Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | ஒளி உணர் உறுப்பு-கண் (Photoreceptor-Eye)
   Posted On :  09.01.2024 09:17 am

11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு

ஒளி உணர் உறுப்பு-கண் (Photoreceptor-Eye)

கண் பார்வை உறுப்பாகும். கண்ணானது, மண்டையோட்டின் கண்கோள குழியினுள் கீழ்க்கண்ட ஆறு வெளியார்ந்த தசைகளால் (Extrinsic muscle) பொருத்தப்பட்டுள்ளது.

ஒளி உணர் உறுப்பு-கண் (Photoreceptor-Eye)

கண் பார்வை உறுப்பாகும். கண்ணானது, மண்டையோட்டின் கண்கோள குழியினுள் கீழ்க்கண்ட ஆறு வெளியார்ந்த தசைகளால் (Extrinsic muscle) பொருத்தப்பட்டுள்ளது. அவையாவன, மேற்புறத்தசைகள் (superior), கீழ்புறத்தசைகள் (Inferior), பக்கவாட்டுத் தசைகள் (Lateral), நடுப்புற நேர்தசைகள் (Median rectus), மேற்புறசாய்வு தசைகள் (Superior oblique) மற்றும் கீழ்புற சாய்வு (Inferior தசைகள் oblique). இத்தசைகள் கண்களின் இயக்கங்களுக்கு உதவுகின்றன. III, IV மற்றும் VI ஆகிய மூளை நரம்புகளைக் கண்கள் பெறுகின்றன. கண் இமைகள், இமைமுடிகள் மற்றும் புருவங்கள் ஆகியவை கண்களின் துணை அமைப்புகளாகச் செயல்பட்டுக் கண்களைப் பாதுகாக்கின்றன.

கண் இமை முடிகள் மற்றும் கண் புருவங்கள், நெற்றி வியர்வை, தூசுகள், சூரியஒளி ஆகியவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்கின்றன. கண்ணிமைகளில் உள்ள முடிகளின் அடிப்பகுதியில் காணப்படும் குற்றிழை சுரப்பிகள் அல்லது செபேசியஸ் சுரப்பிகள், உரோம ஃபாலிக்கிள்களினுள் உராய்வைத்தடுக்கும் எண்ணெயைச் சுரக்கின்றன. கண் கோளத்தின் மேல்பக்கவாட்டு பகுதியில் காணப்படும் லாக்ரிமல் சுரப்பிகள் கண்ணீரைச் சுரக்கின்றன. ஒருநாளில் சுரக்கும் கண்ணீரின் அளவு 1 மிலி ஆகும். கண்ணீரில், உப்புகள், கோழைப்பொருள்கள் மற்றும் பாக்டீரியங்களை சிதைக்கும் லைசோசைம் எனும் நொதி ஆகியவை காணப்படுகின்றன.

கண் கோளத்தின் வெளிப்புறத்தை சுற்றி காணப்படும் மெல்லிய கோழைப்படலத்தாலான பாதுகாப்பு உறை கன்ஜங்க்டிவா எனப்படும் (படம் 10.13).


கண்ணானது முன்புற, பின்புற என இரு அறைகளாக உள்ளன. முன் அறையானது மேலும் இரு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது முதல் அறை கார்னியாவிற்கும் ஐரிசுக்கும் இடையிலும், இரண்டாம் அறை ஐரிசுக்கும் விழிலென்சுக்கும் இடையிலும் காணப்படுகிறது. இவ்விரு அறைகளும் முன்கண் திரவம் (Aqueous humor) என்ற திரவத்தால் நிரப்பப்பட்டுள்ளது. பின் அறையானது லென்சுக்கும் விழித்திரைக்கும் இடையில் அமைந்துள்ளது. இதில் நிறைந்துள்ள ஜெல்லி போன்ற பின் கண் திரவம் (Vitreous humor) கண்ணின் கோள வடிவத்தை நிலைநிறுத்த உதவுகிறது. விழிலென்சானது ஒளி ஊடுருவக்கூடிய, இருபுறமும் குவிந்த அமைப்புடைய நீண்ட தூண் வடிவ எபித்தீலியல் செல்களால் ஆனது. இந்தச் செல்களுக்கு லென்ஸ் நார்கள் என்று பெயர். இச்செல்கள் கிரிஸ்டலின்எனும்புரதத்தால் நிரப்பப்பட்டுள்ளது.

கண்கோளம் (The Eye Ball)

கண் கோளவடிவமானது. இக்கோளவடிவ கண்ணின் ஆறில் ஒரு பகுதி மட்டுமே வெளியில் புலப்படும் பகுதியாகவும் மீதமுள்ள பகுதி கண்கோளக்குழியினுள் புதைந்தும் காணப்படுகிறது. கண்கோளமானது மூன்று உறைகளால் சூழப்பட்டுள்ளது. அவைகள்:

நாரிழையாலான ஸ்கிளிரா எனும் விழிவெளிப்படலம் (Sclera), இரத்த நாளங்களைக் கொண்ட கோராய்டு எனும் விழி நடுப்படலம் (Choroid) மற்றும் ஒளி உணர்தன்மைக் கொண்ட விழித்திரை (Retina) (படம் 10.14).


ஸ்கிளிரா (Sclera): இது இரத்த நாளங்களற்ற இணைப்புத்திசுவினால் ஆனது. இது கண்ணின் முன்புறம் கார்னியாவாகவும், பின்புறம் வெண்மைநிற ஸ்கிளிரா பகுதியாகவும் காணப்படுகின்றது. இரத்தக்குழாய்களற்ற, ஒளி ஊடுருவக் கூடிய கார்னியாவானது தட்டை அடுக்கு எபித்தீலியல் (stratified squamous epithelium) செல்களால் ஆனது. தூசிகளால் கார்னியா அதிகம் பாதிக்கப்படுவதால் இச்செல்கள் கார்னியாவைத் தொடர்ச்சியாக புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன. ஸ்கிளிரா கார்னியாவின் பின்புறத்தில் கண்ணின் வெண்மையான பகுதியாகிக் கண்களைப் பாதுகாக்கின்றது. பின்புறம் ஸ்கிளிரா பார்வை நரம்பால் ஊடுருவப்படுகிறது. ஸ்கிளிராவும், கார்னியாவும் சேருமிடத்தில் காணப்படும் ஸ்க்லெம் கால்வாய் (canal of schlemm) அதிகபடியாகச் சுரந்த முன் கண் திரவத்தினைத் தொடர்ச்சியாக வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றது.


கோராய்டு உறை (Choroid)

இது இரத்தக் குழல்களையும், நிறமிகளையும் கொண்டிருக்கிறது. இரத்தக்குழல்கள் கண் உறைகளுக்கு உணவளிக்கின்றன. நிறமிச்செல்கள் ஒளியை உறிஞ்சி ஒளி உள்எதிரொளிப்பை தடுக்கின்றன.


குறிப்பு

நிறப்பார்வைக்கான பார்வை நிறமிகளாவன:

I. சிவப்புக் கூம்பு செல்கள் - இதில்காணப்படும் எரித்ராப்சின் என்னும் நிறமி 560nm அளவுடைய நீண்ட அலை நீளங்கள் கொண்ட ஒளியை உணர்கின்றன.

II .பச்சைக் கூம்புகள் - இதில் காணப்படும் குளோரோப்சின் என்னும் நிறமி 530nm அளவுடைய நடுத்தர அலை நீளங்களைக் கொண்ட ஒளியை உணர்கின்றன.

III. நீலக் கூம்புகள் - இதில் காணப்படும் சையனாப்சின் என்னும் நிறமி 420nm அளவுடைய குறைந்த அலை நீளமுடைய ஒளியை உணர்கின்றன.

கண்ணின் முன்புறம் கோராய்டு, குற்றிழை உறுப்பாகவும் (Ciliary body), கண்ணின் நிறத்திற்குக் ஐரிசாகவும் (Iris) மாற்றமடைந்துள்ளது. ஐரிஸ், கண்ணின் நிறம் உள்ள பகுதியாகும். இது கார்னியாவிற்கும் லென்சுக்கும் இடையே அமைந்துள்ளது. இதன் மையத்தில்காணப்படும் சிறிய துளை விழிப்பாவை (Pupil) அல்லது கண்மணி எனப்படுகிறது. விழிப்பாவை வழியாக ஒளியானது கண்ணினுள் செல்கிறது. ஐரிஸ் இருவகைத்தசைகளால் ஆக்கப்பட்டுள்ளது.

* வட்டத்தசைகள் - அதிக ஒளிச்செறிவில் இத்தசைகள் சுருங்குவதால் விழிபாவையின் அளவு குறைந்து, உள்ளே செல்லும் ஒளியின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

* ஆரத்தசைகள் - குறைந்த ஒளிச் செறிவில் இத்தசைகள் சுருங்கி விழிப்பாவையின் அளவை அதிகரிக்கிறது. இதனால் உள்ளே செல்லும் ஒளியின் அளவு அதிகரிக்கிறது.

சிலியரி உறுப்பில் உள்ள மென்மையான குற்றிழை தசைகள் தூர, கிட்டப் பார்வைக்கேற்ப லென்சின் குவியத்தன்மையை மாற்றுகின்றன. இவ்வாறு பார்க்கும் பொருளின் தொலைவிற்கேற்பக் கண் தன் குவியத்தன்மையை மாற்றிக் கொள்ளும் இயல்பு கண்தகவமைதல் (Accommodation) எனப்படுகிறது. இதற்குத் தாங்கு இழைகள், குற்றிழை தசைகள் மற்றும் குற்றிழை உறுப்புகள் உதவுகின்றன.

குற்றிழை உறுப்புகளில் உள்ள தாங்கு இழைகள் (Suspensory ligaments) விழிலென்சை அதன் இடத்தில் செங்குத்தாக நிலைநிறுத்த உதவுகின்றது. குற்றிழை உறுப்பில் உள்ள இரத்தக் குழாய்கள் மூலம் சிலியரி உறுப்பு முன்கண் திரவத்தினை (Aqueous humour) உற்பத்தி செய்கிறது.

விழித்திரை (Retina)

கண்ணின் உள் உறையான விழித்திரை இருபகுதிகளைக் கொண்டுள்ளது. அவை

* ஒளி உணர்தன்மையற்ற நிறமி எபிதீலியங்களைக் கொண்ட பகுதி

* ஒளி உணர் நரம்புப்பகுதி.

ஒளியை உணரக்கூடிய விழித்திரைப்பகுதி மூன்று வகை செல்களைக் கொண்டுள்ளது. அவை ஒளியுணர் செல்களான கூம்பு (cone cells) மற்றும் குச்சி செல்கள் (Rod cells) (படம் 10.15 மற்றும் அட்டவணை 10.4), இருதுருவச் செல்கள் (Bipolar cells) மற்றும் நரம்பு செல்திரள் செல்கள் (Ganglion cells). விழித்திரையின் பின்புற மையத்தில் உள்ள மஞ்சள் நிறப்பகுதி 'மாக்குலா லூட்டியா' (Macula lutea) எனப்படுகிறது. இப்பகுதியே தெளிவான பார்வைக்குக் காரணமாகும்.



மாக்குலா லூட்டியாவின் மையத்தில் ஒரு சிறு பள்ளம் காணப்படுகிறது. இது ஃபோவியா சென்ட்ராலிஸ் (Fovea centralis) என அழைக்கப்படுகிறது. இதில் கூம்புசெல்கள் நிறைந்து காணப்படுகின்றன. கண்ணின் பின்முனையின் மையப்பகுதிக்குச் சற்றுக் கீழாக இரத்தக் குழாய்களும் பார்வை நரம்பும் கண்ணிற்குள் நுழைகின்றன. இப்பகுதியில் ஒளியுணர் செல்கள் கிடையாது. எனவே இப்பகுதி குருட்டுப்புள்ளி (Blind spot) என்று அழைக்கப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?

கண்ணில் ஏற்படும் அழற்சி அல்லது தொற்று காரணமாகக் கன்ஜங்க்டிவா படலத்திலுள்ள இரத்தக் குழாய்கள் தடிப்புற்று சிவப்பு நிறமாகக் மாறி இரத்தம் தெறிக்கும் கண்கள் (கன்ஜங்க்டிவிட்டிஸ் அல்லது (Madras- eye) எனும் நிலையை உருவாக்குகின்றன. குற்றிழை சுரப்பிகள் பாக்டீரியங்களின் தாக்குதலுக்கு உட்படும்போது, அவை வலியுடன் கூடிய சீழ் நிரம்பிய குமிழ்களாகக் காணப்படுகின்றன. இதற்கு கண்கட்டி என்று பெயர்.

ஒரு மனிதனிலிருந்து மற்றொரு மனிதனுக்கு குறைந்த நிராகரித்தல் அல்லது நிராகரித்தல் இல்லாத உடல் உறுப்பு மாற்றம் செய்யக் கூடிய ஒரே திசு கார்னியாவாகும். இத்திசுவில் இரத்தக் குழாய்கள் இல்லாததே இதற்குக் காரணம்.


ஒளி உணர் செயல்முறைகள் (Mechanism of Vision)

கண்ணில் நுழையும் ஒளியானது கார்னியா, முன்கண் திரவம் வழியாக ஊடுருவி லென்ஸ் மூலம் விலகலடைந்து விழித்திரையில் குவிக்கப்படுகிறது. இதனால் விழித்திரையில் உள்ள குச்சி மற்றும் கூம்பு செல்கள் கிளர்ச்சியடைகின்றன. குச்சி மற்றும் கூம்பு செல்களிலுள்ள நிறமிப்பகுதியில் ரெட்டினால் என்னும் வைட்டமின் வழிப்பொருளும், ஆப்சின் என்னும் புரதமும் காணப்படுகிறது. ஒளி இவற்றின் மீது படும்போது ரெட்டினாலையும் ஆப்சினையும் பிரித்து ஆப்சின் புரதத்தின் அமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இம்மாற்றம் குச்சி மற்றும் கூம்பு செல்களில் செயல்நிலை மின்னழுத்தத்தை உருவாக்குகிறது. இவ்வழுத்தமானது இருதுருவச் செல்கள், நரம்பணுத் திரள் செல்கள் வழியாகப் பார்வை நரம்புக்கும் அங்கிருந்து மூளையின் பார்வை உணர்பகுதிக்கும் அனுப்பப்பட்டுப் பார்க்கும் பொருளானது உணரப்படுகிறது.


கண்ணின் ஒளிவிலகல் குறைபாடுகள் (Refractive Errors of Eye)

மையோப்பியாகிட்டப்பபார்வை (Myopia)

இதனால் பாதிப்படைந்த நபரால் அருகில் உள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க முடியும். தொலைவில் உள்ள பொருட்களை தெளிவாகக் காண முடிவதில்லை. கண்கோளம் நீண்டிருப்பதாலும் விழிலென்ஸ் அதிகமாகத் தடிப்புற்றிருப்பதாலும் தொலைவில் உள்ள பொருட்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் விழித்திரையின் மஞ்சள் பகுதிக்கு (Fovea) முன்பாகக் குவிக்கப்படுகிறது. அதனால் பார்வை தெளிவற்றுக் காணப்படுகிறது. இக்குறைபாட்டை நீக்க குழிலென்ஸ் பயன்படுத்தப்படுகிறது. இது தொலை பொருள்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்களை விரித்துப் பின் விழித்திரையில் விழச்செய்கிறது.


ஹைப்பர் மெட்ரோப்பியா - தூரப்பார்வை (Hypermetropia)

இதனால் பாதிப்படைந்த நபரால் தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண முடியும். அருகில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண முடியாது. கண்கோளம் சுருக்கமடைந்திருப்பதாலும் விழிலென்ஸ் மெலிந்திருப்பதாலும் அருகில் உள்ள பொருள்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் விழித்திரைக்கும் பின்னால் குவிக்கப்படுகிறது. அதனால் பார்வை தெளிவற்றுக் காணப்படுகிறது. இக்குறைபாட்டை நீக்கக் குவிலென்ஸ் பயன்படுத்தப்படுகிறது. அது அருகில் உள்ள பொருள்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்களைக் குவித்து விழித்திரையில் விழச்செய்கிறது


பிரஸ்பையோபியா- வெள்ளெழுத்து (Presbyopia)

வயதான கண் லென்சுகள் மீள்தன்மையையும் விழி தகவமைதலையும் இழப்பதால் இந்நிலை ஏற்படுகிறது. இதைச் சரி செய்யக் குவிலென்ஸ் பயன்படுகிறது.

அஸ்டிக்மாடிசம் (Astigmatism)

இது ஒழுங்கற்ற வளைவுப்பரப்பைக் கொண்ட கார்னியா மற்றும் லென்சுகளால் ஏற்படுகிறது. உருளை வடிவக்கண்ணாடிகளை (cylindrical glasses) பயன்படுத்தி இக்குறைபாட்டை நீக்கலாம் (படம் 10.16).



குறிப்பு

முன்கண் திரவம், கண்லென்ஸ், கார்னியா மற்றும் விழித்திரை (Retina) செல்களுக்கு உணவு மற்றும் ஆக்ஸிஜனை அளிக்கிறது. இது எந்தளவு உற்பத்தி செய்யப்படுகிறதோ அதே அளவு வெளியேற்றவும் படுகிறது. இதன் மூலம் கண் உள் அழுத்தமான 16 mmHgயை நிலையாகப் பராமரிக்க உதவுகிறது. ஸ்க்லெம் கால்வாயில் (Canal of schlemm) ஏற்படும் அடைப்பு கண் உள்அழுத்தத்தை அதிகரிக்கிறது. இந்த அதிகரிக்கப்பட்ட அழுத்தமானது விழித்திரையையும், பார்வை நரம்புகளையும் நெருக்கி அழுத்துகிறது. இதனால் கிளாக்கோமா (Glaucoma)என்னும் கோளாறு ஏற்படுகிறது.


கண்புரை (Cataract)

விழிலென்சில் உள்ள புரதங்களில் ஏற்படும் மாற்றத்தால் லென்சானது ஒளி ஊடுருவும் தன்மையை இழந்து இந்நிலை ஏற்படுகிறது. அறுவை சிகிச்சை மூலம் இக்குறைபாடு நீக்கப்படுகிறது.

11th Zoology : Chapter 10 : Neural Control and Coordination : Photoreceptor - Eye in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு : ஒளி உணர் உறுப்பு-கண் (Photoreceptor-Eye) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 10 : நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு