Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | பட்டுப்புழு வளர்ப்பு (Sericulture)
   Posted On :  10.01.2024 06:28 am

11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள்

பட்டுப்புழு வளர்ப்பு (Sericulture)

விலங்கிலிருந்து கிடைக்கும் கம்பளியைத் (wool) தவிர, மனித குலத்திற்கு கிடைத்த இயற்கைக் கொடையாக, வணிக இழையாக விளங்குவது பட்டு ஆகும்.

பட்டுப்புழு வளர்ப்பு (Sericulture)

விலங்கிலிருந்து கிடைக்கும் கம்பளியைத் (wool) தவிர, மனித குலத்திற்கு கிடைத்த இயற்கைக் கொடையாக, வணிக இழையாக விளங்குவது பட்டு ஆகும். சூழல் நட்பு முறையான, உயிரிய சிதைவடையக் கூடிய, தன்னிறைவு உள்ள பொருளாக இருப்பதால் பட்டானது தற்கால உலகில் ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. பட்டுப்புழு வளர்ப்பு முறை மிக நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே சீனாவில் புழக்கத்தில் இருந்துள்ளது என்பதை வரலாற்று ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. மூவாயிரம் ஆண்டுகளாக அதன் தொழில்நுட்பம் அவர்களால் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது. பட்டு வர்த்தகத்தில் பிறநாடுகளைக் காட்டிலும் சீனர்கள் தனி சாம்ராஜ்யம் நடத்தினார்கள். மேலை நாட்டு வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, மல்பெரி சாகுபடியானது பொ..மு.140ல் சீனாவிலிருந்து திபெத் வழியாக இந்தியாவிற்குப் பரவியுள்ளது. சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் உருவாக்கப்பட்ட சிறந்த பட்டு இழைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வரலாற்று ரீதியாக, பட்டுச்சாலை என்று அழைக்கப்பட்ட 7000 மைல் நீளமுள்ள மிக நீண்ட சாலை பாக்தாத், தாஷ்கன்ட், டமாஸ்கஸ் மற்றும் இஸ்தான்புல் வழியே சென்று பட்டுப் போக்குவரத்தை வளர்த்தது. இன்று, உலகில் 29க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பட்டுப்புழு வளர்ப்பு முறையைக் கையாண்டு பல வகையான பட்டு நூல்களைத் தயாரிக்கிறார்கள், பட்டு உற்பத்தியில், சீனாவிற்கு அடுத்து இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது.

முறையான வளர்ப்பு முறைகளைப் பயன்படுத்தி, வணிக நோக்கில், பட்டுப்புழுவிலிருந்து பட்டு உற்பத்தி செய்யும் முறை பட்டுப்புழு வளர்ப்பு (Sericulture) எனப்படும். வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட தொழிலாக இது விளங்குகிறது. இதன் முக்கியக் கூறுகளாவன,

i) பட்டுப்புழுவிற்கு உணவாகப் பயன்படும் தாவர வகைகளைப் பயிரிடுதல்

ii) பட்டுப்புழு வளர்ப்பு

iii) பட்டு நூல் சுற்றுதல் மற்றும் நூற்றல்

முதல் இரண்டு கூறுகளும் விவசாயத்துறையோடும், மூன்றாவது கூறு தொழில் துறையோடும் தொடர்புள்ளது. பட்டுப்புழு வளர்ப்பில் ஒரு சில பட்டுப்பூச்சி இனங்களே பயன்படுத்தப்படுகின்றன (அட்டவணை 13.1 படம் 13.2)




பாம்பிக்ஸ் மோரியின் வாழ்க்கைச் சுழற்சி 

முதிர்ந்த பாம்பிக்ஸ் மோரி பட்டுப்பூச்சியானது 2.5 செ.மீ நீளத்துடன் வெளிறிய நிறத்துடன் கூடிய வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. தடித்த உடலையும் மெலிந்த இறகுகளையும் பெற்றிருப்பதால், பெண் பட்டுப்பூச்சியால் பறக்க இயலாது. இயற்கையில் ஆண், பெண் உயிரிகள் தனித்தனியே காணப்படுகின்றன. இவற்றின் வாழ்நாளானது 2-3 நாட்கள் மட்டுமே. இக்காலத்தில் இவை உணவு உட்கொள்வதில்லை. கூட்டிலிருந்து வெளி வந்ததும் 2 லிருந்து 3 மணி நேரம் ஆண், பெண் இனச்சேர்க்கை நடக்கிறது. அவைகள் பிரியாவிட்டால், அந்நிலையிலேயே இறந்து விடுகின்றன. இனச் சேர்க்கை முடிந்தவுடன் பெண் பூச்சி முட்டையிடத் துவங்குகிறது. 1 முதல் 24 மணி நேரத்திற்கு முட்டையிடுதல் நடக்கிறது. தட்ப வெப்ப நிலைகளைப் பொறுத்து பெண் பூச்சியானது 400 முதல் 500 முட்டைகளை இடுகின்றது. இரு வகையான முட்டைகள் உள்ளன. அவை, மெதுவாகப் பொரியும் முட்டைகள் மற்றும் விரைவில் பொரியும் முட்டைகள் ஆகியன ஆகும். மிதவெப்ப மண்டலப்பகுதிகளில் வாழும் பட்டுப்பூச்சிகள் மெதுவாகப் பொரியும் முட்டைகளை இடுகின்றன. இந்தியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழ்பவை விரைவில் பொரியும் முட்டைகளை இடுகின்றன. இவ்வகை முட்டைகள் 10 நாட்கள் அடைகாத்தலுக்குப் பிறகு இளம் உயிரியாக (பட்டுப்புழு) வெளிவருகின்றன. இந்த இளம் உயிரிகள் சுமார் 3 மி.மீ நீளத்தில் வெளிறிய வெண்மை நிறத்துடன் காணப்படுகின்றன. இவை நன்கு வளர்ந்த தாடை வகை வாயுறுப்புகளைக் கொண்டு, மல்பெரி இலைகளை உண்கின்றன.

1, 2, 3 மற்றும் 4வது தோலுரித்தலின் பின்பு பட்டுப்புழுவானது, முறையே 2, 3, 4 மற்றும் 5வது இடைநிலை புழுக்களாக (instars) மாறுகின்றன (படம் 13.3). இதற்கு பொரித்த நாளிலிருந்து 21 முதல் 25 நாட்கள் ஆகின்றன. முழுமையாக வளர்ச்சியடைந்த பட்டுப்புழுவானது 7.5 செ.மீ நீளத்துடன் உள்ளது. இப்புழுவின் உமிழ்நீர் சுரப்பிகள் நன்கு வளர்ந்தபின், கூட்டுப்புழுவாக மாறத்தயாராகிறது. இதற்காக, இவை உணவு உண்பதை நிறுத்திவிட்டு இலையின் ஒரு மூலைக்குச் சென்று, அவற்றின் உடலில் உள்ள பட்டுச்சுரப்பியின் மூலம் ஒட்டும் தன்மையுள்ள திரவத்தைச் சுரக்கிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட திரவமானது கீழ்த் தொண்டைப் பகுதியிலுள்ள சிறிய துளையில் உள்ள ஸ்பின்னரெட் என்னும் பின்னும் அமைப்பின் வழியே வெளியேறுகிறது. இவ்வாறு நூல் போன்று வெளிவரும் திரவமானது காற்றுப்பட்டவுடன் கடினமாகிறது. இந்த இழைகளைக் கொண்டு அது தன்னைச்சுற்றி உறைபோன்ற கக்கூன் எனும் பட்டுக்கூட்டைக் கட்டுகிறது. வெண்மை நிறத்தில் காணப்படும் இக்கூடு அதனுள் உள்ள கூட்டுப்புழுவிற்கு படுக்கையாக உள்ளது. இதன் வெளிப்புற இழைகள் ஒழுங்கற்றும் உட்புற இழைகள் ஒழுங்கானதாகவும் உள்ளன. கக்கூன்உருவாக்குவதற்காகபுழு சுரந்த ஒருதொடர்ச்சியான இழை சுமார் 1000 முதல் 1200 மீட்டர் நீளம் உள்ளது. கூட்டைக் கட்டி முடிக்க 3 நாட்களாகிறது. கூட்டுப்புழுப் பருவமானது 10 முதல் 12 நாட்கள் வரை நீடிக்கிறது. பின் கூட்டை உடைத்துக்கொண்டு முதிர்ந்த பட்டுப்பூச்சியாக வெளியேறுகிறது.


லார்வா நிலையில் எத்தனை முறை தோலுரிக்கிறது என்பதைப் பொறுத்து பாம்பிக்ஸ் மோரி பட்டுப்பூச்சியானது மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை, மும்முறை தோலுரிப்பவை, நான்கு முறை தோலுரிப்பவை, மற்றும் ஐந்து முறை தோலுரிப்பவை, ஆகியவையாகும். மல்பெரி வகை பட்டுப்புழுக்கள் ஒரு வருடத்தில் எத்தனை முறை இனப்பெருக்கத் தலைமுறையைத் தோற்றுவிக்கின்றன என்பதன் (இது வோல்டினிசம் என்று அழைக்கப்படுகிறது). அடிப்படையில் மூன்று வகை பட்டுப்புழு இனங்கள் கண்டறிப்பட்டுள்ளன. அவை, யூனிவோல்டைன் (ஆண்டுக்கு ஒரு தலைமுறை), பைவோல்டைன் (ஆண்டுக்கு இரு தலைமுறைகள்) மற்றும் மல்டிவோல்டைன் இரண்டுக்கும் மேற்பட்ட தலைமுறைகள்) ஆகியவையாகும்.


பட்டுப்புழுவின் உணவுத் தாவரங்களைப் பயிரிடல்

பட்டுப்புழு வளர்த்தலின் முதல் கூறாக, பட்டுப்புழுக்களின் உணவுத் தாவரம் பயிரிடல் விளங்குகிறது. பாம்பிக்ஸ் மோரி வகை பட்டுபுழுக்களுக்கு உணவாக விளங்கும் மல்பெரி தாவரத்தைப் பயிரிடும் முறைக்கு மோரிகல்சர் (Moriculture) என்று பெயர். தற்காலத்தில் பயிரிடக்கூடிய மேம்பட்ட ரகங்களான விக்டரி 1, S 36, G2 மற்றும் G4 ஆகியவை பலவித விவசாய - பருவ கால நிலைகள் மற்றும் வேறுபட்ட மண் நிலைகளைத் தாங்கி வளரக்கூடியவை ஆகும். மல்பெரி வளர்ப்பிற்கு உகந்த காலம் ஜுன், ஜுலை, நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகும். நிலத்தைத் தயார் செய்தல், பதியன்களைத் தயாரித்தல், நடவுத்தொழில் நுட்பங்கள், மல்பெரி நாற்றங்கால் பராமரித்தல்,நோய்மற்றும் தீங்குயிரிமேலாண்மை, பழைய மல்பெரி தாவரங்களைப் பிடுங்கிய பின் புதிய மல்பெரித் தோட்டம் அமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது மோரிகல்சர் ஆகும். தரமான பட்டுக்கூடுகளை உருவாக்க மல்பெரியை சிறிய மரம் போன்று 123 - 152 செ.மீ உயரம் வரை 20 × 20 செமீ அல்லது 25 செ.மீ இடைவெளிவிட்டு வளர்த்து அறுவடை செய்ய வேண்டும்.


தெரிந்து தெளிவோம்

இந்தியா நான்குவகை பட்டுகளை உற்பத்தி செய்கிறது. ) மல்பெரி பட்டு (91.7%) ) டஸர் பட்டு (1.4 %) ) எரிபட்டு (6.4%) ) முகாபட்டு (0.5%). இவை வேறுபட்ட இனங்களைச் சேர்ந்த பட்டுப்புழுக்களால் உருவாக்கப்படுகிறது. இதில், எந்த இனம் மிக அதிகமான மற்றும் மிகக்குறைந்த பட்டு உற்பத்தியைக் கொண்டுள்ளது?


பட்டுப்புழு வளர்ப்பு முறை

பட்டுப்புழுக்களை வளர்க்கும் முறை இரண்டாவது கூறு ஆகும். ஒரு மேடான, நிழலான இடத்தில் 6மீ × 4மீ× 3.5மீ பரிமாணங்களுடன் 100 நோயற்ற முட்டைத் தொகுதிகளை வைத்து வளர்க்கும் வகையில், பட்டுப்புழு வளர்ப்பகம் கட்டப்படுகிறது. இவ்வளர்ப்பகத்தைச் சுற்றிலும் 1 மீ அகல இடைவெளி விட வேண்டும். போதுமான அளவு சாளரங்களும் காற்றோட்டமும் வளர்ப்பகத்தில் இருக்க வேண்டும். யூஸி ஈக்கள் (Uzi flies) மற்றும் பிற பூச்சிகள் நுழையாதவாறு நைலான் வலை கொண்டு சாளரங்களும் காற்றோட்ட இடைவெளிகளும் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும். இதைத்தவிர, ஈரப்பதம் காட்டி (Hygrometer), விசைத்தெளிப்பான்கள், வளர்ப்பு சட்டகங்கள், நுரைத்திண்டுகள், மெழுகுதடவப்பட்ட பாரஃபின் காகிதங்கள், நைலான் வலைகள், இலைகள் வைப்பதற்கான கூடைகள், கோணிப்பைகள், மூங்கில் தட்டுகள், உலர்த்திகள் ஆகியவையும் பட்டுப்புழு வளர்ப்பிற்கு இன்றியமையாததாகும். பட்டுப்புழு வளர்ப்பில் முக்கிய படிநிலைகளாக வளர்ப்பகத்தைக் கிருமி நீக்கம் செய்தல், முட்டைகளை அடைகாத்தல், வளமற்றவைகளை நீக்குதல் (Brushing), இளம் லார்வாக்கள் மற்றும் முதிர் லார்வாக்கள் வளர்ப்பு ஆகியவை உள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரோக்கியமான பட்டுப்பூச்சிகள் 4 மணி நேரம் இனச்சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுகின்றன. பின்னர், பெண் பூச்சியானது அடர் நிறமுள்ள பிளாஸ்டிக் படுக்கையில் வைக்கப்படுகிறது. 24 மணி நேரத்தில் 400 முட்டைகளைப் பெண்பூச்சி இடுகிறது. பின்பு, பெண் பூச்சியை நீக்கிவிட்டு, முட்டைகளில் வளமற்றவை, நோய்த்தாக்குதலுக்கு உட்பட்டவைகளைக் கண்டறிந்து, நோயற்ற முட்டைகள் மட்டுமே தொழில் ரீதியான வளர்ப்பிற்குப் பயன்படுத்தப்படுகின்றன. 7 முதல் 10 நாட்கள் அடைகாத்தலுக்குப்பின் சிறிய இளம் புழுக்கள் வெளிவருகின்றன. 20°C முதல் 25°C வெப்பநிலை உள்ள வளர்ப்பகத்தில் ஒரு தட்டில் (Tray) அவை விடப்படுகின்றன. சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட இளம் இலைகள் இவைகட்கு உணவாக இடப்படுகின்றன. 4 முதல் 5 நாட்களுக்குப்பின் மீண்டும் இலைத்துண்டுகள் வழங்கப்படுகின்றன. லார்வாக்கள் வளர வளர அவை புதிய இலைகளைக் கொண்ட தூய்மையான தட்டுகளுக்கு மாற்றப்படுகின்றன. முழுமையாக வளர்ந்த புழுக்கள் கூடு கட்ட ஆரம்பிக்கின்றன. 45 நாட்களில்லார்வாக்கள் முதிர்ச்சியடைகின்றன. இந்நிலையில், அவற்றின் உமிழ்நீர் சுரப்பி (பட்டுச்சுரப்பி) யானது கூடு கட்டுவதற்குரிய பட்டு இழையை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கிறது


பட்டுக்கூட்டின் பின் செயலாக்க முறைகள்

பட்டுக்கூட்டிலிருந்து பட்டு இழையைப் பிரித்து எடுக்கும் செயல்முறைகள் இரு நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது ஆகும். அவை, ஸ்டிஃப்ளிங் (Stifling) மற்றும் ரீலிங் (Reeling) ஆகும்.


உங்களுக்குத் தெரியுமா?

ஒரு புதுவகையான, நிறமுள்ள பட்டை உருவாக்க சிங்கப்பூரிலுள்ள மூலப்பொருள் ஆராய்ச்சி மற்றும் பொறியியல் நிறுவனம், வழக்கமான பட்டுநூல் சாயமேற்றும் நடைமுறைகளுக்கு பதிலாக புதிய வழிமுறையை உருவாக்கியது. உணவூட்டத்தில் எளிய மாற்றம் செய்வதன் மூலம் (ஒளிரும் சாயமேற்றப்பட்ட மல்பெரி இலைகளை பட்டுப் புழுக்களுக்கு உணவாகக் கொடுப்பதன் மூலம்) பட்டுப்புழுக்களை, பல்வேறு வண்ணங்களுடன் பட்டு உற்பத்தி செய்ய வைக்கலாம். நிறமானது நேரடியாக பட்டு இழைகளில் ஒன்று கலந்து விடுகிறது.



பட்டுக்கூட்டினுள் இருக்கும் புழுவினைக் கொல்லும் செயல்பாடுகளுக்கு ஸ்டிஃப்ளிங் என்று பெயர். கொல்லப்பட்ட கக்கூனில் இருந்து பட்டு இழையை பிரித்தெடுத்தல் ரீலிங் எனப்படும். நூற்றலுக்கு 8 முதல் 10 நாட்களுக்கு முன்பிருந்தே பட்டுக்கூடுகள் சேகரிக்கப்படுகின்றன. பட்டுக்கூட்டினுள் உள்ள பூச்சிகள் நீராவி அல்லது உலர் வெப்பத்தைச் செலுத்தி கொல்லப்படுகின்றன. பட்டுப்பூச்சி கூட்டை உடைத்துக் கொண்டு வெளிவரும் முன்பு இதைச் செய்வது அவசியம். அப்போது தான் தொடர்ச்சியாக உள்ள பட்டு இழை சேதமாவது தடுக்கப்படும். அதன் பின்பு பட்டுக்கூடுகள் கொதிநீரில் (95°C - 97°C வெப்பநிலையில்) 10 முதல் 15 நிமிடம் ஊறவைக்கப்படுகின்றன. இதனால், அவ்விழைகளை இணைக்கும் பசை போன்ற திரவத்தை மென்மையாக்கி பட்டு இழையை எளிதாகப் பிரிக்கலாம். இந்தசெயல்பாடு வேகவைத்தல்(Cooking) என அழைக்கப்படுகிறது. இவ்வாறு, வேகவைக்கப்பட்ட பட்டுக்கூடுகளிலிருந்து பட்டு இழையின் நுனியை கை மூலமாகவே கண்டுபிடித்து பிரித்தெடுக்கலாம். இவ்விதம் வெவ்வேறு பட்டுக்கூடுகளில் இருந்து எடுக்கப்பட்ட கச்சாப்பட்டிழைகளை ஒன்றிணைத்து நூற்கும் ராட்டையின் மூலம் நூல் கண்டுகளாக மாற்றப்படுகிறது. ஒவ்வொரு பட்டுக்கூட்டிலிருந்தும் ஏறத்தாழ பாதி அளவுதான் பின்னுவதற்கு உகந்த இழையாக உள்ளன. மீதமுள்ள இழைகள் பட்டுக்கழிவு ஆகும். இதிலிருந்து ஸ்பன் பட்டு தயாரிக்கப்படுகிறது. கச்சாப்பட்டானது பல விதங்களில் பதப்படுத்தப்பட்டு அதன் பளபளப்பு அதிகரிக்கப்படுகிறது.


பட்டின் பயன்கள்

1. பட்டு நூல்கள் பட்டுத் துணிகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. தற்பொழுது, பட்டு நூலினை இயற்கை மற்றும் செயற்கை இழைகளுடன் இணைத்து டெரிபட்டு, காட்டன்பட்டு போன்றவை தயாரிக்கப்படுகின்றன. பட்டு, நிறம் சேர்க்கப்பட்டு ஆடை அலங்கார பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் எரி அல்லது ஸ்பன் வகை பட்டிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

2. தொழிற்சாலைகளிலும் இராணுவத் துறையிலும் பட்டு பயன்படுத்தப்படுகிறது.

3. மீன்பிடி வலைகள், பாராசூட்டுகள், கார்ட்ரிட்ஜ் பைகள், தொலை தொடர்பு கம்பிகளின் மேலுறைகள் மற்றும் கம்பியில்லா தொலைபேசிக் கருவிகள், பந்தய காரின் டயர்கள், வடிகட்டி இழைகள், மருத்துவத் துறையில் காயக்கட்டுத் துணிகள் மற்றும் தையலிடுவதற்கும் பட்டு பயன்படுகிறது.


பட்டுப்புழு நோய்களும் தீங்குயிரிகளும்

வைரஸ், பூஞ்சை, பாக்டீரியா மற்றும் ஒரு செல் உயிரிகளினால் ஏற்படும் தொற்றுநோய்கள் மட்டுமல்லாமல் வேட்டையாடும் பூச்சிகள், பறவைகள் மற்றும் உயர் விலங்குகள் போன்றவற்றாலும் லாபகரமான பட்டுத்தொழிலானது அபாயத்தை எதிர்நோக்கி உள்ளது. எறும்புகள், காகங்கள், பருந்துகள், எலிகள் போன்றவை பட்டுப்புழுக்களை உணவாக உண்பதால் பட்டுத்தொழிலுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. புரோட்டோசோவா தொகுதியைச் சார்ந்த நொசீமா பாம்பிசிஸ் (Nosema bombycis) என்னும் உயிரி, பெப்ரின் (Pebrine) என்ற அபாயகரமான நோயை பட்டுப்புழுக்களுக்கு ஏற்படுத்துகின்றன. இந்நோயானது பெண் பட்டுப்பூச்சி இடும்முட்டைகளிலிருந்தும்,பட்டுப்புழு மாசுபட்ட உணவை உண்பதன் மூலமும் பரவுகிறது. முதிர்ந்த லார்வாக்களில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மற்றும் ஸ்டெஃபைலோ காக்கஸ் போன்ற பாக்டீரியங்களால் ஃப்ளாச்செரி (Flacherie) என்னும் நோய் ஏற்படுகிறது. பெரிய அளவில் பாதிக்கும் மற்றொரு நோய் கிராசரி (Grasserie) ஆகும். இது, பாம்பிக்ஸ் மோரி நியூக்ளியார் பாலிஹெட்ரோசிஸ் (Bm NPV) வைரஸ் என்ற பாகுலோவிரிடே குடும்பத்தின் துணைத்தொகுப்பு Aயில் உள்ள பாகுலோவைரஸ் மூலம் ஏற்படுகிறது. பூஞ்சை நோய்களுள், வெள்ளை மஸ்கார்டைன் (White muscardine) பொதுவாகக் காணப்படும் நோயாகும். இந்நோயானது பெவேரியா பேசியானா (Beauveria bassiana) எனும் பூஞ்சையால் ஏற்படுகிறது.

11th Zoology : Chapter 13 : Trends in Economic Zoology : Sericulture in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள் : பட்டுப்புழு வளர்ப்பு (Sericulture) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள்