Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | மாணவர் செயல்பாடுகள்

காற்று | பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 6th Science : Term 2 Unit 4 : Air

   Posted On :  18.09.2023 08:51 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 4 : காற்று

மாணவர் செயல்பாடுகள்

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 4 : காற்று : மாணவர் செயல்பாடுகள்

செயல்பாடு 1: 

காற்று எங்கும் நிறைந்துள்ளது

ஒரு காலியான கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்வோம். அது உண்மையிலேயே காலியாக உள்ளதா? அல்லது அதனுள் ஏதாவது உள்ளதா?

இப்போது, கண்ணாடி பாட்டிலைத் தலைகீழாகப் பிடிப்போமா? இப்போதும் பாட்டிலினுள் ஏதோ ஒன்று உள்ளது என்றால் ஏற்றுக் கொள்வாயா? கீழே கொடுக்கப்பட்ட செயல்பாட்டின் மூலம் பாட்டிலினுள் என்ன உள்ளது என்பதனைத் தெரிந்துக் கொள்வோம்.


தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தினுள் பாட்டிலின் வாய்ப்பகுதியை படம்1 இல் உள்ளவாறு வைத்து அழுத்தவும். என்ன நடக்கிறது? பாட்டிலினுள் நீர் புகுகிறதா? தற்போது பாட்டிலை மெதுவாகச் சரிக்கவும். தற்போது மீண்டும் பாட்டிலை நீரினுள் படம் 2இல் காட்டியபடி மூழ்க வைக்கவும். பாட்டிலினுள் நீர் புகுகிறதா?

படம் 2ஐ உற்று நோக்கவும். பாட்டிலில் இருந்து காற்றுக் குமிழ்கள் வெளிவருவதைக் காணலாம்.

இச்சோதனையில் குமிழ்கள் வரும் ஒலி கேட்கிறதா?

கண்ணாடிப் பாட்டிலினுள் என்ன இருந்தது என்று இப்போது உங்களுக்குத் தெரிகிறதா?

ஆம், உங்கள் யூகம் சரியே. பாட்டிலில் இருந்தது காற்றுதான்.

பாட்டில் காலியாக இல்லை.அதைத் தலைகீழாய்ப் பிடிக்கும் பொழுது கூட அதனுள் காற்று நிரம்பியிருந்தது. அதனால்தான் நாம் பாட்டிலைத் தலைகீழாகத் தண்ணீரினுள் மூழ்கடிக்க அமிழ்த்தியபொழுது தண்ணீர் அதனுள் புகவில்லை. ஏனெனில், உள்ளிருந்த காற்றிற்கு வெளியேற வழியில்லை.

பாட்டிலைச் சரித்துத் தண்ணீரில் அமிழ்த்தியபொழுது, அதன் உள்ளிருந்த காற்று குமிழியாக வெளியேறியது. நீர் காற்றின் இடத்தை ஆக்கிரமித்தது.

இதிலிருந்து பாட்டில் முழுவதும் காற்று நிறைந்து இருந்தது எனத்தெரிகிறது.


செயல்பாடு 2

ஒரு குறிப்பிட்ட இடத்தில் காற்று வீசும் திசையைக் கண்டறிய காற்றுத்திசைகாட்டி பயன்படுகிறது. காற்றின் திசையறிய நீங்கள் ஒரு திசைகாட்டியையும் உருவாக்கலாம். நீங்களே செய்து பார்த்து மகிழவும்.


செயல்பாடு 3: 

இரும்பு ஆக்சிஜனுடன் இணைந்து துருப்பிடித்து இரும்பு ஆக்சைடாக மாறுவது நாம் அறிந்ததே. இந்த நிகழ்வினைப் பயன்படுத்தி காற்றில் உள்ள ஆக்சிஜனின் அளவினைக் கணக்கிடலாம். ஏனெனில், துருப்பிடித்தல் வினைக்குத் தேவையான ஆக்சிஜன் காற்றிலிருந்து பெறப்பட்டது.


ஒரு சிறிய அளவில் மெல்லியதான இரும்புக் கம்பிச் சுருளினை எடுத்து சுருட்டி ஒரு 20 மி.லி அளவீட்டுடன் கூடிய சோதனைக் குழாயினுள் அழுத்தி வைக்கவும். பின் குழாயினுள் நீரை ஊற்றவும். அதிகளவு நீரினை சோதனைக்குழாயினைச் சாய்த்து வெளியேற்றவும். ஒரு 500 மி.லி பீக்கரினுள் பாதியளவு நீரினை ஊற்றவும். அதனுள் சோதனைக் குழாயினை கவிழ்ந்த நிலையில் வைக்கவும். இந்த அமைப்பினை எந்தவொரு தொந்தரவும் செய்யாமல் ஒரு வாரம் அப்படியே வைக்கவும்.

அந்த இரும்புக் கம்பிச்சுருளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் சோதனைக் குழாயினுள் உள்ள நீரின் அளவினையும் உற்றுநோக்கவும்.

சோதனைக் குழாயினுள் நீரின் அளவு உயர்ந்துள்ளதைக் காணலாம்.

இரும்பானது குழாயில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு துருப்பிடிப்பதால் அதற்கு ஈடான அளவு சோதனைக் குழாய்க்கு வெளியே உள்ள நீர், சோதனைக் குழாயினுள் நுழையும். இது ஏறத்தாழ 20% இருக்கும். இதன் மூலம் காற்றில் ஏறத்தாழ 20% ஆக்சிஜன் இருப்பதை அறியலாம்.


தூசுப்பொருள்களின் வீச்சினை பின்வருமாறு கணக்கிடலாம்,

வீச்சு = அதிகபட்ச அளவு - குறைந்த பட்ச அளவு

எல்லா இடங்களிலிருந்தும் பெறப்பட்ட தாள்களில் தூசுப்பொருள்களைக் கணக்கிட்டு அதனைப் பின்வரும் அட்டவணையில் பூர்த்தி செய்யவும்.


❖ எந்த இடத்தில் அதிகளவு தூசுப்பொருள்கள் காணப்படுகிறது?

-----------------------------------------

❖ எந்த இடத்தில் குறைந்தளவு தூசுப்பொருள்கள் காணப்படுகிறது?

--------------------------------------

காற்றில் உள்ள நீராவியைக் கண்டறியும் சோதனை


ஒரு முகவையில் சில பனிக்கட்டித் துண்டுகளை எடுத்துக்கொள்ளவும். சிறிது நேரம் அதனை மேஜை மீது வைக்கவும். என்ன நிகழ்கிறது என உற்று நோக்கவும். அந்த முகவையின் வெளிப்புறத்தில் சிறிய நீர்த் துளிகள் உருவாவதைக் காணலாம். அந்த நீர்த் துளிகள் எங்கிருந்து வந்தவை எனத் தெரியுமா? முகவையின்மேற்பரப்பிலுள்ள குளிர்ச்சியினால், காற்றிலுள்ள நீராவி குளிர்ந்து நீர்த்துளிகளாக மாற்றம் பெற்றுள்ளன. இச்சோதனையிலிருந்து, காற்றில் நீராவி உள்ளதை அறிய முடிகிறது.


செயல்பாடு 4: 

எரிவதற்கு ஆக்சிஜன் தேவை

இரு மெழுகுவர்த்திகளை மேசைமேல் வைக்கவும். இரு மெழுகுவர்த்திகளும் சமஅளவிலும் சமஉயரத்திலும் இருக்குமாறு அமைக்கவும். அவற்றை சுண்ணக்கட்டியினால் மெழுகுவர்த்தி 1 மற்றும் 2 என்று குறிக்கவும். இரண்டு மெழுகுவர்த்திகளையும் ஒளிரச் செய்யவும். தற்போது மெழுகுவர்த்தி 2 ஐ ஒரு கண்ணாடி முகவையால் படத்தில் காட்டியவாறு மூடவும்


இரு மெழுகுவர்த்திகளும் என்ன நிகழ்கிறது என கவனிக்கவும்.

மெழுகுவர்த்தி 1ல் என்ன நிகழ்கிறது?

மெழுகுவர்த்தி 2 ல் என்ன நிகழ்கிறது?

ஏன் மூடப்பட்ட மெழுகுவர்த்தி அணைந்தது என்பதனை யூகிக்க முடிகிறதா?

நிகழ்வுகளைத் தொகுப்போம்.

மெழுகுவர்த்தி 1 ஊதி அணைக்கும் வரையிலும் அல்லது வெளிவிசை எதுவும் செயல்படாதவரையிலும் தொடர்ந்து எரியும். ஏனென்றால் அது எரிவதற்கான காற்று தொடர்ந்து கிடைத்துக் கொண்டு இருக்கிறது. மெழுகுவர்த்தி 2 சிறிது நேரம் எரிந்து பின் அணைகிறது. எரியும் மெழுகுவர்த்தியைக் கண்ணாடி முகவையால் மூடும்பொழுது மூடிய முகவைக்குள் இருந்த ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு மெழுகுவர்த்த எரிகிறது. குறைந்த அளவு காற்று மட்டுமே முகவையினுள் உள்ளதால், மிகக் குறைந்த அளவு ஆக்சிஜன்தான் மெழுகுவர்த்தி எரியத் துணைபுரிகிறது. முகவையினுள் உள்ள காற்றிலுள்ள ஆக்சிஜன் முழுவதும் உபயோகப்படுத்தப்பட்டபின் மெழுகுவர்த்திஅணைகிறது.

இந்தச் சோதனையை வெவ்வேறு அளவுகள் கொண்ட கொள்கலன்களைக் கொண்டு, திரும்பச்செய்யவும். எடுத்துக்காட்டாக 250 மி.லி கூம்புக்குடுவை, 500 மிலி கண்ணாடிப் புட்டி, ஒரு லிட்டர் ஜாடி மற்றும் இரண்டு லிட்டர் ஜாடி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். எரியும் மெழுகுவர்த்தியை இந்தக் கொள்கலன்களைக் ஒன்றன்பின் ஒன்றாக மூடவும். பின்னர் மெழுகுவர்த்தி அணைவதற்கு எடுத்துக்கொள்ளும் கொண்டு காலத்தைக் கண்டுபிடித்து அட்டவணைப்படுத்தவும்.


அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு உம்மால் விளக்கம் எழுத முடியுமா?

-----------------------------------------


கார்பன் – L ஆக்சைடை -57°C க்கு குளிர்விக்கும் பொழுது, அவை திரவ நிலையை அடையாமல், நேரடியாக திட நிலைக்கு மாறுகிறது. இதனை உலர்பனிக்கட்டி என்றழைக்கின்றனர். இது குளிர்விக்கும் காரணியாகப் பயன்படுகின்றது. இறைச்சி மற்றும் மீன்கள் போன்றவற்றை சரக்குந்து மற்றும் சரக்குப் பெட்டிகளில் ஏற்றுமதி செய்யும் பொழுது, அப்பொருள்களைப் பதப்படுத்த உலர்பனிக்கட்டியைப் பயன்படுத்துகின்றனர்.

Tags : Air | Term 2 Unit 4 | 6th Science காற்று | பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 2 Unit 4 : Air : Student Activities Air | Term 2 Unit 4 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 4 : காற்று : மாணவர் செயல்பாடுகள் - காற்று | பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 4 : காற்று