள்ள நுண்பைகளில் உள்ள உணர்வேற்பிகளும். மெல்லிய தொடுதலை உணரக்கூடியவை.

மீஸ்னரின் துகள்கள் (Meissner's corpuscles): தோல் பாப்பில்லாக்களில், எபிடெர்மல் அடுக்கின் கீழ் அமைந்துள்ள இவை, மென்மையான அழுத்தங்களை உணரக்கூடியவை. முடிகளற்ற தோல் பகுதிகளான விரல்முனைகள் மற்றும் பாதங்களில் இவை அதிகமுள்ளன.

* பாசினியன் துகள்கள் (Pacinian corpuscles): முட்டை வடிவம் கொண்ட இவை, டெர்மிஸ் பகுதியின் ஆழ்பகுதியில் பரவலாக உள்ளன. அழுத்தத்தால் ஏற்படும் அதிர்வுகளை இவை உணர்கின்றன. மேலும் வலி, கடினத்தன்மை, வெப்பம் மற்றும் வேறுபட்ட தொடுபரப்புகளை உணரும் தன்மையைத் தருகின்றன.

* ரஃபினி முனைகள் (Ruffini endings): தொடர் அழுத்தத்தை உணரும் இவை டெர்மிஸ் அடுக்கில் உள்ளன.

* கிராஸ் முனைக்குமிழ்கள் (Krause end bulbs): இவை வெப்பத்தை உணரும் வெப்ப உணர்வேற்பிகள் ஆகும்.


குறிப்பு

மெலனின் என்னும் தோல் நிறமியை மெலனோசைட்டுகள் உற்பத்தி செய்கின்றன. மெலனின் நிறமிகள் தோலுக்கு நிறத்தை அளிப்பதுடன் சூரியனின் புறஊதாக் கதிர்களிடமிருந்து தோலைப் பாதுகாக்கின்றன. தோல் பரப்பானது நிறமிகளை இழத்தலால் விட்டிலிகோ அல்லது லியூக்கோடெர்மா என்னும்நிலைமையைஉண்டாக்குகிறது. தெளிவான காரணங்கள் ஏதுமில்லாமல் வெள்ளை நிறத் திட்டுகள் உடலில் ஏற்படுகின்றன. இது தொற்றுநோயல்ல. இது வயது, பால் மற்றும் இனம் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் பாதிக்கக்கூடியது. மெலனோசைட்டுகள் மெலனின் உற்பத்தி செய்யத் தவறும் போது வெண்திட்டுகள் ஏற்படுகின்றன.

Tags : Skin தோல்.
11th Zoology : Chapter 10 : Neural Control and Coordination : Olfactory receptors Skin in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு : நுகர் உணர்வேற்பிகள் (Olfactory Receptors) - தோல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு