Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | அனிச்சை செயல் மற்றும் அனிச்சைவில் (Reflex Action and Reflex Arc)
   Posted On :  09.01.2024 08:40 am

11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு

அனிச்சை செயல் மற்றும் அனிச்சைவில் (Reflex Action and Reflex Arc)

சூடான பொருள் மீது கைபட்டவுடன் சட்டெனக் கைகளை விலக்கிக் கொள்ளுதல் போன்ற செயல்கள் நம்மையறியாமலேயே நடைபெறுகின்றன. இது எவ்வாறு நடைபெறுகின்றது?

அனிச்சை செயல் மற்றும் அனிச்சைவில் (Reflex Action and Reflex Arc)

சூடான பொருள் மீது கைபட்டவுடன் சட்டெனக் கைகளை விலக்கிக் கொள்ளுதல் போன்ற செயல்கள் நம்மையறியாமலேயே நடைபெறுகின்றன. இது எவ்வாறு நடைபெறுகின்றது?

மூளைக்கும், செயல்படு உறுப்புக்குமிடையே தண்டுவடம் இணைப்புப் பாலமாக இருக்கின்றது. சில சமயங்களில், உடனடி எதிர்வினை தேவைப்படும் அவசரகாலங்களில் தண்டு வடம் மூளையைப் போல் செயல்பட்டுத் தானே இயக்கு தூண்டல்களைத் தொடர்புடைய  செயல்படு உறுப்புகளுக்கு அனுப்பி எதிர்வினையை ஏற்படுத்தி விடுகிறது. தண்டு வடத்தின் இத்தகைய அதிவேகச் செயல்பாடே அனிச்சைச் செயல் (Reflex action) எனப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தூண்டலுக்கு எதிராக அதிவேகமாகத் திட்டமிடாத தொடர்ச்செயல்கள் தன்னிச்சையாகவே நடைபெறுகின்றன. இவ்வாறான அனிச்சை செயல்பாட்டில் பங்கேற்கிற நரம்பு சார் அமைப்புகளின் தொகுப்பே அனிச்சை வில் (Reflex arc) எனப்படும். இன்னொரு வகையில் சொல்வதானால், அனிச்சைச்செயல் நடைபெறுவதற்காக நரம்பு தூண்டல் செல்லும் பாதைகளை உள்ளடக்கியதே அனிச்சை வில் ஆகும் (படம் 10.12).



அனிச்சை வில்லின் செயல்படு உட்பொருட்கள் (Functional Components of a Reflex Arc)

உணர்வேற்பி (Sensory Receptor): ஒரு குறிப்பிட்ட தூண்டலைப் பெற்று எதிர் வினைபுரியும் உணர்ச்சி அமைப்பு.

உணர்ச்சி நியூரான்கள் (Sensory Neurons): உணர்வேற்பியிலிருந்து பெற்ற உணர்ச்சி தூண்டலைத் தண்டுவடத்தின் முதுகுப்புற நரம்பு வேர்களின் வழியே தண்டுவடத்தின் சாம்பல் பகுதிக்குக் கொண்டு செல்பவை.

இடைநியூரான்கள் (Inter Neurons): இவை உணர்ச்சி நியூரானிலிருந்து இயக்கு நியூரான்களுக்கு தூண்டல்களை மாற்றுகின்றன. இச்செயலில் ஒன்று அல்லது இரண்டு இடைநியூரான்கள் பங்கேற்கின்றன

இயக்கு நியூரான்கள் (Motor Neurons): மைய நரம்பு மண்டலத்திலிருந்து சுரப்பிகள், தசைகள் போன்ற செயல்படு உறுப்புகளுக்குத் தூண்டல்களை கொண்டு செல்பவை.

செயல்படு உறுப்புகள் (Effector Organs): பெற்ற தூண்டலுக்கு ஏற்பச் செயல்படும் தசைகள் அல்லது சுரப்பிகள்.

இரண்டு விதமான  அனிச்சைச் செயல்கள் உள்ளன. அவை:


1. நிபந்தனையற்ற அனிச்சைசெயல் (Unconditioned Reflex): பழக்கப்படாத தூண்டலுக்கு வினைபுரியும் இச்செய்கை, பிறப்புவழிப் பண்பாகும், இச்செயல்பாட்டிற்குப் பயிற்சியோ, அனுபவமோ, முன்னறிவோ தேவையில்லை. (.கா) தூசு விழுமுன் மூடிக்கொள்ளும் கண் இமைகள், நாசி அல்லது குரல் வளையில் அயற்பொருள் சென்றவுடன் வரும் தும்மல் மற்றும் இருமல்.

2. நிபந்தனை அனிச்சை செயல் (Conditioned Reflex): கற்றலினால் அல்லது அனுபவத்தால் ஏற்படும் அனிச்சை செயல் நிபந்தனை அனிச்சை செயல் எனப்படும். இது, விலங்குகளின் உடலில் இயற்கையாக இருப்பதில்லை. பயிற்சி மற்றும் அனுபவத்தின் காரணமாகவே நடத்தை பண்புகளில் ஒன்றாய் இச்செயல் நடைபெறுகிறது (.கா) பாவ்லோவ் பரிசோதனையில் மணி அடித்தவுடன் சோதனைக்குட்ப்படுத்தப்பட்ட நாயில் உமிழ்நீர் சுரத்தல். ரஷ்ய உடற்செயலியலாளரான பாவ்லோவ், இதனை முதன் முதலில் நாயில் செய்த சோதனைமூலம் நிரூபித்துக் காட்டினார். மூளையின் கார்டெக்ஸ் பகுதி நிபந்தனை அனிச்சை செயலைக் கட்டுப்படுத்துகிறது.


புறநரம்பு மண்டலம் (Peripheral Neural System)

மையநரம்பு மண்டலத்திற்கு வெளியே உள்ள அனைத்து நரம்புத்திசுக்களும் புற நரம்பு மண்டலமாகும். இதில் நரம்புகள், நரம்புசெல் திரள்கள், உணவுப்பாதை வலைப்பின்னல்கள் (Enteric plexus) மற்றும் உணர்வேற்பிகள் ஆகியன உள்ளடங்கியுள்ளன. பல நியூரான்களைக் கொண்ட நாண் போன்ற அமைப்பே நரம்பாகும். நியூரான்களின் உடல் பகுதிகள் அடங்கிய சிறு நரம்புத்திசு தொகுப்பே நரம்பு செல்திரள் (Ganglion) ஆகும். மூளை மற்றும் தண்டுவடத்திற்கு வெளியே இவை அமைந்துள்ளன. உணவுப்பாதையின் சுவர்களில் பரவலான நரம்பு வலைப்பின்னல் உண்டு. இவ்வலைப்பின்னலில் உள்ள நியூரான்களின் வழியே செரிமான மண்டலச் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. புறச்சூழலில் ஏற்படும் மாற்றங்களைப் பெற்று அதற்கேற்ப வினைபுரிய உதவும் சிறப்பு அமைப்பிற்கு உணர்வேற்பிகள் (Receptors) என்று பெயர். மைய நரம்பு மண்டலத்திற்குச் செல்லும் உட்செல் நரம்புகளில் இவை தூண்டல்களை உருவாக்குகின்றன. புறநரம்பு மண்டலத்தில் மூளையிலிருந்து இணை தோன்றும் 12 மூளை நரம்புகளும் (Cranial nerves) தண்டுவடத்திலிருந்து தோன்றும் 31 இணை தண்டுவட நரம்புகளும்(Spinal nerves) அடங்கும்.


தெரிந்து தெளிவோம்

முதிர்ச்சி அடைந்தோரின் உடலில் உருவாகும் மூளைத்தண்டுவட திரவத்தின் மொத்த அளவு 150 மிலி ஆகும். இது ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் புதுப்பிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமாராக 500 மிலி மூளைத்தண்டுவட திரவம் உற்பத்தியாகிறது. மூளைத்தண்டுவட திரவத்திலுள்ள கழிவுப் பொருட்களை அகற்றி சுத்தம் செய்வதில் கோராய்டு வலைப்பின்னல் உதவுகிறது.


மூளை நரம்புகள் (Cranial Nerves)

12 இணை மூளை நரம்புகள் உள்ளன. அதில் முதலிரண்டு இணைகள் முன் மூளைப்பகுதியிலிருந்து தோன்றுகின்றன. மீதியுள்ள பத்து இணைகளும், நடு மூளைப்பகுதியிலிருந்து தோன்றுவனவாகும். வயிற்றுப்பகுதிக்குச் செல்லும் ஓரிணை நரம்பான வேகஸ் நரம்பைத்தவிர மற்ற மூளை நரம்புகளனைத்தும் தலை மற்றும் முகம் சார்ந்த பகுதிக்கே சென்று பணியாற்றுகின்றன.


தண்டுவட நரம்புகள் (Spinal Nerves) 

அடுத்தடுத்துள்ள முள்ளெலும்புகளுக்கு இடையேயுள்ள துளையின் (Intervertebral foramina) வழியாக 31 இணை தண்டுவட நரம்புகள் வெளிவருகின்றன. அவை தொடங்கும் பகுதியை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்கண்ட பெயர்களைப் பெறுகின்றன.

1. கழுத்து நரம்புகள் - (8 இணைகள்)

2. மார்பு நரம்புகள் -  (12 இணைகள்)

3. இடுப்புபகுதி நரம்புகள் - (5 இணைகள்)

4. திருவெலும்பு நரம்புகள்  -  (5 இணைகள்)

5. வால்நரம்புகள் - (1 இணை)

ஒவ்வொரு தண்டுவட நரம்பும் உணர்ச்சி நரம்பாகவும் இயக்கு நரம்பாகவும் செயல்படக்கூடிய கலப்பு நரம்பாகும். அவை இரு வேர்களாகத் தோன்றுகின்றன.

1) முதுகுப்புறவேரின் பின் பகுதியில் தோன்றும் இவை தண்டுவடத்திற்கு வெளியே நரம்பு செல் திரள்களைக் கொண்டவை. மற்றும் 2) வயிற்றுப்புற வேரின் முன்பகுதியில் தோன்றும் இவற்றில் புற நரம்பு செல் திரள் கிடையாது.

உடல் நரம்பு மண்டலம் (Somatic Neural System- SNS)

புற நரம்பு மண்டலத்தின் பகுதியான உடல் நரம்புமண்டலம், இயக்கு நரம்பு மண்டலம் (Voluntary neural system) என்றும் அழைக்கப்படும். இவை எலும்புத் தசைகளின் வழியாக உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் நரம்புகளாகும். உடல் நரம்பு மண்டலம் இயக்கு மற்றும் உணர்ச்சி நரம்புகளை கொண்டுள்ளது. தசை மற்றும் உறுப்புகளின் விருப்ப இயக்கம் மற்றும் அனிச்சை செயல் இயக்கங்கள் ஆகியவை உடல் நரம்பு மண்டலத்தின் முக்கியப் பணிகளாகும்.

தானியங்கு நரம்பு மண்டலம் (Autonomic Nervous System -ANS) 

தன்னைத்தானே நிர்வகித்துக் கொண்டு, சுயமாய் இயங்கும் நரம்புமண்டலத்திற்குத் தானியங்கு நரம்பு மண்டலம் என்று பெயர். புறநரம்பு மண்டலத்தின் பகுதியான, தானியங்கு நரம்பு மண்டலத்தின் நரம்புகள், மென் தசைகள், சுரப்பிகள் மற்றும் இதயத்தசை ஆகியவற்றினுள் ஊடுருவி அவற்றைத் தொடர்ந்து செயல்படவைக்கிறது. பல்வேறு உறுப்புகளின் தானியங்குசெயல்பாடுகளை ஒருங்கிணைப்பதும் கட்டுபடுத்துவதும் இந்நரம்பு மண்டலத்தின் பணிகளாகும். இம்மண்டலத்தை ஹைப்போதலாமஸ் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தானியங்கு நரம்பு மண்டலத்தின் உட்கட்டமைப்பு கீழே தரப்பட்டுள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது.


குறிப்பு 

அமெரிக்கப் பயணம் முடிந்து உன் நண்பன் வீடு திரும்புகிறார். வீட்டிலுள்ள அனைவரும் அவரின் வருகைக்காக காத்திருக்கின்றனர். நீ எவ்வாறு உணர்கிறாய்? தானியங்கி நரம்பு மண்டலத்தின் எப்பகுதி முக்கியப் பங்காற்றுகிறது என்பதையும் உனது உடலில் ஏற்படும் சிறு மாற்றங்களையும் குறிப்பிடு


முன் நரம்பு செல்திரள் நியூரான் (Preganglionic Neuron)

இதன் உடல்பகுதி மூளை அல்லது தண்டுவடத்தில் காணப்படும். மயலின் உறையால் சூழப்பட்ட இதன் ஆக்ஸான், மூளை நரம்பு அல்லது தண்டுவட நரம்பிலிருந்து பகுதியாக வெளிவந்து பின் தானியங்கு நரம்பு செல் திரளில் முடிகிறது.


தானியங்கு நரம்பு செல் திரள் (Autonomic ganglion)

இச்செல் திரளில் முன் நரம்பு செல் திரள் நியூரானின் ஆக்ஸான்களும், பின் நரம்பு செல்திரள் நியூரான்களின் உடல்பகுதியும் அடங்கியுள்ளன.


பின் நரம்பு செல் திரள் நியூரான் (Postganglionic Neuron)

இது தானியங்கு நரம்புசெல்திரளில் இருந்து பெறும் நரம்புத்தூண்டல்களை வயிற்றறையின் செயல்படு உறுப்புகளுக்குக் கடத்துகிறது.

தானியங்கு நரம்பு மண்டலத்தில் பரிவு நரம்பு மண்டலம் மற்றும் இணை பரிவு நரம்பு மண்டலம் ஆகியவை உள்ளன.

11th Zoology : Chapter 10 : Neural Control and Coordination : Reflex action and Reflexarc in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு : அனிச்சை செயல் மற்றும் அனிச்சைவில் (Reflex Action and Reflex Arc) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு