Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | அரசியல் அறிவியலின் தன்மை
   Posted On :  25.09.2023 03:23 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : அரசியல் அறிவியல் அறிமுகம்

அரசியல் அறிவியலின் தன்மை

மனிதன் என்பவன் ஒரு சமூக விலங்கு ஆவான். மனிதன் தனிமையைவிட பிறருடன் இருப்பதையே விரும்புகிறான்.

அரசியல் அறிவியலின் தன்மை (Nature of Political Science)

மனிதன் என்பவன் ஒரு சமூக விலங்கு ஆவான். மனிதன் தனிமையைவிட பிறருடன் இருப்பதையே விரும்புகிறான். மனிதன் தனது பரந்துபட்ட தேவைகளுக்கும், திருப்திக்கும் சக மனிதனைச் சார்ந்தே வாழவேண்டியுள்ளது. அதனால் மனிதர்கள் எப்போதும் சமூக குழுக்களாகவே வாழ வேண்டியுள்ளது. சமூகத்தின் ஒரு அங்கமாக விளங்கும் மனிதர்கள் பொதுவான நடத்தை விதிகளை கடைபிடித்தே வாழவேண்டியுள்ளது. இத்தகைய சமுதாயம் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளதால் அதனை ஏற்பது மிகவும் நன்றாகும். இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட சமுதாயம், அரசு, சட்டம், தனிமனித உரிமைகள், குழுவில் உள்ள உரிமைகள் ஆகியவைகளைப் பற்றியே அக்கறை கொண்டுள்ளது. இவ்வாறாக அரசியல் அறிவியல் என்பது மனித இனத்திற்கு, அரசு மற்றும் அரசாங்கத்துடனான தொடர்பினை முக்கியமாக விளக்குகிறது.

அரசியல் அறிவியல் என்பது கோட்பாடு மற்றும் செயல்முறை ஆகியவற்றை பற்றியதாகும். இது அரசியல் முறைமைகளையும், அரசியல் நடத்தைகளையும் விவரித்து பகுப்பாய்கிறது. அரசின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி கண்டறிகிறது. அரசுக்கும் அதன் கீழ் உள்ள சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியனவற்றுக்கும் உள்ள தொடர்பினைப் படிக்கிறது. அரசியல் சூழல்களில் ஆடவர் மற்றும் மகளிர் ஆகியோர் என்ன செய்கிறார்கள் என்பதனை விளக்குகிறது. ஆரம்ப காலகட்டத்தில் இப்பாடம் வரலாறு மற்றும் தத்துவம் ஆகிய பாடங்களோடு இணைந்து செயல்பட்டது. 1903- இல் தோன்றிய 'அமெரிக்க அரசியல் அறிவியல் கழகம்' (American Political Science Association) இப்பாடத்தினை வரலாறு, பொருளியல் மற்றும் பல சமூக அறிவியல் பாடங்களின் பிடியிலிருந்து மீட்டெடுத்து ஒரு தனிப்பாடமாக உருவாக வழிவகை செய்தது. பிற்காலத்தில் அதிகமான அறிவியல் அணுகுமுறை ஏற்பட்ட பிறகு இப்பாடம் உளவியல் மற்றும்


நிகழ் ஆய்வு

"எதிர்காலத்தினை நம்பிக்கையோடு சந்திப்போம்" "Tryst with Destiny"


ஜவஹர்லால் நேருவின் வரலாற்று புகழ்மிக்க உரையான "எதிர்காலத்தினை நம்பிக்கையோடு சந்திப்போம்" என்ற உரை குறித்து 14.08.1947 அன்று இந்து நாளிதழில் வெளியான செய்தி பின்வருமாறு -

"நீண்ட வருட காலமாக நாம் நம்பிக்கையோடு காத்திருந்த எதிர்காலம் இப்போது நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை எனினும் மிகவும் கூடுதலாகவே உறுதிமொழியாக வந்து வாய்த்துள்ளது" என துவங்கிய பண்டித ஜவஹர்லால் நேரு அரசமைப்பு நிர்ணய சபையில் அன்றிரவு பதவியேற்கவிருந்த உறுப்பினர்களுக்கான உறுதிமொழி தீர்மானத்தின் போது பின்வருமாறு கூறுகிறார். 

 "உலகமே உறங்கிகொண்டிருக்கும்போது இந்தியா இந்த நள்ளிரவில்  விழித்தெழுந்திருக்கிறது. பழமையிலிருந்து புதுமை நோக்கி பயணிக்கத்தயாராகிவிட்டோம். நீண்ட காலம் ஒடுக்கி வைக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா உயிர்ப்பித்திருக்கிறது. இந்த சமயத்தில் இந்திய தேசத்திற்கும், இந்திய மக்களுக்கும் சேவை செய்ய நாம் தியாக உணர்வுடன் சில உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்". 

"சுதந்திரமும், அதிகாரமும் நமக்கு பொறுப்புணர்வினை அதிகமாகக்கொண்டுவந்துள்ளது. அந்த பொறுப்புணர்வு இறையாண்மையுள்ள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இறையாண்மை கொண்ட இந்த அவையிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சுதந்திரத்தை நாம் பல வலிகளையும், துன்பங்களையும், துயரங்களையும் தாங்கி, கனத்த இதயத்துடனேயே பெற்று இருக்கிறோம். இவற்றுள் பல வலிகள் இன்னும் தொடரவே செய்கின்றன. எப்படியிருப்பினும் கடந்த காலம் முடிவுக்கு வந்து புதிய எதிர்காலம் நம் கண் முன் வந்துள்ளது. 

இந்தியாவுக்கான நமது சேவை கோடிக்கணக்கான இந்திய மக்களை அவர்களின் வறுமை, அறியாமை, பிணி, சமத்துவமின்மை ஆகியவைகளிலிருந்து மீட்டெடுக்க செய்யும் சேவையை பொறுத்தே அமையும். இந்த தலைமுறையின் மிகச்சிறந்த மனிதர்களாக நாம் வாழ விரும்பினால் இந்தியர்கள் ஒவ்வொருவரின் கண்களில் இருந்து வழியும் கண்ணீரை துடைப்பதற்கு முன்வரவேண்டும். அது நமது சக்திக்கு அப்பாற்பட்டு கூட இருக்கலாம். கண்ணீரும், துன்பங்களும் தொடரும்வரை நமது பணிகளும் ஓயப்போவது கிடையாது. ஆகவே நம் கனவுகளை நனவாக்க நாம் மேன்மேலும் கடினமாக உழைக்க வேண்டும். இக்கனவுகள் இந்தியாவுக்கானது மட்டுமல்ல, உலகிற்கானது, உலகின் அனைத்து தேசங்கள் மற்றும் மக்கள் ஒன்றாக இருப்பதால் தனித்து இயங்குவதை கற்பனை கூட செய்ய முடியாது.  அமைதி என்பது பிரிக்க முடியாதது. சுதந்திரமும் அது போலத்தானே, தற்பொழுது வளமும் அப்படியே ஆகும். பேரழிவும் அப்படியே இருப்பதால் இந்த ஒரே உலகில் அவற்றினை தனித்தனி பாகங்களாகப் பிரிக்க முடியாது".


முன்பக்கத்தில் உள்ள நேருவின் பேச்சிலிருந்து நீ உணர்ந்து கொண்ட கருத்துக்களின் அடிப்படையில் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி. 

1. 'எதிர்காலத்தை நம்பிக்கையோடு சந்திப்போம்' என்ற சொற்றொடரிலிருந்து நீ என்ன புரிந்து கொள்கிறாய்? 

2. நேரு வெளிச்சமிட்டுக்காட்டியிருக்கும் இந்தியாவின் சவால்களில் எவையேனும் மூன்றினை குறிப்பிடுக. 

3. நமது அன்றாட வாழ்வில் சுதந்திரம், அதிகாரம், பாதுகாப்பு, அமைதி போன்றவை முக்கிய அடிப்படை அம்சங்களாக கருதப் படுவது பற்றி கலந்துரையாடுக.

மானுடவியல் போன்ற பாடங்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தது. நடத்தையியல் புரட்சி ஏற்பட்ட பிறகு இப்பாடம் தனிமனிதன், குழுக்கள் ஆகியவற்றின் நடத்தைகள் பற்றி ஆய்ந்தது. பின்னர் தோன்றிய நடத்தையியலால் இப்பாடம் சமூகத்தின் அன்றாட பிரச்சனைகளையும், அரசியல் உண்மைகளையும் பற்றிய படிப்பாக மாறியது.



செயல்பாடு

பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் ஆகியோரின் முக்கியமான படைப்புகளைப் பட்டியலிடுக.

11th Political Science : Chapter 1 : Introduction of Political Science : Nature of Political Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : அரசியல் அறிவியல் அறிமுகம் : அரசியல் அறிவியலின் தன்மை - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : அரசியல் அறிவியல் அறிமுகம்