Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | ஐரோப்பியர்களின் வருகை

அலகு 1 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - ஐரோப்பியர்களின் வருகை | 8th Social Science : History : Chapter 1 : Advent of the Europeans

   Posted On :  07.06.2023 07:07 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : ஐரோப்பியர்களின் வருகை

ஐரோப்பியர்களின் வருகை

கி.பி.(பொ.ஆ) 1453இல் துருக்கியர்களால் கான்ஸ்டாண்டிநோபிள் என்ற பகுதி கைப்பற்றப்பட்ட பிறகு இந்தியாவிற்கும், ஐரோப்பாவிற்குமிடையிலான நிலவழி மூடப்பட்டது.

ஐரோப்பியர்கள் வருகை

கி.பி.(பொ.ஆ) 1453இல் துருக்கியர்களால் கான்ஸ்டாண்டிநோபிள் என்ற பகுதி கைப்பற்றப்பட்ட பிறகு இந்தியாவிற்கும், ஐரோப்பாவிற்குமிடையிலான நிலவழி மூடப்பட்டது. துருக்கி வட ஆப்பிரிக்காவிலும், பால்கன் தீபகற்பத்திலும் நுழைந்தது. இது ஐரோப்பிய நாடுகளை கிழக்கு நாடுகளுக்குப் புதிய கடல் வழியைக் கண்டுபிடிக்கத் தூண்டியது.


போர்ச்சுக்கல்

ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும், போர்ச்சுக்கல் மட்டும் இந்தியாவிற்கு புதிய கடல் வழியைக் கண்டுபிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தது. போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி பொதுவாக "மாலுமி ஹென்றி" என அறியப்படுகிறார். அவர் உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார். 1487ஆம் ஆண்டு போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்தார். மன்னர் இரண்டாம் ஜான் அவரை ஆதரித்தார்.


வாஸ்கோடகாமா


வாஸ்கோடகாமா தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்து, அங்கிருந்து மொசாம்பிக் பகுதிக்குத் தனது பயணத்தைத் தொடர்ந்தார். பின்னர் இந்திய மாலுமி ஒருவரின் உதவியோடு கி.பி.(பொ.ஆ.) 1498இல் கள்ளிக்கோட்டையை அடைந்தார். அவரை மன்னர் சாமரின் வரவேற்றார். இரண்டாவது போர்ச்சுகீசிய மாலுமி பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல் என்பவர் வாஸ்கோடகாமாவின் கடல் வழியைப் பின்பற்றி 13 கப்பல்களில் சில 100 வீரர்களுடன் 1500ஆம் ஆண்டு கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.


வாஸ்கோடகாமா 1501இல் இருபது கப்பல்களுடன் இரண்டாவது முறையாக இந்தியா வந்தடைந்தார். அப்பொழுது கண்ணனூரில் ஒரு வர்த்தக மையத்தை நிறுவினார். பின்னர் கள்ளிக்கோட்டை, கொச்சின் பகுதிகளிலும் வர்த்தக மையத்தை நிறுவினார். இதனால் கோபங்கொண்ட மன்னர் சாமரின் போர்ச்சுக்கீசியரைத் தாக்கினார். ஆனால் அவர் போர்ச்சுக்கீசியரால் தோற்கடிக்கப்பட்டார். பின்னர் கொச்சின் போர்ச்சுக்கீசியகிழக்கிந்திய கம்பெனியின் முதல் தலைநகரமாயிற்று. 1524இல் வாஸ்கோடகாமா மூன்றாவது முறையாக இந்தியா வந்தபொழுது நோய்வாய்ப்பட்டு டிசம்பர் 1524இல் கொச்சியில் காலமானார்.

பிரான்சிஸ்கோ -டி- அல்மெய்டா (1505-1509)

பிரான்சிஸ்கோ -டி - அல்மெய்டா என்பவர் இந்தியாவிலிருந்த போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு 1505 இல் அனுப்பப்பட்ட முதல் ஆளுநர் ஆவார். இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கப்பற்படையை பலப்படுத்துவதே அல்மெய்டாவின் நோக்கமாக இருந்தது. அதற்காக அவர் பின்பற்றிய கொள்கை 'நீலநீர்க்கொள்கை எனப்பட்டது. இந்தியப் பெருங்கடலில் அரேபிய ஏகபோக வர்த்தகத்தை போர்ச்சுக்கீசியர் தகர்க்க முயன்றபோது அது எதிர்மறையாக துருக்கி மற்றும் எகிப்தை பாதித்தது. பீஜப்பூர் மற்றும் குஜராத் சுல்தான்கள் போர்ச்சுகீசியருக்கு எதிராக, எகிப்து மற்றும் துருக்கி சுல்தான்களுக்கு ஆதரவளித்தனர். இதனால் துறைமுகங்களின் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துவது குறித்தும் போர்ச்சுகீசியர் கவலை அடைந்தனர். இந்நிலையில் சாவலுக்கு அருகில் நடைபெற்ற கடற்படை போரில் முஸ்லீம் கூட்டுப்படைகள் போர்ச்சுகீசியரைத் தோற்கடித்தன. இப்போரில் அல்மெய்டாவின் மகன் கொல்லப்பட்டான். பின்னர் டையூவில் நடைபெற்ற கடற்போரில் அல்மெய்டா, முஸ்லீம் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தார். கி.பி.1509இல் போர்ச்சுக்கீசியர் ஆசியாவில் கடற்படை மேலாண்மையைக் கோரினர்.

அல்போன்சோ -டி-அல்புகர்க் (1509 - 1515)

இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர் அல்போன்சோ -டி- அல்புகர்க் ஆவார். அவர் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து நவம்பர் 1510இல் கோவாவைக் கைப்பற்றினார். 1515இல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் துறைமுகப் பகுதியில் போர்ச்சுக்கீசியஅதிகாரத்தை விரிவுபடுத்தினார். அல்போன்சோ-டிஅல்புகர்க் இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தார். மேலும் விஜயநகரப் பேரரசுடன் நட்புறவை மேற்கொண்டார்.

நினோ -டி-குன்கா (1529-1538)

அல்புகர்க்குவிற்குப் பிறகு கவர்னரான நினோ-டி-குன்கா 1530இல் தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார். 1534இல் குஜராத்தின் பகதூர்ஷாவிடமிருந்து பசீன் பகுதியைக் கைப்பற்றினார். மேலும் 1537இல் டையூவைக் கைப்பற்றினார். பின்னர் குஜராத்தின் உள்ளூர்த் தலைவர்களிடமிருந்து டாமனைக் கைப்பற்றிய பின் சால்செட்டை 1548இல் ஆக்கிரமித்தார். இவ்வாறு போர்ச்சுக்கீசியர் 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கோவா, டையூ, டாமன், சால்செட், பசீன், செளல் மற்றும் பம்பாய் போன்ற பகுதிகளைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றனர். வங்காள கடற்கரையில் ஹூக்ளி, சென்னை கடற்கரையில் சாந்தோம் போன்ற பகுதிகளைக் கைப்பற்றினர். போர்ச்சுக்கீசியர் இந்தியாவில் புகையிலை சாகுபடியை அறிமுகப்படுத்தினர். போர்ச்சுக்கீசியரின் செல்வாக்கினால் கத்தோலிக்க கிறித்துவம் இந்தியாவின் கிழக்கு, மேற்கு கடற்கரையோர சில பகுதிகளில் பரவியது. 1556இல் போர்ச்சுக்கீசியரால் கோவாவில் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்டது. அச்சு இயந்திரத்தின் உதவியால் ஓர் ஐரோப்பிய எழுத்தாளர் 1563இல் கோவாவில் இந்திய மருத்துவ தாவரங்கள் என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டார். 17ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியஅதிகாரம் படிப்படியாக டச்சுவிடம் வீழ்ச்சியடைந்தது. மேலும் 1739ஆம் ஆண்டில் போர்ச்சுக்கீசிய அதிகாரம் கோவா, டையூ, டாமன் ஆகியவற்றோடு நின்றுபோனது.


டச்சுக்காரர்கள்

போர்ச்சுக்கீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்தனர். 1602இல் நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு, கிழக்கிந்திய நாடுகளில் வர்த்தகம் செய்ய அரசிடமிருந்து அனுமதியும் பெற்றது. டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு அவர்களின் வர்த்தக மையத்தை மசூலிப்பட்டினம் என்ற இடத்தில் நிறுவினர். பின்னர் கி.பி.1605இல் போர்ச்சுக்கீசியரிடமிருந்து அம்பாய்னாவை கைப்பற்றி இந்தோனேசியா தீவில் (Spice Island) ஆதிக்கத்தை நிலை நிறுத்தினர். மேலும் போர்ச்சுக்கீசியரிடமிருந்து நாகப்பட்டினத்தைக் கைப்பற்றி, தென்னிந்தியாவில் தங்களை வலிமைப்படுத்திக் கொண்டனர். ஆரம்பத்தில் பழவேற்காடு (Pulicat) டச்சுக்காரர்களின் தலைநகராக இருந்தது. பின்னர் 1690இல் பழவேற்காட்டிலிருந்து தலைநகரை நாகப்பட்டினத்திற்கு மாற்றிக் கொண்டனர். இந்தியப் பொருட்களான பட்டு, பருத்தி, இண்டிகோ, அரிசி மற்றும் அபினி ஆகியவை டச்சுக்காரர்கள் வர்த்தகம் செய்த பொருட்களாகும். கருப்பு மிளகு மற்றும் மற்ற நறுமணப் பொருட்கள் மீதான வியாபாரத்தில் அவர்கள் ஏகபோக உரிமை பெற்றிருந்தனர். இந்தியாவில் பழவேற்காடு, சூரத், சின்சுரா, காசிம்பஜார், பாட்ன , நாகப்பட்டினம், பாலசோர் மற்றும் கொச்சின் போன்ற இடங்களில் அவர்களது முக்கிய வர்த்தக மையங்கள் இருந்தன.

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 17ஆம் நூற்றாண்டு முழுவதும், டச்சு மற்றும் போர்ச்சுக்கீசியர்களுக்குப் போட்டியாக இருந்தது. இந்நிலையில் 1623இல் டச்சுக்காரர்கள் அம்பாய்னாவில் பத்து ஆங்கில வியாபாரிகள் மற்றும் ஒன்பது ஜப்பானியர்களை இரக்கமின்றி கொன்றனர். இந்நிகழ்வு டச்சு மற்றும் ஆங்கிலேயர்களிடையே மேலும் பகைமையை வளர்த்தது. 1759இல் நடைபெற்ற பெடரா போரில் ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்களைத் தோற்கடித்தனர். தொடர்ந்து டச்சு இறுதி வீழ்ச்சியை எட்டியது. ஒன்றன் பின் ஒன்றாக தனது குடியேற்றங்களை ஆங்கிலேயரிடம் இழந்த டச்சு 1795இல் முழுமையாக ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தது.

தமிழ்நாட்டில் டச்சுக்காரர்கள்

1502 முதல் பழவேற்காட்டின் மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்திய போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்களால் தங்களின் ஆதிக்கத்தை இழந்தனர். பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் 1613இல் கெல்டிரியா கோட்டையைக் கட்டினர். இந்தக் கோட்டை ஒரு காலத்தில் டச்சு அதிகார மையத்தின் இருப்பிடமாக இருந்தது.


அக்காலத்தில் பழவேற்காட்டிலிருந்து வைரங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. நாகப்பட்டினம், புன்னக்காயல், பரங்கிப்பேட்டை (Porto Novo) கடலூர் மற்றும் தேவனாம்பட்டினம் ஆகியன டச்சுக்காரர்களின் கோட்டைகள் மற்றும் கைப்பற்றிய பகுதிகளாகும்.


ஆங்கிலேயர்கள்

இங்கிலாந்து இராணி எலிசபெத் கிழக்கிந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய கவர்னர் மற்றும் லண்டன் வர்த்தகர்கள் நிறுவனத்திற்கு 1600 டிசம்பர் 31 அன்று ஒரு அனுமதிப் பட்டயம் வழங்கினார். அந்த நிறுவனம் (கம்பெனி) ஒரு கவர்னர் மற்றும் 24 இயக்குநர்களைக் கொண்டிருந்தது. 1608ஆம் ஆண்டு ஜஹாங்கீர் அவைக்கு மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ் சில சலுகைகளைப் பெற அனுப்பிவைக்கப்பட்டார். அவர் சூரத் நகரில் ஒர் வணிக மையத்தை அமைக்க அனுமதி கோரினார். ஆனால் போர்ச்சுக்கீசிய தலையீட்டால் ஜஹாங்கீர் அனுமதி வழங்கவில்லை . ஆகையால் வில்லியம் ஹாக்கின்ஸ் ஏமாற்றத்துடன் இங்கிலாந்து திரும்பினார். இந்நிலையில் சூரத் அருகே நடைபெற்ற கடற்போரில் ஆங்கிலத் தளபதி தாமஸ் பெஸ்ட், போர்ச்சுக்கீசிய கடற்படையைத் தோற்கடித்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த பேரரசர் ஜஹாங்கீர், 1613 இல் சூரத்தில் ஆங்கில வர்த்தக மையத்தை அமைக்க அனுமதித்தார். இது ஆரம்பத்தில் ஆங்கிலேயரின் தலைமையகமாக இருந்தது. இந்நிலையில் 1614இல் கேப்டன் நிக்கோலஸ் டவுண்டன், போர்ச்சுக்கீசியரை வென்றார். இந்த சம்பவங்கள் முகலாயர் அவையில் ஆங்கிலேயரின் கௌரவத்தை அதிகரித்தன. 1615இல் ஜஹாங்கீர் அவைக்கு இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் அவர்களால் சர் தாமஸ் ரோ அனுப்பிவைக்கப்பட்டார். அவர் ஆக்ராவில் மூன்றாண்டுகள் தங்கி இருந்தார். மூன்றாம் ஆண்டு இறுதியில் பேரரசர் ஜஹாங்கீரிடம் இந்தியாவில் வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றார். உரிமையைப் பெற்ற சர் தாமஸ் ரோ புறப்படும் முன் ஆக்ரா, அகமதாபாத் மற்றும் புரோச் ஆகிய இடங்களில் வணிக மையங்களை நிறுவினார்.

ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள மசூலிப்பட்டினத்தில் 1611இல் நிறுவினர். இது கோல்கொண்டா அரசின் ஒரு முக்கிய துறைமுகமாகும். 1639இல் பிரான்சிஸ் டே என்ற ஆங்கில வணிகர், சந்திரகிரி மன்னரான சென்னப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து மெட்ராசை குத்தகைக்குப் பெற்றார். அங்கு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 'புனித ஜார்ஜ் கோட்டை என அழைக்கப்படும் தனது புகழ்வாய்ந்த வணிக மையத்தை நிறுவியது. இது ஆங்கிலேயரால் கட்டப்பட்ட முதல் கோட்டையாகவும், கிழக்குப் பகுதி முழுமைக்குமான தலைமையிடமாகவும் விளங்கியது.

இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ், போர்ச்சுக்கீசிய இளவரசி காதரினை திருமணம் செய்து கொண்டார். திருமண சீராக பம்பாய் தீவை போர்ச்சுக்கீசிய மன்னரிடமிருந்து பெற்றார். 1668இல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆண்டுக்கு 10 பவுண்டுகள் குத்தகை கொடுத்து பம்பாய் தீவை மன்னர் இரண்டாம் சார்லசிடமிருந்து பெற்றது.

1690ஆம் ஆண்டு சுதாநுதி என்ற இடத்தில் ஜாப் சார்னாக் என்பவரால் ஒரு வர்த்தகமையம் நிறுவப்பட்டது. சுதாநுதி, காளிகட்டம் மற்றும் கோவிந்தபூர் ஆகிய மூன்று கிராமங்களின் ஜமீன்தாரி உரிமையை 1698இல் கிழக்கிந்திய கம்பெனி பெற்றது. இந்த மூன்று கிராமங்கள் பின்னாளில் கல்கத்தா நகரமாக வளர்ச்சி பெற்றது. 1696இல் சுதாநுதியில் வலுவான ஒரு கோட்டை கட்டப்பட்டது. அது 1700இல் வில்லியம் கோட்டை என அழைக்கப்பட்டது.

1757இல் பிளாசி போர் மற்றும் 1764இல் பக்சார் போருக்குப் பிறகு ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி ஓர் அரசியல் சக்தியாக மாறியது. இந்தியா 1858 வரை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் இருந்தது. 1858க்குப் பிறகு இந்தியா ஆங்கில அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.


டேனியர்கள்

டென்மார்க் அரசர் நான்காம் கிரிஸ்டியன் 1616 மார்ச் 17இல் ஒரு பட்டயத்தை வெளியிட்டு டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்கினார். அவர்கள் 1620இல் தரங்கம்பாடி (தமிழ்நாடு), 1676இல் செராம்பூர் (வங்காளம்) ஆகிய இடங்களில் குடியேற்றங்களை நிறுவினர். செராம்பூர், டேனியர்களின் இந்தியத் தலைமையிடமாக இருந்தது. டேனியர்கள் இந்தியாவில் தங்களைப் பலப்படுத்திக் கொள்ளத் தவறி விட்டனர். எனவே 1845இல் டேனியர்கள் இந்தியாவிலிருந்த தங்கள் குடியேற்றங்கள் அனைத்தையும் ஆங்கில அரசுக்கு விற்றனர்.

உங்களுக்குத் தெரியுமா?

தரங்கம்பாடியை டேனியர்கள் டானஸ்பெர்க்  என அழைத்தனர். சீகன்பால்கு என்பவரை டென்மார்க்கின் அரசர் இந்தியாவிற்கு அனுப்பினார். அவர் தரங்கம்பாடியில் ஒரு அச்சுக் கூடத்தை நிறுவினார்.



பிரெஞ்சுக்காரர்கள்

பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம், மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சரான கால்பர்ட் என்பவரால் 1664இல் உருவாக்கப்பட்டது. 1667இல் பிரான்காய்ஸ் கரோன் தலைமையின் கீழ் ஒரு குழு இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டது. வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வருகை தந்த ஐரேப்பிய நாடுகளுள் கடைசி ஐரோப்பிய நாடு பிரான்சு ஆகும். இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிக மையத்தை கரோன் என்பவர் சூரத் நகரில் நிறுவினார். 1669இல் மார்காரா என்பவர் கோல்கொண்டா சுல்தானின் அனுமதி பெற்று பிரான்சின் இரண்டாவது வர்த்தக மையத்தை மசூலிப்பட்டினத்தில் நிறுவினார்.


1673இல் பீஜப்பூர் ஆட்சியாளர் ஷெர்கான் லோடிக்கு வழங்கப்பட்ட மானியத்தின் கீழ், மார்ட்டின் என்பவர் பாண்டிச்சேரியில் குடியேற்றத்தை நிறுவினார். பாண்டிச்சேரி இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமானது. பாண்டிச்சேரியில் செயின்ட் லூயிஸ் எனப்படும் கோட்டையை பிரான்காய்ஸ்மாட்டின் கட்டினார். வங்காளத்தின் முகலாய ஆளுநரான செயிஸ்டகானின் அனுமதி பெற்று 1673இல் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி கல்கத்தாவுக்கு அருகே சந்திரநாகூர் என்ற நகரை நிர்மாணித்தது. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வர்த்தக மையங்களை நிறுவியது. குறிப்பாக கடலோரப் பகுதிகளான மாஹி, காரைக்கால், பாலசோர் மற்றும் காசிம் பசார் போன்ற இடங்கள் முக்கியமானவையாகும்.

1742இல் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக ஜோசப் பிராங்காய்ஸ் டியூப்ளே என்பவர் நியமனம் செய்யப்பட்டார். அவரது நியமனத்தின் மூலம் பிரெஞ்சு அதிகாரம் மேலும் பலப்படுத்தப்பட்டது. அவருக்குப் பின் பாண்டிச்சேரியின் பிரெஞ்சு ஆளுநராக ஆமாஸ் அனுப்பப்பட்டார்.

உங்களுக்குத் தெரியுமா?

தூரக்கிழக்கு நாடுகளுடன் வணிகம் செய்யும் நோக்கில் 1731இல் ஜோதன்பர்க் என்பவர் சுவீடன் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவினார். டச்சு கிழக்கிந்திய கம்பெனி மற்றும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றி சுவீடன் கிழக்கிந்திய கம்பெனியின் தோற்றத்திற்கு ஊக்குவிப்பாக இருந்தது.

Tags : Chapter 1 | History | 8th Social Science அலகு 1 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : History : Chapter 1 : Advent of the Europeans : Advent of the Europeans Chapter 1 | History | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : ஐரோப்பியர்களின் வருகை : ஐரோப்பியர்களின் வருகை - அலகு 1 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : ஐரோப்பியர்களின் வருகை