Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | அரசியல் அறிவியலை படிப்பதற்கான அணுகுமுறைகள்
   Posted On :  25.09.2023 03:23 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : அரசியல் அறிவியல் அறிமுகம்

அரசியல் அறிவியலை படிப்பதற்கான அணுகுமுறைகள்

அணுகுமுறை என்பது ஒரு அரசியல் நிகழ்வினைக் கண்டுணர்ந்து பின்பு அதனை விளக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது ஆகும்.

அரசியல் அறிவியலை படிப்பதற்கான அணுகுமுறைகள்

அணுகுமுறை என்பது ஒரு அரசியல் நிகழ்வினைக் கண்டுணர்ந்து பின்பு அதனை விளக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது ஆகும். அரசியல் அறிவியலை பற்றி அறிந்து கொள்ள பல்வேறு அணுகுமுறைகள் உள்ளன. அவைகளை பாரம்பரிய அணுகுமுறைகள் மற்றும் தற்கால அணுகுமுறைகள் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பாரம்பரிய அணுகுமுறைகள் என்பவை அனுமானங்கள் மற்றும் கருத்தறிவு அடிப்படையிலானவை. தற்கால அணுகுமுறைகள் என்பவை அனுபவ அறிவு மற்றும் அறிவியல் தன்மையை அடிப்படையாக கொண்டவை ஆகும்.





I. பாரம்பரிய அணுகுமுறை (Traditional Approach) 


அ) தத்துவார்த்த அணுகுமுறை (Philosophical Approach)

இந்த அணுகுமுறைதான் அரசியலைக் கற்பதற்கான மிகவும் பழமையான அணுகுமுறையாகும். இதனை அனுமானங்கள் மற்றும் மனோதத்துவ அல்லது நன்நெறி சார்ந்த அணுகுமுறை என்றும் கூறலாம். இந்த அணுகுமுறைப்படி அரசு, அரசாங்கம் மற்றும் மனிதனின் அரசியல் நடத்தையைப் பற்றிய படிப்பானது சில இலக்குகள், நீதிநெறிகள் மற்றும் உண்மைகள், ஆகியவற்றை அடைவதில் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இந்த அணுகுமுறைப்படி இந்த அரசியல் அறிவியல் பாடம் நன்நெறி உலகத்தோடு நெருக்கமாக கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இந்த அணுகுமுறை மிகவும் மேலோட்டமானதாகவும் மிகுந்த யூகங்கள் அடிப்படையிலானதாகவும் இருப்பதாக பல விமர்சகர்கள் கருதுகிறார்கள். 


ஆ) வரலாற்று அணுகுமுறை (Historical Approach)

இந்த அணுகுமுறையானது 'அரசியல் அறிவியல்' என்ற இந்த பாடம் கடந்த காலங்களில் அரசுகளும், அரசாங்கங்களும், அரசியல் நிறுவனங்களும் எவ்வாறு தோன்றி படிப்படியாக வளர்ச்சி பெற்று வளர்ந்து வந்தன என்பதை அறிந்துகொள்வதில் இருந்து தொடங்குகிறது. தனி மனிதர்களும், அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களும் எவ்வாறு அரசியல் அமைப்புகளின் வெற்றி தோல்விகளுக்கு காரணமாக இருந்தன என்பதைப்பற்றியும், அதனால் கற்றுக்கொண்ட பாடங்கள் எவ்வாறு எதிர்கால அரசியல் அமைப்புகளுக்கு உதவின என்பதும் இந்த அணுகுமுறையினால் பெறப்படும் சில தகவல்களாகும். தற்கால அரசியல் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதற்கு அதே போன்ற வரலாற்று நிகழ்வுகள் அறியப்பட்டன. இதனை விமர்சிப்பவர்கள் கூறுவது என்னவென்றால் பழங்காலத்தைப் பற்றிய பல தகவல்கள் பிரகாசமாக தோன்றிய போதிலும் அவைகளில் சில மேலோட்டமான ஒற்றுமைகள் தந்து பல சமயங்களில் நம்மை தவறான பாதைக்கு கொண்டு சேர்த்து விடும் என்பது இவர்களின் வாதமாகும். 


இ) சட்ட பூர்வ அணுகுமுறை (Legal Approach)

அரசியல் அறிவியலைப் பற்றி கற்பது என்பது அரசினால் ஓர் அரசியல் அமைப்பினை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட சமூக நிறுவனங்களுடனான தொடர்புடையதாகும். மேலும் அரசு என்பது சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றியதாக இருப்பதால் அரசியல் கோட்பாட்டாளர்கள் நீதித்துறை நிறுவனங்கள் மீது அதிகக் கவனம் செலுத்துகின்றனர். இந்த அணுகுமுறையானது சட்டத்தினை, உருவாக்கி அதனை செயல்படுத்தும் ஒரு நிறுவனமாகவே அரசினைப் பார்க்கின்றது. சில அரசியல் விமர்சகர்கள் இந்த அணுகுமுறை மிகவும் குறுகிய பார்வையிலானது என்பதுடன் சட்டம் மற்றும் ஒழுங்கினைச் செயல்படுத்துவதைத் தவிர அரசுக்கு பல்வேறு பணிகள் உள்ளனவென்றும், சட்டம் என்பது தனி மனித வாழ்வின் ஒரே ஒரு அம்சம் பற்றியதாகும் என்றும், சட்டத்தை வைத்தே மனிதனின் அரசியல் நடத்தையை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது எனவும் குறிப்பிடப்படுகின்றனர்.


ஈ) நிறுவனம் சார்ந்த அணுகுமுறை (Institutional Approach)

அரசியலின் முறையான அமைப்புகளான சட்டமன்றம், நீதித்துறை மற்றும் செயலாட்சித் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் அரசியல் அறிவியலை அணுகுவது நிறுவனம் சார்ந்த அணுகுமுறையாகும். இந்த அணுகுமுறையை கட்டமைப்பு அணுமுறை (Structural Approach) என்றும் சிலர் கூறுகிறார்கள். இந்த அணுகுமுறையில் பல்வேறு முறைசாரா அமைப்புக்களைப் பற்றி படிப்பதோடு பல்வேறு வகையான அரசாங்கங்களும் ஒப்பீட்டு முறையில் படிக்கப்படுகின்றன. இந்த அணுகுமுறையில் முறை சார்ந்த மற்றும் முறை சாராத அமைப்புக்களை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்களே தவிர அதனுடன் தொடர்புடைய மனிதர்களின் நடத்தையினை கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை என்பது ஒரு குறைபாடாகும். 



II. நவீன அணுகுமுறைகள் (Modern Approach) 


அ) சமூகவியல் அணுகுமுறை (Sociological Approach)

சமூகவியல் அணுகுமுறையானது சமூக உறுப்பினர்களின் அரசியல் நடத்தையை சமூக சூழலில் புரிந்து கொள்வது குறித்து வலியுறுத்துகிறது. அரசு என்பது அடிப்படையில் ஒரு சமூக உயிரினமாகும். எனவே, அரசியல் என்பதை சமூக காரணிகளின் மூலம் புரிந்து கொள்ளமுடியும். ஆனால், அரசியல் அறிஞர்கள் சிலர் அரசியல் அறிவியல் பாடத்தில் சமூகவியல் பிரச்சனைகளுக்கு அதிகக் கவனம் மற்றும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது அரசியல் அறிவியலின் தனித்தன்மைக்கு ஏற்புடையதன்று என்று கருதுகின்றனர்.


ஆ) உளவியல் அணுகுமுறை (Psychological Approach)

உளவியல் அணுகுமுறையானது அரசியல் மற்றும் சமூக நிறுவனங்கள் உளவியல் விதிமுறைகளின் அடிப்படையில் இயங்க வேண்டுவதின் அவசியத்தை விளக்குகின்றன. இவ்வணுகுமுறை அரசியல் தலைவர்களைப் பற்றிய உளவியல் பகுப்பாய்வினால் அரசியலைப் பற்றி குறிப்பிடத்தகுந்த அறிவு வெளிப்படுவதாக அனுமானிக்கிறது. இருந்தபோதிலும் இந்த அணுகுமுறையானது சமூகவியல், சட்டம் மற்றும் பொருளியல் காரணிகளை புறந்தள்ளுகிறது என்பது இந்த அணுகுமுறையின் ஒரு குறையாகக் கருதப்படுகிறது. 


இ) பொருளியல் அணுகுமுறை (Economical Approach)

பொருள்களின் உற்பத்தி மற்றும் பகிர்ந்தளித்தல் ஆகிய இரண்டும் ஒரு அரசுக்கு மிக முக்கியமான பணிகள் என்பதால் அரசியல் அறிவியலை பொருளியல் அடிப்படையில்தான் படிக்க வேண்டும் என்று கூறுவது பொருளியல் அணுகுமுறையாகும். பொருளாதார விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் அரசின் பங்கு மற்றும் அரசினுடைய அரசியல் நடைமுறையுடனான பொருளாதாரத்தின் தொடர்பு பற்றியும் இந்த அணுகுமுறை வலியுறுத்துகிறது. ஒரு மனிதனின் அரசியல், மற்றும் பொருளாதார வாழ்வினை புரிந்து கொண்டு தொடர்புபடுத்துவது இந்த அணுகுமுறையாகும். இருந்தபோதிலும் இந்த அணுகுமுறையில் பொருளாதார விவாகரங்களை மட்டுமே கருத்தில் கொண்டு உளவியல் மற்றும் சமூகவியல் பிரச்சனைகளைப் புறந்தள்ளுவது என்பது ஒரு குறைபாடாகும். 


ஈ) நடத்தையியல் அணுகுமுறை (Behavioural Approach)

நடத்தையியல் அணுகுமுறையானது அரசியல் நடத்தை என்பதனை மையமாகக் கொண்டதாகும். ஓர் அரசின் கீழ் வாழும் மனிதர்களின் மனப்பாங்கு மற்றும் முன்னுரிமைகளை அரசியல் சூழலில் கற்பதற்கு இந்த அணுகுமுறை அதிகக் கவனம் செலுத்துகிறது. இந்த அணுகுமுறை அரசியலை முறைமைவாதம் மற்றும் கருத்தறிவுவாதத்தின் அடிப்படையில் கற்பதலிருந்து விலகி மனிதனின் அரசியல் நடத்தையை படிப்பதில் கவனம் செலுத்துகிறது. இருந்தபோதிலும் சில அரசியல் அறிவியல் விமர்சகர்கள் நடத்தையியல் அணுகுமுறை அரசியல் அறிவியல் பாடத்தை அறிவியல் முறைகளின் தவறான கருத்தாக்கப் புரிதலோடு அணுகுவதாக குற்றம் சாட்டுகின்றனர். 


உ) மார்க்சிய அணுகுமுறை (Marxist Approach)

பிற தற்கால அணுகுமுறைகளைக் காட்டிலும் மார்க்சிய அணுகுமுறை அடிப்படையில் மிகவும் வேறுபட்டதாகும். இந்த அணுகுமுறையானது வர்க்கப் போராட்டத்தில் அரசு என்பது ஒரு தவிர்க்க முடியாத விளைவினால் உருவான அமைப்பு என்று கூறுகிறது. மேலும் அரசியல் மற்றும் பொருளியல் சக்திகள் ஆகியவை ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை என்பதனையும், இவை இரண்டையும் ஒன்றினைப் பிரிக்க முடியாது என்பதனையும் விளக்குகிறது. இந்த அணுகுமுறை பொருளியல் காரணிகளுக்கு அளவுக்கு அதிகமான முக்கியதுவம் கொடுப்பதாகவும், பிற முக்கியமான காரணிகளை இந்த அணுகுமுறை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதும் இந்த முறையை பற்றிய விமர்சகர்களின் கருத்தாகும்.

மேற்கண்ட பல அணுகுமுறைகளையும் பகுப்பாய்வு செய்து பார்க்கிறபோது, ஒவ்வொரு அணுகுமுறையிலும் ஒருசில குறைபாடுகள் இருப்பினும் ஒவ்வொரு விதத்தில் அவை முக்கியமானவைதான் என்பதும், அரசியல் அறிவியலை முழுமையாகப் புரிந்து கொள்ள இந்த அணுகுமுறைகள் அனைத்துமே பயன்படுகின்றன என்பதும் உணரப்படுகிறது. 



III. அரசியல் அறிவியலுக்கும் பிற சமூக அறிவியல்களுக்கும் இடையேயான தொடர்பு 


அ) அரசியல் அறிவியல் மற்றும் வரலாறு (Political Science and History)

அரசும் அதன் நிறுவனங்களும் வரலாற்றின் படிப்படியான வளர்ச்சியால் உருவானவை ஆகும். அரசு தனக்குரிய பல பொதுவான சட்டங்களையும், கொள்கைகளையும் வரலாற்று உண்மைகளின் அடிப்படையிலேயே கண்டறிந்துள்ளது என்பது உண்மை ஆகும். அரசியல் வரலாறு என்பது அரசியல் நிகழ்வுகளையும், அரசியல் இயக்கங்களையும் விவரிப்பதாகும். ஃபிரிமேன் (Freeman) என்பவரின் கூற்றுப்படி "வரலாறு என்பது கடந்தகால அரசியல், அரசியல் என்பது நிகழ்காலத்தின் வரலாறு" என்பது ஒரு சரியான மற்றும் பொருத்தமானவிளக்கமாகும். ஜான் சீலே (John seeley) தனது மேற்கோளில் "அரசியல் அறிவியல் இல்லாத வரலாறு பழம் இல்லாத மரம் என்றும் அதேபோல வரலாறு இல்லாத அரசியல் அறிவியல் என்பது வேர் இல்லாத மரமாகும்" என்று விளக்குகிறார். இந்த உதாரணம் இந்த இரண்டு பாடங்களுக்கும் உள்ள நெருங்கிய உறவு முறையை தெளிவாக உணர்த்துகிறது. 


ஆ) அரசியல் அறிவியல் மற்றும் பொருளியல் (Political Science and Economics)

பொருளியல் என்பது அரசியல் அறிவியலின் ஒரு கிளைப்பிரிவு என்று பண்டைய கிரேக்கர்கள் கருதினார்கள். அவர்கள் அரசியல் அறிவியல் பாடத்தினை அரசியல் பொருளாதாரம் (Political Economy) என்றே அழைத்தனர். அரசியல் பொருளாதாரம் என்ற பாடமானது அரசியல் நிறுவனங்களும், அரசியல் சூழல்களும் பொருளியலுடன் நெருங்கிய உறவுமுறையில் இருப்பதனை விளக்குகிறது. நாட்டிலுள்ள ஒவ்வொரு குழுக்களும் தங்களது பொருளியல் விருப்பங்களை நிறைவு செய்து கொள்ள அரசியல் செயல்பாடுகளையும், அரசியல் சூழல்களையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தக்கொண்டு செயல்படுகிறார்கள். இந்த இரண்டு பாடங்களையும் இணைக்கும் பல கருத்துக்கள் பாடத்தில் இருக்கின்றன. இவை ஒரே நோக்கம் கொண்டதாக இருப்பதுடன் மக்களுக்கு சிறந்த வாழ்வினைத் தரும் நோக்கமுடையதாகும். 


இ) அரசியல் அறிவியல் மற்றும் அறவியல் (Political Science and Ethics)

அறவியல் என்பது அரசியலோடு நெருங்கிய தொடர்புடைய சமுதாயத்தில், தனிமனிதர்களுடைய நடத்தையைக் கட்டுப்படுத்தும் விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் ஆகியவற்றை உருவாக்குவதுடன், நீதிநெறி முறைமையோடும் தொடர்புடைய அறவியலாகும். அறவியல் என்பது நீதி முறைமையின் அறிவியலாகும். அதேபோல அரசியல் அறிவியல் என்பது அரசியல் முறைமையின் அறிவியல் ஆகும். அரசியல் அறிவியல் மற்றும் அறவியல் ஆகிய இரண்டு பாடங்களும் மனித சமுதாயத்தை மிகவும் சரியான மற்றும் மாண்பான வாழ்வினை நோக்கி நெறிப்படுத்துவனவாகும். 


ஈ) அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் (Political Science and Sociology)

அரசியல் அறிவியலும், சமூகவியலும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடைய பாடங்களாகும். அரசு மற்றும் பிற அரசியல் நிறுவனங்கள் அனைத்தும் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பதன் அடைப்படைத் தகவல்களை சமூகவியல் பாடமே நமக்கு தரமுடியும். அரசியல் அறிவியல் பாடத்தினை கொள்கை அறிவியல் (Policy science) பாடம் என்றும் கூறுகின்றனர். அரசின் பொதுக்கொள்கை (Public Policies)களை வகுக்க மக்களின் சமூக தேவைகளைப் பற்றிய அறிவு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது. சமூகவியல் அறிவு இல்லாமல் எந்தவொரு நாட்டின் அரசியலையும் சிறப்பாக நடத்தமுடியாது. அதேபோல சமூகவியலுக்கு அரசியல் அறிவியிலானது அரசின் அமைப்பு மற்றும் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் சமுதாயத்தை எவ்வாறு பெருமளவில் பாதிக்கிறது என்பன பற்றிய தகவல்களைத் தருகிறது. 


உ) அரசியல் அறிவியல் மற்றும் உளவியல் (Political Science and Psychology)

உளவியல் என்பது மனித நடத்தையின் அனைத்து அம்சங்களையும் பற்றி படிக்கும் ஒரு பாடமாகும். அரசியல் அறிவியல் என்பது மனிதர்களின் அரசியல் நடவடிக்கைகளைப் பற்றிய ஒரு பாடமாகும். உளவியல் என்பது தனிமனிதர்கள் மற்றும் குழுக்களின் குறிப்பிட்ட நடத்தைப் பாங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. உளவியல் பாடம் அரசியல் கட்சிகளின் நடத்தை மற்றும் அரசிலுள்ள பிற குழுக்களின் செயல்பாடுகள் ஆகியவற்றினை புரிந்து கொள்ள அரசியல் அறிவியலுக்கு உதவி செய்கிறது. பார்க்கர் (Barker) என்ற அறிஞர் கூறியது போல "மனிதர்களின் பல புதிரான நடவடிக்கைகளைப்பற்றி அறிந்து கொள்ளும் விடைப்பகுதி உளவியல் பாடத்திலேயே உள்ளது". நமது முன்னோர்கள் உயிரியல் அடிப்படையில் சிந்தித்தார்கள் என்றால் நாம் உளவியல் அடிப்படையில் சிந்திக்கிறோம் என்கிறார். 


ஊ) அரசியல் அறிவியல் மற்றும் பொதுநிர்வாகம் (Political Science and Public Administration)W

அரசியல் அறிவியலும், பொது நிர்வாகமும் மிகவும் நெருங்கிய தொடர்புடைய பாடங்களாகும். பொது நிர்வாகப்பாடத்தில் வரும் 'பொது' என்ற வார்த்தை அரசாங்கத்தை குறிக்கும். பொது நிர்வாகம் என்பது அரசு சாரா அமைப்புகளையும் உள்ளடக்கியதாகும். பொது நிர்வாகம் என்பது அரசாங்கத்தின் கொள்கைகளை செயல்படுத்துவதாகும். அரசியல் அறிவியல் என்பது பொதுக் கொள்கை உருவாக்க நடைமுறையாகும். அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகம் ஆகிய இரண்டு துறைகளின் நோக்கங்களுமே ஒப்புமை உள்ளவையாகும். இவை இரண்டுமே வளங்களைத் தகுந்த முறையில் பயன்படுத்துவதுடன் சமூக நலனை மேம்படுத்துகின்றன. இவ்வாறு அரசியல் அறிவியல் பாடம் என்பது ஆளுகை (Governance) என்பதனை முறையாகப் படிக்க உதவும் ஒருபாடமாகும். அரசியல் அறிவியல் பாடத்தில் அறிவியல் பூர்வமான முறைகளும், செயலறிவிலான பகுப்பாய்வும் செயல்படுத்தப்படுகின்றன. அதில் செயலறிவிலான புலனாய்வுகள் இருப்பினும், துல்லியமான முன்கணிப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. அரசியல் அறிவியலானது அரசு, அதன் அங்கங்கள் மற்றும் நிறுவனங்களை ஆராய்கிறது. மேலும் அரசியல் அறிவியல் பாடத்தில் சமூகம், பண்பாடு, பொருளாதாரம் மற்றும் உளவியல் காரணிகள் அதிகம் கலந்துள்ளன. பிற சமூக அறிவியல் பாடங்கள் அனைத்திலிருந்தும் அரசியல் அறிவியல் பாடம் நிறைய கருத்துக்களையும், தகவல்களையும் பெற்றிருந்தாலும் அதிகாரத்தின் மீதான அதன் தனிக்கவனம் அதனை பிற துறைகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அரசியல் அறிவியல் என்ற இப்பாடத்தில், அதிகாரம், ஒப்பீட்டு அரசியல், பன்னாட்டு உறவுகள், அரசியல் கோட்பாடுகள், பொதுச்சட்டங்கள், பொதுக்கொள்கைகள், என அரசியல் அறிவியலில் பல உட்பிரிவுப்பாடங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. அரசியல் அறிவியலைக் கற்பதன் மூலமாக அரசியல் நடைமுறைகள், அரசாங்க முறைமை மற்றும் குடிமக்களின் வாழ்வில் அது எங்ஙனம் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பதன் அடிப்படைகளைப் புரிந்து கொள்ள முடியும்.




செயல்பாடு

* அரசியல் எவ்வாறு உனது அன்றாட வாழ்வில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பதைப்பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

* உனக்கு மிகவும் விருப்பமான அரசியல் சிந்தனையாளரின் வாழ்வு மற்றும் படைப்புகளைப் பற்றிய படங்களை சேகரிக்கவும். அரசியல் அறிவியலுக்கு அவருடைய பங்களிப்பினைப் பற்றி வகுப்பில் அனைவருக்கும் விளக்கவும்.


குறிப்பிடத்தக்க மேற்கோள்

நீ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நீ எப்படியாக வேண்டுமானாலும் மாற விரும்பலாம். நீ அரசியலின் மீது ஆர்வம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் அரசியல் உன் மீது ஆர்வமாக இருக்கிறது!

- மார்ஷல் பெர்மன் (Marshall Bermen)


11th Political Science : Chapter 1 : Introduction of Political Science : Approaches to the Study of Political Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : அரசியல் அறிவியல் அறிமுகம் : அரசியல் அறிவியலை படிப்பதற்கான அணுகுமுறைகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : அரசியல் அறிவியல் அறிமுகம்