Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | ஒலி உணர்வேற்பிகள் (Phonoreceptors)

செவி(காது) - ஒலி உணர்வேற்பிகள் (Phonoreceptors) | 11th Zoology : Chapter 10 : Neural Control and Coordination

   Posted On :  09.01.2024 09:19 am

11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு

ஒலி உணர்வேற்பிகள் (Phonoreceptors)

ஒலியை உணர்தல்,சமநிலை பேணல் என்னும் இருசெயல்களை செயல்படுத்தும் உறுப்பாகச் செயல் புரிகிறது.

ஒலி உணர்வேற்பிகள் (Phonoreceptors)

ஒலியை உணர்தல்,சமநிலை பேணல் என்னும் இருசெயல்களை செயல்படுத்தும் உறுப்பாகச் செயல் புரிகிறது. செவி செயல்புரிகிறது அமைப்பின் அடிப்படையில் புறச்செவி, நடுச்செவி, அகச்செவி என மூன்று பகுதிகளாகச் செவி பிரிக்கப்பட்டுள்ளது.

புறச்செவி (External Ear): இது செவிமடல், புறச்செவிக்குழல் மற்றும் செவிப்பறை ஆகிய பகுதிகளைக்கொண்டது. குறுத்தெலும்பாலான, செவிமடல் ஒலிஅலைகளை சேகரித்து, செவிக்குழலுக்கு அனுப்புகிறது. வளைந்த அமைப்புடைய செவிக்குழலானது செவிப்பறை வரை நீண்டு காணப்படுகிறது. செவிக்குழலில் காணப்படும் மயிரிழைகளும், செருமினல் சுரப்பிகள் உற்பத்தி செய்யும் செருமென் என்னும் மெழுகும் தூசிகள் போன்ற வெளிப்பொருட்கள் காதினுள் நுழைவதைத் தடுக்கின்றன. செவிக்குழலின் முடிவில் இணைப்பு திசுவாலான செவிப்பறை அமைந்துள்ளது. இது வெளிப்புறம் தோலினாலும் உட்புறம் கோழைப்படலத்தினாலும் மூடப்பட்டுள்ளது.

நடுச்செவி (Middle Ear) என்பது டெம்போரல் எலும்பில்அமைந்துள்ள சிறிய காற்று நிரப்பப்பட்ட அறையாகும். இது வெளிச் செவியிலிருந்து செவிப்பறையாலும் அகச் செவியிலிருந்து மெல்லிய எலும்பாலும் பிரிக்கப்பட்டுள்ளது. நீள் வட்டப்பலகணி (Oval window), வட்டபலகணி (Round window)எனச் சிறு சவ்வினால் போர்த்தப்பட்ட இரு திறப்புகளை இவ்வெலும்பு பிரிவு கொண்டுள்ளது.

நடுச்செவியில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட சுத்தி (Malleus), பட்டடை (Incus) மற்றும் அங்கவடி (Stapes) என மூன்று சிற்றெலும்புகள் காணப்படுகின்றன. சுத்தி எலும்பின் ஒரு முனை செவிப்பறையுடனும், மறுமுனையான தலைப்பகுதி பட்டடை எலும்புடனும்  அசையும் வகையில் இணைந்துள்ளது.பட்டடை எலும்பானது சுத்தியல்,மற்றும் அங்கவடி எலும்புகளுக்கிடையே அமைந்துள்ளது. அங்கவடி எலும்பின் ஒரு முனை பட்டடை எலும்புடனும் மறுமுனை உட்செவியின் நீள்வட்டப் பலகணியுடனும் இணைந்துள்ளது. இம்மூன்று எலும்புகளும் ஒலி அலைகளை உட்செவிக்கு கடத்துகின்றன. நடுச்செவியிலுள்ள தொண்டை-செவிக்குழல் என்னும் யூஸ்டேஷியன் குழல் (Eustachian tube) நடுச்செவியை தொண்டைப்பகுதியுடன் இணைக்கிறது. இது செவிப்பறையின் இருபுறமும் உள்ள காற்றழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது.

உட்செவி (Inner ear) திரவத்தால் நிரப்பப்பட்ட இருபகுதிகளை கொண்டுள்ளது. அவை எலும்பினாலான சிக்கல் பாதை (Bony labyrinth) மற்றும் சவ்வினாலான சிக்கல் பாதை (membranous labyrinth) ஆகும். எலும்பினாலான சிக்கல் பாதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன காக்ளியா, வெஸ்டிபியூல் மற்றும் அரைவட்டக் கால்வாய்கள். காக்ளியா என்பது நத்தைச் சுருள் போல் சுருண்டு காணப்படும். இது இரண்டு படலங்களால் மூன்று அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை (1) ஸ்கேலா வெஸ்டிபியூலை (Scala Vestibuli), (2) ஸ்கேலா டிம்பானி (Scala tympani) (3) ஸ்கேலா மீடியா (Scala media) ஆகும். ஸ்கேலா வெஸ்டிபியூலை, ஸ்கேலா மீடியாவிலிருந்து ரெய்ஸ்னர்ஸ் படலத்தினாலும் (Reisner's membrane), ஸ்கேலா டிம்பானி ஸ்கேலா மீடியாவிலிருந்து பேசிலார் படலத்தினாலும் (Basilar memberane) பிரிக்கப்பட்டுள்ளது.

ஸ்கேலா வெஸ்டிபுலை மற்றும் ஸ்கேலா டிம்பானி ஆகிய இரு அறைகளும் பெரிலிம்ஃப் எனப்படும் சூழ்நிணநீராலும் (Perilymph), ஸ்கேலா மீடியா என்டோலிம்ஃப் (Endolymph) எனப்படும் அகநிணநீர் திரவத்தாலும் நிரம்பியுள்ளன. காக்ளியாவின் அடிப்புறத்தில் ஸ்கேலா வெஸ்டிபியூல் நீள்வட்டப் பலகணியுடனும் (Oval window), ஸ்கேலா டிம்பானி வட்டப்பலகணியுடனும் (Round window) தொடர்புகொண்டுள்ளது (படம் 10.17).



கார்ட்டை உறுப்பு (Organ of Corti)

ஒலி உணர்தன்மைக் கொண்ட கார்ட்டை உறுப்பு பேசிலார் படலத்தின் மேல்புறம், ஒரு மேடு போன்று அமைந்துள்ளது. பேசில்லார் படலத்தின் முழு நீளத்திற்கும் நான்கு வரிசைகளில் ஏராளமான மயிரிழைச் செல்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு மயிரிழைச் செல்லின் முனையிலும் ஸ்டீரியோசிலியா (Stereocilia) எனும் குறுஇழைகள் நீண்டு காணப்படுகின்றன.


கார்ட்டை உறுப்பின் மேல்புறம் முழுவதும் விறைப்பான கூழ்ம நிலையிலுள்ள ஒரு படலம் கூரை போன்று அமைந்துள்ளது. இப்படலம் டெக்டோரியல் படலம் (Tectorial membrane) என அழைக்கப்படுகிறது. ஒலி அலைகள் கடத்தப்படும் போது கார்ட்டை உறுப்பிலுள்ள ஸ்டீரியோசிலியா டெக்டோரியல் படலத்தின் மீது தொடர்பு கொள்கிறது (படம் 10.17).


ஒலி உணர் செயல்முறைகள் (Mechanism of Hearing)

புறச் செவிக்குழல் மூலம் உள்நுழையும் ஒலி அலைகள் செவிப்பறையில் பட்டு அதை அதிர்வுறச் செய்கின்றன. இந்த அதிர்வுகள் நடுச்செவியின் மூன்று சிற்றெலும்புகள் மூலம் நீள்வட்டப் பலகணிக்குக் கடத்தப்படுகின்றன. நீள்வட்டப் பலகணியைவிட செவிப்பறை 17-20 மடங்கு பெரியதாகயிருப்பதால், செவிப்பறையைவிட 20 மடங்கு அதிக அழுத்தம் நீள்வட்டப்பலகணியில் உணரப்படுகிறது. இந்த அழுத்தத்தால் பெரிலிம்ஃப் திரவத்தில் உருவாகும் அழுத்த அலைகள் வட்டப்பலகணியை உள்ளும் புறமும்அசைப்பதால் பேசில்லார் படலமும் அதனுடன் இணைந்த கார்ட்டை உறுப்பும் மேலும் கீழும் அசைகிறது. இந்நிகழ்ச்சியால் மயிரிழைச் செல்களின் அடியில் உள்ள அயனிக் கால்வாய்கள் மாறி மாறி திறந்து மூடுவதால் செயல் நிலை மின் அழுத்தம் (Action potential) உருவாக்கப்பட்டு, செவி நரம்பு (cochlear nerve)மூலம்மூளைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. அங்கு ஒலியாக உணரப்படுகிறது.

செவிகுறைபாடுகள் (Defects of Ear)

காதுகேளாமை தற்காலிகமானதாகவோ அல்லது நிரந்தரமானதாகவோ இருக்கலாம். இது கீழ்க்கண்டவாறு இருவகையாகப் பிரிக்கப்படுகிறது.

கடத்தல் வகை காது கேளாமை: (Conductive deafness) இதற்கு புறச்செவிக் குழல்களில் சுரக்கும் மெழுகு ஏற்படுத்தும் அடைப்பு, செவிப்பறை கிழிதல், நடுச்செவியில் ஏற்படும் நீர்க்கட்டுடன் கூடிய தொற்று, நடுச்செவி எலும்புகள் அசைய முடியாத நிலை போன்றவை காரணமாக இருக்கலாம்.

உணர் நரம்பு காதுகேளாமை (Sensory – neural deafness) இதற்குக் காரணம் கார்ட்டை உறுப்பு மற்றும் செவி நரம்பு, செவிநரம்பு செல்லும் பாதை மற்றும் மூளையின் கேட்டலுக்கான புறணிப் பகுதியில் ஏற்படும் கோளாறுகளே ஆகும்


உடல்சமநிலை பேணும் உறுப்பு (Organ of Equilibrium) 

சமநிலை பேணுதல் என்பது அசைவுகளை உணரும் உணர்வின் (Proprioception) ஒரு பகுதியாக உள்ளது. உடலின் நிலை, அதன் திசையமைவு, அதன் அசைவுகள் போன்றவற்றை உணரும் திறன் தன்னக உணர்தல் (Proprioception) எனப்படுகிறது.

அகச்செவியில் காக்ளியாவிற்கு அருகில் அமைந்துள்ள வெஸ்டிபியூலார் தொகுப்பு (Vestibular system) (படம் 10.19) உடலின் சமநிலையைப் பாதுகாக்கிறது. இதில் அகநிணநீரால் நிரப்பப்பட்ட குழல்களும் பைகளும் காணப்படுகின்றன. இவை பெரிலிம்ஃபினுள் வைக்கப்பட்டுள்ளன.


இந்த இரண்டு திரவங்களும் உடல் இருக்கும் நிலை மற்றும் வேகம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்றன. காக்ளியாவின் அருகில் உள்ள இரு அறைகளான யூட்ரிக்கிள் (Utricle) மற்றும் சக்குயூல் (Saccule) ஆகியவை (Maculae) மாக்குலே சமநிலை என்னும் உணர்வேற்பி பகுதிகளைப் பெற்றிருக்கின்றன. இவை தலையின் நேர்கோட்டு இயக்கத்தை உணரப்பயன்படுகிறது.

தெரிந்து தெளிவோம்

கீழ்க்கண்ட பணிகளில் ஈடுபடும் உடல் சமநிலைப் பேணும் உறுப்பின் பாகங்களைப் பெயரிடுக.

a) உடலின் நேர்க்கோட்டு இயக்கம் 

b) உடலின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் 

c) தலையின் இயக்க சுழற்சி.

மாக்குலேவில் காணப்படும் மயிரிழை செல்கள் இயக்க உணர்வேற்பிகளாகச் செயல்படுகின்றன. இந்த மயிரிழை செல்கள் ஜெலாட்டினாலான ஆட்டோலித்திக் படலத்தில் பதிந்துள்ளன. இப்படலத்தில் கால்சியத்தாலான ஆட்டோலித் (Otolith) எனப்படும் துகள்கள் காணப்படுகின்றன. இப்படலம் மயிரிழை செல்களின் உச்சிப்பகுதிக்கு எடையைக் கூட்டி மந்தத்தன்மையை அதிகரிக்கிறது.

வெஸ்டிபியூலின் பக்கவாட்டிலும், பின்புறமாகவும் அமைந்துள்ள அரைவட்டக் குழல்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைந்துள்ளன. இக்குழல்களின் ஒரு முனை தடித்துக் காணப்படுகிறது. தடித்த இப்பகுதி ஆம்புல்லா (Ampulla) எனப்படுகிறது. இதில் உணர்மயிரிழைகளாலும், ஆதரவு செல்களாலும் ஆன உணர்ச்சிபகுதி ஒன்றுள்ளது. இதற்கு கிரிஸ்டா ஆம்ப்புல்லாரிஸ் (Crista ampullaris) என்று பெயர். இது தலையின் சுழற்சி இயக்கத்தை உணரப்பயன்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா?

ஒலிச்செறிவானது டெசிபெல் (Decibels- dB) என்ற அலகால் அளவிடப்படுகின்றது. சாதாரணமாக காது கேட்பதற்கான ஒலிச்செறிவு சுழிய dB (O dB) ஆகும். 50 dB அளவு ஒலிச்செறிவானது பேசுவதைத் தெளிவாகப் புரிந்துக்கொள்ள உதவுகிறது. 90 dB க்கும் அதிகமான ஒலிச் செறிவுள்ள சத்தங்களை தொடர்ச்சியாக நீண்ட காலம் கேட்பதால் காதுகேளாமை ஏற்படுகிறது.


Tags : Ear செவி(காது).
11th Zoology : Chapter 10 : Neural Control and Coordination : Phonoreceptor Ear in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு : ஒலி உணர்வேற்பிகள் (Phonoreceptors) - செவி(காது) : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு