பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - காற்று | 6th Science : Term 2 Unit 4 : Air

   Posted On :  18.09.2023 08:47 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 4 : காற்று

காற்று

காற்று நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்துள்ளது. நம்மால் காற்றை பார்க்க இயலாது. ஆனால் காற்று இருப்பதை நாம் பல வழிகளில் உணரமுடியும்.

அலகு 4

காற்று



 

கற்றல் நோக்கங்கள்

காற்றின் இயைபு மற்றும் பயன்களை பட்டியலிடுதல்

சோதனைகளில் ஈடுபடுவதிலும் கருவிகளை கையாளுவதிலும் திறன் பெறுதல்

எரிதலில் ஆக்ஸிஜனின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுதல்

பூமியில் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு காற்றின் முக்கியத்துவம் குறித்து உணர்ந்து கொள்ளுதல்

நமது வளிமண்டலத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்தல்.


 

அறிமுகம்

காற்று நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்துள்ளது. நம்மால் காற்றை பார்க்க இயலாது. ஆனால் காற்று இருப்பதை நாம் பல வழிகளில் உணரமுடியும்.

எடுத்துக்காட்டாக, மரங்களின் சலசலப்பு, கொடியில் போட்ட துணிகளின் அசைவு, மின்விசிறி இயங்கும்பொழுது அசையும் திறந்த புத்தகத் தாள்கள், வானத்தில் பறக்கும் பட்டம் போன்றவை மூலம் காற்றின் இருப்பை நாம் அறிந்து கொள்ளலாம். நம்மால் காற்றினைப் பார்க்கவோ, தொடவோ, சுவைக்கவோ முடியாது, ஆனால் உணர முடியும். காற்றினால் தான் இந்த அசைவுகள் அனைத்தும் சாத்தியமாகின்றன. இதிலிருந்து, நம்மைச் சுற்றிலும் காற்று உள்ளது என்பதனை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது.

நாம் உயிர்வாழ காற்று அத்தியாவசியமானது ஆகும். உணவில்லாமல் நம்மால் சில நாட்கள் வாழ இயலும், நீரில்லாமல் சில மணி நேரங்கள் வாழ இயலும். ஆனால் காற்றில்லாமல் சில நிமிடங்கள் கூட வாழ இயலாது. எனவே அனைத்து உயிரினங்களுக்கும் உயிர்வாழ காற்று மிக அவசியமாகிறது.

காற்று அசைந்து சில சமயங்களில் தென்றலாகவும், சில சமயங்களில் புயலாகவும் வீசும். மெல்லிய விசையுடன் வீசும் காற்று குளிர்ச்சியாகவும் இனிமையாகவும் இருப்பதால் தென்றல் என்று அழைக்கப்படுகிறது. அதிக விசையுடன் வீசும் காற்று மரங்களை வேருடன் சாய்க்கவும் வீடுகளின் கூரைகளை அடித்துச் செல்லும் திறனையும் பெற்றிருப்பதால் புயல் என்று அழைக்கப்படுகிறது. சுவாசித்தலுக்கும் எரிதலுக்கும் காற்று மிக அவசியமாகிறது.

நாம் ஒரு செயல்பாட்டினைச் செய்வோமா?


செயல்பாடு 1: 

காற்று எங்கும் நிறைந்துள்ளது

ஒரு காலியான கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்வோம். அது உண்மையிலேயே காலியாக உள்ளதா? அல்லது அதனுள் ஏதாவது உள்ளதா?

இப்போது, கண்ணாடி பாட்டிலைத் தலைகீழாகப் பிடிப்போமா? இப்போதும் பாட்டிலினுள் ஏதோ ஒன்று உள்ளது என்றால் ஏற்றுக் கொள்வாயா? கீழே கொடுக்கப்பட்ட செயல்பாட்டின் மூலம் பாட்டிலினுள் என்ன உள்ளது என்பதனைத் தெரிந்துக் கொள்வோம்.


தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தினுள் பாட்டிலின் வாய்ப்பகுதியை படம்1 இல் உள்ளவாறு வைத்து அழுத்தவும். என்ன நடக்கிறது? பாட்டிலினுள் நீர் புகுகிறதா? தற்போது பாட்டிலை மெதுவாகச் சரிக்கவும். தற்போது மீண்டும் பாட்டிலை நீரினுள் படம் 2இல் காட்டியபடி மூழ்க வைக்கவும். பாட்டிலினுள் நீர் புகுகிறதா?

படம் 2ஐ உற்று நோக்கவும். பாட்டிலில் இருந்து காற்றுக் குமிழ்கள் வெளிவருவதைக் காணலாம்.

இச்சோதனையில் குமிழ்கள் வரும் ஒலி கேட்கிறதா?

கண்ணாடிப் பாட்டிலினுள் என்ன இருந்தது என்று இப்போது உங்களுக்குத் தெரிகிறதா?

ஆம், உங்கள் யூகம் சரியே. பாட்டிலில் இருந்தது காற்றுதான்.

பாட்டில் காலியாக இல்லை.அதைத் தலைகீழாய்ப் பிடிக்கும் பொழுது கூட அதனுள் காற்று நிரம்பியிருந்தது. அதனால்தான் நாம் பாட்டிலைத் தலைகீழாகத் தண்ணீரினுள் மூழ்கடிக்க அமிழ்த்தியபொழுது தண்ணீர் அதனுள் புகவில்லை. ஏனெனில், உள்ளிருந்த காற்றிற்கு வெளியேற வழியில்லை.

பாட்டிலைச் சரித்துத் தண்ணீரில் அமிழ்த்தியபொழுது, அதன் உள்ளிருந்த காற்று குமிழியாக வெளியேறியது. நீர் காற்றின் இடத்தை ஆக்கிரமித்தது.

இதிலிருந்து பாட்டில் முழுவதும் காற்று நிறைந்து இருந்தது எனத்தெரிகிறது.

Tags : Term 2 Unit 4 | 6th Science பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 2 Unit 4 : Air : Air Term 2 Unit 4 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 4 : காற்று : காற்று - பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 4 : காற்று