Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | அரசியல் அறிவியலின் பரப்பெல்லை
   Posted On :  25.09.2023 03:23 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : அரசியல் அறிவியல் அறிமுகம்

அரசியல் அறிவியலின் பரப்பெல்லை

அரசியல் அறிவியல் பாடத்தின் பரப்பெல்லை என்பது இந்தப் பாடத்தின் வரம்பு மற்றும் பாட உள்ளடக்கங்கள் பற்றியதாகும்.

அரசியல் அறிவியலின் பரப்பெல்லை (Scope of Political Science)

அரசியல் அறிவியல் பாடத்தின் பரப்பெல்லை என்பது இந்தப் பாடத்தின் வரம்பு மற்றும் பாட உள்ளடக்கங்கள் பற்றியதாகும். இது அடிப்படையில் ‘அரசு’ என்பதைப் பற்றி படிப்பது மிகவும் பரந்த பகுதிகளை கொண்டதாகும். ‘அரசு’ என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைப் பகுதிக்குள் தனது சொந்த மக்களின் முறையான மற்றும் மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழிசெய்யும் அரசாங்கத்தையும் கொண்டதாகும். மனித நடத்தை என்பது நிலையாக இல்லாமல் மாறிக்கொண்டேயிருப்பதால் இப்பாடத்தின் பரப்பெல்லை தொடர்ந்து விரிவடைந்துகொண்டே செல்கிறது. இப்பாடம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடன் மற்ற மனிதர்களுக்கும் உள்ள தொடர்பினைப் பற்றிய சட்டமாக்கல் பற்றி படிப்பதால், இதன் பரப்பெல்லையானது பொருளியல், வணிகவியல், சமூகவியல், சட்டம் என பலவகையாக விரிவடைந்து கொண்டே செல்கிறது.

1948-ல் நடந்த பன்னாட்டு அரசியல் அறிவியல் சங்கமாநாடு இப்பாடத்திற்கு பின்வரும் பரப்பெல்லைகளை குறிப்பிட்டது.

❖ அரசியல் கோட்பாடு 

❖ அரசியல் நிறுவனங்கள் 

❖ அரசியலின் இயக்கவியல் 

❖ பன்னாட்டு உறவுகள்

அரசியல் அறிவியல் பாடத்தின் பரப்பெல்லையை மேற்கண்ட நான்கு உபதலைப்புகளில் அடக்கிவிட முடியாது என்பதால் பின்வரும் படவிளக்கம் அரசியல் அறிவியலின் பரந்த பரப்பெல்லையை விளக்குகிறது.



அரசியல் அறிவியல் பாடமானது அரசு மற்றும் அரசாங்கங்களின் பிரச்சனைகளைப் பற்றி முக்கியமாகப் படிக்கிறது. தனது குடிமக்களை ஆள்வதற்கான சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தினை அரசு பெற்றுள்ளது. அரசு தனது அதிகாரங்களை அரசாங்கங்கள் மூலமாக செயல்படுத்துகிறது. அரசாங்கம் என்பது அரசின் ஒரு முகமை ஆகும். அரசு என்பது அரசாங்கங்களை உள்ளடக்கியதாக இருப்பதால் பிளண்ட்சிலி (Bluntschli) போன்ற அரசியல் கோட்பாட்டாளர்கள் அரசியல் அறிவியலின் பரப்பெல்லையை மிகவும் குறைத்து அது 'அரசு' என்பதைப் பற்றி மட்டும் படிப்பதாக கூறுகின்றனர். அரசாங்கம் என்பது அரசின் ஒரு பகுதியே ஆகும். அதே சமயம் கார்ல் டாஷ் (Karl Deutsch) போன்ற அறிஞர்கள் ‘அரசியல் அறிவியல் என்பது அரசாங்கங்களைப் பற்றி மட்டுமே படிப்பது’ என்கின்றனர். ஹெரால்ட் லாஸ்கி (Harold Laski) போன்ற அறிஞர்கள் அரசியல் அறிவியல் என்பது அரசுகள் மற்றும் அரசாங்கங்கள் ஆகிய இரண்டையும் படிப்பதாக' வாதிடுகின்றனர். அரசு மற்றும் அரசாங்கம் ஆகிய இரண்டுக்கும் அடிப்படையான வேறுபாடுகள் இருந்தாலும் அவைகளின் பரப்பெல்லைகளை ஆயும்போது ஒன்றினை விட்டு மற்றதை தனியாகப் படிக்க முடியாது. அரசியல் அறிவியலின் பரப்பெல்லையானது, அரசின் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்கால வளர்ச்சிகளையும் அரசின் மேம்பாட்டினையும் பற்றிப் படிப்பதாகக் கூறலாம்.

அரசியல் கோட்பாடு என்பது அரசியல் அறிவியலின் ஒரு முக்கியமான பகுதியாகக் கருதப்படுகிறது. அரசியல் கோட்பாடு என்பது அரசியல் சிந்தனைகள் மற்றும் அரசியல் தத்துவங்களை உள்ளடக்கிய அரசியல் அறிவியலின் முக்கிய கருத்தாக்கங்களை விவரிக்கும் ஒரு பாடமாகும். அரசியல் அறிவியல் பாடமானது அரசியல் நிறுவனங்களின் தன்மை, அமைப்பு மற்றும் செயல்பாடு ஆகியவைகளைப் பற்றியதாகும். இப்பாடம் மேலும் பலவகையான அரசமைப்புச் சட்டங்களையும் மற்றும் பிற அரசாங்கங்களை ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்யும் பணியினையும் செய்கிறது. இப்பாடத்தின் பரப்பெல்லை தற்கால அரசியல் மற்றும் அரசாங்கங்களின் சக்திகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இப்பாடம் அரசியல் கட்சிகள், தன்னலக்குழுக்கள் மற்றும் அழுத்தக்குழுக்கள் ஆகியவைகளைப் பற்றி படிப்பதாகவும் அமைந்துள்ளது. அரசியல் இயக்கவியல் பற்றிய செயலறிவிலான கற்றலாக தனிமனிதர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிவைகளின் நடத்தைகள் பற்றியும் ஆராய்கிறது. முக்கியமாக அரசியல் அறிவியல் என்ற பாடம் தனி மனிதனுக்கும், அரசுக்கும் உள்ள உறவுமுறைகளின் மீது பெரிதும் ஆர்வம் காட்டுகிறது. இதன்விளைவாக தற்கால அரசியல் அறிஞர்கள் அரசியல் அறிவியலின் நடத்தையியல் மற்றும் முறைமை அணுகுமுறையின் அடிப்படையில், அரசியல் அறிவியல் பாடத்தின் பரப்பெல்லையை மிகவும் விரிவுபடுத்தியுள்ளனர். இதனால் 'அரசியல் சமூகமயமாதல்', 'அரசியல் பண்பாடு', 'அரசியல் மேம்பாடு', 'முறைசாரா அமைப்புகள்', 'அழுத்தக் குழுக்கள்’ போன்றவைகளும் அரசியல் அறிவியல் பாடத்தின் பரப்பெல்லைக்குள் வருகின்றன.

மேலும் அரசியல் அறிவியலின் பரப்பெல்லையின் கீழ் தூதாண்மை (Diplomacy), பன்னாட்டுச் சட்டங்கள், பன்னாட்டு அமைப்புகள் போன்றவைகளும் உள்ளடங்கியுள்ளன. அரசாங்கம் சார்ந்த மற்றும் அரசாங்கம் சாராத நிறுவனங்களின் அரசியல் பிரச்சனைகளின் மீதான பொதுக்கொள்கைகளை வகுப்பது பற்றியும் அரசியல் அறிவியல் பாடம் தனது பரப்பெல்லையில் உள்ளடக்கியுள்ளது.


11th Political Science : Chapter 1 : Introduction of Political Science : Scope of Political Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : அரசியல் அறிவியல் அறிமுகம் : அரசியல் அறிவியலின் பரப்பெல்லை - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : அரசியல் அறிவியல் அறிமுகம்